போடுங்கள் ஓட்டு... பாருங்கள் ரசீது..!

லக்கானி கையில் தேர்தல் லகான்

“வாக்காளர் பட்டி​யலில் போலி வாக்காளர்கள்” என்று தொடங்கி, “வீட்டுக்கு வீடு பணம் கொடுக்குறாங்க... கள்ள ஓட்டு போடுறாங்க” என்பது வரை புகார் மழையால் தேர்தல் ஆணையம் நனையப்போகிறது. இதையெல்லாம் எப்படி சமாளிக்கப் போகிறீர்கள் என்பது உள்ளிட்ட கேள்விகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியைச் சந்தித்தோம்.

“ ‘ஓட்டுக்குப் பணம்’ என்ற ஃபார்முலாவை இந்தியாவுக்கு அறிமுகம் செய்த தமிழக சட்டமன்றத் தேர்தலை எப்படி நடத்தப் போகிறீர்கள்?”

“ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைத் தடுப்பதுதான் எங்களுக்கு முதல் சவாலாக இருக்கும். இதுகுறித்து, வருமானவரித் துறை உள்ளிட்ட 14 துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. எந்த நபர் மூலம் பணம் விநியோகம் நடக்கும் என்பதைக் கண்டறிந்து, அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க உள்ளோம். அதைத் தாண்டி மக்களின் மனநிலையும் மாறவேண்டும். ‘நாங்கள் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்க மாட்டோம்’ என்ற உறுதியோடு அவர்கள் இருக்க வேண்டும். வாகனங்களில் பணம் கொண்டு போவதைத் தடுக்க சோதனைச் சாவடிகள் அமைக்க உள்ளோம். சோதனைச் சாவடிகள் மத்திய படையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும். சந்தேகத்துக்கு இடமான அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படும். பணப் பட்டுவாடா ஆகாமல் தடுக்கப்படும்.”

“தேர்தலில் புதிய யுக்தி பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளதே?”

“இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழக சட்டமன்றத் தேர்தலில், பிரசாரம் முதல் வாக்குப்பதிவு வரை அனைத்தும் ஆன்லைன் மூலம் ஒருங்கிணைக்கப்படும். அரசியல் கட்சிகள் பிரசாரத்துக்கு அனுமதி கேட்க, ஆன்லைனில் விண்ணப்பித்தால்போதும். அதை, உடனடியாக சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பார்த்து அனுமதி கொடுப்பார்கள். அதேபோல கட்சிகள் பயன்படுத்தும் பிரசார வாகனத்துக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக அரசியல் கட்சியினருக்கு என்று ஒரு ‘பாஸ்வேர்ட்’ கொடுத்துவிடுவோம். அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க இது எளிதாக இருக்கும்.”

“தேர்தல் ஆணையத்தின் ‘1950’ என்ற மொபைல் உதவி எண் பயன்பாடு எப்படி உள்ளது?”

“1950 என்ற உதவி எண் காரணமாகத் தேர்தல் ஆணையத்தின் பெரும்பாலான பணிகள் குறைந்துள்ளன. இந்த எண்ணுக்கு வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பினால், வாக்காளர் பட்டியலில் உள்ள தன்னுடைய விவரங்களை அடுத்த நிமிடத்தில் பெற்றுவிடலாம். தேர்தல் நாள் அன்று Q என்று டைப் செய்து சிறிது இடம்விட்டு, வாக்காளர் அடையாள எண்ணை டைப்செய்து இந்த எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பினால், வாக்குச்சாவடி வரிசையில் எத்தனைபேர் நிற்கின்றனர் என்ற விவரங்களை அறியலாம். முதல் கட்டமாக, நகர்ப்புற வாக்குச்சாவடிகளின் தகவல்களைப் பெறலாம். மேலும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் ஒன்றையும் அறிமுகப்படுத்த உள்ளோம். அதன்மூலம் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி, வாக்குச்சீட்டில் தங்களது வரிசை எண் உள்ளிட்ட தகவல்களையும் பெறலாம். தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டு இருந்தால், அதையும் இந்த அப்ளிகேஷன் மூலம் தெரிவிக்கலாம். 1950 எண் மூலம் தேர்தல் தொடர்பான புகார்களையும் அளிக்கலாம். அது நேரடியாக அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிக்குச் சென்றுவிடும். தமிழகம் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட விதத்தில் இந்த நெட்வொர்க் செயல்படும்.

இதே எண்ணுக்கு மாற்றுத்திறனாளிகள், தங்களது மொபைல் போனில் ஸ்டார் குறியீட்டை(*) டைப்செய்து சிறிது இடம்விட்டு வாக்காளர் அடையாள எண்ணை டைப்செய்து குறுந்தகவல் அனுப்பினால், அவர்கள் வாக்களிக்கத் தேவையான வசதிகள் செய்து தரப்படும். CAR என டைப்செய்து, காரின் நான்கு இலக்க எண்ணை டைப்செய்தால் அந்த கார் தேர்தல் ஆணையம் அனுமதித்த வாகனமா என்பது குறித்த குறுந்தகவல் வந்துவிடும். ஒரு வாகனத்துக்கு அனுமதி பெற்று, அதிகமான வாகனங்களை இயக்குவது குறித்துப் புகார் தெரிவிக்க இந்த வசதி பயன்படும். இப்போது இந்த எண்ணில் நாள் ஒன்றுக்கு 4,000 அழைப்புகள் வருகின்றன. வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளை நீக்குவது குறித்தே இப்போது எங்களுக்கு அழைப்புகள் வருகின்றன. தேர்தல் பணிகள் தீவிரம் ஆகும்போது பல்வேறு புகார்கள் வரலாம் என்று கருதுகிறோம்.”

“போலி வாக்காளர்களையும், கள்ள ஓட்டுகளையும் கட்டுப்படுத்தத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க் கட்சிகள் கூறியுள்ளனவே?”

“இப்போது தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடக்கிறது. இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் பெயர்களை நீக்குகிறோம். ஒரே நபர் பெயர் இரண்டு இடங்களில் இருந்தால் ஒரு பெயரை நீக்கி வருகிறோம். கள்ள ஓட்டைத் தடுக்க முதல்கட்டமாக 30,000 வாக்குச்சாவடிகளை  சி.சி.டி.வி கேமரா மூலம் கண்காணிக்கிறோம். கேமரா பழுதடைந்தால், தேர்தல் அதிகாரிக்கு அதுகுறித்த குறுந்தகவல் சென்றுவிடும். ‘வாக்குப்பதிவு நாளன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் கேமராவை ஆஃப் செய்யக் கூடாது’ என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்க​ப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் உள்ள கேமரா தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பது உறுதிப்படுத்தப்படும். வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் வாக்குச்சாவடியைக் கைப்பற்றுவதைத் தடுக்க, அதிக அளவில் மத்திய படை போலீஸார் நிறுத்தப்படுவார்கள். பாதுகாப்பு விஷயத்தில் அதிகாரிகள் எந்தவித சமரசமும் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில், வாக்காளர் ஓட்டு போட்டு முடித்த பின்னர், அவர் எந்தக் கட்சிக்கு வாக்களித்தார் என்பது ஒரு ரசீதுபோல் தெரியும். ஆனால், அது வாக்காளருக்கு பிரின்ட் ஆகத் தரப்படுவதில்லை. இது 17 தொகுதிகளில் அமல்படுத்தப்பட உள்ளது.”

“தேர்தல் பணியில் மத்திய அரசு ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்​ளனவே?”

“சட்டமன்றத் தேர்தலுக்கு மூன்று லட்சம் ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். அந்த எண்ணிக்கையில் மத்திய அரசு ஊழியர்கள் இல்லை. மத்திய அரசு அளிக்கும் ஊழியர்களை முழுமையாகப் பயன்படுத்துகிறோம். மாநில அரசு ஊழியர்களை அவர்கள் பணியாற்றும் இடங்களில் நியமிப்பது கிடையாது. வேறு இடங்களில்தான் நியமனம் செய்கிறோம். வாக்குச்சாவடிகளில், அலுவலர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இருக்கின்றனவா என்று ஆய்வுசெய்து வருகிறோம். குறிப்பாக பெண் அலுவலர்களுக்கு கழிவறை உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றனவா என்பதில் கவனமாக இருக்கிறோம்.”

“வேட்பாளரின் செலவுக் கணக்குகளைக் கண்காணிக்க எந்தவிதமான யுக்திகளைக் கையாள உள்ளீர்கள்?”

“வேட்பாளர்களின் செலவுக் கணக்கு விவரங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. மேடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு தேர்தல் ஆணையமே ஒரு தொகையை நிர்ணயம் செய்துள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு, வேட்பாளர் தரும் செலவுக் கணக்கு சரிபார்க்கப்படும். வாடகைக்குப் பொருட்கள் எடுத்து இருந்தால், அதற்கும் நாங்கள் நிர்ணயித்த தொகையை மட்டுமே கணினி பதிவுசெய்யும். ஆகையால், அதிக செலவு செய்துவிட்டு, குறைவாகக் கணக்குக் காட்ட முடியாது. முறையாகச் செலவுக் கணக்குகளைக் காட்டவில்லை என்றால், மூன்றாண்டுகள் தேர்தலில் நிற்க தடைவிதிக்கப்படும்.”

“வாக்களிக்கும் ஆர்வத்தை அதிகரிக்க என்ன செய்ய உள்ளீர்கள்?”

“வாக்களிப்பதன் அவசியம் குறித்த விளம்பரங்கள், பிரசாரங்கள் செய்கிறோம். 1,400-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் புதிய வாக்காளர்களைச் சேர்க்க ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தியான 24 லட்சம் புதிய வாக்காளர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் முழுமையாகத் தங்கள் ஜனநாயகக் கடமை ஆற்றவேண்டும்.”

“தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் எப்போது நடைபெறும்?”

“தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம்தான் முடிவுசெய்யும். பள்ளித் தேர்வுகள், திருவிழாக்கள், கோடைகாலம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு மே 23-ம் தேதிக்குள் தேர்தலை நடத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்துவருகிறார்கள். விரைவில் தேர்தல் தேதியை அறிவிப்பார்கள்.”

- அ.சையது அபுதாஹிர்
படம்: ப.சரவணகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick