மிஸ்டர் கழுகு: கால்நடை முதல் கல்யாணம் வரை... நெத்திக்கும் ஸ்டிக்கர்!

ழுகார் உள்ளே நுழைந்தபோது, உடுமலைப்பேட்டையில் இருந்து வந்திருந்த போட்டோக்களை நாம் பார்த்துக்கொண்டு இருந்தோம்.

‘‘மணமக்கள் நெற்றியில் அம்மா ஸ்டிக்கர்... எல்லை மீறும் பப்ளிசிட்டி அட்ராசிட்டியா?” என்ற கேள்வியைப் போட்டபடியே அந்தப் புகைப்படங்களை அவரும் வாங்கிப் பார்த்தார்.

‘‘நடுநிலையாளர்களை மட்டுமல்ல, ஆளும் கட்சியில் இருக்கும் சிலரே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது உடுமலைப்பேட்டையில் நடந்த இலவசத் திருமணம். பெரு வெள்ளத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகள் கடும் பாதிப்பைச் சந்தித்த போது, வெள்ளத்தில் அத்தனைப் பொருட்களையும் இழந்து மக்கள் நின்றபோதுகூட ஆர அமர ஸ்டிக்கர் ஒட்டிய பின்னரே நிவாரணப் பொருட்களை விநியோகித்து பெரும் சர்ச்சையில் சிக்கியது அ.தி.மு.க. அரசு நிவாரணப் பொருட்களில் மட்டுமல்லாது, மக்கள் அளித்த நிவாரண பொருட்களையும் பிடுங்கி, அதில் அம்மா ஸ்டிக்கரை ஒட்டி தங்களது விசுவாசத்தைக் காட்டிக்கொண்டனர் அ.தி.மு.க-வினர். இந்தக் கெட்ட பெயருக்குப் பிறகும் பலரும் மாறவில்லை. கிடைக்கும் இடத்தில் எல்லாம் அம்மா ஸ்டிக்கரை ஒட்டி வருகின்றனர். இதன் உச்சம்தான் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அ.தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட திருமண விழா கூத்துகள்!”

‘‘ஏற்கெனவே ஆடு, மாடுகளின் கழுத்தில் படங்கள் தொங்கவிடப்பட்டதே?”

‘‘ஆமாம். கால்நடைகளில் ஆரம்பித்து கல்யாணம் வரை வந்துவிட்டது. உடுமலையில் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளையொட்டி 68 ஜோடிகளுக்குத் தனது தலைமையில் இலவசத் திருமணம் செய்துவைத்தார் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன். ஆண்டுதோறும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இலவசத் திருமணங்களை நடத்தி, சீர்வரிசைகளை வழங்குவது வழக்கம்தான். ஆனால், வழக்கத்துக்கு மாறாய் இந்த முறை எங்கு பார்த்தாலும் அம்மா ஸ்டிக்கரை ஒட்டி அதகளப்படுத்திவிட்டனர். மணமக்களுக்கு 68 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. காமாட்சி விளக்கு, குத்துவிளக்கு, பட்டுச்சேலை, பட்டு ஜாக்கெட், பட்டு வேட்டி, பட்டுத் துண்டு, பட்டுச் சட்டை, கட்டில், மெத்தை, தலையணை செட், பீரோ, பெரிய அண்டா, குக்கர் உள்பட வழங்கப்பட்ட 68 பொருட்களிலும் அம்மா ஸ்டிக்கரை ஒட்டியிருந்தனர். சீர்வரிசை பொருட்களில்தானே என மணமக்கள் பக்கம் திரும்பினால், மணமகன், மணமகளின் நெற்றியில் அம்மா ஸ்டிக்கரை ஒட்டிவிட்டார்கள். கையில் கொடுக்கப்பட்ட பூங்கொத்திலும் ‘அம்மா’ படம்.”

‘‘அம்மம்மா!”

‘‘இந்த விழாவில் மணமக்களை வாழ்த்தி முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய செய்தியை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வாசித்தார். அதில், ‘அ.தி.மு.க அரசு தமிழக மக்களுக்கு ஆற்றிவரும் அரும்பணிகளைப் பலருக்கும் எடுத்துச் சொல்லி, கழகத்தின் வெற்றிக்கு உங்களது பங்களிப்பை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சீரும் சிறப்புமாக இந்த திருமண விழாவை நடத்திட தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்துக்கும் எனது பாராட்டுகள். தங்களுடைய கழகப்பணிகள் இத்தகைய ஆக்கப்பூர்வமான வழிகளில் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள். மணமக்கள் வாழ்க பல்லாண்டு’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்