“கோட்டையிலும் காவிக்கொடி... 234 தொகுதிகளிலும் போட்டி!”

விஜயகாந்த்துக்கு செக்... மோடி கூட்டத்தில் அதிரடி!

ட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலையில், தமிழக பி.ஜே.பி தனது தேர்தல் பிரசாரத்தை கோவையில் தொடங்கியிருக்கிறது.

‘சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் தொடக்கம்’ என்ற முன்னோட்டத்துடன் கோவை கொடீசியா திடலில் நடந்து முடிந்திருக்கிறது பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம். கூட்டணி முடிவாகாத நிலையில், யாரை விமர்சிப்பது என்று புரியாமல், பொதுவான விஷயங்களை மட்டுமே பேசிக் கலைந்திருக்கிறார்கள் தலைவர்கள். காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டுகள், அரசின் சாதனைகள் மட்டுமே பேசப்பட்டன.

தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ், “நரேந்திர மோடியின் கையிருப்பு வெறும் 4,700 ரூபாய் என செய்தி வந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் அந்தக் கட்சியின் சொத்து எவ்வளவு, இந்தக் கட்சியின் சொத்து எவ்வளவு என யாருக்காவது தெரியுமா? நான்கு லட்சம் அல்ல... நான்கு கோடி அல்ல... நான்காயிரம் கோடிக்கும் மேல் சொத்து வைத்திருக்கிறார்கள். 2ஜி, ஏர்செல் மேக்சிஸ் என பல ஊழல் வழக்குகளில் தமிழகக் கட்சிகள் சிக்கித்தவிக்கின்றன. தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை பி.ஜே.பி மட்டுமே அமைக்கும்” என்று பேசினார்.

‘‘பி.ஜே.பி தலைமையில்தான் ஆட்சி அமைக்கும் எனச் சொன்னதன் மூலம் விஜயகாந்த் தலைமையில் இல்லையா?’’ எனக் கூட்டத்தில் முணுமுணுப்புகள் கேட்டன.

பி.ஜே.பி-யின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர், “ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ள அறிவிக்கை தாக்கல் செய்தது நான்தான். பாரம்பர்ய வீர விளையாட்டை நீங்கள் விளையாடுவதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம்” என்றார்.

தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், “பி.ஜே.பி-யின் பங்கு இல்லாமல், தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. செங்கோட்டையில் காவிக்கொடி பறப்பதைப் போல, ஜார்ஜ் கோட்டையிலும் காவிக்கொடி பறக்கும். தமிழகத்தில் எந்த அணியில் பி.ஜே.பி இடம்பெறுகிறதோ, எந்த அணியை பி.ஜே.பி அமைக்கிறதோ, அந்த அணிதான் வெற்றி பெறும்” என முழங்கினார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “முதன்மை மாநிலமாக தமிழகம் வரவேண்டும் என்றால், மோடியைப் பின்பற்ற வேண்டும். மோடியின் அப்பழுக்கற்ற ஆட்சியைப்போல, தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்” என்றார்.

தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா அ.தி.மு.க மீது எந்த விமர்சனமும் வைக்கவில்லை. ஆனால், தி.மு.க-வை வறுத்தெடுத்தார். இல.கணேசன் பேசுகையில், “பி.ஜே.பி-யின் கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன. யார் வந்தாலும், வராவிட்டாலும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்” என்றார்.

இறுதியாக பேசிய மோடி, “கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இருந்த நிலையை அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். டி.வி-யை ‘ஆன்’ பண்ணினாலே ஊழல் பற்றிய செய்திகள்தான் வரும். காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் அதிகமானதால், அந்த ஆட்சியாளர்கள் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனது. இந்த ஒன்றரை ஆண்டுகளில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதுவே சிலருக்கு வலியைத் தருகிறது.  ஓர் ஏழைத்தாயின் மகனுடைய சிறப்பான ஆட்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் காங்கிரஸார் தூக்கமின்றித் தவிக்கிறார்கள். 60 ஆண்டுகளாகக் கிடைக்காத திட்டங்களை ஒன்றரை ஆண்டுகளில் மக்களுக்குக் கிடைக்கச் செய்துள்ளோம். அம்பேத்கரின் 125-வது ஆண்டு விழாவைக் கொண்டாடி அவருடைய ஸ்டிக்கர், தபால்தலை வெளியிட்டோம். லண்டனில் அவர் வாழ்ந்த வீட்டை அரசு சார்பில் மீட்டு நினைவுச் சின்னமாக்கி உள்ளோம். மும்பையில் அவர் வாழ்ந்த வீட்டை நினைவுச் சின்னமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது தலித்களுக்கு எதிரான ஆட்சி என பொய்யான தகவலைப் பரப்புகிறார்கள்” எனச் சொல்லி பேச்சை முடித்தார்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டம் என்பதால், பெரும் கூட்டத்தைத் திரட்ட வேண்டும் என கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு பகுதிகளில் உள்ள எட்டு மாவட்டச் செயலாளர்களுக்கு சிறப்பு அசைன்மென்ட் வழங்கப்பட்டது. ‘‘அதிகமான கூட்டத்தைக் கூட்டுங்கள்; மேடையில் மோடிக்கு சால்வை அணிவிக்க உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்’’ என மாவட்டச் செயலாளர்களுக்கு தேன் வார்த்தைகள் தரப்பட்டன. 43 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. தனியார் கல்லூரிகளில் இருந்து நிறைய மாணவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். ஜவடேகர், முரளிதர் ராவ் ஆகியோர் மூன்று நாட்களுக்கு முன்பாக வந்து ஏற்பாடுகளைக் கவனித்தனர்.

கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, “மத்திய அரசிடம் நிறைய கோரிக்கைகள் வைத்திருந்தோம். மோடியிடம் நேரடியாகவும் எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினோம். அதுபற்றி நல்ல பதிலை கூட்டத்தில் பேசும்போது சொல்வார் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தோம். ஆனால், அது பற்றி ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை” என்று ஏமாற்றத்துடன் சொன்னார்கள்.

பி.ஜே.பி-யின் கீழ்மட்ட நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, “கெயில் திட்டம், முல்லை பெரியாறு, ஜல்லிக்கட்டு போன்ற தமிழ்நாட்டுப் பிரச்னைகள் பற்றி மோடி பேசாதது ஏமாற்றம்தான். ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க-வையோ ஆட்சியில் இருந்த தி.மு.க-வையோ மோடி விமர்சிக்கவில்லை. அதையெல்லாம் பேசியிருந்தால், எங்களுக்கு ஒரு உத்வேகமாக இருந்திருக்கும். தமிழ்நாட்டுப் பிரச்னைகளில் பி.ஜே.பி அக்கறையோடு இருக்கிறது என்று நாங்களும் மக்களிடம் தைரியாகப் பேச உதவியாக இருந்திருக்கும்” என்றனர்.

விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர், அவர்தான் கூட்டணிக்குத் தலைவர் என்பதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது இந்தக் கூட்டம். மேடையின் முகப்பிலேயே ‘தாமரை மலரட்டும்! தமிழகம் நிமிரட்டும்!’ எனப் பெரிய எழுத்துகளில் போட்டு கட்டியம் கூறிவிட்டது தமிழக பி.ஜே.பி. ஸ்டாலினின் ‘முடியட்டும் விடியட்டும்’ வாசகத்தின் காப்பி என்றாலும், தாமரை ஆட்சிதான் அடுத்து என்பதை கொஞ்சம் அழுத்தமாகவே சொல்லியிருக்கிறது பி.ஜே.பி.

- ச.ஜெ.ரவி
படங்கள்: தி.விஜய்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick