மகாமக ஏற்பாடுகள்... மந்த கதியில் உள்ளாட்சி நிர்வாகம்...

ன்னும் சில தினங்களில் மகாமகம் காணப்போகும் கும்பகோணம் நகரம் விழாக்கோலம் பூண்டு வருகிறது. வரும் பிப்ரவரி 13-ம் தேதி முதல் பிப்ரவரி 22-ம் தேதி வரை மகாமக திருவிழாக்கள் நடைபெற உள்ளன. மகாமகத்துடன் தொடர்புடைய 17 கோயில்களில் இந்து அறநிலையத் துறை சார்பில் கடந்த நவம்பர் மாதமே கும்பாபிஷேகம் செய்துவிட்டனர். மகாமக குளத்தில் பக்தர்கள் மீது சுழல் தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் தெளிக்க பொதுப்பணித் துறை ஏற்பாடு செய்துவருகிறது. கும்பகோணம் முழுவதும் தெரு விளக்குகள் சரிசெய்யப்பட்டுள்ளன. பந்தோபஸ்து ஏற்பாடுகளில் போலீஸார் தீவிரமாக உள்ளனர். ஆனால், உள்ளாட்சித் துறை மட்டும் ஆமை வேகத்தில் செயல்படுகிறது.

50 லட்சம் பேர்கூட இருக்கும் நகரத்தில், சுகாதாரக் கேடுகள் இல்லாத அளவுக்கு உரிய நடவடிக்கைகளை உள்ளாட்சித் துறை எடுத்திருக்க வேண்டும். ஆனால், உள்ளாட்சித் துறை அமைச்சரான வேலுமணி, கோவைக்காரர் என்பதாலோ என்னவோ, மகாமக விழாவில் அவர் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள். தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த கோ.சி.மணி சிறப்பாகச் செயல்பட்டு கால்வாய்களைச் சீரமைத்து, மகாமக குளக்கரையில் சிமென்ட் ரோடுகள், பாதுகாப்பு வேலி, மின்விளக்குகள் அமைத்தார். அவற்றை, இப்போதுள்ள நகராட்சி நிர்வாகம் மந்தமாக இருக்கிறது என்கிறார்கள் பொதுமக்கள்.

“கும்பகோணம் நகருக்குள் பாசன, கழிவுநீர் வாய்க்கால்கள் என நான்கு கால்வாய்கள் ஓடுகின்றன. அவை முறையாக தூர்வாரப் படவில்லை. தெற்கு வடம்போக்கி தெரு எள்ளுக்குட்டை வாய்க்கால் சுத்தப்படுத்தப் படவில்லை. அதே வாய்க்கால், பெரிய கடைவீதி அருகேயும் மோசமான நிலையில் உள்ளது. லால்பகதூர் சாஸ்திரி சாலையில் அள்ளப்படாத சாக்கடைக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. பழைய பஸ் ஸ்டாண்டு சாலையில் சாக்கடை சுத்தப்படுத்தப் படவில்லை. மகாமக திருவிழாக்களில் மேலக்காவிரி ஆறு முக்கியமானது. அந்த ஆற்றின் திருமஞ்சன வீதி படிக்கரை அருகே தண்ணீர் ஓடும் பாதை சேறும் சகதியுமாக இருக்கிறது. குப்பைகளும் கிடக்கின்றன. புதிய பஸ் நிலையம் - சேவியர் காலனி இடையே ஜான்செல்வராஜ் நகருக்குச் செல்லும் வழியில் ஒரு புதிய சாலை போட்டனர். அதை முழுமையாகப் போட்டிருந்தால் மகாமகத்துக்கு வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி போவதற்கு வழி ஏற்பட்டிருக்கும். ஆனால், ஒரு தனியாரின் விடுதி குறுக்கிடுகிறது என்பதற்காக அந்தச் சாலை வளைந்து செல்வதுபோல் திசை திருப்பிவிட்டனர். அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பாதியில் விட்டுவிட்டனர்” என்று வருத்தத்துடன் சொன்னார்கள்.

கும்பகோணம் அனைத்துத் தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் வி.சத்திய நாராயணன், “நகருக்குள் சில இடங்களில் சாலைகளை மிக உயரமாக அமைத்துள்ளனர். இதனால், பல வணிக நிறுவனங்களும், கோயில்களின் ராஜகோபுரங்களும் சாலைமட்டத்தில் இருந்து கீழே இறங்கிவிட்டன. இதைச் சரிசெய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் மனுக் கொடுத்துள்ளோம். கும்பகோணத்தின் புதிய பஸ் நிலையத்தையும், பழைய பஸ் நிலையத்தையும் இணைக்கிற 60 அடி சாலை, அகலமான பாதையாகவும் இருவழிப் பாதையாகவும் முன்பு இருந்தது. அதை, விளம்பர நோக்கோடு மூன்று பாதைகளாகப் பிரித்து, நடுவில் தடுப்புச்சுவர் கட்டிவிட்டனர். அதனால் அங்கே, போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. போலீஸ் அனுமதியின்றி இப்படிச் செய்தது தவறு.  கும்பகோணத்தின் மையப்பகுதியான பெசன்ட் சாலையின் நடுவில் மின் கம்பங்கள் அமைத்ததால், போக்குவரத் துக்குப் பெரும் இடைஞ்சல். பொற்றாமரைக் குளம் 75 லட்சம் ரூபாயில் தூர்வாரப்பட்டு, காவிரியில் இருந்து தண்ணீர் வர புதிதாகக் குழாய் அமைத்துள்ளனர். இதே குளத்தின் கீழக்கரையில் ஒரு கழிப்பறை இருப்பதால், புனிதமான அந்த இடத்தைச் சுற்றிலும் ஒரே தூர்நாற்றம்” என்றார் கவலையுடன்.

இந்தப் பிரச்னைகளை மாவட்ட ஆட்சியர் சுப்பையனின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அவர், “டிராஃபிக் கமிட்டியின் அனுமதியின்றி ஓரிரு சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அது என் கவனத்துக்கு வந்தது. வேறு சில இடங்களில் தடுப்புகள் அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டுள்ளோம். மற்ற பிரச்னைகள் மீது உடனே நடவடிக்கை எடுக்கிறேன். மகாமகம் வருவதற்குள் எல்லாம் சரியாக இருக்கும்” என்றார்.

பல லட்சம் பேர் கூடும் நேரத்தில் பாதுகாப்பும் பலமானதாக அமையவேண்டும்!

- கனிஷ்கா
படங்கள்: கே.குணசீலன், க.சதீஷ்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick