ரவுடிகளோடு கூட்டு... க்ரைமுக்கு ரூட்டு!

விழுப்புரம் போலீஸ் வில்லங்கம்!ஓவியம்: கண்ணாஅடாவடி

வுடிகளுக்கு ரூட் போட்டுக் கொடுப்பதுடன், அவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு கோடிக்கணக்கில் சுருட்டும் இன்ஸ்பெக்டர் ஒருவரைப் பற்றிய விவாதம் விழுப்புரத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.

‘தலைநகரம்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ்ராஜைப்போல விழுப்புரத்தில் நிஜ போலீஸ் அதிகாரி ஒருவர் இருக்கிறார். பட்டதாரியான இவர், 1998-ல் ஈரோட்டில் ஆட்டோ டிரைவராக இருந்தவர். 2000-ல் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் எஸ்.ஐ ஆனார். பணிக்குத் தேர்வானதும் ஒரேயொரு சூட்கேஸோடு காவல்நிலையத்துக்கு பஸ் ஏறி வந்தவர், இன்று பலகோடி ரூபாய்களுக்கு அதிபதி. பணியில் சேர்ந்தது முதல் இன்று வரை இவர் விழுப்புரம் மாவட்டத்தைத் தாண்டியதில்லை என்பதில் இருந்தே மேலிடத்தில் இவருக்கு இருக்கும் செல்வாக்கை நாம் புரிந்துகொள்ளலாம்.

‘‘சின்ன சின்ன கேஸ்களை இவர் எப்போதுமே ‘டீல்’ செய்வதில்லை. கொலை, கொள்ளையில் ஈடுபடும் பெரிய குற்றவாளிகளை டார்கெட் செய்து, அவர்களிடம் ’பல்க்’காக கறப்பதுதான் இவர் பாலிஸி.  மணல் திருட்டு கும்பலிடம் டீல் வைத்து கோடிகளைக் குவித்தார். அதன்பின், சிறப்பு தனிப்படைப் பிரிவில் மாற்றலான பிறகு மாவட்டத்தில் எங்கு குற்றம் நடந்தாலும் தனிப்படை என்ற பெயரில் குற்றவாளிகளைப் பிடித்து அவர்களிடம் பேரம் பேசி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்​கொள்வார்.

தங்கம் எடுத்து செல்பவர்களைப் பற்றிய தகவலை சொல்லி அதைக் கொள்ளையடித்து கைமாற்றும் விழுப்புரம் தாதாவான பத்தர் செல்வத்தை கைது செய்தது திருவண்ணாமலை போலீஸ். உடனே, அவனை இவர் கஸ்டடிக்கு கொண்டு வந்து திடுருபோன தங்கத்தையும் முழுதாகக் கைப்பற்றி 2 கிலோவை பிடித்ததாகக் கணக்கு காட்டி மீதியை அபேஸ் செய்தார். அதன்பிறகு செல்வம் கண் அசைவில் நடக்கும் அத்தனை நகைத் திருட்டுகளிலும் இவர் சம பங்கை வாங்கிக் கொள்வார். அதில் ஒரு பங்கை உயர் அதிகாரிகளுக்குக் கொடுத்ததன் பயனாகத்தான் முதல்வர் கையால் உத்தமர் காந்தி விருதையும், பணி உயர்வையும் பெற்றார். ராகவன் பேட்டை, வழுதுரெட்டி உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட சொகுசு வீடுகள் மற்றும் நிலங்களை பினாமி பெயர்களில் வாங்கிக் குவித்திருக்கிறார்.

பெரிய ரவுடியாக உருவெடுத்த பத்தர் செல்வம் இந்த இன்ஸ்பெக்டரின் ஆள் என்று பரவலாகத் தெரியவர, இவருக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்தச் சூழலில்தான், அவன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டான். கொலை செய்தது அறிவழகன் என்றாலும் அவனை இயக்கியதில் இவருக்கும் கணிசமான பங்கு இருக்கிறது” என்றார் உடன் பணி புரிந்த காவலர் ஒருவர்.

இந்த நிலையில்தான் வெளிநாட்டில் பதுங்கி​யிருக்கும் காஞ்சிபுரம் ரவுடியான ஸ்ரீதர், புதுச்சேரி ரவுடி மனோ ஆகியோர். கொலை செய்ய நினைக்கும் நபர்களின் செல்போன் டவர் லொகேஷன்களை கொடுத்து வந்திருக்கிறார் இந்த இன்ஸ். இந்தக் கால் டீடெய்ல்களைக் கொடுத்தவர் க்யூ ப்ராஞ்சில் பணியாற்றும் நாகராஜ். ‘சி.பி.சி.ஐ.டி என்னை விசாரித்தால் இன்ஸ்பெக்டர் கேட்டதால்தான் கால் டீட்​டெயில்ஸ்களை கொடுத்தேன் என்று சொல்லப்போகிறேன்’ என்று சொல்லி வந்ததால் நாகராஜை இந்த இன்ஸ்பெக்டர் மிரட்டியிருக்கிறார். இந்த நிலையில்தான் நாகராஜ் கடந்த மாதம் 9-ம் தேதி விஷ ஊசி போட்டு தற்கொலை(?!) செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள்.

இவர் செய்த தகிடுதத்தங்களை சி.பி.சி.ஐ.டி தற்போது தோண்ட ஆரம்பித்துவிட்டதால் பீதியில் இருக்கிறார் அந்த இன்ஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்