"ஸ்டாலின் வந்து என்னைப் பார்ப்பார்!" - ‘தீப்பொறி' நம்பிக்கை

ஆதங்கம்

சிலர் நுனி நாக்கால் பேசுவார்கள். சிலர் அடித் தொண்டையில் இருந்து பேசுவார்கள். சில நெஞ்சு கனக்கப் பேசுவார்கள். சிலர் மட்டுமே அடிவயிறு வலிக்கப் பேசுவார்கள். அடிவயிறு வலிக்கப் பேசி... தமிழ்நாட்டை 40 ஆண்டுகள் கட்டிப் போட்ட தீப்பொறி ஆறுமுகத்துக்கு இப்போது வயிறுவீங்கி விட்டது. கையில் குளுகோஸ் ஏறிக்கொண்டு இருக்கிறது. ஆனால், கருணாநிதியின் புத்தகத்தை அவர் விடவில்லை. வாசித்துக்கொண்டு இருக்கிறார். ‘‘எனக்கு உண்மையான குளுகோஸ் இதுதான்” என்கிறார்.

ஆறுமுகத்தைத் தெரியாதவர் தமிழ்நாட்டு அரசியலில் இருக்க முடியாது. அவரது பொறி பறக்காத ஊர், கொடி பறக்காத ஊராகத்தான் இருக்கும். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் தனது குரலையும் கொள்கையையும் விட்டுத்தராமல் பேசுவார். அதனாலேயே அவர் பேச்சுக்கு கூட்டம் கூடும். எதிர்க் கட்சியினரே தூரத்தில் இருந்து கேட்பார்கள். அவரது பேச்சின் அனல் பலரையும் கோபப்படுத்தும். அவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே கல் விழும். அவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே ஜீப் விட்ட காட்சிகளும் உண்டு. ஆறுமுகம் எதற்கும் அஞ்சியது இல்லை. அப்படிப்பட்டவரை உடல் நோவு படுக்க வைத்துவிட்டது.

‘‘நான் எப்பவுமே இப்படி வந்து மருத்துவமனையில் ஓய்வெடுத்துக் கிடந்ததில்லை. என் வயிறு பெருசாகிட்டே வந்தது. இந்த வயசுல நமக்கு தொப்பை வைக்குதுன்னு ஜாலியா எடுத்துக்கிட்டேன். ஆனா திடீர்னு பயங்கரமான வலி வந்துருச்சு.  மருத்துவமனைக்கு வந்து பார்த்தா எனக்கு கல்லீரலும் சரியில்லை... கிட்னியும் சரியில்லைனு டாக்டர் சொல்லிட்டாரு. எல்லா செக்கப்பும் பண்ணிட்டுத்தான் என்ன பிரச்னைனு உறுதியாச் சொல்ல முடியும்னு சொல்றாங்க. எனக்கு எதுவும் ஆகாதுன்ற நம்பிக்கை மட்டும் இருக்கு!” நம்பிக்கையுடன் சொல்லி பேசத்தொடங்கினார் தீப்பொறி ஆறுமுகம்.

‘‘எத்தனை வயசுல இருந்து பேச ஆரம்பிச்சீங்க?”

‘‘19 வயசுல இருந்து பேச ஆரம்பிச்சேன். இப்ப எனக்கு 77 ஆச்சு! எனக்குப் பூர்வீகம் மதுரை. எங்க அப்பா மளிகைக் கடையில கணக்குப்பிள்ளையா இருந்தாரு. எனக்கு முன்னாடி ஏழு பொண்ணுங்க. நான்தான் எட்டாவதா பொறந்தேன். அப்பறம் ஏன் எனக்கு ஆறுமுகம்னு பேருவச்சாங்கன்னு தெரியலை. (சிரிக்கிறார்)

வீடு மதுரை வடக்காவணி மூல வீதியில இருந்துச்சு. வித்துட்டோம். அந்த வீடு பள்ளிக்கூடமா மாறுச்சு. அங்கதான் நானும் ஐந்தாவது வரை படித்தேன். அதுக்குப்பிறகு வேற பள்ளிக்கூடத்தில எட்டாவது வரை படித்தேன். பள்ளிக்கூடம் படிக்கும்போதே எனக்குப் பேசுறதுன்னா ரொம்பப் பிடிக்கும். பேச்சுப்போட்டியில நிறைய பரிசு வாங்கியிருக்கேன். பெரியாரைப் பிடிச்சுப் போச்சு. அண்ணா பேச்சு பிடிச்சுப் போச்சு. அந்த ஆர்வத்தில திராவிடர் கழகத்துல சேர்ந்தேன். அப்புறம் தி.மு.க-வுக்கு வந்துட்டேன். எந்த தலைவர்கள் பேச்சைக் கேட்கிறேனோ அவங்க மாதிரியே பேச ஆரம்பிச்சேன். இன்னும் விடலை!”

‘‘ தலைவர்களுக்கு உங்களை எப்போது தெரிய ஆரம்பித்தது?”

‘‘1967 தேர்தல்ல விழுப்புரம் தேர்தல் பிரசாரக் கூட்டத்துல பேசுறதுக்கு பேரறிஞர் அண்ணா வந்திருந்தார். ராத்திரி இரண்டரை மணிக்கு அண்ணா வந்தாரு. நானும் ரெண்டு மணிநேரமா அவர் வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் பேசிட்டு இருந்தேன். அண்ணா வந்துட்டாருன்றதுக்காக என் பேச்சை நிறுத்தச் சொன்னாங்க. அப்போ அண்ணா அவர்கள் என்னிடம் சைகையில் எனக்கு சோர்வா இருக்கு டீ குடித்துவிட்டு பேசுகிறேன் என்றார்.  தொடர்ந்து பேசிமுடித்தேன். அண்ணா பேசும்போது, ‘ஆறுமுகம் பேச்சு தீப்பொறியாய் பறந்தது’ என்று சொன்னார். மறுநாள் விழுப்புரம் கண்டமங்கலம் பகுதியில் பேசப்போகும்போது அங்கிருந்த ஒன்றிய செயலாளர்,  ‘தீப்பொறி’ ஆறுமுகம் என்று அடைமொழி வைத்து போஸ்டர் ஒட்டினார். அது அப்படியே பல இடங்களில் தொடர ஆரம்பித்து இன்றுவரை ‘தீப்பொறி ஆறுமுகம்’ என்ற பெயர் எனக்கு மிகப்பெரும் அடையாளமாக மாறியது.

எம்.ஜி.ஆரைப் பத்தி பேசும்போது பிரபலமும் பிரச்னையும் அதிகமா ஆச்சு. எந்த ஊர்ல பேசுனாலும் அந்த ஊர் கடைக்காரங்க வந்து, ‘நீங்க பத்து மணிக்குமேல பேசுங்க. அப்பத்தான் நாங்க கடையை மூடிட்டு வந்து கேட்க முடியும்’னு சொல்வாங்க.மக்கள் எல்லோரும் இரவு நேரம் கட்சி மீட்டிங்கிற்கு ஆவலா காத்திருப்பாங்க.”

‘‘பேச்சில் உங்களது பாணி என்ன?”

‘‘பெரியார், அண்ணா, கலைஞர் மூன்று பேரின் பேச்சு ஸ்டைலைக் கற்றுக்கொண்டேன். எனக்கு மூன்றுபேரோட ஸ்டைலும் ரொம்ப பிடிக்கும். அவர்களோடு இருந்த நாட்களில் எனக்கு பல அனுபவங்கள கத்துகொடுத்துச்சு. அண்ணா எப்போதும் கடிகாரத்தில் மணி பார்த்துப் பேசுவதை, யாருக்கும் தெரியாமல்தான் செய்வார். அது போன்ற சின்ன   சின்ன  நுணுக்கங்களையும் கற்றுக்கொண் டேன். ஒரு நாள் கலைஞர் திடீர் என்று என்னைப் பேச அழைச்சார். நான் எந்த தயாரிப்பும் செய்யாத நிலையில் அப்படி செய்தார். நான் அங்கு வந்திருந்த நிர்வாகிகளின் பெயரை சொல்லி எல்லாருக்கும் நன்றி என்று அன்றைய பேச்சை மிகவும் சுருக்கமாக முடித்தேன். கலைஞர், ‘அறுமுகம் நல்லா சமாளிக்கிறியே’னு சிரித்தாரு.’’

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சாலமன் பாப்பையா இருந்தபோது கல்லூரியில் என்னை பேச அழைத்துச் சென்றார். அரசியல் மேடைகளில் பேசிய எனக்கு, கல்லூரியில் பேசுவது கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. தலைப்புகூட அவர் எனக்கு மேடையிலதான் சொன்னார். ‘பேசும் கலை’2 வளர்ப்போம்’ என்று நான் அங்கு காமராஜர், பெரியார், அண்ணா போன்ற தலைவர்களின் பேச்சை எடுத்துக்கூறி, இது போன்ற தலைவர்கள் போல பேசும் கலை வளர்க்கவேண்டும் என்று விவரித்தேன்.’’

‘‘ஆவேசமாகப் பேசுகிறீர்கள்... அதனால் ஆபத்துகளும் ஏற்பட்டு இருக்குமே? ’’

‘‘1992 ஆண்டு. ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயம் மீட்டிங் முடித்துவிட்டு வரும்போது மதுரை தங்கம் தியேட்டர் பக்கத்துல எனது நாக்கை அறுக்க ஒரு மொட்டை கத்தியை வைத்து தேங்காய்கடை மாரியப்பன் என்பவர் என்னைத் தாக்கினார். எனது வாயின் இடது ஓரமாகவும் மார்பின் அருகிலும் வெட்டு ஏற்பட்டது. என்னை தாக்கியதால் மாரியப்பனுக்கு அ.தி.மு.க-வில் பதவியும் வழங்கப்பட்டது. நான் அடுத்த மேடையில் என் நாக்கை அறுத்தாலும் சைகையில் பிரசாரம் செய்வேன் என்றேன்.’’

‘‘பேசுவதற்குத் தேதி கொடுக்கமுடியாத நேரங்களை எப்படி சமாளிக்கிறீர்கள்?’’

‘‘எனது பேச்சால் கவரப்பட்ட தொண்டர்கள் பலரும் ‘தேதி கொடுங்க... தேதி கொடுங்க’னு தொல்லை பண்ணுவாங்க. சில நேரங்களில் அவர்களை நையாண்டி பண்ற விதமா ‘எனது காலண்டரில் உள்ள தேதிய பூரா தரேன் நல்லா கிழித்து வைத்துக்கோங்’கனு சொல்லிவிடுவேன்.’’

‘‘இவ்வளவு கஷ்டத்தில் தி.மு.க. உங்களுக்கு என்ன மாதிரியான உதவிகள் செய்கிறது?’’

‘‘தலைவர் ஸ்டாலின் மிகவும் பிஸியா இருக்காரு. அவரைச் சொல்லி குற்றம் இல்லை. அவருக்கு வேலை பளு அதிகமா இருக்கும். என்னாலையும் அவரைப் போய் பார்க்க முடியாதபடி கால்கள் நல்லா வீங்கி வலி எடுக்க ஆரம்பித்திருச்சு. இங்க உள்ள மாவட்ட நிர்வாகிகள் அப்பப்ப வந்து பாத்துகிறாங்க. 5 ஆயிரம் 10 ஆயிரம்னு எனக்கு செலவுக்குப் பணம் கொடுக்குறாங்க. திருச்சி சிவா 50 ஆயிரம் கொடுத்தாரு. தலைமையில இருந்து இன்னும் முடிவெடுக்கலை போல. தி.மு.க யாரையும் கைவிட்டதில்லை. கட்சி விரைவாக முடிவெடுத்து உதவி செய்வாங்கனு நினைக்கிறேன். எனக்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரத்துக்கு மேல செலவாகிறது’’ என  கட்சியை விட்டுக் கொடுக்காமல் முடிக்கிறார். இரவு பகல், வெயில் மழை பாராமல் ஒரு கட்சிக்காக உழைத்த, பேசிய ஒரு மனிதனின் வாழ்க்கை இப்படி ஏக்கமும் ஏமாற்றமும் கொண்டதாகத்தான் இருக்கிறது.

- சே.சின்னதுரை, படம்: ஈ.ஜெ.நந்தகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick