நீதிமன்றத்திடம் ஜெ. அரசு வாங்கிய சவுக்கடிகள்!

அளவில்லா அவமானங்கள்... 5 ஆண்டு ஆட்சி - ஜூ.வி. ஸ்கேன்

சென்னை உயர் நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உட்பட பல்வேறு நீதிமன்றங்களிடம் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு வாங்கிய பல குட்டுகள், சவுக்கடிகள் குறித்து கடந்த ஜூ.வி இதழில் பார்த்தோம். இந்த இதழிலும் அந்தப் பட்டியல் தொடர்கிறது.  

மருத்துவமனைகளில் கட்டமைப்புகள்!

இந்திய மருத்துவக் கல்வி கவுன்சில் விதிகளின்படி, மருத்துவக் கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரிகளில் தீயணைப்பு மற்றும் தீத்தடுப்புச் சாதனங்கள், சாய்தள பாதை போன்ற வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பது தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் ஆர்.சி.குடவாலா மட்டும் பதில் மனுத் தாக்கல் செய்தார். மற்றவர்கள் பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை. சென்னையில் அடுக்கு மாடியில் செயல்படும் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளைப் பட்டியலிடுவதுடன், அங்கு மனுதாரர் குறிப்பிட்டுள்ள வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வுசெய்ய வேண்டும்; முறையான அனுமதி பெறாத ஆஸ்பத்திரிகளுக்கு சி.எம்.டி.ஏ நோட்டீஸ் அனுப்ப வேண்டும்; சென்னை தவிர பிற மாவட்டங்களில், இந்த விதிகளை அமல்படுத்துவது பற்றி உள்ளாட்சி அமைப்புகளுக்கு விளக்கம் கேட்டு தமிழக சுகாதாரத் துறை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.  ஆனால், அதில் எந்தப் பதில் மனுவையும் அரசுத் தரப்பு தாக்கல் செய்யவில்லை. அரசுத் தரப்பில் ஆஜாரன அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி கால அவகாசம்  கோரினார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘எத்தனை முறை அவகாசம் வழங்குவது? ஒவ்வொரு முறையும் இதுபோன்ற கால அவகாசம் கேட்பது சரியானது அல்ல’ என்று அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன், தமிழக சுகாதாரத் துறை செயலர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர்,  இந்திய மருத்துவ கவுன்சில் செயலாளர் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

மதுரைக்குக் கேட்டால் திருச்சியா?

மதுரையில் உள்ள இளம் சிறார் காப்பகத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்று வெளியான தகவலின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. அதில், சமூக நலத் துறையைச் சேர்ந்த அதிகாரி தாக்கல்செய்த அறிக்கையில், ‘திருச்சியில் சிறார் காப்பகம் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. அங்கு சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்பது உள்ளிட்ட விவரங்களைக் கூறியிருந்தார்.

இந்த அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள் கடும்  கண்டனம் தெரிவித்தனர். ‘நாங்கள் மதுரை சிறார் காப்பகம் குறித்து விவரம் கேட்டால், சமூக நலத் துறை அதிகாரி திருச்சியில் கட்டப்படவுள்ள காப்பகத்தின் விவரங்களைத் தாக்கல் செய்துள்ளார். இந்த ஹைகோர்ட் பிறப்பிக்கும் உத்தரவைக்கூட சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று கண்டனம் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தை மதிக்காத அதிகாரிகள்?

ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில், தங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2004-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், ஆசிரியர்களுக்கு சாதகமான தீர்ப்பை கடந்த 2008-ம் ஆண்டு பிறப்பித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டும் கடந்த 2014-ம் ஆண்டு தள்ளுபடி செய்துவிட்டது.

ஆனால், இதுவரை ஹைகோர்ட் உத்தரவின் அடிப்படையில் பண பலன்களைப் பள்ளி நிர்வாகம் வழங்காததால், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்னாள் சிறப்பு அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான பி.பிரியா மீது கோர்ட் அவமதிப்பு வழக்கை ஹைகோர்ட்டில் ஆசிரியர்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹைகோர்ட் உத்தரவை மதிக்காமல் செயல்படும் அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்து, இனிமேல் கோர்ட் அவமதிப்பு சட்டத்தின் கீழ் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்” என்று எச்சரித்தனர்.

மழலையர் பள்ளிகளுக்கு என்ன விதிமுறைகள்?

தமிழகத்தில் 760 மழலையர் பள்ளிகள் முறையான அனுமதி பெறாமல் செயல்படுகின்றன. அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விதிமுறைகளை உருவாக்க அரசுத் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. பின்னர் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘விதிமுறைகளை உருவாக்க மேலும் 6 வார கால அவகாசம்’ கேட்டார். அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை, அடுத்த முறை வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் அரசு உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் சபீதா நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

பார்வையற்றோர் சராசரி மனிதர் அல்ல...

தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், சென்னை ஹைகோர்ட்டில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஆசிரியர் கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரகம் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவைகளுக்கு விரிவுரையாளர் பதவிகளுக்கு கடந்த 2009-ம்ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. மொத்தம் 195 விரிவுரையாளர் பதவிகளில், பார்வையற்ற ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தமிழக சமூக நலத் துறை கடந்த 1981-ம்ஆண்டு பிறப்பித்த அரசாணையின்படி, அரசுப் பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உள்ளது. எனவே, 2009-ம் ஆண்டு அறிவிப்பு சட்ட விரோதமாகும். எனவே விரிவுரையாளர் பணிக்கான இந்த அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சய்  கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் கோவி ராமலிங்கம் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலர் சபீதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்  மனுவில், ‘1 முதல்  5-ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் வகுப்பு எடுக்க வேண்டிய விரிவுரையாளர், உடலை அசைத்து முகபாவனையுடன் பாடம் நடத்த வேண்டும். மேலும், களப்பயிற்சிக்கும் மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். இவற்றையெல்லாம் சராசரியான நபர்களால்தான் செய்ய முடியும் என்பதால், பார்வையற்றோர், காதுகேளாதவர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க முடியாது’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘பார்வையற்றோர் சராசரி மனிதரே கிடையாது என்று அரசுத் தரப்பில் பதில் கூறியுள்ளார். தமிழக அரசு சார்பில் இப்படியொரு பதில் மனுவை தாக்கல்செய்த பள்ளிக்கல்வித் துறை செயலர் சபீதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றனர்.

 தன் உத்தரவை தானே அவமதிக்கலாமா?

சென்னை உயர் நீதிமன்றத்தில், கோட்டூரைச் சேர்ந்த ஆர்.நரசிம்மன் தாக்கல் செய்துள்ள மனுவில், கோட்டூர், கேனல் பாங்க் சாலையில், பீலியம்மன் கோயில் உள்ளது. இதற்குச் சொந்தமாக 3 கிரவுண்டு நிலம் அதே சாலையில் உள்ளது. அந்த நிலத்தை, எஸ்.ரவி என்பவர் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அடுக்குமாடி கட்டடங்களைக் கட்டி வருகிறார். இந்தக் கோயில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கும், திட்ட அனுமதி எதுவும் பெறாமல் கட்டடம் கட்டி வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் பொதுமக்கள் புகார் செய்தனர். ஆணையர் நடவடிக்கை எடுத்தும் கட்டுமானப் பணிகள் நிற்கவில்லை.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீலுக்கு, தலைமை நீதிபதி, ‘மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை, மாநகராட்சி அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்குத் தொடரும் அளவுக்கு அதிகாரிகள் செயல்படுகின்றனர். இது கண்டனத்துக்குரியது. சென்னை மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

டெல்லிக்குச் செல்லுங்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் வக்கீல் வி.பி.சீனிவாசன். இவர், சென்னை  ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தமிழக நெடுஞ்சாலைத் துறை சாலை விரிவாக்கம் செய்வதற்காக, காஞ்சிபுரம் மாவட்ட சாலைகளின்  இருபுறமும் இருந்த ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டினர். ஹைகோர்ட் உத்தரவின்படி, ஒரு மரம் வெட்டப்பட்டால், அதற்குப் பதில் 10 மரங்களை நடவேண்டும். இந்த உத்தரவை அதிகாரிகள் பின்பற்றவில்லை’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் ஒரு மரங்களை  வெட்டினால், அதற்கு 10 புதிய மரங்களை நடவேண்டும் என்றும் 200 ஆண்டு பழைமை வாய்ந்த மரங்களை வேரோடு எடுத்து வேறு இடங்களில் நடவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அத்துடன், வேறு இடங்களில் நடப்பட்ட மரங்களின் புகைப்படங்கள் தமிழக அரசு சார்பில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்தப் படத்தைப் பார்த்த நீதிபதிகள், அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்திக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ‘புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மரங்களை வேரோடும், வேரடி மண்ணோடும் எடுத்து வேறு இடங்களில் நடவேண்டும். ஆனால், தமிழக அரசு ஜே.சி.பி வாகனத்தைப் பயன்படுத்தி, மரத்தை வெட்டிச் சாய்த்து, வேறு ஓர் இடத்தில் நட்டுள்ளனர். இதுவா தொழில்நுட்பம்? தமிழக அரசு அதிகாரிகள் டெல்லி சென்று, அங்குள்ள மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் மரங்களை எப்படி வேறு இடங்களில் நட்டனர் என்ற புதிய தொழில்நுட்பத்தைப் படித்து வந்து, அந்த முறையை இங்கு பயன்படுத்துங்கள்’ என்று உத்தரவிட்டனர்.

காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா! 

“விசாரணைக்காக போலீஸ்  நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் கண்மூடித் தனமாக தாக்கப்படுகின்றனர். அவ்வாறு தாக்கப்படுபவர்கள் சில நேரங்களில் இறக்கவும் செய்கின்றனர். எனவே, போலீஸ் நிலையத்தில் நடத்தப்படும் விசாரணைகளை பதிவு செய்ய
(சி.சி.டி.வி) கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும்” என்று சென்னையைச் சேர்ந்த வக்கீல் பிரகாஷ் ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க உள்துறைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்படவில்லை. ‘இறுதி வாய்ப்பாக நான்கு வாரங்களுக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அபராதமாக உள்துறைச் செயலரும், டி.ஜி.பி-யும் தலா ரூ.10,000-ஐ சமரச மையம் மற்றும் மாற்று முறைத் தீர்ப்பாயத்துக்கு இரண்டு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த அளவுக்கு நீதிமன்ற நெருக்கடியை இதுவரை எந்த அரசும் சந்தித்தது இல்லை!

- ஜோ.ஸ்டாலின்


21 வயதுக்குக் கீழே மது!

கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், குடியிருப்புப் பகுதிகள், வழிபாட்டுத்தலங்கள் அமைந்துள்ள இடங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் மட்டுமே மதுக்கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி ஆகியோர் இரண்டு ஆண்டுகளாக எந்தப் பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை. அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘பதில் மனுத் தாக்கல் செய்யாத தமிழக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி ஆகியோருக்கு ரூ.10 ஆயிரம் வழக்குச் செலவுத் தொகை விதிக்கப்படுகிறது’ என்று தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. 

இந்த கட்டுரையின் முந்தைய பகுதியை படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்:

https://www.vikatan.com/article.php?module=magazine&aid=116058

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick