மிஸ்டர் கழுகு: மேடைக்கே வந்த கார்... பிரசாரம் போவாரா?

‘மேடைக்கே வந்த கார்... பிரசாரம் போவாரா ஜெ.?’ - கழுகார் அனுப்பி மெசேஜ் வாட்ஸ்அப்பில் வந்து விழுந்தது. ஒரு மணி நேரம் கழித்து லேண்ட் ஆனார் கழுகார். ‘‘மேட்டருக்குள் போவதற்கு முன்பு ஒரு ஃபிளாஷ்பேக்’’ என முன்னோட்டம் கொடுத்து இரண்டு ஆண்டுகள் பின்னோக்கிப் போனார் கழுகார்.

‘‘2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக டெசோ மாநாட்டை தி.மு.க நடத்தியது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட அந்த மாநாடு, அவ்வளவு சுலபத்தில் நடந்துவிடவில்லை. மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில் திடீரென முட்டுக்கட்டை போட்டது அ.தி.மு.க அரசு. மாநாட்டைத் தடை செய்யக்கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் ஐகோர்ட்டில் பொதுநல வழக்குப் போட்டார். ‘ஒய்.எம்.சி.ஏ மைதானத்தைச் சுற்றி அரசு மருத்துவமனை, கல்வி நிலையங்கள், வழிப்பாட்டுத் தலங்கள் உள்ளன. மாநாடு நடைபெற்றால் ராயப்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஏரியாவே ஸ்தம்பித்துவிடும். எனவே மாநாடு நடத்த அனுமதிக்கக் கூடாது’ எனச் சொன்னார் ராமச்சந்திரன். இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் அப்போது வாதாடியது அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன். இப்போது அவர் அ.தி.மு.க ராஜ்ய சபா எம்.பி ஆகிவிட்டார். இவர் வைத்த வாதம் என்ன தெரியுமா? ‘மெட்ரோ ரயில் பணி நடப்பதால் ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை நெடுஞ்சாலைப் பகுதிகளில் போக்குவரத்து மாறுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரின் 2-வது மிகப் பெரிய மருத்துவமனை ராயப்பேட் டையில்தான் இருக்கிறது. அங்கு தினமும் புறநோயாளிகளாக 3 ஆயிரம் பேர் வந்து செல்கிறார்கள். உள்நோயாளிகளாக 1,000 பேர் இருக்கிறார்கள். மாநாடு நடக்கும்பட்சத்தில் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள். சென்னை மாநகர மக்கள் போக்குவரத்து நெரிசல் பாதிப்புக்கு உள்ளாவார்கள். அதனால் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் டெசோ மாநாடு நடத்த அனுமதிக்கக் கூடாது’ என்றார்.”

‘‘என்ன விஷயத்துக்கு நீர் வருகிறீர் என்று தெரிகிறது. சொல்லும்!”

 ‘‘மாநாடு நடத்த அனுமதி கேட்டு தி.மு.க சார்பில் கொடுக்கப்பட்ட கடிதத்துக்கு அப்போதைய போலீஸ் கமிஷனர் திரிபாதியும் டி.ஜி.பி-யாக இருந்த ராமானுஜமும் அனுமதி தரவில்லை. 11 காரணங்களைச் சொல்லி மாநாட்டை நடத்தத் தடை விதித்தார்கள். ஒருவழியாக சட்டப் போராட்டம் நடத்தித்தான் டெசோ மாநாட்டை நடத்தி முடித்தது தி.மு.க. அந்த டெசோ மாநாடு நடந்த ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில்தான் கட்சிப் பிரமுகர்கள் 14 பேர்களின் இல்லத் திருமணத்தை ஜெயலலிதா நடத்தி வைத்தார். அதனால், ராயப்பேட்டை பகுதி அ.தி.மு.க-வினர் வசம் ஆனது. ராயப்பேட்டை பகுதிக்குள் எந்த வாகனமும் செல்லாத வகையில் தடுப்புகள் போட்டு வாகனங்களைத் திருப்பிவிட்டனர். ராயப்பேட்டை ஏரியாவுக்குள் நுழையும் பகுதிகள் அனைத்தும் தடுப்புகள் போடப்பட்டதால் சென்னை மாநகரம் போக்குவரத்தில் சிக்கிச் சீரழிந்தது. ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்குப் போக முடியாமல் புறநோயாளிகள் அவதிக்கு உள்ளானார்கள். டெசோ மாநாட்டுக்காகச்  சொன்ன காரணங்கள் அனைத்தையும் ஆளும் கட்சியே மீறியதுதான் உச்சபட்ச காமெடி.’’

‘‘அது வேற வாயாக இருக்கலாம்?’’

‘‘இருக்கலாம்!  அமைச்சர்கள் வைத்திலிங்கம், காமராஜ், எஸ்.பி.சண்முகநாதன், முக்கூர் என்.சுப்பிரமணியன் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள் 14 பேர்களின் இல்லத் திருமணங்களைத் தலைமை தாங்கி நடத்தி வைத்தார் ஜெயலலிதா. இவை டிசம்பர் 6-ம் தேதி நடந்திருக்க வேண்டும். மழை, வெள்ளத்தால் இந்தத் திருமணம் தள்ளிப்போனதால் சென்டிமென்டாக பாதிக்கப்பட்டார்கள் திருமண வீட்டார்கள். ஒருவழியாக ஜெயலலிதாவின் தேதி கிடைத்த பிறகுதான் நிம்மதி அடைந்தனர். டிசம்பர் மாதம் நடந்த கட்சியின் பொதுக்குழுவுக்காக சாலைகளை மறித்து பேனர்களை வைத்ததுபோல இந்தத் திருமணத்துக்கும் தடபுடல் வரவேற்பு. ராயப்பேட்டை ஏரியா முழுவதும் பேனர்களும் தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. மைதானத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு வளையத்தை போலீஸார் அமைத்திருந்தனர். வி.ஐ.பி-க்களின் வாகனங்கள் மட்டுமே திருமணம் நடந்த இடத்துக்கு அனுமதிக்கப்பட்டன. மற்றவர்கள் நடந்துதான் வந்தாக வேண்டும்.

ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ‘பாகுபலி’ பட செட்டை மிஞ்சும் அளவுக்கு பிரமாண்டமாக செட் போட்டிருந்தார்கள். மாநாடு ரேஞ்சுக்கு திருமண நிகழ்ச்சி நடந்தது. அரங்கம் முழுவதும் ஏஸி வசதி செய்திருந்தார்கள். மேடையும் பிரமிப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. 14 திருமணங்கள் என்பதால் மணமக்கள் வீட்டாரை மேடையில் ஏற்றுவதற்கு வசதியாக அ.தி.மு.க பிரமுகர்கள் பெயர்களைப் போட்டுத் தனியாக போர்டுகள் தயார்செய்திருந்தார்கள். ஜெயலலிதா வந்ததுமே திருமண வீட்டார்களை ஒவ்வொருவராக அழைத்து, திருமணத்தை நடத்தி வைத்தார் ஜெயலலிதா. வைத்திலிங்கத்தின் திருமண வீட்டார்கள் ஆர்வக்கோளாறில் பச்சை பசேல் நிறத்தில் ஒரே மாதிரியான சட்டைகள் போட்டிருந்தார்கள். ‘தடக்... தடக்’ என மணமக்களும் அவர்களின் வீட்டார்களும் ஜெயலலிதா கால்களில் விழுந்து வணங்கினார்கள். மணமகள் எழுந்த நிலையில்கூட மணமகன்கள் சிலர் விழுந்து எழுவதுதற்கு நேரம் ஆனது.’’

‘‘ஆகுமே?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்