இவ்வளவு சாட்டையடிகளை எந்த அரசும் வாங்கியதில்லை!

5 ஆண்டு ஆட்சி - ஜூ.வி. ஸ்கேன்

நீதிமன்றங்களின் கண்டனங்கள், இடித்துரைப்புகள், அபராதங்கள், ஆஜராகச் சொல்லி அனுப்பப்படும் நோட்டீஸ்கள் என்பவை எல்லாம் எதிர்வாதி அவமானப்பட வேண்டிய விவகாரங்கள்; அவர்களுக்குப் பதற்றம் தரக்கூடிய நடவடிக்கைகள். இத்தகைய தலைக்குனிவுகளை தமிழகத்தின் முந்தைய ஆட்சியாளர்களைவிட, ஜெயலலிதா தலைமையிலான தற்போதைய அரசு அதிகமாகச் சந்தித்துள்ளது.

கடந்த நான்கரை ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில் அ.தி.மு.க அரசு சந்தித்த அவமானங்கள் ஏராளம். அதைப் பற்றியெல்லாம் தமிழக அரசு கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இன்றைய தேதியில், தமிழக அரசுக்கு எதிராக ஏராளமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்காகத் தனியே ஒரு கண்டனத்தையும் நீதிமன்றத்திடம் இருந்து தமிழக அரசு தலையில் குட்டாக வாங்கிக்கொண்டது. ஆனாலும்கூட, ‘நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதில்லை’ என்ற போக்குடனே தமிழக அரசு செயல்பட்டது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான நீதித்துறையை, மற்றொரு தூணாகத் திகழும் அரசு நிர்வாகம் மதிக்காமல் செயல்பட்டது இந்த ஆட்சியில்தான்.

“அரசியல் சாசனத்துக்கு எதிரானது!”

கல்வியாளர்கள் உட்பட பலரின் போராட்டங்களுக்குப் பிறகு, முந்தைய தி.மு.க ஆட்சியில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், சமச்சீர் கல்வித் திட்டத்தைக் குழிதோண்டிப் புதைக்கப் பார்த்தது. அந்த விவகாரம், உயர் நீதிமன்றத்துக்குச் சென்றது. அதில், 2011 ஜூலை 19-ம் தேதி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையடி கொடுத்தது. அதில், “சமச்சீர் கல்வியின் தரம், நிறைவேற்றும் முறை பற்றி ஆய்வு செய்யத்தான் தமிழக அரசின் நிபுணர் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைச் செய்யாமல், திட்டத்தை இந்த ஆண்டு நிறைவேற்றலாமா? அடுத்த ஆண்டு நிறைவேற்றலாமா என்று ஆராய்ச்சி நடத்த உத்தரவிடவில்லை. அதைக்கூட புரிந்துகொள்ளாமல், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நிறைவேற்ற முடியாது என்று தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு அறிக்கை கொடுக்கிறது. சமச்சீர் கல்விச் சட்டம் செல்லும் என்று ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதை எதிர்த்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில், ‘சட்டத் திருத்தம்’ என்ற பெயரில் சமச்சீர் கல்வியை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது கல்வி பெறும் உரிமையைப் பாதுகாக்கும் அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது” என்று விளாசித்தள்ளியது நீதிமன்றம்.

ஆறு மாத அவகாசமா?

தி.மு.க ஆட்சியில் சென்னை கோட்டூர்புரத்தில், அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டது. அதை, குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பதில் சொல்ல வேண்டிய தமிழக அரசாங்கம் ஆறு மாத கால அவகாசம் கேட்டது. மூன்று முறை இழுத்தடித்தது. கொதித்துப்போன சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, நூலகத்தை மாற்ற ஒரு  நொடியில் முடிவெடுத்த உங்களுக்கு பதில் மனுத் தாக்கல் செய்ய ஆறு மாத கால அவகாசமா? என்று கேள்வி எழுப்பினர். பின்னர், நூலகத்தை மாற்றவதற்கு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

“சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவோம்!”

சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் 2014, ஜூன் 28-ம் தேதி 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. 61 தொழிலாளர்கள் பலியாயினர். இது தொடர்பாக, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்தார். மேலும், கட்டடம் இடிந்தது தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் நடந்த விசாரணை கமிஷனின் அறிக்கையை வெளியிட உத்தரவிடவேண்டும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ‘ரெகுபதி விசாரணை கமிஷன் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய காலதாமதம் செய்தால், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது வரும்’ என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

வாரிசு வேலையை வழங்குவதில் என்ன சிக்கல்?

வேலூரைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. அவரது தந்தை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பணியாற்றினார். பணியில் இருந்தபோது மரணம் அடைந்தார். கருணை அடிப்படையில் தனக்குப் பணி வழங்குமாறு ஜெயலெட்சுமி தமிழக அரசிடம் கோரினார். ஜெயலட்சுமிக்குத் திருமணமாகி விட்டதால், அவருக்கு வாரிசு வேலை வழங்க முடியாது என்று அதிகாரிகள் மறுத்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜெயலட்சுமி வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன், “வயதான காலத்தில் பெற்றோரை மகன், மகள் பாதுகாக்கவேண்டும் என்று மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் சொல்கிறது. பெற்றோரைப் பாதுகாக்கும் கடமையில், பாலின பாகுபாடு பார்க்கப்படவில்லை. ஆகவே, பெற்றோர் மூலம் கிடைக்கும் உரிமையிலும் பாலின பாகுபாடு பார்க்க முடியாது. எனவே, விஜயலட்சுமிக்கு வேலை வழங்கவேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

சிறைக்குப் போனவருக்குப் பதவியா?”

கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே வழக்கில், ஜெயலலிதா குற்றவாளி என்று 2000-ல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அப்போது, தர்மபுரியில் ஒரு பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதில், கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் உயிரிழந்தனர். அந்த வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற டி.கே.ராஜேந்திரன் சிறையில் இருந்து வெளிவந்த உடன், தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு கூட்டுறவுச் சட்டத்தின்படி, ஜெயில் தண்டனை பெற்றவர்கள் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராகக்கூட பதவி வகிக்க முடியாது. எனவே, அது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மணிக்குமார், ‘சிறைத் தண்டனை பெற்றவர் எப்படி கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகப் பதவி வகிக்க அனுமதிக்கப்பட்டார்?’ என்று கண்டனம் தெரிவித்தார்.

கடுப்பான நீதிமன்றம்!

தமிழக அரசுத் துறைகளில் பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க ஆணையிடக் கோரி சொக்கலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதற்குப் பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு ஆணையிட்டது. ஆனால், பதில் மனுத் தாக்கல் செய்யப்படவில்லை.

இதில் கடுப்பான உயர் நீதிமன்றம், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, 2 துறைகளுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. அடுத்த முறை கண்டிப்பாக பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டிருந்தனர்.

ஆனால், மூன்றாவது முறையும் உயர்கல்வித் துறை சார்பில் பதில்மனுத் தாக்கல் செய்யப்படவில்லை. இதைக்கேட்டு கோபம் அடைந்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக உயர்கல்வித் துறைக்கு மீண்டும் ரூ.10,000 அபராதம் விதித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

விதிகளை மீறி டிஜிட்டல் பேனர்!

விதிகளை மீறி டிஜிட்டல் பேனர் வைத்தது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் விதிகளை மீறி பேனர் வைப்பதற்கு எதிராக டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘‘விதிகளை மீறி பேனர் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்குத் தைரியம் இல்லை. அதனால்தான் அந்தத் தவறு தொடர்கிறது’’ என்று கண்டனம் தெரிவித்தது.’’

 “தமிழக அரசு மெத்தனம்!”

சென்னையில் மாணவி சுருதி, பள்ளி வாகனத்தில் இருந்த ஓட்டையில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து புதிய விதிமுறைகளை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்யாமல் தாமதித்து வந்தது. கோபம் அடைந்த நீதிபதிகள், “பள்ளி வாகனப் பாதுகாப்பு விதிமுறைகளை உருவாக்குவதில் தமிழக அரசு அதிக மெத்தனம் காட்டுகிறது. இது முக்கிய விஷயமாக தமிழக அரசுக்குத் தெரியவில்லையா? என்று கண்டனம் தெரிவித்தனர்.

சென்னை  உயர் நீதிமன்றத்தில், ‘மாற்றம் இந்தியா’ என்ற அமைப்பினர் இயக்குநர் நாராயணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தமிழகத்தில் கழிவுநீர் மற்றும் மழைநீர் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை மனிதர்களைக் கொண்டு சுத்தம் செய்ய விதிக்கப்பட்ட தடையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளை வைத்துள்ளவர்களுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படுகிறது?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ரூ.100 முதல் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது’ என்றார். இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘அபராதத் தொகை அதிகமாக இருந்தால்தான், இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களை பொதுமக்கள் செய்யமாட்டார்கள். எனவே, ரூ.5 ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் வரை அபராதத் தொகையை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

நீதிமன்றங்களில் அ.தி.மு.க அரசு வாங்கிய குட்டுகளும், சவுக்கடிகளும் அடுத்த இதழிலிலும் தொடரும்.

- ஜோ.ஸ்டாலின் 


‘‘சகாயம் விசாரித்தால், உங்களுக்கு ஏன் அச்சம்?’’ 

துரை மாவட்டத்தில் மலைகளை விழுங்கிய கிரானைட் மாஃபியாக்கள் பற்றி அரசிடம் புகார்கள் தரப்பட்டன. எதிலும் நடவடிக்கை இல்லை. இந்த நிலையில், மதுரைக்கு கலெக்டராக வந்த சகாயம், கிரானைட் மாஃபியாக்களின் மோசடிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். அந்த நேரத்தில், சகாயம் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். கிரானைட் விவகாரம் ஊற்றி மூடப்பட்டது. சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கிரானைட் கொள்ளையை விசாரிக்க சகாயம் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றம் போனது. தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சகாயம் நியமனம் தொடர்பாக மறு சீராய்வு செய்ய வேண்டும் என மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தது. அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கவுல் மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர், தமிழக அரசை கடுமையாக கண்டித்தனர்.

‘‘சகாயம் விசாரிக்க உத்தரவிட்டால், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை ஏன் போகிறீர்கள்? பிறகு, மீண்டும் எங்களிடமே வருகிறீர்கள். சகாயம் விசாரித்தால் உங்களுக்கு ஏன் இவ்வளவு அச்சம் வருகிறது? நாங்கள் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாமல் இவ்வளவு நாள் ஏன் காலம் தாழ்த்தினீர்கள்? உங்கள் மனுவைத் தள்ளுபடி செய்து, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம்’’ என்று உத்தரவிட்டனர்.

இந்த கட்டுரையின் அடுத்த பகுதியை படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்:

https://www.vikatan.com/article.php?module=magazine&aid=116148

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick