ஒரு வார்த்தை பேச 5 வருடம் காத்திருந்தோம்

அ.தி.மு.க-வின் ஐந்தாண்டு ஆட்சி, நிறைவுக் கட்டத்தில் வந்து நிற்கிறது. சட்டசபையின் கடைசி கூட்டத் தொடரும் முடிந்துவிட்டது. இந்த ஐந்தாண்டு காலத்தில் சட்டசபையில் மக்கள் பிரதிநிதிகள் காட்டிய செயல்பாடுகள் பற்றி கடந்த இரண்டு இதழ்களில் எழுதினோம். அதன் நிறைவுப் பகுதி இது. கேள்வி நேரம் தவிர, மற்ற விவாதங்களில் உறுப்பினர்கள் காட்டிய அக்கறை பற்றி இதில் அலசுவோம்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம், பட்ஜெட் மீதான விவாதம், மானியக் கோரிக்கை, சட்டமுன் வடிவுகள் போன்ற விவாதங்களில் யார் அதிகம் ஸ்கோர் செய்திருக்கிறார்கள் எனப் பார்ப்போம். அமைச்சர்களைத் தவிர, 205 பேர் விவாதத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். இந்தியக் குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன்தான் இதில் முதலிடத்தில் இருக்கிறார். இவர் இரட்டை இலையில் ஜெயித்தவர். 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த டிம்பர் மாதம் வரை சட்டசபை 188 நாட்கள் நடைபெற்றுள்ளது. அதாவது, 876 மணி நேரமும் 16 நிமிடங்களும் அவை நடைபெற்றுள்ளது. இதில் செ.கு.தமிழரசன் பேசிய நேரம் மட்டும் 16.04 மணி நேரம். ஆளும் கட்சி ஆதரவாளர் என்பதால் அதிக நேரம் கிடைத்தது. அதனால் முதலிடத்தில் இருந்தார். அதையும் துதி பாடுவதில் செலவழித்தார்.

அவருக்கு அடுத்த இடத்தில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி இருக்கிறார். அவர் 15.45 மணி நேரம் பேசியிருக்கிறார். மூன்றாவது இடத்தில் சி.பி.எம் சட்டமன்ற கட்சித் தலைவர் சவுந்தரராசனும், நான்காவது இடத்தில் சி.பி.ஐ-யைச் சேர்ந்த எம்.ஆறுமுகமும், 5-வது இடத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவும் இருக்கிறார்கள். ஆறாவது இடத்தில் சு.குணசேகரன் (சி.பி.ஐ.), ஏழாவது இடத்தில் கதிரவன் (ஃபார்வர்டு பிளாக்), எட்டாவது இடத்தில் க.பாலகிருஷ்ணன் (சி.பி.எம்.), ஒன்பதாவது இடத்தில் தனியரசு (அ.தி.மு.க.), 10-வது இடத்தில் விஜயதரணி (காங்கிரஸ்) ஆகியோர் உள்ளனர். சட்டமன்றத்தில் ஒவ்வொரு கட்சியின் தலைவருக்கும் எதிர்க் கட்சி வரிசையில் இடம் அளிக்கப்​பட்டிருக்கும். அதனால்தான் எதிர்க் கட்சித் தலைவர்களுக்குப் பேசும் வாய்ப்பு அதிகம். அதனால் இவர்கள் இந்த அளவுக்கு ஸ்கோர் செய்ய முடிகிறது.

அதிகக் கேள்வி கேட்டவர்களில் முதலிடத்தில் இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ், விவாதங்களில் 11-வது இடத்தில் இருந்தார். அவர், எட்டு மணி நேரத்துக்கும் மேலாக அவையில் பேசியிருக்கிறார். பாலபாரதியும் (சி.பி.எம்.) ராஜினாமா செய்த பண்ருட்டி ராமச்சந்திரனும், 12 மற்றும் 13-வது இடங்களில் இருக்கிறார்கள்.

சரத்குமார் 16-வது இடத்திலும், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் 39-வது இடத்திலும் இருக்கிறார்கள். ஸ்டாலின் 47-வது இடத்தில் இருக்கிறார். அவர் விவாதங்களில் பங்கேற்று பேசிய மொத்த நேரம் 2 மணி, 20 நிமிடங்கள். 86-வது இடத்தில்தான் எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் இடம்பெற்றார். அவர் இந்த ஐந்தாண்டுகளில் பேசிய மொத்த நேரமே ஒரு மணி ஒரு நிமிடம்தான்.

நாக்கைத் துருத்திய விவகாரத்துக்குப் பிறகு அவர் சட்டசபைக்கே வரவில்லை. விவாதங்களில் பங்கேற்ற 205 பேரை எடுத்துக்கொண்டால் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகப் பேசியவர்கள் 112 பேர். 10 மணி நேரத்துக்கும் மேலாகப் பேசியவர்கள் எட்டுப் பேர்.

விவாதங்களில் பேசாத எம்.எல்.ஏ-க்கள் மட்டும் 20 பேர். இதில் முன்னாள் அமைச்சர்கள் சிலரும் அடக்கம். சில காலம் அமைச்சர்களாக இல்லாமல் இருந்தவர்களும் விவாதங்களில் பங்கேற்​கவில்லை.

விவாதங்களில் பங்கேற்காதவர்களில் கருணாநிதி, முன்னாள் சபாநாயகர் டி.ஜெயக்குமார், செங்கோட்டையன் (அ.தி.மு.க.), செந்தில்பாலாஜி (அ.தி.மு.க.), சி.வி.சண்முகம் (அ.தி.மு.க), இ.சுப்பையா (அ.தி.மு.க.), கே.பி.கந்தன் (அ.தி.மு.க.), பி.ஜி. ராஜேந்திரன் (அ.தி.மு.க.) ஆகியோர் அடங்குவார்கள். சட்டசபையில் கேள்விகள் கேட்காமலும் விவாதங்களில் பங்கேற்காமலும் இருந்த எம்.எல்.ஏ-க்கள்தான் ஒட்டுமொத்த செயல் பாட்டில் ஃபெயில் ஆனவர்கள். அப்படி யார் யார் இருக்கிறார்கள். அவர்களில் கருணாநிதி, முன்னாள் சபாநாயகர் டி.ஜெயக்குமார் (அ.தி.மு.க.), செங்கோட்டையன் (அ.தி.மு.க.)முக்கியமானவர்கள்.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி


ராஜினாமா எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடு:

கடைசி கட்டம் வரையில் பதவியை அனுபவித்துவிட்டு ராஜினாமா செய்திருக்கும் அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடு எப்படி?

விவாதங்களில் பங்கேற்காத எம்.எல்.ஏ-க்கள்!


சட்டமன்றத்தில் அதிக நேரம் பேசிய டாப் 25 எம்.எல்.ஏ-க்கள்!

கேள்வி கேட்காமலும் விவாதத்தில் பங்கேற்காமலும் இருந்தவர்கள்...

வி.ஐ.பி எம்.எல்.ஏ-க்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள்? விவாதத்தில் பங்கேற்று பேசியதில் வி.ஐ.பி. எம்.எல்.ஏ.க்கள் செயல்பாடு எப்படி? அவர்கள் எத்தனையாவது இடங்களில் இருக்கிறார்கள்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick