என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - வி.செந்தில்பாலாஜி (கரூர்)

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: அ.நன்மாறன்

‘‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற புரட்சித்தலைவியின் ஒற்றை நோக்கத்தை நிறைவேற்றுவதையே லட்சியமாகக்கொண்டு செயல்படுகிறேன்’’ என்று பேசியவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. தன் சொந்தத் தொகுதியில் எல்லோரும் எல்லாமும் பெறும் வகையில் செந்தில்பாலாஜி செயல்பட்டுள்ளாரா என்பதைப் பார்ப்போம்.

கரூர் தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். முதல் தடவை எம்.எல்.ஏ-வாகத் தேர்வு செய்யப்பட்டபோது, தி.மு.க ஆட்சியில் நடந்த மணல் கொள்ளையை எதிர்த்துப் போராட்டம் நடத்திப் பிரபலமானார். அப்போது போலீஸார் நடத்திய தடியடியில் செந்தில்பாலாஜி காயம் அடைந்தார். அது அவருக்கு கரூர் தொகுதியில் மீண்டும் எம்.எல்.ஏ ஆவதற்கான வாய்ப்பைக் கொடுத்தது. போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் ஆனார். மணல் கொள்ளை குறையும் என்று தொகுதி மக்கள் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்பில் மண் விழுந்தது.  அமராவதி ஆற்றில் முன்பைவிட அதிகமாக மணல் கொள்ளை நடக்கிறது. தற்போது கரூர் மாவட்டத்தில் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் மணல் குவாரிகள் இயங்குகின்றன. இந்த நிலை தொடர்ந்தால் அமராவதியும், காவிரியும் காணாமல் போய்விடும் எனப் புலம்பும் தொகுதிவாசிகள், இவற்றை எல்லாம் தடுப்பதற்கு இப்போது செந்தில்பாலாஜி எதுவும் செய்யவில்லை என்கிறார்கள்.

செந்தில்பாலாஜியின் சொந்த ஊரான ராமேஸ்வரப்பட்டியில் மட்டும் அவரைப் பாராட்டுகிறார்கள். அந்த ஊரில் சந்துபொந்துகள் எல்லாம் தார்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. தன் சொந்த ஊருக்கு அருகில் உள்ள மண்மங்கலத்துக்கு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கு பாடி கட்டும் தொழிற்சாலை, தாலுக்கா அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எனப் பலவற்றையும் கொண்டு சென்றுவிட்டார். இவை எல்லாம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வர வேண்டியவை. ஆகவே, இந்தப் பகுதி மக்கள் அனைவரும் செந்தில்பாலாஜி மீது கோபத்தில் இருக்கிறார்கள்.

காவிரியும், அமராவதியும் பாய்ந்தோடும் கரூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு தீர்க்க முடியாத பிரச்னையாக உள்ளது. “என்னைத் தேர்ந்தெடுத்தால் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவேன். இரண்டு மாதங்களில் குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பேன். கரூர் நகராட்சியில் உள்ள மண் சாலைகளை, தார்ச்சாலைகளாகவும் சிமென்ட் சாலைகளாகவும் மாற்றுவேன்” என்றெல்லாம் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தார் செந்தில்பாலாஜி. குடிநீர் பிரச்னை தீரவே இல்லை. வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. அமராவதி ஆற்றில் விவசாயத்துக்குத் தண்ணீர் திறப்பதே இல்லை என விவசாயிகள் அடிக்கடி போராட்டம் நடத்துகிறார்கள்.

தாந்தோன்றி பகுதியில் குடிநீர் பணிகளுக்காக ரூ.68 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி முழுமை அடையாததால் பிரச்னை தீரவில்லை. கடம்பங்குறிச்சி ஊராட்சி காவிரி ஆற்றில் ரூ.38 லட்சம் மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகளும், நன்னியூர், காதப்பாறை, நெரூர் தென்பாகம், சோமூர், பஞ்சமாதேவி, மண்மங்கலம், ஆத்தூர் பூலாம்பாளையம் என ராமேஸ்வரத்துப்பட்டியைச் சுற்றிய 8 ஊராட்சிகளில் ரூ.58 லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எல்லாமே செந்தில்பாலாஜியின் சொந்த ஊருக்குப் பக்கத்தில் உள்ள ஊர்கள். கரூர் நகராட்சி, வடிவேல் நகர், சுந்தர் நகர் ஆகிய பகுதிகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நீடிக்கிறது.

பசுபதிபாளையம் ரயில்வே குகைவழிப் பாதையைச் சீரமைக்க 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்காக அப்போதைய தி.மு.க உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி சில தூண்களை அமைத்தார். அதன் பின்னர் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ‘‘இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெறாமலிருக்க தி.மு.க அரசே முட்டுக்கட்டையாக உள்ளது. ரயில்வே குகைவழிப் பாலத்தையொட்டிய இணைப்புச் சாலைக்கான இடத்தை மாநில நெடுஞ்சாலைத் துறை கையகப்படுத்த வேண்டும். அதற்கான பணத்தை நகராட்சி நிர்வாகம் செலுத்த வேண்டும். இந்த 2 பணிகளும் நடைபெறவில்லை. அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் சிறப்பு அதிகாரத்தில் இந்த குகைவழிப் பாதைப் பணிகள் முடிக்கப்படும். 3 மாதங்களில் பணிகள் நிறைவுப்பெற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.  இனாம்கரூர் பகுதியில், தாமதப்பட்டு வரும் குளத்துப்பாளையம் குகை வழிப் பாதைக்கான பணிகள் 3 மாதங்களில் தொடங்கும்’’ என்றார் செந்தில்பாலாஜி. எந்தப் பணியும் செய்யாமல் இன்னமும் அப்படியே கிடக்கிறது. மேலும் பசுபதிபாளையம் குகைவழிப் பாதை,  ரயில்வே தண்டவாளத்துக்கும் ஹைவேஸ் ரோட்டுக்கும் நடுவில் உள்ளது. அவை இப்போது பொதுக் கழிப்பிடம் ஆனதுதான் அவலம். 

கிடப்பில் உள்ள திட்டங்கள்!

‘‘கரூரில் டெக்ஸ்டைல் சம்பந்தமான படிப்பு, மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார் செந்தில்பாலாஜி. கரூரில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான அறிவிப்பை 2014 ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி 110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதைத் தொடர்ந்து, கரூர் கோயம்பள்ளியை அடுத்த மின்னாம்பள்ளியில் மருத்துவக் கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யப் பட்டது. அதைத்தவிர, அடுத்ததாக வேறு எந்தப் பணியும் நடக்கவில்லை. மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள்கூட நடக்கவில்லை.  2016 - 17-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு கரூர் மருத்துவக் கல்லூரி எப்படித் தயாராகும் என்பது தெரியவில்லை.

‘‘புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரிங் ரோடுகள் ஏற்படுத்தப்படும்’’ என்றார் செந்தில்பாலாஜி. ஆனால், இவை எதுவும் நடக்கவில்லை. புதிய பேருந்துநிலையம் உட்பட அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் செயல்வடிவம் பெறவில்லை. வாங்கல்பாளையத்தில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழா நடக்காமல் இருந்தது. அதனால், எல்லா வாகனங்களும் நாமக்கல், மோகனூர் செல்ல 45 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு போகவேண்டிய நிலை இருந்தது. இதைக் கண்டித்து, தி.மு.க மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் தடையை மீறி, பாலத்தை மக்களுக்குத் திறந்துவைக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. அதையடுத்து, 14.02.2016 அன்று பாலம் திறக்கப்பட்டது.

கரூர் தொகுதியில் ஜவுளித்தொழில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. உற்பத்தி சரிந்துவிட்டது. அதைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கரூரில் பழைய டி.என்.பி.எல் காகித தொழிற்சாலையைத் தவிர, வேறு தொழிற்சாலை எதுவும் இல்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. செல்வாக்கு மிகுந்த அமைச்சராக வலம் வந்த செந்தில்பாலாஜி நினைத்திருந்தால், தொகுதிக்கு எவ்வளவோ செய்திருக்கலாம்” என்கிறார்கள் கரூர் வாசிகள்.

கரூர் – பசுபதிபாளையம் இடையே 14 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம், இன்னும் முழுமை அடையவில்லை.

கரூர் நகர பகுதியின் சாக்கடைக் கழிவுகள் அமராவதி ஆற்றில் நேரடியாகக் கலக்கப்படுகிறது. அதனால், ஆற்றுநீர் விஷமாகி வருகிறது. செந்தில்பாலாஜி இதைக் கண்டுகொள்ளவே இல்லை. கரூரில் ஜவுளித்தொழில், கொசுவலை தயாரிப்பு கம்பெனிகள், பஸ்களுக்கு பாடி கட்டும் கம்பெனிகள் உள்ளன. அங்கு பணியாற்றிய பலரும், கடும் மின்வெட்டுப் பிரச்னையால் வேலை இழந்தனர்.

அதில் செந்தில்பாலாஜி பாராமுகமாகவே இருந்தார். கடந்த தி.மு.க ஆட்சியில் மணல்மேடு பகுதியில் டெக்ஸ்டைல் பார்க் அமைக்கப்பட்டது. இதனையடுத்து கரூரில் இருந்த சாயப்பட்டறைகள் மூடப்பட்டு தொழில் நசுங்கியது. இதனை அடுத்து 110 விதியின் கீழ் சாயப்பட்டறை பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு குண்ணஞ்சத்திரம் பகுதியில் அரசு சாயப்பட்டறை அமைக்க இடம்பார்த்தார்கள். அதற்கு அந்தக் கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஒரு எம்.எல்.ஏ-வாக, அமைச்சராக இருந்தபோது அவர்களை அழைத்துப் பேசி இவற்றுக்கும் இன்னும் நிரந்தரத் தீர்வு காணப்பட முயற்சி எடுக்கவில்லை. இந்தச் சாயப்பட்டறை பிரச்னையால் பல லட்சம்பேர் வாழ்க்கையை இழந்துள்ளார்கள்.

நகராட்சிப் பகுதியில் பாதாளச் சாக்கடைத் திட்டம் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை. அதனால், அந்தப் பகுதியில் தொற்றுநோய் அபாயம் உள்ளது. கரூர் பேருந்து நிலையம் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.

பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதாக அறிவித்தார்கள். அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை செந்தில்பாலாஜி மறந்துவிட்டார் என்பது ஒருபுறமிருக்க, கொண்டுவரப்பட்ட திட்டங்களும் முழுமைபெறாமல் பாதியிலேயே நிற்கின்றன என்பதுதான் கரூர் நிலவரம்.

- சி.ஆனந்தகுமார், ரா.நிரஞ்சனா, சா.நித்யகுமரன்
படம்: என்.ஜி.மணிகண்டன்


ப்ளஸ்... மைனஸ்!

அமைச்சராக இருந்தபோது செந்தில்பாலாஜி செல்போனை ரொம்பவும் ஃபில்டர் பண்ணித்தான் எடுப்பார். அதனால் அவர், பொதுமக்களுடன் எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பால்தான் இருந்தார். அவரை நெருங்கவே முடியாது. இது அவருக்கு பெரிய மைனஸ்.
 
 அமைச்சர் பதவி போனபிறகு, அவருடைய அணுகுமுறையில் மாற்றம் தெரிகிறது. இப்போது, கட்சிக்காரர்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இது அவருக்கு ப்ளஸ்.

எம்.எல்.ஏ. அலுவலகம் ரெஸ்பான்ஸ் எப்படி?

கரூர் மாவட்ட நூலகம் அருகில் செந்தில்பாலாஜியின் எம்.எல்.ஏ அலுவலகம் உள்ளது. அமைச்சராக இருந்தபோது செந்தில்பாலாஜியை இங்கு அவ்வப்போது பார்க்க முடிந்தது. இப்போது அதிகம் தென்படுவதில்லை. இந்த அலுவலகத்தில் எப்போதும் ஐந்துக்கும் மேற்பட்ட  இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு தனித்தனி வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் செந்தில்பாலாஜி நினைப்பதை செய்து முடிக்கிறார்கள். போஸ்டர், ப்ளெக்ஸ் என கரூரை கலங்கடிக்கும் ஐடியாக்களை டிசைன் செய்வதும் இவர்கள்தான். அலுவலகத்துக்குச் சென்று நாம் ஒரு பிரச்னைக்காக மனுக்கொடுத்தோம். மனுவை வாங்கிய திருவை தியாகராஜன், ‘‘இதற்குத் தேவையான ஆவணங்கள் வேண்டும். அதைக் கொண்டுவந்தால் அதிகாரிகளிடம் சொல்லி முடித்துக் கொடுக்கிறேன்’’ என்றார்.

ரியாக்‌ஷன் என்ன?

செந்தில்பாலாஜியின் கருத்தை அறிவதற்காக அவரது அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கு, ‘அண்ணன் பெரிய காரியத்துக்குச் சென்றிருக்கிறார்’ என்றபடி அவரின் உதவியாளர் சுப்பிரமணி, நம்மிடம் அனைத்தையும் கேட்டுக்கொண்டு, ‘அண்ணனிடம் இதைச் சொல்கிறேன். அவரே பேசுவார்’ என்றார். செந்தில்பாலாஜி தனது வழக்கமான குணத்தின்படி பதில் தருவதற்காக அழைக்கவே இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick