காங்கிரஸின் கோஷ்டிப் பூசல் உட்கட்சி ஜனநாயகத்தின் அடையாளம்!

ராகுல் காந்தி சிறப்புப் பேட்டி

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை, ‘ஜூனியர் விகடன்’ இதழுக்காகச் சந்தித்தோம். டெல்லியில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு வீட்டில், புல்வெளியில் நடந்தது இந்தச் சந்திப்பு.

“நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை நீங்கள் செய்தியாளர் சந்திப்புகளைத் தவிர்த்து வந்தீர்கள். தேர்தல் தோல்விக்குப் பின்னர்தானே எங்களை நோக்கி வருகிறீர்கள்?”

‘‘தேர்தலுக்கு முன்பு எங்கள் ஆட்சி மீது நல்ல அபிப்பிராயம் இல்லை. அந்தச் சமயத்தில் நாங்கள் என்ன கூறினாலும், அது ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையாகத் தெரியவில்லை. இதனால்தான் நாங்கள், செய்தியாளர்கள் சந்திப்பைத் தவிர்த்தோம்.”

“பல மாநிலங்களுக்குச் சென்று வருகிறீர்கள். அரசியல் சூழ்நிலை எப்படி இருக்கிறது?”

‘‘சமீபத்தில் இந்தியத் தொழில் கூட்டமைப்பினரைச் சந்தித்தேன். பி.ஜே.பி அரசிடமிருந்தும் மோடியிடமிருந்தும் தொழிலதிபர்கள் நிறைய எதிர்பார்த்தார்கள். இப்போது அவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த ஆட்சி மீது யார் பெரிய நம்பிக்கை கொண்டிருந்தார்களோ, அவர்களே ஏமாற்றம் கொண்டுள்ளனர். அவர்களின் எதிர்பார்பை ஏன் பூர்த்திச் செய்ய முடியவில்லை? இந்தியாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்றால், கூட்டு முயற்சி தேவை. அனைவரும் சேர்ந்து ஒரு கருத்தை உருவாக்க வேண்டும். மோடியின் சிந்தனை இதற்கு எதிர் திசையில் செல்கிறது. இதற்கு ஓர் உதாரணம்தான், நாகா ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் குறித்து வட கிழக்கு மாநிலங்களின் முதல்வர்களுக்கு மட்டுமல்ல, மத்திய உள்துறை அமைச்சருக்குக்கூட தெரியவில்லை. அந்த அளவுக்கு மோடி தனித்துச் செயல்படுகிறார்.”

‘‘ ‘காங்கிரஸுக்கு ஆளத் தெரியும். பி.ஜே.பி-க்குத் தெரியவில்லை’ என்று கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது சரத் யாதவ் போன்றவர்கள் கருத்துத் தெரிவித்தனரே? உங்களை எதிர்த்தவர்களின் கருத்துகள் மாறிவருவது குறித்து...?”

‘‘எல்லோருடைய கருத்தும் மாறிவருகிறது. எங்கள் ஆட்சியின் கடைசி காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியும், அரசின் இமேஜும் மிக மோசமாகச் சித்தரிக்கப்பட்டது. தேர்தலுக்கு முன்பு யாரிடமாவது கேட்டால், ‘பி.ஜே.பி அரசு வந்தால் இதையெல்லாம் செய்வார்கள்’ என்று கூறிக்கொண்டு இருந்தனர். இப்போது ஒரு சாதாரண நபரிடம் போய் கேட்டால்கூட, ‘மத்திய அரசு ஏழைகளுக்கு எதிரானது, விவசாயிகளுக்கு எதிரானது, தொழிலாளர்களுக்கு எதிரானது, நலிந்த பிரிவினர்களுக்கு எதிரானது’ என்கின்றனர். இதனால், பி.ஜே.பி தன்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறது. இதில் ஒன்றுதான், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம். ‘இந்தத் திட்டம் வீணானது’ என முன்பு மோடி கூறினார். இப்போது அவருடைய நிதியமைச்சர், ‘அந்தத் திட்டம் மோசமான திட்டமல்ல’ என்று கூறி யூ-டர்ன் அடிக்கிறார். அவர்கள் இப்போது விவசாயிகளைப் பற்றி பேசத் தொடங்கியுள்ளார்கள். விவசாயிகளைச் சந்திக்கிறார்கள். ஆனால், விவசாயிகள் அந்தக் கட்சியை நம்பவில்லை. எங்கள் கட்சி மீதான கருத்து மக்கள் மத்தியில் மாறியுள்ளது.”

‘‘காங்கிரஸின் கொள்கைகள் மக்களிடம் சரியாகச் சென்றுள்ளனவா?”

‘‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொடுத்தது எங்கள் கட்சிதான். ஒளிவு மறைவாக இருந்த பல்வேறு விஷயங்களுக்கு வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தினோம். இதன் விளைவு, காங்கிரஸ் ஊழல் கட்சி என்கிற ஒரு கருத்து உருவாக்கப்பட்டது. இது நாங்கள் மேற்கொண்ட வளர்ச்சியிலும் பெரிய சேதாரத்தை ஏற்படுத்தியது. இப்போது, பி.ஜே.பி எந்த அளவுக்கு ஊழல்களைக் கொண்டது என்பதை வெளிப்படுத்தியுள்ளோம்.

வசுந்தரா ராஜே சிந்தியா விவகாரம், வியாபம் முறைகேடு, ராமன் சிங்கின் பொது விநியோகத் திட்ட ஊழல் போன்றவற்றை வெளிப்படுத்தினோம். பி.ஜே.பி-யினர் எந்த அளவுக்கு ஊழல்வாதிகள் என்பதை மக்கள் முன்பு வைத்திருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி, ஊழலைப் பற்றி சொல்லும்போது ‘நான் சாப்பிட மட்டேன், நான் மற்றவர்களையும் சாப்பிட விடமாட்டேன்’ என்றார். சரி. இப்போது அருண்ஜெட்லி மீது கேள்வி எழுகிறது. இன்னும் இரண்டு பேர் மீது குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. இறுதியாக மோடி மீதே குற்றச்சாட்டு வருகிறது. குஜராத்தில் அவர் முதலமைச்சராக இருந்தபோது, அவருடைய அமைச்சரவையில் இருந்தவரும், தற்போதைய குஜராத் முதல்வருமான ஆனந்திபென் படேல் குடும்பத்துக்கு உதவியிருக்கிறார். ஆனந்திபென் படேல் மகள், அனார் படேல் தொடர்புடைய நிறுவனத்துக்கு சட்ட விரோதமாக குறைந்த விலைக்கு வனப்பகுதி நிலங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. இப்படி பிரதமரே நேரடியாகச் சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரம் வெளியே வருகிறது.”

“சென்னை இயற்கைச் சீற்றம் குறித்த விவாதங்களைக்கூட காங்கிரஸ், நாடாளுமன்றத்தில் தடுக்கிறதே?”

‘‘எந்ததொரு நாடாளுமன்றவாதியும் இயற்கைச் சீற்றம் குறித்த விவாதத்தைத் தடுக்கமாட்டார். ஜி.எஸ்.டி மசோதா விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எங்கள் நிலைப்பாட்டின்படி செயல்பட்டோம். இதற்காக எங்கள் மீது வீண்பழி சுமத்தப்படுகிறது. நாங்கள்தான் ஜி.எஸ்.டி-யைக் கொண்டுவந்தோம். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மூன்று திருத்தங்களைக் கேட்கிறது. அந்தத் திருத்தங்களில் சில ஏற்றுக்கொள்ளப்பட்டவைதான். ஆனால், இதை நிறைவேற்றுவதில் ஆர்.எஸ்.எஸுக்கு விருப்பமில்லை. இதனால் பி.ஜே.பி இந்த மசோதாவைத் தூக்கி எறிய முயற்சிக்கிறது. நாட்டின் நலன் கருதி நாங்கள்தான் இதைக் கொண்டுவந்தோம். எங்களுடைய நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தேசிய நலனுக்குத்தான் முதல் இடம். பி.ஜே.பி-யைக் காயப்படுத்துவது என்பது எங்களுக்கு இரண்டாவது பட்சம்தான்.” 

‘‘தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்தில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறப்படுகிறதே?’’

‘‘திட்டத்தை நிறைவேற்றுவதில் சில பிரச்னைகள் உள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் பல லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை கிடைக்கிறது. இந்தத் திட்டத்தை அழிக்கத் திட்டமிடுவது மோசமான செயல். பெருநிறுவனங்களின் சார்பில் வங்கிகளில் 300 ஆயிரம் கோடி ரூபாய் வராக்கடன் இருக்கிறது. அதற்காக வங்கிகளை நாம் இழுத்து மூடிவிடுவதில்லை. பொருளாதாரத்தில் அனைவருக்கும் ஒரே விதமான விவாதம் தேவை.”

‘‘மாணவர்களை அடிக்கடி சந்தித்து வருகிறீர்கள்? அவர்களைக் கொண்டு உங்கள் கட்சிக்கு எப்படி புத்துயிர் கொடுக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?”

“நான் எதிர்க் கட்சி வரிசையில் உள்ளேன். அரசாங்கத்தில் இல்லை. நான் மாணவர்களை அடிக்கடி போய் சந்திக்கக் காரணம், மாணவர்களை ஆர்.எஸ்.எஸ் தவறாகக் கையாளுகிறது. அவர்களைத் தங்கள் பக்கம் இழுக்கிறது. பி.ஜே.பி பக்கமும் ஆர்.எஸ்.எஸ். பக்கமும் போவதை தடுக்கவே அவர்களை அடிக்கடி சந்திக்கிறேன். எங்கள் கட்சி இப்போது மேல்நோக்கிய வளர்ச்சியைக் கொண்டுள்ளது. கடந்த முறை பி.ஜே.பி-க்கு ரத்தக்களரியில் வாக்குக் கிடைத்தது. இபோது, நாடு முழுக்க காங்கிரஸ் புத்துயிர் பெற்று வருகிறது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் உட்கட்சி விவகாரங்களை ஒரே நாளில் மாற்றிவிட முடியாது. கட்சியின் அடிமட்டத்தில் மக்களோடு தொடர்புள்ளவர் களால் மட்டுமே மாற்றமுடியும். வருகிற சட்டமன்றத் தேர்தலில் கேரளா, அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் வெற்றி பெறுவோம். புதுச்சேரியில் எங்களுடைய நிலைமை பரவாயில்லை. ஆனால் தமிழகம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் எங்கள் பங்களிப்பு குறைவுதான்.’’

‘‘தி.மு.க., அ.தி.மு.க. பற்றிய கருத்து என்ன?”

‘‘தமிழ்நாட்டில் நாங்கள் வளர்ச்சியடைகிறோம். எனக்கு ஜெயலலிதாஜி-யைப் பிடிக்கும். கருணாநிதிஜி மீது மரியாதை வைத்துள்ளேன்.”

‘‘உங்கள் கட்சியில் எல்லா மாநிலங்களிலும் கோஷ்டிப் பூசல்கள் உள்ளன. அதிலும் தமிழகத்தில் இது வெளிப்படையாக வெடிக்கிறதே? ஜி.கே.வாசன் போன்றவர்கள் வெளியே சென்றுள்ளனர். உங்களை தமிழக முதல்வர் வேட்பாளராக இளங்கோவன் அறிவித்துள்ளாரே?

‘‘கோஷ்டிப் பூசல் என்பது காங்கிரஸ் கட்சியில் எப்போதும் உண்டு. அது எங்கள் கட்சியின் ஒரு விதமான மரபுதான். மகாத்மா காந்தி காலத்திலும் நேரு காலத்திலும்கூட அது இருந்திருக்கிறது. காந்தி, நேருவால் தீர்க்க முடியாததை இப்போது நான் எப்படித் தீர்க்க முடியும்? அந்தக் காலத்தில் நடந்துள்ளதை அந்தத் தலைவர்கள் பதிவுசெய்து உள்ளனர். நான் அவற்றைப் படித்துள்ளேன். அவர்களை ஒப்பிடும்போது நான் ஒரு சிறிய துரும்பு. என்னால் எப்படி இதைத் தீர்க்க முடியும்? அதே சமயத்தில், நான் இதில் கண்டிப்பாக இருக்க முடியாது; இருக்கவும் தேவையில்லை. காங்கிரஸின் கோஷ்டிப் பூசலை உட்கட்சி ஜனநாயகத்தின் அடையாளம் என்பதாகவே பார்க்கிறேன். கட்சியில் இப்படிப்பட்ட சலசலப்புகள் இருந்தால், அதுவும் ஒருவகையில் கட்சியின் மீது மற்றவர்கள் பார்வையைத் திருப்பும். என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால், அது மகிழ்ச்சிதான். அதில் தவறில்லை” என்று முடித்த ராகுலிடம் “உங்களுக்கு 45 வயது ஆகிவிட்டது. எப்போது திருமணம்” என்று கேட்க, சிரித்துக்கொண்டே நழுவிவிட்டார்.  

- சரோஜ் கண்பத்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick