பெரியோர்களே... தாய்மார்களே! - 63

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

ந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவான பிறகு நடந்த முதல் பொதுத்தேர்தலில், சென்னை மாகாணத்தில் அறுதிப் பெரும்பான்மை பெற்று காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. விடுதலைக்குப் பிறகு அமைந்த முதல் அரசே, ‘மைனாரிட்டி அரசு’ என்று அழைக்கப்பட்டது. அதன் பிறகு அமைந்த அரசுகள் பெரும்பான்மை, அசுரப் பெரும்பான்மை பெற்ற அரசுகளாக அமைந்தன.

இந்தியா விடுதலை பெற்று ஐந்து ஆண்டுகள்கூட முழுமையாக முடியவில்லை. 1952-ல் முதல் தேர்தல். அன்று சென்னை மாகாணம் என்பது பிரிக்கப்படாதது. மொத்தமுள்ள 375 தொகுதிகளில் 152 இடங்களையே காங்கிரஸ் கைப்பற்றியது. கம்யூனிஸ்ட்கள் 61 இடங்களில் வென்று காட்டினார்கள். காங்கிரஸுக்கு எதிராக மொத்தம் 223 உறுப்பினர்கள் அவைக்குள் போனார்கள். காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 66 லட்சத்து 77 ஆயிரத்து 588 என்றால், காங்கிரஸுக்கு எதிராக விழுந்த வாக்குகள் ஒரு கோடியே 26 லட்சத்து 65 ஆயிரத்து 126 வாக்குகள். இரண்டு மடங்கு வாக்குகளை அதிகம் பெற்றிருந்தார்கள், காங்கிரஸ் அல்லாதவர்கள்.

அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த  காமராஜரால் இந்தத் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ‘ஐக்கிய ஜனநாயக முன்னணி’ என்ற கூட்டமைப்பை கம்யூனிஸ்ட்டுகளுடன் சேர்ந்து உருவாக்கிய முன்னாள் முதலமைச்சர் பிரகாசம், தங்களுக்கு 166 உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக அறிவித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றிருந்தார் காமராஜர். எனவே, அவர் இங்கு முதல்வராக முடியாது. கம்யூனிஸ்ட்களிடம் மாகாணம் போய்விடக் கூடாது என்று தடுக்கும் சக்தி, ராஜாஜியிடம் இருப்பதாகவே பலரும் நினைத்தார்கள். அரசியல் ஓய்வுபெற்று தியாகராயர் நகர், பசுல்லா சாலை வீட்டில் ராமாயணத்துக்குப் பொழிப்புரை எழுதிக்கொண்டிருந்த ராஜாஜியை எக்ஸ்பிரஸ் கோயங்காவும், தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமனும் சந்தித்துப் பேசினார்கள். அடுத்து பி.எஸ்.குமாரசாமி ராஜா, காமராஜர், சஞ்சீவி ரெட்டி ஆகிய மூவரும் வந்திருந்தார்கள். ‘‘இப்போது எனக்கு வயது 72. ஏன் இந்த வயதில் என்னைத் தொந்தரவு செய்கிறீர்கள்?” என்று கேட்டார் ராஜாஜி. ‘‘கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு ஆட்சி வந்துவிட்டால் நாட்டுக்கும் பிரச்னை, காங்கிரஸ் கட்சிக்கும் பிரச்னை” என்று இவர்கள் சொன்னார்கள். ‘‘உங்களுக்கு எந்தப் பிரச்னை என்றாலும் நான் பதவிக்கு வர வேண்டும் என்கிறீர்கள். நாளைக்கு சேலத்தில் பிரச்னை என்றாலும் சேலம் நகர சபைத் தலைவர் ஆகச் சொல்வீர்களா?” என்று ராஜாஜி கேட்டார். விவகாரம் பிரதமர் நேருவுக்குப் போனது. “இந்த வயதில் அவரைப் பதவியேற்க வலியுறுத்த நான் விரும்பவில்லை. அதேநேரத்தில் மாகாண காங்கிரஸ் கமிட்டியின் உரிமையிலும் நான் தலையிட விரும்பவில்லை” என்று ஜனநாயகம் பொங்க நேரு தீர்ப்பளித்தார். ஆனால், இவர்கள் ராஜாஜியை விடுவதாக இல்லை. “என்னால் இனிமேல் தேர்தலில் நிற்க முடியாது. இதற்கு சம்மதித்தால் பொறுப்பை ஏற்கிறேன்” என்றார் ராஜாஜி. ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்ட நியமன உறுப்பினர் ஆனார் ராஜாஜி. முதலமைச்சராகவும் ஆனார். இந்தச் செய்திகளைப் பட்டியலிடும் ராஜாஜியின் பேரன்,  ‘73 வயதிலும் எதிர்காலம் உண்டு’ என்று எழுதி இருப்பது இன்றைய அரசியல்வாதிகள் அனைவருக்கும் ஆறுதல் தரும் தகவல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்