மிஸ்டர் கழுகு: தி.மு.க-வை திட்டாத விஜயகாந்த்!

உற்சாகத்தில் கருணாநிதி

ழுகார் தலை தெரிந்ததும், ‘‘நீர் சொன்னதுபோலவே விஜயகாந்த் எதுவும் சொல்ல​வில்லையே காஞ்சிபுரம் மாநாட்டில்?” என்றோம்.

‘‘இதெல்லாம் மாநாட்டுக்குக் கூட்டத்தைக் கூட்டும் தந்திரம் மட்டும்தான். தி.மு.க-வுடன் இன்னும் பேச்சுவார்த்தை முற்றுப் பெறவில்லை. அதனால் ஒன்றும் சொல்ல​மாட்டார் என்பது இரண்டு தரப்புக்கும் மீடியேட்டர்களாக இருப்பவர்கள் சொல்லி வந்தார்கள். ‘நம்மைப் பத்தி என்னய்யா சொன்னாரு?’ என்று கருணாநிதி கேட்க, ‘அவரு பேசும்போது எதுவும் சொல்லல தலைவரே’ என்று பதில் சொல்லி இருக்கிறார்கள். ‘அது போதும்’ என்றாராம் கருணாநிதி.”

‘‘சொல்லும்!”

‘‘கூட்டணி குறித்து விஜயகாந்த் என்ன சொல்லப் போகிறார் என்று தே.மு.தி.க-வின் தொண்டர்கள் மட்டுமல்ல, அந்தக் கட்சியுடன் கூட்டணிவைக்க விரும்பும் அனைத்துக் கட்சிகளும் பெரும் எதிர்பார்ப்போடு இருந்தனர். காஞ்சிபுரம் வேடல் பகுதியில் மிகுந்த பரபரப்போடும், எதிர்பார்ப்போடும் நடைபெற்ற அந்த மாநாட்டை கூட்டணி பற்றிய அறிவிப்பே இல்லாமல் முடித்துவிட்டார் விஜயகாந்த்.

‘இந்த மாநாடு வெற்றிகரமாக நடந்துவிடக் கூடாதுன்னு ஆளும் கட்சிக்காரங்க பல அராஜக வேலைகளைச் செய்தாங்க. காஞ்சிபுரம் நகரம் முழுவதும், தே.மு.தி.க-வினர் பேனரே வைக்க முடியாத அளவுக்கு அ.தி.மு.க-வின் பேனர்களை வெச்சிட்டாங்க. ஒரு மாதத்துக்கு மேல் அந்த பேனர்கள் அகற்றப்படாமல் இருக்கு. நாங்க எழுதின சுவர் விளம்பரங்களை அழிச்சிட்டாங்க. பேனர்கட்ட வர்ற ஆட்களை மிரட்டுனாங்க. பேனருக்கு அனுமதி கேட்டால் குறைந்த அளவுதான் கொடுத்தாங்க. வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தாமல் காவல் துறையினரும் ஆங்காங்கே ஒதுங்கி நின்னாங்க. இதனால், மாநாட்டுப் பந்தலுக்கு வர முடியாமல் வாகனங்கள் வழியிலேயே நின்றன’ என்று தே.மு.தி.க-வினர் ஆவேசப்பட்டனர். அந்த அளவுக்கு போலீஸார் நெருக்கடி கொடுத்தார்கள்.”

‘‘காரணம்?”

‘‘தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதை ஜெயலலிதா அறிந்துவிட்டார். பி.ஜே.பி-யுடன் விஜயகாந்த் கூட்டணி செல்வதாக இருந்தால் ஜெயலலிதா அதைப் பொருட்படுத்த மாட்டார்.

மாநாடு தொடங்கும் நேரத்தில் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்ட தே.மு.தி.க-வின் தலைவர்கள் அனைவரும் மேடைக்குப் பின்புறம் உள்ள வேனிலேயே இருந்தனர். அங்கிருந்து, பேச வேண்டிய நேரத்தில் மேடைக்கு வந்தார் பிரேமலதா. அவர், ஆளும் கட்சியை மட்டுமே விமர்சனம் செய்தார். ‘அ.தி.மு.க என்று சொன்னாலே அனைத்திலும் தில்லு​முல்லு செய்து ஊழல் செய்யும் ஒரு கட்சி என்பது தெரியும். அனைத்துத் துறை​களிலும் ஊழல். ஊழல் மிகுந்த கட்சியாக மாறியிருப்பது மட்டும்தான் அ.தி.மு.க-வின் சாதனை. டாஸ்மாக் கடைகளை தமிழகம் முழுவதும் திறந்துவைத்து மக்களை அழிச்சதும் அவங்க சாதனைதான். கல்வி, மருத்துவம், நெசவு, விவசாயம், சிறுதொழில் என எல்லாத் துறைகளிலும் தன்னிறைவு இல்லாத, வளர்ச்சியே இல்லாத ஆட்சியைத்தான் கடந்த ஐந்து ஆண்டுகாலம் அவர்கள் நடத்தி இருக்கின்றனர். சமீபத்தில் வந்த வெள்ளத்தில் அனைத்து மாவட்டங்களும் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால், ஜெயலலிதா நேரடியாகச் சென்று எந்தப் பகுதியிலாவது மக்களைச் சந்தித்தாரா?’ என்றெல்லாம் கேட்ட பிரேமலதா, இறுதியில் பொத்தாம் பொதுவாக, ‘நிர்வாகத் திறமை இல்லாத அ.தி.மு.க., தி.மு.க போன்ற கட்சிகளின் ஆட்சியால் பல அவலங்களைத் தமிழகம் சந்தித்துள்ளது. இதனால், தமிழ்நாடு மிகவும் பின்தங்கிய மாநிலமாக மாறிக்கொண்டிருக்கிறது’ என்று ஓர் இடத்தில் தி.மு.க-வையும் சேர்த்துக்​கொண்டார். அதாவது தி.மு.க-வை விமர்சிக்கவில்லை என்று வந்துவிடக் கூடாது அல்லவா? அதனால்?”

‘‘ம்!”

‘‘தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை ஊழல் கூட்டணி என்று இணையதளங்களில் விமர்சித்து வருவதாக ஒரு வாரத்துக்கு முன்பு சொன்ன பிரேமலதா, மறந்தும் அதைச் சொல்லவில்லை. பிரேமலதாவுக்கு முன்பு பேசியவர்களும் கருணாநிதியை அட்டாக் செய்யவில்லை.  பிரேமலதா பேசி முடிக்கும் நேரத்துக்கு சற்று முன்னதாக வந்த விஜயகாந்த் வழக்கம்போல கைகளை உயர்த்திக் காட்டிவிட்டு, மேடைக்கு எதிரே வைக்கப்பட்டிருந்த முரசை கொட்டிவிட்டு பேசத் தொடங்கினார். அவரும் தி.மு.க கருணாநிதி என்று எதையும் பேசவில்லை. இதனால்தான் கருணாநிதி சந்தோஷம் அடைகிறார். ஜெயலலிதா போலீஸ் மூலமாக நெருக்கடியைத் தொடங்கினார். விஜயகாந்த் 70 கேட்கிறார், கருணாநிதி 55 வரை தரத் தயார் ஆகிவிட்டார் என்று சொல்கிறார்கள்.”

‘‘ஓஹோ!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்