சினிமா ஹீரோ போலவே கட்சியிலும் நடந்துகொண்டார்!

சரத்குமார் மீது பாயும் நிர்வாகிகள்!

ட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது, மாநாடு நடத்துவது என்று ஒவ்வொரு கட்சியும் உற்சாகத்துடன் களமிறங்கி இருக்கும் நிலையில், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியின் கூடாரம் காலியாகிக் கொண்டிருக்கிறது.

ச.ம.க-வின் மகளிர் அணித் தலைவி ஜெமிலா, நிதி ஆலோசகர் டாக்டர் ராஜசேகர் ஆகியோர் கட்சியில் இருந்து சில நாட்களுக்குமுன் விலகினர். அடுத்ததாக, கட்சியின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கடந்த 27-ம் தேதி மத்திய அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பி.ஜே.பி-யில் இணைந்தனர். அந்த அதிர்ச்சி விலகுவதற்குள், கட்சியின் துணைத்தலைவரும், எம்.எல்.ஏ-வுமான எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிவித்தார் சரத்குமார்.

ச.ம.க-வுக்கு என்னாச்சு?

2011 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று சரத்குமார், எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் எம்.எல்.ஏ-களாக வெற்றிபெற்றனர். கடந்த நான்கரை ஆண்டுகளாக, அ.தி.மு.க அரசை ஆதரித்துப் பேசிக்கொண்டிருந்த சரத்குமாரை, திடீரென ஒதுக்கினார் ஜெயலலிதா. ஏதோவொரு நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், ‘2016-ல் முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றுவேன்’ என்று பேசியதாக உளவுத்துறை தகவல் அனுப்பியதே சரத் ஒதுக்கப்பட்டதற்குக் காரணம் என்கிறார்கள். மதுவுக்கு எதிரான குமரி அனந்தன் நடத்திய யாத்திரையில் மு.க.ஸ்டாலினை சந்தித்தது, அரசு இலவசங்கள் கொடுப்பதை துக்ளக் விழாவில் விமர்சித்தது, தனித்துப் போட்டி என்று ஆலங்குளம் விழாவில் பேசியது ஆகியவற்றால் அ.தி.மு.க-வின் முழு எதிரியாகிப் போனார் சரத். இந்தச் சூழலில்தான், கட்சியின் முக்கியத் தலைகள் எல்லாம் கட்சியில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.

நாகராஜனிடம் பேசியபோது, “கட்சியில் உழைப்புக்கேற்ற அங்கீகாரம்  இல்லை. தவறான நபர்கள் கட்சிக்குள் புகுந்து அனைவரையும் ஆட்டிவைக்க ஆரம்பித்துவிட்டார்கள். எங்கள் உழைப்பு வீணாகிக்கொண்டிருந்தது. எங்கள் கருத்துக்களை சரத் கேட்கவில்லை. எனவே,
பி.ஜே.பி-யில் சேருவது என்று முடிவெடுத்தோம்’’ என்றார்.

ஜெமிலாவிடம் பேசினோம். “மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று ச.ம.க-வில் இணைந்தேன். ஆனால் இவரோ, சினிமா ஹீரோவாகவே தன்னை நினைத்துக்கொண்டு கட்சியில் செயல்படுகிறார். மாநில மகளிர் அணித் தலைவியாக ராதிகா இருக்கிறார். ஆனால் அவர், எந்த நிகழ்ச்சிக்கும் வரமாட்டார். சரத்குமார், நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டதே எங்களுக்கு உடன்பாடு இல்லை. சிறு வயதில் எம்.ஜி.ஆருக்கு நான் மாலை அணிவித்தேன். அதை என் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தேன். இதை, கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று சொல்கிறார். கட்சியில்  முக்கிய நிர்வாகிகள் அனைவரும் வெளியேறிவிட்டோம். இனி அவர் மட்டும்தான் அங்கு இருப்பார்’’ என்றார்.

எர்ணாவூர் நாராயணனிடம் பேசியபோது, “எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யுமாறு என்னிடம் சரத் சொன்னார். நான் மறுத்துவிட்டேன். கட்சியில் இருந்து என்னை நீக்கியதாக அறிக்கை வெளியிட்டார். அ.தி.மு.க உறுப்பினராக இருந்துதான் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டேன். எனவே, அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ நான். ச.ம.க-வில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களிடம் கலந்து பேசி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.

கட்சி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘சினிமாவில் இருந்த சரத்குமார் தி.மு.க., அ.தி.மு.க என வலம்வந்து, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனியாகக் கட்சி ஆரம்பித்தார். தே.மு.தி.க-வைப்போல இவரது கட்சியும் கவனிக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், நடந்தது வேறு. கடந்த சட்டமன்றத் தேர்தலில், நாடார் சமுதாய வாக்குகளை வளைக்கலாம் என்று என்.ஆர்.தனபாலன், கரிக்கோல்ராஜ் ஆகியோருடன் இணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டது. திடீரென அ.தி.மு.க-விடம் தஞ்சமடைந்து தனக்கும், எர்ணாவூர் நாராயணனுக்கும் சீட் வாங்கினார். அதைக்கண்டு, சொந்த சமுதாயத்தினரே அவர் மீது கோபம் கொண்டனர். கட்சியை அமைப்பு ரீதியாக நடத்த அவர் முயற்சி செய்யவில்லை. வாக்குறுதி அளித்தபடி, காமராசர் மணி மண்டபம் கட்டி முடிக்கவில்லை. இப்போது, முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர்’’ என்றனர்.

சரத்குமார் என்ன சொல்கிறார்? ‘‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யார்... யார்? அவர்கள் பெயர் என்ன என்பதுகூட எர்ணாவூர் நாராயணனுக்குத் தெரியாது. கட்சியில் எந்தப் பொறுப்பும் இல்லாதவர்கள்தான் பொறுப்பில் உள்ளதாகச் சொல்லி பி.ஜே.பி-யில் சேர்ந்திருக்கிறார்கள். எர்ணாவூர் நாராயணன் புது இயக்கம் ஆரம்பிக்கப் போவதாக நிர்வாகிகள் பலரிடமும் பேசி வந்தார். மதுரையில் கூடும் பொதுக்குழுவில் ச.ம.க-வின் நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள்’’ என்றார். சரத்குமாரின் அரசியல் எதிர்காலம்?

- செ.சல்மான், எஸ்.மகேஷ், அ.சையது அபுதாஹிர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick