என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - மு.க.ஸ்டாலின் (கொளத்தூர்)

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: அ.நன்மாறன்

‘நமக்கு நாமே’ திட்டத்தின் மூலம் தமிழகத்தை வலம் வந்த தி.மு.க பொருளாளர் ஸ்டாலினுக்கு அப்படி ஒரு யோசனை வந்ததே ‘பேசலாம் வாங்க’ என்ற திட்டம்தான்.  தனது தொகுதி மக்களின் குறைகளைக்கேட்க கொண்டு வரப்பட்ட திட்டம் இது. ‘பேசலாம் வாங்க’ என்று அழைத்த, ஸ்டாலினால் தொகுதி மக்களின் குறைகளைத் தீர்க்க முடிந்ததா?

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் அன்றைய துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் போட்டியிட்டபோது நட்சத்திர அந்தஸ்த்துக்கு உயர்ந்தது கொளத்துார். இவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் இப்போதைய சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி நிறுத்தப்பட்டார். பலத்த சர்ச்சைகளுக்கு இடையே சொற்ப வாக்கு வித்தியாசத்தில் ஸ்டாலின் வெற்றிபெற்றார். தேர்தலின்போது இவர் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா... நிறைவேற்றவிட்டார்களா?

கொளத்துார் தொகுதி ஒரு பார்வை...

ஜி.கே.எம். காலனி, பெரியார் நகர், ஜவஹர் நகர், செந்தில் நகர், குமரன் நகர் உள்ளிட்டவை  இதில் பிரதான பகுதிகள்.

“சென்னையில் அதிகமாக புறம்போக்கு நிலங்கள் இருப்பது கொளத்தூரில்தான். அதிக ஆக்கிரமிப்புகள் இருப்பதும் கொளத்தூர் பகுதியில்” என்கின்றனர் ஜி.கே.எம் ஏரியாவாசிகள். முத்துமாரியம்மன் கோயில் குளம், வண்ணாங்குட்டை குளம் ஆகிய இரண்டு குளங்களிலும் தி.மு.க-வினருக்கு நெருக்கமான நபர்கள்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். முத்துமாரியம்மன் கோயில் குளத்தில் 40 ஆயிரம் சதுர அடியை ஆக்கிரமிப்புசெய்து அதில் திருமண மண்டபம் கட்ட முயன்றுள்ளார் தி.மு.க ஆதரவு முக்கியப் புள்ளி ஒருவர். ஜி.கே.எம் காலனி உள்ளிட்ட பல இடங்களில் குடிசை மாற்று வாரியத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவரை கையில் வைத்துக்கொண்டு ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாகவும் புலம்புகின்றனர்.

பிரசாரத்தின்போது ஸ்டாலின், “பெரியார் நகர் மருத்துவமனை நவீனப்படுத்தப்படும், வட்டத்துக்கு ஒரு சமூகநலக்கூடம் அமைக்கப்படும், கொளத்தூர் தொகுதியில் ஒரு பொறியியல் கல்லூரி, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும், உயர்தரமான விளையாட்டுத் திடல் உருவாக்கப்படும், தண்ணீர் பிரச்னை சீர்செய்யப்படும், ரெட்டேரியில் மேம்பாலம், வில்லிவாக்கம் பகுதியில் மேம்பாலம், சிட்கோ நிறுவனம் அமைக்கப்படும்” என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

இதில் முதல் வாக்குறுதியே இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்குப் பயன்படும் மருந்துகள்கூட இல்லாமல், சென்னையில் இருக்கும் வேறு மருத்துவமனைகளில் இருந்து மருந்துகள் வாங்கிவரும் நிலைதான் இன்னும் உள்ளது. இந்த மருத்துவமனையை முழுவதுமாக மூடும் நிலையில் அரசு இருப்பதாக இந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வட்டத்துக்கு ஒரு சமூகக்கூடம் என்ற அறிவிப்பும் நிறைவேற்றப்படவில்லை. “திரு.வி.க நகரில் செயல்படும் சமூகநலக்கூடம் எந்தப் பராமரிப்பும் இல்லாமல், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிப்போக, அந்தச் சமூகநலக் கூடத்துக்கு மூடு விழா நடத்தப்பட்டது. அதேபோல் மடுமா நகரில் இருக்கும் சமூகநலக்கூடம் தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது”என்கின்றனர்.

“பள்ளிக்கூட மேம்பாட்டுக்கு ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்து இருக்கிறேன், ஆனால் தொகுதியில் அதைச் செயல்படுத்தவிடாமல் ஆளும் கட்சி தடுக்கின்றனர்” என குற்றம்சாட்டியுள்ளார் ஸ்டாலின். ரெட்டேரி மேம்பால பணிகள் இப்போது ஆமைவேகத்தில் நடைபெற்று வருகின்றன.

“அந்தப் பணிகளை விரைந்து முடிக்காமல் இருப்பதற்கு ஆளும் கட்சிதான் காரணம்” என்ற குற்றச்சாட்டு தி.மு.க தரப்பில் சொல்லப்படுகிறது. “வில்லிவாக்கம் மேம்பாலம் தற்போது சர்வே பணியில் இருக்கிறது. அடிப்படை திட்டங்களுக்கே நாங்கள் போராட்டம் நடத்தி வாங்கவேண்டிய நிலையில் ‘சிட்கோ’வை எங்களால் இப்போது கொண்டு வர முடியாது” என்று தி.மு.க-வினர்  மக்களிடம் சொல்லிவிட்டனர்.

மக்கார தோட்டம் அருகே உள்ள பள்ளிக்கு சில  வசதிகளை தனது சொந்தப் பணத்தில் இருந்து செய்துகொடுத்துள்ளார் ஸ்டாலின்.

‘‘அடிப்படையில் இது மிகவும் பின்தங்கிய தொகுதி. அமைப்புசாரா கூலித் தொழிலாளர்கள், தினக்கூலிகள்,   மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது. ஸ்டாலின் வந்த பிறகு சில முக்கியச் சாலைகளை  தொகுதி நிதியில் இருந்து சீர் செய்துள்ளார். கொளத்தூர் மெயின் சாலைக்கு ரோடு போட்டுள்ளார். பேருந்து நிறுத்தங்கள் கட்டிக்கொடுத்துள்ளார். அதைத் தாண்டி மாநகராட்சி சார்பில்,  இவருடைய தொகுதியில் அதிக அளவில் சிமென்ட் சாலைகள் அமைத்துத் தந்துள்ளனர். சிறு மழைபெய்தால்கூட உடனே நீர் நிரம்பும் நகராக குமரன் நகர் உள்ளது. அதைச் சீர்செய்ய முதலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் பல இடங்களில் ஆக்கிரமிப்புச் செய்து இருக்கிறார். தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த உழவர் சந்தை  பயன்படாமல் இருக்கிறது” என்று தொகுதிவாசிகள் சொல்கிறார்கள்.

பேசலாம் வாங்க..!

கொளத்தூர் தொகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்டாலின் நடத்தி வரும் நிகழ்ச்சி ‘பேசலாம் வாங்க’. தனது தொகுதியில் இருக்கும் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து இந்த நிகழ்ச்சி நடத்தப் படுகிறது. மண்டபத்தில் தனது  தொகுதி மக்களைச் சந்தித்து அவர்கள் குறைகளைக் கேட்டறிகிறார். “இந்தப் பேசலாம் வாங்க நிகழ்ச்சி மூலம் ஐயாயிரத்துக்கு மேலான மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் சில குறைகள்தான் தீர்க்கப்பட்டுள்ளன” என்கின்றனர் தி.மு.க-வினர். தனது தொகுதியில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் தனது மனைவியோடும் சில நிகழ்ச்சிகளில் ஸ்டாலின் பங்குகொள்கிறார்.

7810878108...

‘உங்கள் எம்.எல்.ஏ-வை தொடர்புகொள்ள’ என கொளத்தூர் தொகுதி முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது 7810878108 என்ற கைப்பேசி எண். இந்த எண்ணில் தொடர்புகொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்தால் அது பதிவுசெய்யப்பட்டு,
எம்.எல்.ஏ அலுவலகத்துக்குப் புகாராக அனுப்பப்படுகிறது. புகாரின் தன்மையைப் பொறுத்து அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகிறது.  இந்த எண்ணுக்கு இதுவரை கொளத்தூர் தொகுதி மக்களிடமிருந்து 2,700 கோரிக்கைகள் வந்துள்ளன. அதில் 1,500 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாம்.

ஆண்டுதோறும் பொங்கலுக்கு அரசுப் பொருட்கள் வருகிறதோ, இல்லையோ... தொகுதி எம்.எல்.ஏ ஸ்டாலினின் பொங்கல் வாழ்த்து அட்டைகள் அனைத்து வீடுகளுக்கும் வந்து சேர்ந்துவிடும்.

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்...

நீதிமன்றம் மூலம் தனது எம்.எல்.ஏ அலுவலகத்தைக் காப்பாற்றி வைத்திருக்கிறார் ஸ்டாலின். ஜவஹர் நகரில் கொளத்தூர்  எம்.எல்.ஏ அலுவலகம் உள்ளது.  அதனை சென்னை மாநகராட்சித் தீர்மானம் மூலம் அகற்றப்பார்த்தனர். அலுவலகத்துக்கு வேறு இடமும் ஒதுக்கவில்லை. அலுவலக அனுமதி ரத்துசெய்ததை எதிர்த்து நீதிமன்றம் சென்று வெற்றி பெற்றார் ஸ்டாலின். 

கொளத்தூர் குமரன் நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர், “கொளத்தூர் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்ட தொகுதி. அதன் காரணமாக இந்தப் பகுதி வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தது. ஸ்டாலின் வெற்றி பெற்றபோது நிறையச் செய்வார் என்று எதி்ர்பார்த்தோம். ஆனால், இங்கு பெரிதாக எந்தத் திட்டமும் கொண்டுவரவில்லை. அதற்கு அவரைக் குறை சொல்லவும் முடியாது. அவர் சொல்வதை அதிகாரிகள் செய்தால்தானே? ஆனால், தொகுதி பக்கம் வாரத்துக்கு ஒருமுறை வந்துவிடுவார். குடிநீர், சாக்கடைப் பிரச்னைகளை மனுவாகக் கொடுத்தால் அவுங்க ஆட்கள் வந்து பார்த்து மாநகராட்சி ஊழியர்களை வைத்து சரிசெய்வாங்க. சில இடங்களில் சாலைகள் மோசமா இருக்கு” என்றார்.

ஆட்டோ ஓட்டுநர் முருகன், “இந்தத் தொகுதியில் பட்டா இல்லாம நிறையக் குடும்பங்கள் இருக்கு. அவங்களுக்கு பட்டா தருவோம்னு சொன்னாங்க. ஆனா இப்ப தரலை, கேட்டா நாங்க எதிர்க் கட்சியா இருக்கோம். இப்ப எங்களால எதுவும் செய்ய முடியாதுனு சொல்றாங்க.” என்கிறார்.
மழைக்காலத்தில் கொளத்தூர் தொகுதியில் 60-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை தி.மு.க சார்பில் நடத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின். மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட தனது தொகுதி மக்களையும் நேரடியாகச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

எம்.எல்.ஏ. நிதியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்!

‘‘ஆண்டுக்கு இரண்டு கோடி  ரூபாய் வீதம் ஐந்து ஆண்டுகளில் ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட எம்.எல்.ஏ நிதியில் இருந்து மூன்று திட்டங்களை மட்டுமே எங்களால் நிறைவேற்ற முடிந்தது. அந்த அளவுக்கு எங்களுக்கு ஆளும் கட்சியினர் நெருக்கடி கொடுத்து வந்தனர்” என்கின்றனர் கொளத்தூர் தொகுதி தி.மு.க-வினர்.ஜெய்பீம் நகர், பேப்பர் மில் சாலை, ஜி.கே.எம். காலனி ஆகிய மூன்று இடங்களில் ரூ.54.5 லட்சம் மதிப்பீட்டில் மூன்று அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளன. சென்னை  மாநகர குடிநீர் வாரியத்துக்கு ஜெட்ராடிங் எந்திரம், இரண்டு டிசில்ட்மேன் மிஷின்  இரண்டுக்கும் 50 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளனர்.

இந்தத் திட்டங்கள் மட்டும்தான் இவருடைய எம்.எல்.ஏ நிதியின் மூலம் செயல்படுத்திய திட்டங்கள். திரு.வி.க நகர் சமூக நலக்கூடத்தை மேம்படுத்த 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் செயல்படுத்த முடியவில்லை. 20-க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் எம்.எல்.ஏ நிதியில் இருந்து பரிந்துரை செய்தும் அதற்கு அரசுத் தரப்பில் அனுமதி அளிக்கப்படாமல் உள்ளது.

கொளத்தூர் தொகுதியில் உள்ள நகராட்சி பள்ளிக்கூடங்களுக்குக் கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதிகள் செய்துதர ரு:25 லட்சம் ஒதுக்கீடு செய்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி நவீன சத்துணவு மையம் அமைக்கும் பரிந்துரை, 30 லட்சம் மதிப்பீட்டில் குமரன் நகர் பேருந்து நிலைய மேம்பாடு, ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சோலார் வசதி போன்ற திட்டங்கள் அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டு அவை பரிந்துரையாகவே இன்று வரை உள்ளது. நவீனமான தொகுதியாக தனது தொகுதியை மாற்ற முயன்ற ஸ்டாலினுக்கு அரசு இயந்திரம் ஒத்துழைக்கவில்லை என்பது அவரது தொகுதியில் பயணம் செய்தபோது நம்மால் உணர முடிந்தது.

- அ.சையது அபுதாஹிர், உ.கிரண்குமார், தே.அசோக்குமார், எஸ்.கே.பிரேம்குமார், பா.நரேஷ்


ப்ளஸ்... மைனஸ்!

முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தாலும் தொகுதியின் பக்கம் அடிக்கடி விசிட் அடித்துவிடுகிறார். தொகுதியில் நடைபெறும் கட்சியினர் வீட்டு நிகழ்ச்சிகளிலும், கலந்துகொள்கிறார். தொகுதிக்கு என்று எதுவும் செய்ய முடியவில்லை என்று புலம்பினாலும்,, கோரிக்கை மனுக்கள் வாங்குவதை மட்டும் இவர் நிறுத்தவே இல்லை. இணையதளம், போன் என நவீன வழிகளில் மனுக்கள் வாங்குவது  இவருடைய ப்ளஸ்.

தி.மு.க-வினரே  பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்று மக்கள் புலம்புகின்றனர். அதனால்தான் பட்டா இல்லாமல் இருப்பவர்களுக்குகூட இன்னும் பட்டா வழங்கமுடியவில்லை என்கின்றனர். இது இவருடைய மைனஸ்

எம்.எல்.ஏ. அலுவலகம் ரெஸ்பான்ஸ் எப்படி?

சட்டமன்ற அலுவலகத்தில் தரப்படும் புகார்களுக்கு உடனடியாக பதில் தருகிறார்கள். இதற்காக அலுவலகத்தில் இரண்டு முழுநேர ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். போனில் சொல்லப்படும் புகார்களையும் பதிவு செய்கிறார்கள். சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உடனடியாக மனுக்கள் அனுப்பப்படுகின்றன. ஆனால், ஸ்டாலினின் இணையதளத்தில் அளிக்கப்படும் புகாருக்கு ரெஸ்பான்ஸ் குறைவுதான். ரோடு சரியில்லை என நாம் மனுக் கொடுத்தோம். அதற்கு ரெஸ்பான்ஸ் இல்லை. நேரில் சென்று காரணம் கேட்டபோது ‘‘முகவரி தெளிவாக இல்லை. அதனால் மனுவை எடுக்கவில்லை’’ என்றார்கள். மனு அளித்தால் சம்பந்தப்பட்ட வீட்டுகே வந்து விசாரித்துவிட்டு உண்மை என்றால்தான் நடவடிக்கை எடுக்கிறார்கள்.

ரியாக்‌ஷன் என்ன?

ஸ்டாலினிடம் பேசினோம். ‘‘கொளத்தூரின் முதல் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தொகுதி மக்களுக்காகப் பணியாற்றியுள்ளேன். அ.தி.மு.க அரசும், அந்தக் கட்சித் தலைமையிலான சென்னை மாநகராட்சியும் மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதில் நடத்திய ‘அரசியல்’ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உரிய இலக்கணத்தைச் சிதைத்துவிட்டது. சட்டமன்றத் தொகுதி அலுவலகம் பெறவே நான் போராட வேண்டியிருந்தது. பல்வேறு பிரச்னைகள் பற்றி நானே நேரடியாக மாநகராட்சி மற்றும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகளிடம் முறையிட்டாலும், ஆளும் கட்சியின் மிரட்டலுக்குப் பயந்து தொகுதி மக்களின் அன்றாடப் பிரச்னைகளைக்கூட தீர்த்துவைக்க மறுத்தார்கள். அ.தி.மு.க அரசு என்னுடன் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தையும் மீறி தொகுதி மக்களுக்கு வெள்ள நேரத்திலும் சரி, அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதிலும் சரி, தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் திட்டங்களை வெளிப்படையாக நிறைவேற்றுவதிலும் சரி என்னால் முடிந்த அளவுக்குப் பணியாற்றியுள்ளேன். அ.தி.மு.க அரசின் அடாவடி என் தொகுதி மக்களுக்கு நன்கு புரியும். அவர்கள் அ.தி.மு.க அரசுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick