என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - டாக்டர் க.கிருஷ்ணசாமி - ஒட்டப்பிடாரம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: அ.நன்மாறன்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியன்குளம் என்கிற ஊரில் சாதிய வன்முறை ஏற்பட்டபோது, கோயம்புத்தூரில் இருந்து ஓடோடி வந்து பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்காக வாதாடியவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி. புதிய தமிழகம் கட்சியின் தலைவரான இவர், 1996 தேர்தலில் கொடியன்குளத்தை உள்ளடக்கிய ஓட்டப்பிடாராம் சட்டமன்றத் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு வென்றார். 2011-ல் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து இதே தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்துக்குச் சென்றார் கிருஷ்ணசாமி. இவரை இரண்டு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் ஓட்டப்பிடாரம் தொகுதி மக்கள்.

“தொகுதியில் அனைத்துக் கிராமங்களுக்கும் குடிநீர் வசதி, பள்ளிகளுக்குக் கூடுதல் வசதி ஏற்படுத்துவேன். புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம் பகுதியில் நிலத்தடி நீர் கொள்ளையைத் தடுப்பேன். கன்னடியான் கால்வாய்த் திட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவேன். தருவைகுளம், வெள்ளப்பட்டி போன்ற மீனவக் கிராமங்களில் தூண்டில் பாலம் அமைப்பேன். முதியோர் உதவித்தொகை வாங்கித் தருவேன். தொகுதியில் நிலமோசடியை முடிவுக்குக் கொண்டு வருவேன். தாமிரபரணி நதியில் இருந்து ஓட்டப்பிடாரம் தொகுதிக்குத் தண்ணீர் கொண்டு வரும் காங்கேயன் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்று​வேன். பேய்க்குளம், பெட்டைக்குளம், கோரம்பள்ளம், அத்திமரப்பட்டி குளங்களைச் சீரமைத்து விவசாயத்துக்கு நீர்வரத்தை அதிகரிக்கச் செய்வேன். தூத்துக்குடியில் இருந்து மணியாச்சி ரயில் நிலையம் வரையில் சாலை வசதி செய்து கொடுப்பேன். ஓட்டப்பிடாரம் பகுதியில் தேசிய வங்கி, பேருந்து நிலையங்கள் கொண்டு வருவேன். அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டித் தருவேன். புதியம்புத்தூரில் ரெடிமேட் ஆடைகள் விற்பனைச் சந்தையை உருவாக்குவேன். சட்டமன்ற உறுப்பினர் நிதியை சாதி, மத பாகுபாடு இல்லாமலும் ஊழல் இல்லாமலும் அனைத்து ஒன்றியங்களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுப்பேன்’’ என வாக்குறுதிகளை வாரி வழங்கினார் டாக்டர் கிருஷ்ணசாமி.

கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றினாரா? என தொகுதி மக்களிடம் விசாரித்தோம். ‘‘தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாகக் குடிநீர்த் தொட்டி, அங்கன்வாடி மையங்களுக்குக் கட்டடங்கள், பள்ளிகளுக்கு மேசை நாற்காலிகள், சிமென்ட் சாலைகள் போன்றவற்றைச் செய்திருக்கிறார். ஆனால், தொலைநோக்குப் பார்வையுள்ள திட்டங்கள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை. தொகுதியில் நிலமோசடிகளை முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று வாக்குறுதி கொடுத்த கிருஷ்ணசாமி, நிலமோசடி விவகாரத்தை சட்டமன்றத்தில் பேசினார். ஆனால், நிலமோசடி விவகாரத்தில் ஆளும் கட்சிப் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டு இருந்ததால், கிருஷ்ணசாமியின் பேச்சு எடுபடவில்லை. தொகுதியில் நிலத்தடிநீர் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்று சட்டசபையில் கோரிக்கை வைத்தார். அதிலும் ஆளும் கட்சியின் முக்கியப் புள்ளிகள் சம்பந்தப்பட்டு இருந்ததால் எடுபடவில்லை. மணல் திருட்டு சம்பந்தமாக புகார் செய்தார். அதுவும் ஆளும் கட்சியினர் சம்பந்தப்பட்டது என்பதால், அதுவும் எடுபடவில்லை’’ என்று ஓட்டப்பிடார நகரத்தில் உள்ள அரசியல் விழிப்பு உணர்வுகொண்ட மக்கள் சிலர் சொன்னார்கள்.

இவர் வைக்கும் கோரிக்கைகள் அப்படியே ஏற்கப்படவில்லை என்றாலும், ஆளும் கட்சியின் கூட்டணியில் ஆரம்பத்தில் இடம்பெற்றதால், ஏதோ சில காரியங்கள் நடந்து வந்தன. ஆனால், பரமக்குடியில் தலித் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட உடன், தமிழக அரசை கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சித்தார். அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. அதன்பிறகு இவரது கோரிக்கைகள் எல்லாம் அரசுத் தரப்பில் கண்டுகொள்ளப் படவில்லை. தருவைகுளத்தில் ‘மீன் இறங்கு தளம்’, வல்லநாட்டில் தடுப்பணை ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை எதுவும் காதுகொடுத்து கேட்கப்படவில்லை.

“தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் அரசுப் போக்குவரத்துக்கழக பஸ் டெப்போ அமைக்கப்படும்’ என்ற அறிவிப்பு, முதல்வர் ஜெயலலிதாவால் வெளியிடப்பட்டது. அதன்படி, அமைச்சர் சண்முகநாதனின் தொகுதிக்கு உட்பட்ட சாத்தான்குளம் பகுதியில் பஸ் டெப்போ அமைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. ஆனால், ஓட்டப்பிடாரம் பகுதியில் அதற்கான அறிகுறியே இல்லை. அதை நிறைவேற்ற எம்.எல்.ஏ முயற்சிக்கவில்லை. ஆனால், தூத்துக்குடி அரசுப் போக்குவரத்துக் கழக புறநகர் டெப்போவுக்கு தரைத்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் கிருஷ்ணசாமி. சுற்றுவட்டாரப் பகுதியின் ஜங்ஷனாக விளங்கும் புதியம்புத்தூருக்கு பெரிய அளவிலான பேருந்து நிலையம் அவசியம். ஆனால், சிறிய பேருந்து நிலையத்தை அமைத்துக் கொடுத்​துள்ளார். நிறைய பள்ளிகளுக்கு மேசை நாற்காலிகள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கியுள்ளார். ஆனால், புதிதாக பள்ளி, கல்லூரிகளை உருவாக்குவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை” என்றனர் தொகுதியில் உள்ள மாணவர்கள்.

‘‘நிறைய ஊர்களில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை அமைத்துக் கொடுத்துள்ளார். ஆனால், தாமிரபரணி நதியில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட காங்கேயன் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை’’ என்பதை ஒட்டப்பிடாரம் மக்கள் குறையாகச் சொல்கிறார்கள்.

“கயத்தாறு, கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மழைநீரைத் தேக்கும் வகையில், கொம்பாடியில் ஓர் அணை கட்ட வேண்டும் என்பது முக்கியக் கோரிக்கை. அதை நிறைவேற்ற இவர் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. கம்பு, உளுந்து, எள், பருத்தி, பாசிப்பயிறு, மிளகாய், மக்காச்சோளம், கருவேப்பிலை, நெல் ஆகியவை இந்தத் தொகுதியில் அதிகமாக விளைகின்றன. இந்த விளைப்பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்படுவதை அவர் கண்டுகொள்வதே இல்லை. நாங்கள்தான் அவ்வப்போது போராடி ஏதாவது வாங்கிக் கொடுத்து வருகிறோம்’’ என்கிறார்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள்.

‘‘ஓட்டப்பிடாரத்தில் ஒரு கிளை நீதிமன்றம் வேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. அதை நிறைவேற்ற கிருஷ்ணசாமி எந்த முயற்சியும் எடுக்கவில்லை’’ என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.

‘‘புதியம்புத்தூரை, ‘குட்டி ஜப்பான்’ என்று அழைக்கும் காலம் ஒன்று இருந்தது. ரெடிமேட் ஆடை தயாரிப்பில் பிரபலமான ஊர் அது. அங்கு, ‘விற்பனைச் சந்தையை அமைத்து ரெடிமேட் ஆடை தொழிலைப் பாதுகாப்பேன்’ என்று சொன்ன கிருஷ்ணசாமி, அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை’’ என்கிறார்கள் ரெடிமேட் ஆடை உற்பத்தியாளர்கள். ‘‘ ‘கன்னடியான் கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை உடைப்பேன்’ என்று தேர்தல் சமயத்தில் எங்களுக்கு ஆதரவாகப் பேசிய கிருஷ்ணசாமி, வெற்றிபெற்றபின் அதுபற்றிப் பேசவே இல்லை, தனக்கு ஓட்டு வங்கி அதிகமாக இருக்கும் பகுதிக்கே அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளார்’’ என்று குற்றம்சாட்டுகின்றனர் கூட்டாம்புளி, குலையன்கரிசல் பகுதி மக்கள்.

‘முதியோர் உதவித்தொகை வாங்கித் தருவேன்’ என்று வாக்குறுதி கொடுத்த கிருஷ்ணசாமி, ஆயிரக்கணக்கான மனுக்களை வாங்கி கலெக்டரிடம் கொடுத்தார். அதனை, அதிகாரிகள் கிடப்பில் போட்டனர். அவர்களுடன் மல்லுக்கட்டினார். குறிப்பிட்ட சதவிகித மனுக்களுக்கே உதவித்தொகை கிடைத்தது. சமீபத்தில் கனமழை பெய்தபோது, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அடிக்கடி விசிட் அடித்தார். மக்களின் தேவைகளை அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றார். அதிகாரிகள் அசையவில்லை. உடனே, நீதிமன்றம் சென்று சில காரியங்களை சாதித்தார். குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த வெள்ளநீரை வெளியேற்றுவதற்குக் கூட, அவர் நீதிமன்ற உத்தரவைப் பெற வேண்டியிருந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து, நிவாரணத் தொகை பெறுவதற்கான விண்ணப்ப மனுக்களைக் கொடுத்து கையெழுத்து வாங்கினார். இதன் மூலமாக, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் இதயத்தில் கொஞ்சம் இடமும் பிடித்துவிட்டார்.

ஆனாலும், “தேர்தல் நெருங்கும் வேளையில் இப்போது வந்து அதிரடியாகச் செயல்படும் எம்.எல்.ஏ., கடந்த காலங்களிலும் இதுபோல செயல்பட்டிருந்தால் நிறைய நல்ல காரியங்களைச் செய்திருக்க முடியும். இது, கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்” என்ற பேச்சும் தொகுதிக்குள் உள்ளது.
 
- எஸ்.சரவணப்பெருமாள், இ.கார்த்திகேயன்
படம்: ஏ.சிதம்பரம்


ப்ளஸ்... மைனஸ்!

முன்பெல்லாம் எப்போதுமே கிருஷ்ணசாமி தனது சமூகத்தவர் புடைசூழ தொகுதிக்குள் வலம் வருவதுண்டு.  அவர் வருகிறார் என்றாலே தொகுதியை ஒருவித பதற்றமும், அச்சமும் தொற்றிக்கொள்ளும் நிலை இருந்தது. அந்த நிலை இப்போது மாறி இருக்கிறது. அவருடைய அணுகுமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றதால், அவரைப் பற்றிய அச்சம் நீங்கியிருக்கிறது. ஆனாலும் வேறு வகையில் அவரைப் பற்றிய அச்சம், தவறு செய்யும் அரசு அதிகாரிகள் மத்தியில் இருக்கிறது. நாம் செய்யும் தவறுகள் பற்றி கலெக்டரிடம் புகார் செய்துவிடுவாரோ, சட்டமன்றத்தில் பேசிவிடுவாரோ என்ற பய உணர்வு அதிகாரிகளிடம் இருக்கிறது. தனது தொகுதிக்கான பணிகளை அதிகாரிகள் செய்ய மறுத்தால், நீதிமன்றம் சென்று அதை நிறைவேற்றுவது என்கிற முனைப்பு...இதெல்லாம் அவருக்கு ப்ளஸ்.

15 நாட்களுக்கு  ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை தொகுதிக்குப் பக்கம் வருவார். ஓட்டப்பிடாரத்தில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்துக்கு வராமல் தூத்துக்குடியில் ஹோட்டல் அறையில்தான் அவரைச் சந்திக்க முடியும். தொகுதி மக்களால் அவரை எளிதில் சந்திக்க முடிவதில்லை. அரசை விமர்சித்த காரணத்தால், பணிகள் மற்றும் திட்டங்கள் நிறைவேற்ற அதிகாரிகளின் ஒத்துழைப்பு இவருக்கு இல்லை. இதெல்லாம் அவருக்கு மைனஸ். 

எம்.எல்.ஏ. அலுவலக ரெஸ்பான்ஸ் எப்படி?

 

‘ஓட்டப்பிடாரம், தெய்வச்செயல்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் எம்.எல்.ஏ அலுவலகங்களைத் தொடங்குவோம் என்று கிருஷ்ணசாமி சொன்னார். ஆனால், அப்படி அலுவலகங்கள் எதுவும் அந்தப் பகுதிகளில் திறக்கப்படவில்லை. ஓட்டப்பிடாரத்தில் எம்.எல்.ஏ அலுவலகம் இருக்கிறது. பெரும்பாலும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் அங்கு இருக்கிறார்கள். தொகுதிக்கு எம்.எல்.ஏ வரும்போது, தூத்துக்குடியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்குவது வழக்கம். தொகுதியைச் சுற்றிவிட்டு அந்த லாட்ஜில் வைத்து செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்துவிட்டு  கிளம்பிவிடுவார்.

ஓட்டப்பிடாரத்தில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்துக்குப் போனோம். அங்கிருந்த ஒருவரிடம், ‘‘மனுக் கொடுக்க வேண்டும்’’ என்றோம். ‘‘என்னிடம் கொடுங்க. எம்.எல்.ஏ-கிட்ட கேட்டுக்கிட்டு எந்த டிபார்ட்மென்ட்க்கு அனுப்பணுமோ அனுப்பிடறேன். எம்.எல்.ஏ கிட்டதாம் கொடுக்கணும்னா, அவரு வரும்போது தூத்துக்குடியில அவர் தங்கியிருக்கும் ஹோட்டல்ல போய் கொடுங்க’’ என்றார். 15 நாட்களுக்கு ஒரு தடவை அல்லது, மாதம் ஒரு தடவை தொகுதிக்கு வந்து போகும் எம்.எல்.ஏ-விடம் நேரடியாக மனுக் கொடுக்க முடிவதில்லை. ஆனாலும், அன்றாடம் வருகிற மனுக்கள் குறித்து தொலைபேசி மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறாராம்.
 
ரியாக்‌ஷன் என்ன?

எம்.எல்.ஏ கிருஷ்ணசாமியிடம் பேசினோம். ‘‘கொடுத்த வாக்குறுதிகளைவிட கூடுதலாகவே செய்துள்ளேன். குடிநீர், கல்வி, சாலை ஆகியவற்றுக்கே தொகுதி நிதியை அதிகம் செலவு செய்துள்ளேன். வல்லநாடு பள்ளிக்கு கூரை அமைத்துள்ளேன். செக்காரகுடி, கொல்லங்கிணறு, சவலாப்பேரி, குறுக்குச்சாலை, ஓட்டப்பிடாரம், முடிவைத்தானேந்தல் பள்ளிகளில் டைல்ஸ் போட்டுக் கொடுத்துள்ளேன். மாப்பிள்ளையூரணியில் ரூ.10 கோடியில் குடிநீர் திட்டம் கொண்டுவந்துள்ளேன். நிலத்தடி நீர் கொள்ளை, செம்மண் கொள்ளை, நிலமோசடி ஆகியவற்றைத் தடுத்துள்ளேன். அரசு ஒத்துழைப்பு இல்லாததால், புதியம்புத்தூரில் சந்தையைக் கொண்டு வர முடியவில்லை. அரசை ஆதரித்துப் பேசியிருந்தால், ஓட்டப்பிடாரத்தில் அரசுப் போக்குவரத்துக்கழக டெப்போவை கொண்டு வந்திருக்கலாம். சட்டசபையில் பேசி எதுவும் நடக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்வது என்ற நடவடிக்கை எடுத்ததால்தான், இந்தளவுக்கு மக்களுக்கு நல்ல காரியங்களைச் செய்ய முடிந்தது’’ என மூச்சுவிடாமல் சொல்லிக்கொண்டே போனார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick