“எங்கள் இலக்கே ஸ்டாலினும் அவரது அப்பாவும்தான்!”

தேர்தலுக்கு சீமான் தயார்

ட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவிட்டார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். கடலூரில் வரும் 13-ம் தேதி 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்க இருக்கிறார். அதற்கான பணிகளில் பரபரப்பாக இருந்த சீமானை சந்தித்தோம்.

“தனித்துப் போட்டி என்கிற நாம் தமிழர் கட்சியின் முடிவு சந்தர்ப்ப சூழலால் எடுக்கப்பட்டதா?”

“இயக்கமாக இருந்து கட்சியாக உருப்பெற்றபோதே எடுக்கப்பட்ட முடிவு இது. தமிழர்களுக்கு இன, மொழி, பண்பாடு, கலாசாரம், கலை எல்லாமே இருக்கின்றன. ஆனால், வலிமையான அரசியல் மட்டும் இல்லை. அந்தப் பெரும் குறையை மாற்றவே தனித்துப் போட்டியிடுகிறோம். மாற்று என்பது உண்மைத் தளத்தில் இருந்துதான் வரவேண்டும். அதற்கு ஒரு நாள் மட்டும் போதாது. அரைநூற்றாண்டு அழுக்கை அரை நொடியில் கழுவ முடியாது. திராவிடக் கட்சிகளின் தலைமைகள் தள்ளாட்டத்தில் இருக்கின்றன. பழைய செல்வாக்கையும், வலிமையையும் ஏறக்குறைய இழந்துவிட்டன. மாற்றாக கருதப்பட்ட விஜயகாந்த், ஏமாற்றாகப் போய்விட்டார். அதனால், மக்கள் ஒரு தேடலில் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான மாற்று ‘நாம் தமிழர் கட்சி’தான். அண்ணன் வைகோவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் பல முறை முயன்று தோற்று இருக்கிறார்கள். தங்கள் கட்சியை வலிமையான கட்சி என்று சொல்லிக்கொள்ளும் கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த், பி.ஜே.பி-கூட ஏன் தனித்துப் போட்டி என்று அறிவிக்க இயலவில்லை? அதில் இருந்தே அவர்களின் பயம் தெரிகிறதே.”

“எல்லாக் கட்சிகளும் மாற்றம் வேண்டும் என்றுதானே பிரசாரம் செய்கிறார்கள்? நீங்கள் சொல்லும் மாற்று எந்த வகை?”

“மாற்று என்பது சொல் அல்ல, செயல். மாற்றம் என்றால் புரட்சி. புரட்சி என்றால் தலைகீழ் மாற்றம். அதுதான் நாம் தமிழரின் செயல்திட்டம். எங்களுக்குத் தேவை ஆள் மாற்றமோ, ஆட்சி மாற்றமோ இல்லை. அரசியலே மாறவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். சாதிய, மத அரசியல் வேண்டாம் என்று எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால், எந்தத் தொகுதியில் யார் பலம் பொருந்திய சமூகமாக இருக்கிறார்களோ, அவர்களின் பிரதிநிதியை அங்கு நிற்கவைத்து வெற்றி பெறுகிறார்கள். ஒரு தமிழ்ச் சமூகத்தை சாதி, மத வரையறைக்குள் பிரித்து வைத்து இவர்கள் ஆட்சி செய்து செழிப்பாக வாழ்ந்து வருகிறார்கள். தமிழர்களைப் பிரித்து ஆள்வது  கருணாநிதி, ஜெயலலிதாவின் திராவிட ஆட்சிமுறையின் சூழ்ச்சி. அதையும் மாற்ற வேண்டும்.”

“திராவிடக் கொள்கையின் அடிநாதமே சூழ்ச்சி என்று சொல்கிறீர்களா?”

“இல்லை என்று மறுக்க முடியுமா? மொழிப்போர் புரட்சியில் திராவிடம் வலிமை பெறுகிறது. தமிழனுக்கு உடலில் உயிர் இல்லை, மொழியில்தான் உயிர் இருக்கிறது என்று அறிந்துகொண்டு அதிகாரத்துக்கு வந்ததும் மொழியை அழித்துவிட்டார்கள். திராவிடம் என்பதே தமிழர்கள் அல்லாதவர்கள் வசதியாக வாழ்வதற்கும், ஆள்வதற்கும் கொண்டுவரப்பட்ட சூழ்ச்சி. பெருந்தலைவர் காமராஜர் காலம் வரை சாராயம் விற்று கல்விக்கூடம், மருத்துவம், தொழிற்சாலை போன்றவற்றை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை. ஆனால், அதன்பின் முதலமைச்சர் ஆன கருணாநிதியின் காலத்தில்தான் ஊழலும், லஞ்சமும்தான் முதன்மையான நிர்வாக கட்டமைப்பாக மாறியது. தமிழ் உணர்வைத்  தமிழர்களிடத்தில் தூண்டிவிட்டு, ஆட்சியில் அமர்ந்தபிறகு தமிழனை சுடுகாட்டுக்கு அனுப்பி வைத்தது திராவிட ஆட்சிதான். கிரானைட் கொள்ளை, ஆற்றுமணல் கொள்ளையை அனுமதித்தது யார்? இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள்தானே? அணு உலை, நியூட்ரினோ, மீத்தேன், கெயில் திட்டங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாமல் வந்துவிட்டனவா? தகப்பன் இல்லாத வீடுபோல, தலைவன் இல்லாத நாடும் தடுமாறும். அதுதான் இங்கு நடக்கிறது. ஈழப்போரும், சென்னைப் பெருவெள்ளமும் என் மக்களை அழித்தபோது, இவர்கள் இருவரும் எங்கு போனார்கள்? தமிழ் மக்களின் வறுமையையும், அறியாமையையும், மறதியையும் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டது இவர்கள் இருவர் மட்டுமே.”

“எல்லாவற்றுக்கும் மாற்று வேண்டும் என்று சொல்கிறீர்கள். மாற்றை முன்வைத்துதானே மக்கள் நலக் கூட்டணி உருவாகி இருக்கிறது?”

“ஊழல் ஒழிப்பு என்பதை நாம் தமிழரும், மக்கள் நலக் கூட்டணியும் மட்டும் முன்வைக்கவில்லை. பா.ம.க., அ.தி.மு.க., தி.மு.க என எல்லாக் கட்சிகளும் சொல்கின்றன. அதுதான் நகைப்புக்குரியது. எல்லா ஊழல்களுக்கும் காரணமாக இருந்தவர்கள்தான் இன்று அதைப்பற்றி பேசுகிறார்கள். 2ஜி ஊழல் நடந்தபோது அண்ணன் வைகோ எங்கு இருந்தார்? காங்கிரஸ் ஊழல் செய்தபோது கம்யூனிஸ்ட்கள் எங்கு இருந்தார்கள்? தொடக்கத்தில் இருந்து மாற்று வேண்டும். தோல்வியில் இருந்து மாற்று உருவாகாது. தி.மு.க கூட்டணியுடன் முயற்சி செய்தார் அண்ணன் திருமா. தி.மு.க-வுடன் கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தார் அண்ணன் வைகோ. ஆனால், விஜயகாந்த்துக்கு தரப்படுவதுபோல பெரிய மதிப்பை இவர்களுக்கு அவர்கள் கொடுக்கவில்லை. இவர்களிடம் நாங்கள் வைப்பது ஒரு கேள்விதான், இப்போது மட்டுமல்ல, இனி வரும் எந்தத் தேர்தலிலும் திராவிடக் கட்சிகளோடு போகமாட்டோம் என்று இவர்களால் சொல்ல முடியுமா? ஆனால், நான் சொல்கிறேன் எந்தத் திராவிட, தேசியக் கட்சியோடும் நான் எக்காலத்திலும் சேரமாட்டேன்.”

“பெரிய கட்சிகளைத் தாண்டி வெற்றி என்பது உங்களுக்கு சாத்தியமா? நீங்கள் முன்வைக்கும் ‘அன்பான சர்வாதிகாரம்’ என்பதை மக்கள் ஏற்பார்களா?”

“நிரந்தரமான வாக்கு வங்கி என ஒன்று இருந்ததே இல்லை. தற்போதைய புதிய தலை முறையினர் எந்தக் கட்சியையும் சாராதவர்கள். நடைமுறை அரசியலை அவர்கள் வெறுக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை இலவசங்கள் அல்ல, கருத்தியல் புரட்சி.  வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி, தொடரும் எங்கள் முயற்சி, இது மாற்றத்துக்கான எளிய மக்களின் புரட்சி.

தேவையில் இருந்துதான் வெற்றி பிறக்கும். மக்களுக்கு என் மீது நன்மதிப்பு இருக்கிறது. அதில் இருந்துதான் நம்பிக்கை பிறக்கிறது. என்னிடம் காசு, பணம் இல்லை. ஆனால், என்னுடைய மண் மீதும், மக்கள் மீதும் மதிப்பு இருக்கிறது. மாணவனை ஆசிரியர் கண்டிப்பது, மாணவனின் நலனுக்காக மட்டும்தான். அதைத்தான் நான் சொல்கிறேன். உலகத்தில் உபரி பட்ஜெட் போடும் நாட்டில்கூட பிச்சைக்காரன் உண்டு. ஆனால், ஈழத்தில் இல்லை. அது அண்ணன் பிரபாகரனின் அன்பான சர்வாதிகாரத்தில் உண்டான ஒரு மாற்று. அதை ஏன் இங்கு நாம் செய்ய முடியாது?”

“பணம் என்பது இன்றைய அரசியலில் முக்கியத் தேவை அதை எப்படி சந்திக்கப் போகிறீர்கள்?”

“பணம் என்பது கடந்த கால, நூற்றாண்டு கால அரசியலின் காரணிதான். ஆனால், அதுவே வெற்றியைத் தீர்மானிக்காது. நான் சவால்விடுகிறேன். எங்களைவிட அதிக வாக்குகளை பி.ஜே.பி-யால் பெறமுடியுமா? சாதி அரசியல் தமிழ்நாட்டில் வெற்றிபெறாது என்பதை ஐயா ராமதாஸ் இந்தத் தேர்தலில் உணர்வார். எங்களின் வலிமை என்பது, தமிழர்களின் ஒற்றுமை. சாதி, மத அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவரும் வேளையில், சீக்கிரமாக பண அரசியலும் வீழ்ந்து, தூய ஜனநாயக அரசியல் பாதை மலரும்.”

“ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள்?”

“ ‘நமக்கு நாமே’ என்றால் கட்சியும், பதவியும் அவர்களுக்கே. தலைவராக அப்பா, இளைஞர் அணிச் செயலாளராகவும் பொருளாளராகவும் மகன், மகளிர் அணிச் செயலாளராக மகள். இதுதான் நமக்கு நாமே. இளைஞர் அணிச் செயலாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆக்கி இருக்கலாமே? எங்கள் இலக்கே ஸ்டாலினும் அவரது  அப்பாவும்தான்.”

“தேர்தல் முடிவுகளில் நீங்கள் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க மூன்று சீட் பற்றாக்குறை வரும்போது என்ன செய்வீர்கள்? அப்போது எப்படியும் கூட்டணி தேவைப்படுமே?”

(வெடித்துச் சிரிக்கிறார்...) அப்படி வரும் சூழலில் எங்கள் கொள்கைகளையும் திட்டங் களையும் புரிந்தவர்கள் நிச்சயம் எங்கள் பக்கம் வருவார்கள். நீர், நில மேலாண்மை; ஆடு மாடு மேய்ப்பது அரசு வேலை; இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம்; விளைச்சலை சேமிக்கக் கிடங்கு; அருகிலேயே அதற்கான ஆலை; மேய்ச்சலையும், விளைச்சலையும் படிக்காதவர்கள் பார்த்துக்கொள்வவது; ஏற்றுமதியையும், அந்நியச் செலாவணியையும் படித்தவர்கள் பார்த்துக்கொள்வது; சிகரெட், மது அத்தியாவசியம் அல்ல... இப்படியாக எங்களுடைய நுண் அரசியலையும், கொள்கை
களையும் புரிந்துகொள்பவர்களுடன் இணைந்து ஆட்சியைப் பிடிப்பேன். ஏதாவது ஒரு கட்சியில் மானமுள்ள தமிழன் இல்லாமலா போய்விடுவான்?”

- மா.அ.மோகன் பிரபாகரன்
படம்: பா.காளிமுத்து

 


‘‘லேப்டாப்கள் தரமானவைதான்!”

2014, நவம்பர் 13 தேதியிட்ட இதழில், தமிழக அரசின் இலவசத் திட்டங்கள் தொடர்பாக வெளியான கட்டுரைக்கு, லேப்டாப் தயாரிப்பு நிறுவனமான அட்வான்ஸ்டு மைக்ரோ டிவைசஸ் சார்பில் விளக்கம் அளித்துள்ளனர். அதன் விவரம்: “ஜூனியர் விகடன் இதழில் வெளியான கட்டுரையில், தமிழக அரசின் இலவசத் திட்டத்தில் கொடுக்கப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் தரமற்றவை என்று சொல்லப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக எலக்ட்ரானிக் பொருட்களை சப்ளை செய்வதற்கான, டெண்டரின் வெளிப்படைத்தன்மை, உண்மைத்தன்மை, தயாரிப்பாளர்களின் அனுபவம் ஆகியவை குறித்து அந்தக் கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டத்துக்காகக் கடந்த 5 ஆண்டுகளாக தமிழக அரசுடன் இணைந்து செயல்படுகிறோம். ஏஎம்டி லேப்டாப்கள் குறைந்த அளவு மின்சாரத்தை சேமிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டவை. அதிகபட்சத் தரத்துடன் செயல்படக்கூடியவை என்று பாராட்டு பெற்றவை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick