“விஜயகாந்த், ஜி.கே.வாசன் விரைந்து முடிவெடுக்க வேண்டும்!”

ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை!

துரையில் மக்கள் நலக் கூட்டணியின் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி முடித்திருக்கும் உற்சாகத்தில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை சந்தித்தோம்.

“மதுரையில் மிகப் பெரிய கூட்டத்தைக் கூட்டிவிட்டீர்களே. மதுரை மாநாடு உங்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது?”

“மக்கள் நலக் கூட்டணி ஆறு மாதங்களில் உடைந்துவிடும் என்று சொன்னவர்கள், மதுரை மாநாட்டின் பிரமாண்ட வெற்றியைப் பார்த்து மிரண்டுபோயிருக்கிறார்கள்.

அ.தி.மு.க., தி.மு.க அல்லாத ஒரு மாற்று அணியை மக்கள் விரும்புகிறார்கள். அதைத்தான் மதுரையில் கூடிய கூட்டம் உணர்த்துகிறது. அங்கே தலைவர்கள் பேசும்போது, ‘மாற்று அரசியல்’ என்ற வார்த்தைக்குக் கிடைத்த கைத்தட்டல்களே இதற்குச் சான்று. மற்ற கட்சிகளின் மாநாடுகளைப்போல, காசு கொடுத்து, வாகனம் ஏற்பாடு செய்துகொடுத்து, குவாட்டரும் பிரியாணி பொட்டலமும் கொடுத்து, அழைத்து வந்த கூட்டம் அல்ல. இது, தன்னார்வத்துடன் திரண்டு வந்த கூட்டம். வரும் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என்பதற்கு அச்சாரம்தான், மதுரை மாநாடு.”

“தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்றாக, உங்கள் பிரசாரத்தில் எதை முன்வைக்கப் போகிறீர்கள்?”

“இரண்டு திராவிடக் கட்சிகளுடைய அரசியல் நடத்தும் விதமும், ஆட்சி நடத்தும் விதமும் ஒரே மாதிரியாக இருக்கிறது. மாறி மாறி நடக்கும் இவர்களுடைய ஆட்சியில், ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவர்களின் முன்னேற்றத்துக்காக இந்த அரசுகள் எதுவும் செய்யவில்லை. ஊழல்கள் அதிகரித்து இருப்பதுதான் இவர்களின் ஒரே சாதனை. இதனால், மக்கள் மனம் வெறுத்துப் போயிருக்கி றார்கள். மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில், மாற்றுத் திட்டங்களைச் சொல்லியிருக்கிறோம். அவற்றை மக்களிடம் கொண்டுசெல்வோம்.’’

“ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாசாரத்துக்கு மக்களைப் பழக்கிவிட்டார்கள். அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?”

“இந்த கேடுகெட்ட கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தது யார்? தி.மு.க-வும், அ.தி.மு.க-வும்தானே? ஆனால், ‘தேர்தலில் ஜனநாயகத்தைக் கொண்டுவருவோம்’ என்று கருணாநிதி இப்போது பேசுகிறார். ஒரு பக்கம் ஓட்டுக்குப் பணம் கொடுப்பார்கள். இன்னொரு பக்கம், ‘தேர்தலில் ஜனநாயகம் கொண்டு வருவோம்’ என்று பேசுவார்கள். இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். அந்த மாற்றத்தை மக்கள் நலக் கூட்டணி நிச்சயம் கொண்டுவரும்.”

“விஜயகாந்த்தும், ஜி.கே.வாசனும் உங்கள் கூட்டணிக்கு வருவார்களா?”

“குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தின் அடிப்படை யில் நாங்கள் செயல்படுகிறோம். எங்களுடைய செயல் திட்டத்தில் விஜயகாந்த் உடன்படுகிறார். அ.தி.மு.க.,  தி.மு.க அல்லாத ஓர் ஆட்சி ஏற்பட  வேண்டும் என்று அவரும் நினைக்கிறார். அவரைச் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளோம். ஜி.கே.வாசனுக்கும் அழைப்பு விடுத்துள் ளோம். இனி அவர்கள்தான் விரைந்து முடிவெடுக்க வேண்டும்.’’

“மழை, வெள்ள பாதிப்பின்போது செயல்படவில்லை என்பதைத் தவிர, அ.தி.மு.க அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள் இல்லை என்ற எண்ணம் பரவலாக இருக்கிறதே?”

“கடந்த நான்கரை ஆண்டுகளில், தமிழகத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். தனியார் மருத்துவக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் 3 மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர். அமைச்சரின் ‘கமிஷன்’ தொல்லையால் அரசு அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துள்ளார். தொழில் வளர்ச்சியில் தேசிய சராசரியைவிட தமிழகம் பின்தங்கியுள்ளது. இந்த ஆட்சிக்காலத்தில் ஏராளமான சாதி ஆணவக்கொலைகள் நடந்துள்ளன. இதுவா நல்ல ஆட்சி?’’

“ ‘மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமில்லை’ என்று அமைச்சர் நத்தம் விசுவநாதன் சொல்லி இருக்கிறாரே?”

“உணவு உற்பத்தி, தொழில் உற்பத்தி போன்றவற்றுக்கு இலக்கு நிர்ணயித்துச் செயல்படும் அரசே உண்மையான மக்கள் நல அரசாக இருக்க முடியும். ஆனால், மது உற்பத்திக்கு இலக்கு வைத்து செயல்படும் ஆட்சியை, நல்ல ஆட்சி என்று சொல்ல முடியுமா? தமிழகத்தில் மது ஆலைகளை நடத்துவது யார்? அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரு கட்சிகளின் தலைவர்கள்தானே? இவர்கள் இருவரில் யார் ஆட்சிக்கு வந்தாலும், இந்தக் கொடுமை தொடரவே செய்யும். ஏனெனில், அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் இடையே எழுதப்படாத, ரகசிய ஒப்பந்தங்கள் நிறைய உள்ளன. அதில், மது வியாபாரமும் ஒன்று. மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால்தான் இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் விடிவுகாலம் பிறக்கும். நிச்சயம் அது நடக்கும்.”

- மா.அ.மோகன் பிரபாகரன்
படம்: சு.குமரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick