கல்லும் கருப்பையாவும்!

ருப்பையாவுக்கும் கல்லுக்கும் ஏதோ பூர்வகால பந்தம் இருக்கிறது. கருப்பையாவின் வீட்டை தி.மு.க-வினர் தாக்கியபோது, அதைக் கண்டித்து அறிக்கைவிட்டார் ஜெயலலிதா. இப்போது அ.தி.மு.க-வினர் தாக்கும்போது, கண்டன அறிக்கை வெளியிடுகிறார் கருணாநிதி. தாக்குபவர்களும், கண்டிப்பவர்களும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், பழ.கருப்பையா மாறவில்லை. மனதில் பட்டதைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

“வளைந்து குனிந்து கும்பிடு போடமுடியாது. எனக்கு மேசையைத் தட்டும் பழக்கம் கிடையாது. அ.தி.மு.க-வின் அரிச்சுவடியாக இருக்கும் செயல்களை என்னால் செய்ய முடியாது” என்று சொன்னதற்காக, கட்சியைவிட்டு நீக்கப்பட்டார் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான
பழ.கருப்பையா. உடனே நிருபர்களை அழைத்து தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினமா செய்வதாக அறிவித்தார். ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட ஒருவர், நிருபர்களைச் சந்தித்து பதில் சொன்னதும், பதவியை ராஜினாமா செய்ததும் ஆளும் கட்சியையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில்தான், பழ.கருப்பையா வீடு அ.தி.மு.க-வினரால் தாக்கப்பட்டு உள்ளது. சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலகத்துக்கு மிக அருகில் உள்ள பெசன்ட் சாலையில் இருக்கிறது பழ.கருப்பையாவின் வீடு. அந்த  வீட்டுக்கு ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள், வீட்டுக்கு வெளியே நின்று கற்களை வீசியுள்ளனர். வெளியே நின்ற இன்னோவா காரின் கண்ணாடிகளும் வீட்டுக் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன.

நடந்த சம்பவங்களை நம்மிடம் விவரித்தார், பழ.கருப்பையாவின் மகன் ஆறுமுகத்தமிழன். “அன்று இரவு 11 மணியளவில் கதவுகளை உடைக்கும் சத்தம் கேட்டது. உடனே, ஜன்னல் வழியாக நான் எட்டிப் பார்த்தேன். வீட்டின் முன் நின்ற ஒருவர், ‘கருப்பையா நாய் எங்கடா?’ என்று கேட்டார். ‘நீங்க யார்? காலையில் பேசலாம் கிளம்புங்கள்’ என்றேன். ‘நான் அ.தி.மு.க தலைமைக் கழகத்துல இருந்து வர்றேன். என் பெயர் ராதாகிருஷ்ணன்’ என்று சொல்லிவிட்டு கடுமையாகச் சத்தம் போட்டு மிரட்ட ஆரம்பித்தார். நாங்கள் கதவைத் திறக்காமல் இருந்ததும், ஆட்டோவில் இருந்து இறங்கிய மேலும் சிலர், எங்கள் வீட்டின் மீது கற்களை வீசிவிட்டு ஆட்டோவில் ஏறிச் சென்றனர். ஆட்டோவின் பின்புறம் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்டிருந்தது. உடனே அவசரப் போலீஸுக்கு தகவல் தெரிவித்தேன். போலீஸார் உடனே வந்துவிட்டார்கள். எங்கள் வீட்டின் அருகே இருந்த ஒருவர், அந்த ஆட்டோவின் எண் 7104 என்று தெரிவித்தார். அந்த ஆட்டோவை போலீஸார் தேட ஆரம்பித்தனர். அந்த நேரத்தில், அதே ஆட்டோ, மீண்டும் எங்கள் வீட்டுப் பக்கம் திரும்பி வந்தது. அதை போலீஸார் நிறுத்தினார்கள். எங்கள் வீட்டு வாசலில் நின்று சத்தம் போட்ட நபரும் அந்த ஆட்டோவில் இருந்தார். நான் அவர்களை அடையாளம் காட்டினேன். அந்த நபர்களை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். நான் காலையில் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தேன்” என்றார்.

ராதாகிருஷ்ணன், ராமு, அருண் ஆகிய மூன்று பேரை ராயப்பேட்டை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் மூவரும் அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர்கள்.

பழ.கருப்பையாவிடம் பேசினோம். “பாதுகாப்பாக இருந்துகொள்ளுங்கள் என்று எனக்கு நெருக்கமான நண்பர்கள் சொன்னார்கள். அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு கட்சியை விமர்சனம் செய்தால் தாக்குவோம் என்பது மோசமான நிலை. இரவு நேரத்தில் வீட்டில் புகுந்து மிரட்டுவது இன்னும் மோசம். மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆளும் கட்சியின் தொண்டர்களே இப்படிச் செய்தால், தனிமனிதப் பாதுகாப்பு கேள்விக்குறிதான். இதை முதல்வரின் தூண்டுதலால் நடைபெற்ற தாக்குதல் என்று கருதவில்லை. அவருடைய  தூண்டுதலால் இது நடைபெற்று இருந்தால், இந்த வீடே தரைமட்ட மாகியிருக்கும். ஆனால், இப்படித் தாக்குதல் நடத்தினால் ஜெயலலிதா மகிழ்வார்கள் என்று அந்தக் கட்சியினர் கருதுவதால்தான் இப்படி தாக்குதல் நடத்துகின்றனர். தாக்குதல் நடத்தியதாக மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள். இரண்டொரு நாட்களில் இவர்களை வெளியே விட்டுவிடுவார்கள். இவர்களின் விசாரணை எல்லாம் எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியாதா?” என்றார் கேஷுவலாக.

பழ.கருப்பையா விடமாட்டார்போல!

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: ஆ.முத்துக்குமார்


ரஜினி பேசினார்?

ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் ‘துக்ளக்’ ஆண்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பது வழக்கம். சினிமா படப்பிடிப்பில் தீவிரமாக இருப்பதால், இந்த ஆண்டு ரஜினி பங்கேற்கவில்லை. ஆனால், ‘துக்ளக்’ விழா சி.டி-யை வாங்கிப் பார்த்திருக்கிறார் ரஜினி. பழ.கருப்பை​யாவின் பேச்சு பிடித்துப்போய், அவருக்கு போன் செய்து பாராட்டு​களைத் தெரிவித்தார்.

அனைத்துக் கட்சிகளின் அழைப்பு!

பழ.கருப்பையா தாக்கப்பட்டதற்கு அனைத்துக் கட்சிகளும் கடுமையான கண்டனம் தெரிவித்தன. மேலும், அவரை தங்களது இயக்கத்துக்கு வரச் சொல்லி மறைமுக அழைப்புகளையும் விட்டு வருகின்றனவாம். மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் பழ.கருப்பையாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் அவரிடம் தொலைபேசியில் பேசி உள்ளனர். ‘தி.மு.க உங்களுக்கு துணை நிற்கும்’ என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். தலைவர்கள் பேசியது அனைத்தும் அவரை தங்களது அணிக்கு அழைப்பு விடுப்பதுபோல இருந்ததாம்.

தேர்தல் நெருங்கி வரும்போது முடிவெடுக்கலாம் என்று இருக்கிறாராம் பழ.கருப்பையா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick