சட்டசபையில் கேள்வி கேட்காத 29 மக்கள் பிரதிநிதிகள்!

‘‘உங்களுக்காக உழைக்க என்னைத் தேர்ந்தெடுங்கள்’’ என தேன் தடவிப் பேசி, சட்டசபைக்குள் நுழைந்தவர்கள் இந்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்தார்கள்?

சம்பளம் ரூ.8,000, ஈட்டுப் படி ரூ.7,000, தொலைபேசிப் படி ரூ.5,000, தொகுதிப் படி ரூ.10,000, அஞ்சல் படி ரூ.2,500, தொகுப்புப் படி ரூ.2,500, வாகனப் படி ரூ.20,000 ஆக மொத்தம் ரூ.55,000. நம்ம ‘மக்கள் பிரதிநிதி’களுக்கான ஒட்டுமொத்த சம்பளம் இது. அது மட்டுமா? சட்டசபையில் எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டால், நாளொன்றுக்கு ரூ.500 தினப் படி, ரயிலில் 2 டயர் ஏஸி பெட்டியில் பயணிக்க ஆண்டுக்கு ரூ.20,000, அரசு பஸ்களில் ஒருவருடன் விலையில்லா பயணம், ரூ.250 மாத வாடகையில் சட்டமன்ற விடுதியில் அறை, அரசு மருத்துவமனைகளில் குடும்பத்தினருக்குக் கட்டணமின்றி மருத்துவச் சிகிச்சை, முக்கியமான அறுவைச்சிகிச்சைகளுக்கு நிதியுதவி, அரசு லெட்டர் பேடுகள், கவர்கள் என ஸ்டேஷனரி பொருட்கள், விடுதியில் 24 மணிநேர மருந்தகம், ஏஸி ஜிம், சிறுவர் பூங்கா, இறகுப் பந்து விளையாட்டுத் திடல், கார் பாஸ்கள், மரணமடைந்தால் எம்.எல்.ஏ குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி, குடும்பத்துக்கு மாதம் ரூ.6,000 ஓய்வூதியம், முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதியம், ஆண்டுக்கு ரூ.12,000 மருத்துவப் படி, இப்படி படிக்கட்டுகளாக நீள்கிறது  எம்.எல்.ஏ-க்களுக்கு வழங்கப்படும் படிகள்.

இவ்வளவு வசதிகளைப் பெறும் நம்முடைய ‘மக்கள் பிரதிநிதி’கள் சட்டசபையில் எப்படிச் செயல்பட்டார்கள்? எம்.எல்.ஏ ஆவதற்காக ‘அரசியல் சதுரங்கம்’ ஆடி தேர்தலில் ஸீட் பெற்று, ‘‘உங்களுக்காக உழைக்க என்னைத் தேர்ந்தெடுங்கள்’’ என தேன் தடவிப் பேசி, சட்டசபைக்குள் நுழைந்தவர்கள் இந்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்தார்கள்? சட்டசபை ரேங்க் கார்டு எப்படி? தேர்தல் நெருக்கத்தில் அவர்களின் நடத்தைகளைப் பார்ப்போம்.

கேள்வி நேரம், ஜீரோ ஹவர், மானியக் கோரிக்கை விவாதம், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், பட்ஜெட் மீதான விவாதம், பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை, பாயின்ட் ஆஃப் ஆர்டர், சட்ட முன் வடிவுகள் என சட்டசபையில் பேச நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. சட்டசபை தினமும் கூடும்போது நிகழ்ச்சி நிரலில் முதலில் இடம்பெற்றிருப்பது கேள்வி நேரம்தான். இந்தக் கேள்வி நேரத்தில் எம்.எல்.ஏ-க்கள் காட்டிய அக்கறை என்ன? 2011 மே மாதத்தில் அ.தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு கடந்த டிசம்பர் மாதம் வரையில் மொத்தம் 188 நாட்கள் சட்டசபை நடைபெற்றுள்ளன. இந்த 188 நாட்களில் கேள்வி நேரத்தை மட்டும் எடுத்து ஆய்வு செய்தபோது ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது. கேள்வி நேரத்தில் மட்டும் 29 ‘மக்கள் பிரதிநிதி’கள் ஃபெயில் ஆகியிருந்தார்கள். 29 எம்.எல்.ஏ-க்கள் சட்டசபையில் ஒரு கேள்வியைக்கூட கேட்கவில்லை. ஃபெயில் ஆன அந்த 29 பேர் யார் யார்? (பெட்டிச் செய்தியில் பார்க்கவும்.) தி.மு.க தலைவர் கருணாநிதி, எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த், ஸ்டாலின், காடுவெட்டி குரு, முன்னாள் சபாநாயகர் டி.ஜெயக்குமார் என முக்கியப் புள்ளிகள் ஒரு கேள்விக்கூட கேட்கவில்லை.

இந்த ஐந்து ஆண்டுகளில் சட்டசபைக்குள் கருணாநிதி காலடி எடுத்து வைக்கவில்லை. தொடர்ந்து 60 நாட்கள் அவைக்கு வராமல் போனால் எம்.எல்.ஏ பதவியை இழந்துவிட நேரிடும் என்பதால், அவ்வப்போது லாபியில் வந்து கையெழுத்து மட்டும் போட்டுவிட்டுப் போய்விடுகிறார் கருணாநிதி. ‘‘அவைக்கு வரத் தயார். மோட்டார் நாற்காலியில் உள்ளே வர ஏற்பாடு செய்து தாருங்கள்’’ என கருணாநிதி வைத்த கோரிக்கைக்கு சட்டமன்றம் செவி சாய்க்கவில்லை. அவைக்கே வராததால், கருணாநிதி ஒரு கேள்வியும் கேட்கவில்லை.

கருணாநிதி இருக்கட்டும். ஸ்டாலினும்  ஒரு கேள்வியையும் கேட்கவில்லை. துணைத் தலைவராக இருக்கும் துரைமுருகன், சட்டசபையில் கேள்வி கேட்க மறுக்கிறார். கொஞ்ச காலம் அவைக்கே வராமல் டிமிக்கி கொடுத்த அனிதா ராதாகிருஷ்ணன்கூட இதில் அப்பிட்டு. தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமியும், எ.வ.வேலுவும் தேறவில்லை. சட்டசபையின் எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த், நாக்கைத் துருத்திய விவகாரத்துக்குப் பிறகு சட்டசபையை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. கருணாநிதியைப் போல கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு எம்.எல்.ஏ பதவியைத் தக்கவைத்து வருகிறார். அவைக்கு வந்த நாளில் ஒரு கேள்வியையும் கேப்டன்(!) கேட்கவில்லை. மேடைகளில் ஆக்ரோஷமாக அனல் கக்கும் மாவீரன்(!) காடுவெட்டி குருவும் இதற்கு விதிவிலக்கல்ல. கொஞ்ச காலம் சபாநாயகராக இருந்து சட்டசபையை நடத்திய அனுபவம் உள்ள டி.ஜெயக்குமார்கூட ஏமாற்றிவிட்டார்.

முன்னாள் அமைச்சர்களான முஹம்மது ஜான், கே.பி.முனுசாமி, கே.டி.பச்சைமால், கே.வி.ராமலிங்கம், செங்கோட்டையன், செந்தமிழன், செந்தில் பாலாஜி, சி.வி.சண்முகம், என்.ஆர்.சிவபதி ஆகியோரும் ஒரு கேள்வியைக்கூட எழுப்பாமல் பெஞ்சை தேய்த்து இருக்கிறார்கள். கொஞ்சகாலம் அமைச்சர்களாக இல்லாமல் இருந்த எம்.எஸ்.எம்.ஆனந்தன், கோகுல இந்திரா, பி.வி.ரமணா, எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோரும் இதில் ஸ்கோர் செய்யவில்லை. ஏன் இடையில் சபாநாயகராக ஆன ப.தனபால்கூட சாதாரண உறுப்பினராக இருந்தபோது ஒரு கேள்வியும் கேட்கவில்லை. கேள்வி கேட்காத 29 பேரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்தான் அதிகம். 21 அ.தி.மு.க-வினர் கேள்வியே கேட்கவில்லை. அதற்கு அடுத்த இடத்தில் 6 தி.மு.க-வினர் இருக்கிறார்கள். பா.ம.க., தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்கள் தலா ஒருவர்.

ஃபெயில் ஆனவர்களைப் பார்த்தோம். சட்டசபை ரேங்க் எடுத்தவர்களையும் பார்ப்போம். கேள்வி,  பதில் நேரத்தில் அமைச்சர்கள் பதில் மட்டுமே சொல்வார்கள். அவர்களை தவிர்த்து நியமன உறுப்பினரைச் சேர்த்து 173 பேர்கள்தான் கேள்விகள் எழுப்பியிருக்கிறார்கள். மரணம் அடைந்தவர், இடைத் தேர்தலில் வென்றவர், முன்னாள் அமைச்சர்களும் இந்த 173 பேரில் அடக்கம். அதிக கேள்வி கேட்டவர்களில் குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ்தான் டாப்-1 இடத்தில் இருக்கிறார். மொத்தம் 31 கேள்விகளும் 115 துணைக் கேள்விகளும் கேட்டு அசத்தியிருக்கிறார் பிரின்ஸ். இரண்டாவது இடத்தில் மானாமதுரை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ம.குணசேகரன் இருக்கிறார். அவர் 31 கேள்விகளும் 72 துணைக் கேள்விகளும் கேட்டிருக்கிறார். மூன்றாவது இடத்தில் சங்ககிரி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ. விஜயலட்சுமி பழனிச்சாமி இடம்பெற்றிருக்கிறார். அவர், 29 கேள்விகளையும் 53 துணைக் கேள்விகளையும் எழுப்பி இருக்கிறார். நான்காவது இடத்தில் சரத்குமார் (அ.தி.மு.க), ஐந்தாவது இடத்தில் சி.சண்முகவேலு (அ.தி.மு.க) இடம்பெற்றனர்.

கேள்வி கேட்ட 173 பேரில் கடைசி ஐந்து இடங்களில் இருப்பவர்களையும் பார்த்து விடுவோம். சில காலம் அமைச்சராக இல்லாமல் இருந்த இரா.காமராஜும் அரசு கொறடா ஆர்.மனோகரனும் தலா ஒரு கேள்வியும் தலா நான்கு துணைக் கேள்விகளும் கேட்டிருக்கிறார்கள். மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ ராஜலட்சுமி ஒரு கேள்வியும் மூன்று துணைக் கேள்விகளும் கேட்டிருக்கிறார். பல்லாவரம் தொகுதி தன்சிங் (அ.தி.மு.க) 1 கேள்வியும் 1 துணைக் கேள்வியும் எழுப்பியிருக்கிறார். நியமன உறுப்பினரான நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ்தான் (ஆங்கிலோ இந்தியன்) கேள்வி கேட்ட 173 பேரில், ஆகக் கடைசி இடத்தில் இருக்கிறார். அவர் ஒரு கேள்வியை மட்டுமே எழுப்பியிருக்கிறார்.

கேள்வி கேட்டவர்களில் டாப் 25 பட்டியல், கடைசி இடங்களைப் பிடித்தவர்கள், துணைக் கேள்வி கேட்டவர்களில் யார் பெஸ்ட்? போன்ற இன்னும் ஆச்சர்யங்கள் அடுத்த இதழில்...

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி


அதிருப்தி தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் செயல்பாடு!

தொகுதிப் பிரச்னைக்காக(!) அ.தி.மு.க முகாம் தாவிய அதிருப்தி தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் தொகுதிக்காக(?) சட்டசபையில் எப்படியெல்லாம் கேள்வி கேட்டார்கள்? ராதாபுரம் மைக்கேல் ராயப்பன் 23 கேள்விகளும், செங்கம் டி.சுரேஷ்குமார் 17 கேள்விகளும், விருதுநகர் பாண்டியராஜன் 15 கேள்விகளும், சேந்தமங்கலம் ஆர்.சாந்தி 11 கேள்விகளும் திருத்தணி அருண் சுப்பிரமணியன் 10 கேள்விகளும், மதுரை மத்தி ஆர்.சுந்தர்ராஜன் 7 கேள்விகளும், பேராவூரணி அருண் பாண்டியன் 3 கேள்விகளும், தமிழழகன் 2 கேள்விகளும் கேட்டிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick