மிஸ்டர் கழுகு: கூட்டணிகளை உடைக்கும் ஆபரேஷன் ஆரம்பம்!

சி.பி.ஐ. எம்.எல்.ஏ-க்களுக்கு தூண்டில்...வன்னியர் சங்கங்களுக்கு வலை...சிறுத்தைகளின் திடீர் போர்க்கொடி...பி.ஜே.பி. அணியில் பா.ம.க.?

‘‘தனித்துப் போட்டி என்பதில் இருந்து இறங்கி, கூட்டணி அமைத்துப் போட்டி என்று வந்திருக்கிறார் ஜெயலலிதா. கூட்டணி விஷயத்தில் அவருடைய நடவடிக்கைகள் என்ன என்ற தகவலுடன் வரவும்” - என்று கழுகாருக்கு வாட்ஸ்அப் தகவல் அனுப்பி இருந்தோம். தகவல்களை அள்ளிவந்தார் கழுகார்.

‘‘மெகா கூட்டணி அமைப்பார் என்பது அ.தி.மு.க-வினரின் எதிர்பார்ப்பு. இரண்டுவித திட்டங்களை அவர்கள் சொல்கிறார்கள். ஒன்று மக்கள் நலக் கூட்டணியை அப்படியே அ.தி.மு.க-வுடன் இணைத்துக்கொள்வது அல்லது பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைப்பது.”

‘‘மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் அ.தி.மு.க-வை கடுமையாக ‘அட்டாக்’ செய்கிறார்களே?”

‘‘வந்தால் மொத்தமாக நான்கு கட்சிகளையும் தங்கள் கூட்டணியில் இணைப்பது. இல்லா​விட்டால் அந்தக் கூட்டணி​யை உடைப்பது என்ற ரீதியில் சில காரியங்கள் செய்யப்பட்டு வருகிறதாம். ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மக்கள் நலக் கூட்டணியில் உறுதியாக இருக்கிறார். அவர் அகில இந்தியத் தலைமையை ஓரளவு மனமாற்றம் செய்துவிட்டார். ஆனால், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இப்போதைய எம்.எல்.ஏ-க்களுக்கு இதில் அவ்வளவாக உடன்பாடு இல்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் அ.தி.மு.க கூட்டணிதான் நல்லது என்று நினைக்கிறார்கள். சட்டமன்றத்தில் மிக முக்கியமான பிரச்னைக்கு எல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தபோது, இந்தியக் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ-க்கள் உள்ளேதான் இருந்தார்கள். இவர்களுக்கு அ.தி.மு.க மேலிடத்தின் கருணைப் பார்வை இருக்கிறது’ என்று சொல்லப்படுகிறது. தேர்தல் நெருக்கத்தில் இவர்கள் கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்ற ரீதியில் இப்போதே காரியங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இவர்களோடு உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்!”

‘‘ம்!”

‘‘இதே மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும் இன்னொரு கட்சி, விடுதலைச் சிறுத்தைகள். மதுரை மாநாட்டுக்குப் பிறகு, ‘திருமாவளவனை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்’ என்று அந்தக் கட்சியில் இருக்கும் சிலர் சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். இந்தத் தகவலை வாட்ஸ்அப்பில் உளவுத்துறை போலீஸாரே அதிகமாக பரப்பியும் உள்ளார்களாம். ‘இதனை மற்ற கட்சிகள் ஏற்க மாட்டார்கள். அப்படியானால், அந்தக் கூட்டணியில் குழப்பம் ஏற்படும்’ என்று உளவுத் துறை நினைக்கிறதாம். ‘முதலில் திருவாரூரில் இந்த கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தபோது, கூட்டணியின் தலைவராக வைகோவை போட வேண்டும் என்று முதலில் சொன்னவர் திருமாவளவன். வைகோ, ‘நான் தலைவராக இருக்கமாட்டேன், ஒருங்கிணைப்​பாளராக இருக்கிறேன்’ என்று சொன்னார். இந்தக் கூட்டணிக்கு விஜயகாந்த், ஜி.கே.வாசன் ஆகியோரையும் இணைக்க வேண்டி உள்ளதால், முதலமைச்சர் வேட்பாளர் என்று யாரையும் அறிவிக்க வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்குள் குழப்பத்தை ஏற்படுத்துவது மாதிரி சிலர் அறிவிக்கிறார்கள் என்றால், அவர்கள் இந்தக் கூட்டணியை உடைப்பதற்காகச் செய்யும் காரியங்கள்தான்’ என்றும் புலம்பல்கள் தொடங்கிவிட்டன!”

‘‘இதைத்தானே உளவுத்துறையும் எதிர்பார்க்கிறது?”

‘‘இதை ஆரம்பித்து வைத்தது முன்னாள் எம்.எல்.ஏ ரவிக்குமார். ‘மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எமது கட்சியின் தலைவரை அறிவிக்க வேண்டும் என்பதல்ல; தலித் ஒருவர் ஏன் இங்கு முதல்வராக வர முடியவில்லை என்பதை அரசியல் கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் விவாதிக்க முன்வரவேண்டும். மக்கள் நலக் கூட்டணி விடுதலைச் சிறுத்தைகளின் முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட​து. அதைப் பலவீனப்படுத்த நாங்கள் காரணமாக இருக்கமாட்டோம்’ என்று எழுதி இருக்கிறார். அதே கருத்தை அந்தக் கட்சியின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜியும் வெளிப்படுத்தி இருக்கிறார். ‘எனது இந்தப் பதிவு தனிப்பட்ட நிலையில் இருந்து செய்வதாகும்’ என்று சொல்லிக்கொள்ளும் இவர், ‘வைகோ ஒரு சீரிய ஜனநாயகவாதி. அவர் அமைச்சர் ஆகாமல் மற்றவர்களை ஆக்கியவர். தனது வாய்ப்பை அடிமட்ட தொண்டனுக்கு வழங்கியவர். இடதுசாரிகள் போராளிகள். இப்படிப்பட்ட சூழலில் தமிழக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பது என்பது கட்டாயம் இல்லை என்கிறபோதும், அப்படியே அறிவிக்க வேண்டும் என்றால், அதற்கான தகுதி எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவனை இப்பெரும் தலைவர்கள் முன்மொழிதல் அவசியம் என்பதாக உணர்கிறேன்’ என்று சொல்லி இருக்கிறார் பாலாஜி. இதை இந்தக் கூட்டணியில் இருக்கும் கட்சிகளைவிட உளவுத் துறை போலீஸாரே உற்சாகமாகப் பரப்பி வருகிறார்கள்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்