மாடு மேய்க்கும் எம்.பி.பி.எஸ். மாணவர்!

செத்தால்தான் கருணை காட்டுவீர்களா?“மக்களால் நான்!” அரசு கண்டுகொள்ளுமா?

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்​குறிச்சி அருகே செயல்பட்டு வந்த எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் படித்த மூன்று மாணவிகளின் மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவ - மாணவிகளின் எதிர்காலம் கருதி அவர்களை அரசுக் கல்லூரிக்கு மாற்றம் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதேபோலத்தான், சில வருடங்களுக்கு முன் திருவள்ளூர் டி.டி தனியார் மருத்துவக் கல்லூயில் இதுபோன்ற பிரச்னை வந்தது. அந்தக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. அங்கு படித்த மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்​குறியானது. ‘எங்களை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்துக்கொண்டு, தொடர்ந்து படிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் அல்லது டி.டி மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும்’ என்று கோரி தலைமைச்செயலகம், மருத்துவப் பல்கலைக்கழகம், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் என படையெடுத்து மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். அவர்களை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. அந்தக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்த ராம்குமார் என்ற மாணவர், மாடு மேய்க்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் அதவத்தூரை அடுத்த மேலப்பேட்டையைச் சேர்ந்த ராம்குமாரை சந்தித்தோம். ‘‘டாக்டர் ஆகவேண்டும் என்பது சிறு வயதில் இருந்தே என்னுடைய ஆசை. 10-ம் வகுப்பில் 460 மார்க், 12-ம் வகுப்பில் 1,025 மார்க் எடுத்தேன். கட்-ஆப் மார்க் 170 எடுத்தேன். அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. என் அப்பா, எங்களுக்குச் சொந்தமான இடத்தை விற்று, ரூ.20 லட்சம் ‘நன்கொடை’ கொடுத்து டி.டி கல்லூரியில் என்னைச்  சேர்த்துவிட்டார். நண்பர்களிடம் கடன் வாங்கி எட்டு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் கட்டினார். என்னுடன் 113 பேர் படித்தனர். இரண்டாம் ஆண்டில் 113 படித்தனர். 2013-ல் முதல் ஆண்டுத் தேர்வு எழுதினோம். அப்போது, எங்கள் கல்லூரி சேர்மன் கைதுசெய்யப்பட்டார். அப்போதுதான், அந்தக் கல்லூரிக்கான அனுமதி ரத்தான விஷயமே எங்களுக்குத் தெரிந்தது.

நீதிகேட்டுப் போராடினோம். ஒருகட்டத்தில், எங்கள் சீனியர் 100 பேரை அரசுக் கல்லூரியில் சேர்த்துக்கொண்டனர். எங்களைச் சேர்க்கவில்லை. காரணம் கேட்டதற்கு, ‘அவர்கள் படித்தபோது கல்லூரிக்கு அனுமதி இருந்தது. நீங்கள் படித்தபோது கல்லூரிக்கு அனுமதி இல்லை. அது தெரியாமல் சேர்ந்தது உங்கள் தவறு. அதனால், உங்களை அரசுக் கல்லூரியில் சேர்க்க முடியாது’ என்று சொல்லிவிட்டார்கள். எங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது. கட்டிய பணத்தை வாங்கவும் வழியில்லை. இது சம்பந்தமான வழக்குக்கும் முடிவு தெரியவில்லை. ஒரு வருடம் படிப்பு... மறு வருடம் போராட்டம்... இந்த வருடம் மாடு மேய்க்கிறேன். நான் மட்டுமல்ல... என்கூட படித்த 113 பேருடைய வாழ்க்கையும் திசை மாறிப்போய்விட்டது.

எஸ்.வி.எஸ் கல்லூரியில் படித்த மாணவிகள் மரணம் அடைந்ததால், அங்கீகாரப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. அதன்பிறகு, அந்தக் கல்லூரி மாணவர்களை அரசுக் கல்லூரியில் சேர்க்க முதல்வர் உத்தரவிட்டார். முதல்வர் நல்லது செய்ய விரும்பினால், எல்லா மாணவர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும். ஆனால், எங்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவது ஏன்? முதல்வர் எங்களுக்கும் வழிகாட்ட வேண்டும். கடந்த இரண்டு வருடங்களாகப் போராடிக்​கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், எங்களை அரசு கண்டு​கொள்ளவில்லை. தேர்தல் நெருங்குவதால்
எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் உதவ நினைக்கி றார்கள். இந்த உலகத்தில் போராடி னால் கண்டுகொள்ள மாட்டார்கள். செத்துப்​போனால்​தான் கருணை காட்டுவார்கள்’’ என்று ஆதங்கத்தோடு பேசினார்.

கலைமகளாம் கல்வியை, காசுக்கு விற்க அனுமதித்ததன் விளைவு இது.

- சி.ஆனந்தகுமார்
படங்கள்: தே.தீட்ஷித்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick