நியாயங்கள் பொதுவானவை... புரியாமல் போனவை!

தலையாரிக்கு ஒரு சட்டம்... தலைமைச் செயலருக்கு ஒரு சட்டமா?

ரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினார்கள்... ஊழல் செய்தார்கள் என்று யாராவது புகார் கொடுத்தால், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவுசெய்து உடனே களத்தில் இறங்கிவிடும். இன்ஸ்பெக்டர், மின்வாரிய ஊழியர், வி.ஏ.ஓ., ஆர்.டி.ஓ என்றால் கேட்கவே தேவையில்லை. ஆக்‌ஷன் அதிரடியாக இருக்கும். ஆனால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், அரசுத் துறை இணைச் செயலாளர், அதற்கு மேல் தகுதியில் இருக்கும் அதிகாரிகள் ஊழல் செய்தார் என்று புகார் கொடுத்தால், அதில் ஆக்‌ஷன் ஆமை வேகத்தில் இருக்கும். காரணம், விதிமுறைகள் அப்படி.

ஆளுக்கொரு நியாயம்...

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற முதல் ரக அதிகாரிகள் மீது, லஞ்சப் புகார் கொடுத்தால், அதை லஞ்ச ஒழிப்புத் துறையில் தனியாக எடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையரின் மேஜைக்குக் கொண்டு போவார்கள். அவர் அதை, தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தபாலில் அனுப்பி வைப்பார். அத்தோடு அங்கு லஞ்ச ஒழிப்புத் துறையின் வேலை முடிந்துவிடும்.

அதன்பிறகு, தலைமைச் செயலாளர் அந்தப் புகாரை படித்துப் பார்த்துவிட்டு, அதைக் கவனிக்கலாம் என்று அவர் நினைத்தால், ஒரு குழுவை அமைப்பார். அந்தக் குழு, அந்தப் புகாரை பரிசீலனைசெய்து, அலசி ஆராய்ந்து, இதில் வழக்குப் பதிவுசெய்யலாம் என்று அறிக்கை கொடுத்தால், அதன்பிறகுதான் லஞ்ச ஒழிப்புத் துறை அதில் வழக்கையே பதிவுசெய்யும். இல்லை யென்றால், அதுவும் இல்லை. தமிழக அரசாங்கத்தில் மட்டுமல்ல... மத்திய அரசிலும் இதுதான் நிலை.

மத்திய அரசு vs உச்ச நீதிமன்றம்

அரசின் நடைமுறைகளால் வெறுத்துப்போன வினித் நாராயணன் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் போட்டார். அதன்படி தவறு செய்பவர்கள் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும், அவர் மீது உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு ஒரு சட்டம், கீழ்நிலை அரசு ஊழியர்களுக்கு ஒரு சட்டம் என்று இருக்கக் கூடாது என்று கோரினார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘இது சரியான கோரிக்கை. இனி அப்படியே செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

ஆனால், மத்திய அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தவில்லை. மாறாக, 1998-ம் ஆண்டு ஓர் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. அதன்படி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி, அரசு உயர் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமானால், அதற்கு அரசாங்கத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என வசதியாக சட்டம் இயற்றிக்கொண்டது. மத்திய அரசின் இந்தச் சட்டத்தை எதிர்த்து, சுப்பிரமணியன் சுவாமியும் பிரசாந்த் பூஷணும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அந்த வழக்கை விசாரித்தது. 5 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், “உச்ச நீதிமன்றம் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை வலுவாக எடுக்க நினைக்கிறது. ‘லஞ்ச ஒழிப்புச் சட்டம்’ என்ற ஒன்று இருப்பதே லஞ்சம் வாங்குபவர்களையும் ஊழல் செய்பவர்களையும் கட்டுப்படுத்து வதற்குத்தான். ஆனால், அரசாங்கம் வைத்துள்ள விதிமுறைகள், அதற்கு நேர்மாறாக தவறு செய்பவர்களைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப் பட்டதாக உள்ளது. எனவே, இனிமேல் இதுபோன்ற நடைமுறைகளைக் கைவிட்டு, தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதற்குமேல், அதில் பிடிவாதம் பிடிக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த மத்திய அரசு, ஆட்டத்தில் இருந்து விலகிக்கொண்டது. மத்திய அரசு ஊழியர்கள் யார் தவறு செய்தாலும் அதில் புகார் வந்தால், சி.பி.ஐ நடவடிக்கை எடுக்கலாம் என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டது.

தமிழக அரசு திருத்தவில்லை!

மத்திய அரசே உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டாலும், தமிழக அரசுக்கு அதை ஏற்க மனமில்லை. வழக்கம்போல், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு ஒரு நடைமுறை, மற்ற அரசு ஊழியர்களுக்கு ஒரு நடைமுறை என்றே வைத்திருந்தது. இதை மாற்றச் சொல்லி வழக்கறிஞர் புகழேந்தி என்பவர், 2010-ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். வினித் நாராயணன் வழக்கு தீர்ப்பு, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை எல்லாம் மேற்கொள் காட்டி அவருடைய வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடினார். இதையடுத்து, இதில் தமிழக அரசின் நிலை என்ன என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்குப் பதில் சொன்ன அரசாங்கம், விரைவில் புதிய அரசாணையைக் கொண்டுவருவோம். அதில், தவறு செய்யும் அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்களைச் சமமாக பாவித்து ஒரேவிதமான நடவடிக்கை எடுக்க வழி செய்யப்படும் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

‘சரி, தமிழக அரசும் திருந்தப்போகிறது. இனி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் தவறு செய்தால், அவர்கள் மீதும் வழக்குப் பதியப்படும்’ என்று வழக்கறிஞர்கள் புகழேந்தியும், மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனும், பொதுமக்களும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளும் நினைத்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், கடந்த 2-ம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் இருந்து ஓர் அரசாணை வந்தது. சரியாக அது அரசாங்க ஊழியர்கள் அனைவரையும் சமமாக பாவித்தே வெளியாகி இருந்தது.

அதில், ‘‘தவறு செய்தவர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தாலும் சரி... சாதாரண தலையாரி, வி.ஏ.ஓ என யாராக இருந்தாலும் சரி... அத்துடன் பொது ஊழியர்கள் என்று சொல்லப்படும், பஞ்சாயத்து போர்டு தலைவர் தொடங்கி அமைச்சர் வரை யாராக இருந்தாலும் ஒரே நடைமுறைதான். இனி ஐ.ஏ.எஸ் அதிகாரி மட்டுமல்ல, தலையாரி லஞ்சம் வாங்கினால் கூட அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்யக் கூடாது. மாறாக அந்தப் புகாரை அரசாங்கத்துக்கு அனுப்பி, அரசாங்கத்தின் கருத்தை அறிய வேண்டும். அரசாங்கம் அவர் மீது வழக்குப் பதிவு செய்யலாம் என்று சொன்னபிறகுதான் லஞ்ச ஒழிப்புத் துறை தனது வேலையைத் தொடங்க வேண்டும்’’ என்று அந்த அரசாணை சொல்கிறது. தற்போது இதை எதிர்த்து புகழேந்தி, நீதிமன்றத்தில் வழக்கு நடத்திக்கொண்டிருக்கிறார். மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாதாடிக்கொண்டிருக்கிறார்.

 - ஜோ.ஸ்டாலின்


அரசாணைக்கான அவசரம் ஏன்?

சென்னை உயர் நீதிமன்றத்தில் சந்திரசேகர் என்பவர் ஒரு வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர் ஆகியோர், சென்னை மருத்துவக் கல்லூரியில் விதிமுறைகளை மீறி, எண்டோகிரையானலஜி துறையில் இணைப் பேராசிரியர் பதவியிடத்தை உருவாக்கி உள்ளனர். இது குறிப்பிட்ட ஒருவருக்கு தவறான வழியில், பதவி உயர்வு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள பணியிடம். எனவே, தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தங்களுக்குச் சிக்கலாகும் என்ற நிலையில், இப்படி ஓர் அரசாணையை தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

போஸ்ட் ஆபீஸ் வேலையை மட்டுமே செய்யும்!


தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் விதிமுறையைத் திருத்தச் சொல்லி நாம் வழக்குத் தொடுத்துள்ளோம். ஆனால், தமிழக அரசு தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக் கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் விதிமுறைகளை வகுத்து அரசாணை வெளியிடுகிறது. தற்போது வெளியாகி உள்ள அரசாணையின்படி, யார் லஞ்சம் வாங்கினாலும் ஊழல் செய்தாலும் அவர் பஞ்சாயத்து போர்டு தலைவர், தலையாரி, வி.ஏ.ஓ., ஆர்.டி.ஓ., தலைமைச் செயலாளர், கவுன்சிலர், எம்.எல்.ஏ., அமைச்சர்... என யார் மீதும் வழக்குப் பதிவுசெய்ய முடியாது. வரும் புகார்களை அரசாங்கத்துக்கு அனுப்பும் போஸ்ட் ஆபீஸ் வேலையை மட்டும்தான் இனி லஞ்ச ஒழிப்புத் துறை செய்ய முடியும். நாடு முழுவதும் லோக்பால், ஜன் லோக்பால் என்று புதிய சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்ற கருத்து வலுபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு வழிகாட்டி உள்ளது. இவை அத்தனையும் மீறி, இவற்றுக்கு நேரெதிராக தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய அரசாணை தமிழகத்தை ஊழல் மாநிலமாக்கவே வழி செய்யும்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick