கேள்வி கேட்ட டாப் 25 கில்லிகள்!

.தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகளை நிறைவு செய்யப் போகிறது. இந்த ஐந்தாண்டு ஆட்சியில், சட்டசபையில் எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடு எப்படி? மக்களுக்காக ‘மக்கள் பிரதிநிதி’கள் சட்டசபையில் பணியாற்றினார்களா? என ஸ்கேன் செய்தது ஜூ.வி. சட்டசபையில் கேள்வி நேரத்தில் நம்ம எம்.எல்.ஏ-க்கள்  29 பேர் ஒரு கேள்வியைக்கூட கேட்கவில்லை. இதில் கருணாநிதி, விஜயகாந்த், ஸ்டாலின், காடுவெட்டி குரு, முன்னாள் சபாநாயகர் டி.ஜெயக்குமார் என முக்கியப் புள்ளிகளும் அடக்கம் என்பதைப் பற்றி கடந்த இதழில் எழுதியிருந்தோம். இந்த இதழில் கேள்வி கேட்டவர்களில் பெர்பாமென்ஸ் பற்றி பார்ப்போம். 

நியமன உறுப்பினரைச் சேர்த்து இந்த ஐந்தாண்டுகளில் 173 பேர் சட்டசபையில் கேள்விகள் எழுப்பியிருக்கிறார்கள். மரணம் அடைந்தவர், இடைத் தேர்தலில் வென்றவர், முன்னாள் அமைச்சர்களும் இதில் அடக்கம். அதிக கேள்வி கேட்டவர்களில் குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ்தான் முதலிடத்தில் இருக்கிறார். ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் அரசின் சார்பில் மெயில் ஐ.டி. உண்டு. அந்த மெயில் ஐ.டி-களுக்கு பொதுமக்கள்போல 234 எம்.எல்.ஏ-க்களுக்கும் ஜூ.வி. மெயில் தட்டியது. இந்த டெஸ்ட்டில் ஜெயித்தது நான்கு பேர் மட்டுமே. இதில் குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸும் ஒருவர். இதுபற்றி கட்டுரையை சில இதழ்களுக்கு முன்பு ஜூ.வி. வெளியிட்டிருந்தது.

அந்த பிரின்ஸ்தான் அதிக கேள்வி கேட்டவர்களில் முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் மானாமதுரை தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ ம.குணசேகரனும் மூன்றாவது இடத்தில் சங்ககிரி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ விஜயலட்சுமி பழனிச்சாமியும்  இடம்பெற்றனர். (டாப் 25 லிஸ்ட் பெட்டிச் செய்தியாக)

வி.ஐ.பி. எம்.எல்.ஏ-க்கள்

ஜவாஹிருல்லா (ம.ம.க.), விஜயதரணி (காங்கிரஸ்), கதிரவன் (பார்வர்டு பிளாக்), சவுந்தரராசன் (சி.பி.எம்.), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), பாலபாரதி (சி.பி.எம்.) ஆகியோர் கேள்வி கேட்டதில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெர்பாமென்ஸ் செய்திருக்கிறார்கள். ‘அம்மா புகழ்’ பாடுவதையே கொள்கையாக வைத்திருக்கும் இந்திய குடியரசு கட்சி செ.கு.தமிழரசன் ஒரு மூலக் கேள்விக்கூட கேட்கவில்லை. வெறும் 10 துணைக் கேள்விகளை மட்டுமே கேட்டிருக்கிறார்.

தமிழரசனை போலவே அ.தி.மு.க-வை ஆதரிப்பதே உயிர் மூச்சாக வைத்திருக்கும் கொங்கு இளைஞர் பேரவை தனியரசும் மூலக் கேள்வி எதையும் கேட்கவில்லை. மற்றவர்கள் கேள்வி கேட்டபோது 6 துணைக் கேள்விகளை மட்டுமே இவர் எழுப்பியிருக்கிறார்.

பதவியை ராஜினாமா செய்துவிட்டு தே.மு.தி.க-வில் இருந்து முகாம் மாறிய பண்ருட்டி ராமச்சந்திரன் 2 துணைக் கேள்விகள் கேட்டிருக்கிறார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் 15 துணைக் கேள்விகள் மட்டுமே எழுப்பியிருக்கிறார். லேட்டஸ்டாக ராஜினாமா செய்த பழ.கருப்பையா 3 கேள்விகளும் ஒரு துணைக் கேள்வியை மட்டுமே அவையில் கேட்டிருக்கிறார்.

தலைவிக்காகப் பதவியை ராஜினாமா செய்த ஆர்.கே.நகர் வெற்றிவேல் ஒரு கேள்வியும் எழுப்பவில்லை. 10 துணைக் கேள்விகள் மட்டுமே கேட்டார். நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் தொண்டரை அடித்த சிங்காநல்லூர் ஆர்.சின்னசாமி ஒரு கேள்விக்கூட கேட்கவில்லை. 12 துணைக் கேள்விகள் மட்டும் கேட்டிருக்கிறார். தி.மு.க முன்னாள் அமைச்சர்் தங்கம் தென்னரசு ஒரு கேள்வியும் எழுப்பவில்லை. 4 துணைக் கேள்விகளை மட்டுமே எழுப்பினார். முன்னாள் அமைச்சர்கள் டி.பி.எம்.மைதீன்கானும், பெரிய கருப்பனும் ஒரு கேள்வியைக்கூட எழுப்ப வில்லை. இருவரும் தலா ஒரு துணைக் கேள்வியை மட்டுமே கேட்டிருக்கிறார்கள்.

கேள்வி கேட்ட 173 பேரில் கடைசி ஐந்து இடங்களில் இருப்பவர்களையும் பார்த்துவிடுவோம். சில காலம் அமைச்சராக இல்லாமல் இருந்த இரா.காமராஜும், அரசு கொறடா ஆர்.மனோகரனும் தலா ஒரு கேள்வியும் தலா நான்கு துணைக் கேள்விகளும் கேட்டிருக்கிறார்கள். மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ ராஜலட்சுமி ஒரு கேள்வியும் மூன்று துணைக் கேள்விகளும் கேட்டிருக்கிறார். பல்லாவரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ 1 கேள்வியும் 1 துணைக் கேள்வியும் எழுப்பியிருக்கிறார். நியமன உறுப்பினரான நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ்தான் (ஆங்கிலோ இந்தியன்) கேள்வி கேட்ட 173 பேரில் ஆக கடைசி இடத்தில் இருக்கிறார். அவர் ஒரு கேள்வியை மட்டுமே எழுப்பியிருக்கிறார். (கடைசி 10 இடங்களில் இடம்பெற்ற வர்கள் பட்டியல் பெட்டிச் செய்தியாக)

கேள்வி நேரம் முடிந்தது. அடுத்து, நம்ம எம்.எல்.ஏ-க்கள் ஒவ்வொருவரும் எத்தனை மணி நேரம் பேசினார்கள்? அது அடுத்த இதழில்...

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
படங்கள்: சு.குமரேசன், ஆர்.முத்துக்குமார்


துணைக் கேள்விகள் கேட்டவர்களில் யார் பெஸ்ட்?

கேள்விகளை உறுப்பினர்கள் முன்பே எழுதிக்கொடுத்து அதில் தேர்வாகும் கேள்விகள், அவையில் விவாதத்துக்கு வரும். அப்போது கேள்வி கேட்டவர் அதில் பங்கேற்பார். இதில் கேள்வியே எழுப்பாத மற்ற உறுப்பினர்களும் துணைக் கேள்விகளை எழுப்ப முடியும். அப்படி துணைக் கேள்வி கேட்டவர்களில் யார் டாப்? இதிலும் குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ் தான் முதலிடத்தில் இருக்கிறார். அவர் 115 துணைக் கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அதற்கடுத்த இடங்களில் அரூர் தொகுதி டில்லி பாபு (சி.பி.எம்.), திருத்துறைப்பூண்டி உலகநாதன் (சி.பி.ஐ.), சிவகங்கை சு.குணசேகரன் (சி.பி.ஐ.), மானாமதுரை ம.குணசேகரன் (அ.தி.மு.க.) ஆகியோர் இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick