தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே ஊழல் மலைகள்!

மதுரையில் ஆர்ப்பரித்த மக்கள் நலக் கூட்டணி...

ல்லோர்க்கும் முன்னதாக மக்கள் நலக் கூட்டணி தனது நான்கு கால் பாய்ச்​சலைத் தொடங்கிவிட்டது. நான்கு கட்சித் தொண்டர்களும் உற்சாகத்துடன் கலந்துகொண்ட மதுரை மாநாடு, மற்ற கட்சிகளை யோசிக்க வைத்துள்ளது என்பதே உண்மை.

ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியின் தலைவர்கள் கூட்டாக விஜயகாந்த், ஜி.கே.வாசன் ஆகிய தலைவர்களைச் சந்தித்து தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்து உள்ளனர். அந்த இரண்டு தலைவர்களும் இன்னும் உரிய பதிலைத் தரவில்லை.

இந்த நிலையில் மதுரை ஒத்தக்கடையில், ஆனை​மலை அடிவாரத்தில் மக்கள் நலக் கூட்டணியின் ‘மாற்று அரசியல் எழுச்சி மாநாடு’, கடந்த 26-ம் தேதி நடந்தது. நான்கு கட்சிகளின் தொண்டர்களும் திரண்டிருந்த இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்​பாளரும், ம.தி.மு.க-வின் பொதுச்செயலாளருமான வைகோ, ‘‘இங்கே 5 லட்சம் பேர் கூடியிருக்கிறார்கள். இது தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்” என்று உற்சாகத்துடன் குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் நல்லகண்ணு, தேசியச் செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் மேடையில் குவிந்து இருந்தார்கள்.

“ஆனை மலையை காப்பாற்றியதைப்போல...!”

நல்லகண்ணு:  “உண்மையான அரசியல் எழுச்சி, மாற்று அரசியல் இப்போது ஆரம்பமாகி இருக்கிறது. நாடு சுதந்திரம் பெற்றவுடன், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. 1967-ல் காங்கிரஸ் தோற்றது. அதன்பிறகு தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளே தமிழகத்தை ஆண்டு வருகின்றன. இந்த மேடைக்கு எதிரே உள்ள ஆனை மலையை உடைக்க வந்தபோது, அதைத் தடுப்பதற்கு எந்தக் கட்சியும் முன்வரவில்லை. இந்த நான்கு கட்சிகள் மட்டுமே போராடி ஆனை மலையை காப்பாற்றின. மதுரையின் தொன்மையைக் காத்தது போல, தமிழகத்தையும் காக்க வேண்டிய கட்டாயத்​தில் இருக்கிறோம்!”

‘‘பெர்சன்டேஜ் பார்ட்டிகள்!”

முத்தரசன்: “தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்துவரும் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் ‘பெர்சன்டேஜ் பார்ட்டிகள்’. அதாவது, கமிஷன் வாங்கும் கட்சிகள்.  கொள்கைகளை அரசியலாக்கி, வியாபாரமாக்கி கொள்ளையடித்து வருகிறார்கள். இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்றுதான், மக்கள் நலக் கூட்டணி. இந்தக் கூட்டணி, தலைவர்களின் விருப்பம் அல்ல... கடந்த 40 ஆண்டுகளாக தமிழகம் தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த குழந்தை இது.”

‘‘திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல!”

 ஜி.ராமகிருஷ்ணன்: “அ.தி.மு.க., தி.மு.க-வை உங்களால் வீழ்த்த முடியுமா என்று எங்களைப் பார்த்துக் கேட்கிறார்கள். காந்தி, தண்டி யாத்திரையில் ஒரு பிடி உப்பைக் கையில் எடுத்துக்கொண்டு, ‘பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் இருந்து விரட்டுவேன்’ என்றார். மக்கள் துணையோடு நாட்டைவிட்டே பிரிட்டிஷ்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். அதுபோல, அ.தி.மு.க-வையும், தி.மு.க-வையும் வீழ்த்துவோம். கிரானைட் ஊழலில் ஒரு லட்சத்து, ஆறு ஆயிரம் கோடி சம்பந்தப்பட்டு உள்ளது. அந்தக் கொள்ளை​யில் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு கட்சி​களும் திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல மௌனமாக இருக்கின்றன. ‘மலை முழுங்கி மகாதேவன்’ கருணாநிதி, ‘மலை முழுங்கி மகாதேவி’ ஜெயலலிதா. பாண்டிய மன்னனை வீழ்த்திய கண்ணகியின் ஒற்றைச் சிலம்புபோல, அ.தி.மு.க-வையும், தி.மு.க-வையும் எங்களின் குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டம் வீழ்த்தும்.”

‘‘சுரண்டல்வாதிகள் இல்லாத தேசம்...”

டி.ராஜா: “மதச்சார்பற்ற, ஜனநாயக, சாதிக்கொடுமைகள் இல்லாத, சுரண்டல்வாதிகள் இல்லாத தேசம் உருவாக வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் ஆசைப்பட்டார். அவரது ஆசையை நிறைவேற்ற மக்கள் நலக் கூட்டணியால் மட்டும்தான் முடியும்.”

‘‘வங்கக் கடலில் வீசியெறியுங்கள்!”

சுதாகர் ரெட்டி: “ ஊழலில் ஊறித்திளைக்கும் அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரு கட்சிகளையும் மூட்டைக் கட்டி வங்கக்கடலில் வீசி எறியுங்கள். பேரிடர் வரப்போவதை முன்கூட்டியே அறிந்த ஓர் அரசு, உரிய நேரத்தில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்காமல், வெள்ள நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதா ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டி ருந்தார்கள். இப்படிப்பட்ட ஓர் ஆட்சி தேவையா? இந்தியாவில் அதிகமான கெளரவக் கொலைகள் நடக்கும் இடமாக தமிழ்நாடு உள்ளது. இந்தக் கொலைகளைக் கண்டுகொள்ளாமல் ஆட்சி நடத்துவது சகிக்க முடியாத குற்றம்.”

‘‘இரண்டு பேருக்கும் வித்தியாசம் இல்லை!”

சீத்தாராம் யெச்சூரி:  “இங்கு, கால்பந்துபோல இரண்டு கோல் போஸ்ட்கள் இருக்கின்றன. இரண்டும் மாற்றி மாற்றி கோல் போட்டுக் கொள்கிறார்கள். ஒன்று, 2ஜி வழக்கு. மற்றொன்று, சொத்துக் குவிப்பு வழக்கு. இனியும் இந்தக் கால் பந்தாட்டப் போட்டியை நாம் ரசிக்கக் கூடாது. பி.ஜே.பி ஆட்சி புரியும் மத்தியப் பிரதேசத்தில் மிகப் பெரிய வியாபம் ஊழல் நடந்துள்ளது. அதுபோல, தமிழ்நாட்டில் மூன்று மாணவிகளின் மரணம் நிகழ்ந்தது. அந்த மாணவிகள் படித்த, எந்த அடிப்படை கட்டமைப்பும் இல்லாத கல்லூரிக்கு தி.மு.க அரசு அனுமதி கொடுத்தது. அ.தி.மு.க ஆட்சியிலும் அந்த அனுமதி தொடர்ந்தது. இவர்கள் இரண்டு பேருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.”

கட்டுவிரியன்... கண்ணாடி விரியன்... நல்ல பாம்பு!

தொல். திருமாவளவன்:  “ஆனை மலையை உடைக்க முடியாது. அதுபோல மக்கள் நலக் கூட்டணியை உடைக்க முடியாது. நாங்கள் கூடி இருக்கும் காட்சியைப் பார்த்து எல்லோருக்கும் அடி வயிறு கலங்கி இருக்கிறது. ஆட்சியாளர்கள், சாராய வியாபாரியாக இருக்கிறார்கள். முதல்வரே மதுக்கடைகளைத் திறந்து வைத்து  சாராயம் விற்கிறார். நம்முடைய வீட்டில் கட்டுவிரியன் குடியேறி இருக்கிறது. கட்டுவிரியனை மாற்றினால் கண்ணாடி விரியன் வருகிறது. இந்த இரண்டுக்கும் நடுவில் நல்ல பாம்பு ஒன்று தன் குட்டியைக் கொண்டு வருகிறது. இதைப் பார்த்துவிட்டு நடுநிலையாளர்கள் கதிகலங்கி நிற்கிறார்கள். ஜனநாயகத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் இடையே மாபெரும் யுத்தம் இங்கு நடந்துகொண்டிருக்கிறது. ஊழலில் சிக்கியவர்களும், சி.பி.ஐ விசாரணைக்குப் போய் வருபவர்களும், ‘அடுத்த முதல்வர் நான்தான்’ என்கிறார்கள். ஒரு​வருக்கு 2ஜி வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. இன்னொருவருக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீடு நடந்து கொண்டிருக்கிறது. இப்படியாக, சுற்றியிருக்கும் கட்சிகள் அனைத்தும் ஊழல்களால் ஊறிப்போயிருக்கின்றன. ஆனால், இங்குள்ள நான்கு கட்சிகளின் மீதும் ஓர் ஊழல் குற்றச்சாட்டையாவது கூற முடியுமா? வெற்றி, தோல்வி என எதற்கும் பயப்படாமல் மக்களைச் சந்திக்கத் தயாராகிவிட்டோம்.”

‘‘வல்லூறுகளை வீழ்த்துவோம்!”

வைகோ: “நாசகார ஊழல் புரிந்த அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளையும் தோல்விப் பள்ளத்தாக்கில் தள்ளக்கூடிய சக்தி இந்தக் கூட்டத்துக்குத்தான் இருக்கிறது. அந்த இரண்டு கட்சிகளும் இந்தத் தேர்தலில் மட்டுமல்ல, இனி எந்தத் தேர்தலிலும் தலையெடுக்க முடியாது. பிரிட்டிஷ் ஆட்சியை வீழ்த்துவதற்காக சபதம் எடுக்கப்பட்ட நாள் இந்த ஜனவரி 26. இதோ இந்த இரண்டு கட்சிகளையும் வீழ்த்த சபதம் எடுக்கக் கூடி இருக்கிறோம். கடந்த ஆறு மாதங்களாக ஒன்றாகப் போராடினோம். ஆர்ப்பாட்டம் நடத்தினோம். சாக்கடைகளையும் அள்ளினோம். இதற்குப் பிறகும் இந்தக் கூட்டணி நிலைக்குமா என்று எழுதுகிறீர்களே இது நியாயமா? எல்லோரும் போய்விடுவார்கள், வைகோ அநாதையாக நிற்பான் என்று சொல்​கிறார்கள். நான் பொதுவாழ்க்கைக்கு வந்து 51 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தத் தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டு செய்வதைவிட எனக்கு எந்த ஊழியமும் இல்லை. வேறு எதிர்பார்ப்பும் இல்லை.
 
மணல் கொள்ளையில், கிரானைட் கொள்ளை​யில், கார்னெட் கொள்ளையில் தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஊழலைப் பற்றி பேச இருவருக்கும் அருகதை இல்லை. எல்லாவற்றுக்கும் நீட்டி முழக்கும் அறிக்கை வெளியிடும் கருணாநிதி, கிரானைட் விஷயம் பற்றி ஏன் அறிக்கை விடவில்லை? அவரது ஆட்சியில்தான் கிரானைட் கொள்ளை பற்றி எழுதிய ‘தினபூமி’ ஆசிரியர் மணிமாறன் கைது செய்யப்பட்டார். ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்குக் கொண்டுவருவோம்’ என்று கருணாநிதியும் ஸ்டாலினும் சொல்கிறார்கள். இதைத்தான் 1996-லும் சொன்னார்கள். அடுத்த இரண்டு முறை ஆட்சியில் இருந்த அவர்கள் அதைச் செய்யவில்லை. பட்டாபிஷேகத்துக்கு துடிக்கிற ஸ்டாலின்,  துணை முதல்வராக இருந்தபோதுதான் மீத்தேன் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. எதற்காக அப்போது கையெழுத்து போட்டார்கள். அதனை கருணாநிதி விளக்க வேண்டும்.

எங்களுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என்று கேட்கிறார்கள். வல்லூறுகளை சிட்டுக்​குருவிகள் வீழ்த்தும் காலம் வரும் என்று அண்ணா சொன்னார். அந்தக் காலம் உருவாகிவிட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஊழல் செய்தவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வோம்” என்று முடித்தார்.

மக்கள் நலக் கூட்டணிக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது இந்த மதுரை மாநாடு.

- சண்.சரவணக்குமார், நா.மரகதமணி
படங்கள்: சே.சின்னதுரை, வீ.சதீஷ்குமார், நா.ராஜமுருகன்


திருமாவை கொண்டாடிய வைகோ!

வைகோ தனது பேச்சைத் தொடங்கும்போது, ‘‘பூட்டிய இரும்புக் கூட்டின் கதவுகள் திறக்கப்பட்டன. சிறுத்தையே வா.. என்று அழைக்கத் தகுதியான திருமாவளவனின் தம்பிகளே” என்று சொன்னார். பலத்த கைதட்டல் எழுந்தது. ‘‘என்ன தவம் செய்தேனோ எனக்கு இந்தத் தம்பி கிடைத்துள்ளார்” என்று வைகோ சொன்னார். தலைவர்கள் அனைவரும் திருமாவளவன் பேரைச் சொல்லும் போது விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்கள் கைதட்டி விசில் அடித்தார்கள். அதைப் பார்த்தவுடன், “இந்த ஆரவாரத்தையும், உற்சாகத்தையும் நழுவவிட்டு விடாதீர்கள். அதை அப்படியே அடைகாத்துக்​கொள்ளுங்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் வெல்ல வேண்டும்” என்று சொன்னார் யெச்சூரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick