‘கிங்’கும் இல்லை... கிங்மேக்கரும் இல்லை! அவர் ‘அன்பேலன்ஸ்டு மேன்’

தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ., கடுப்பு

தே.மு.தி.க-வில் ஜெயித்து தொகுதிப் பிரச்னைக்காக(?) ஜெயலலிதாவை அடுத்தடுத்துப் பார்த்தார்கள் தே.மு.தி.க அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் எட்டு பேர். கரைவேட்டி மாற்றினார்கள்... அம்மா புகழ் பாடினார்கள்... அ.தி.மு.க முகாம் தாவினார்கள்... ஆனால், எம்.எல்.ஏ பதவியை மட்டும் விடவில்லை. கட்சித் தாவினால் பதவி போய்விடும் என்பதால், நாலரை ஆண்டுகளை உருட்டிவிட்டு,  தேர்தல்  நெருங்கும் நேரத்தில் ராஜினாமா செய்திருக்கிறார்கள். அவர்களிடம் கேள்விகளை அடுக்கினோம்.

‘‘முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த பிறகு, உங்கள் தொகுதிக்கு என்னென்ன திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறீர்கள்?’’

விருதுநகர் ‘மாஃபா’ பாண்டியராஜன்: 
‘‘சாலைகள், நகராட்சிப் பகுதிகள் மேம்பாடு போன்ற பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளேன். சட்டசபையில் பொதுமக்கள் நலன் கருதி கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு அரசு அளித்த பதில்களும் திருப்தி அளிப்பதாக உள்ளன.’’

விஜயகாந்த்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

அருண்பாண்டியன்:
“விஜயகாந்த்தை பொறுத்தவரை, அவர் ஒரு நிலையில் இல்லாதவர். அதாவது, ‘அன்பேலன்ஸ்டு மேன்’ என்றுதான் சொல்ல வேண்டும்.”

உங்களது கோரிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி உள்ளாரா?

ராதாபுரம் மைக்கேல் ராயப்பன்:
“அரசுடன் இணைந்து செயல்பட நினைத்தேன். அதற்கு விஜயகாந்த் தடையாக இருந்தார். மக்கள்தான் எனக்கு முக்கியம். இதற்காக அம்மாவைச் சந்தித்து கோரிக்கைகள் வைத்தேன். உவரியில் தூண்டில் வளைவு, கூடங்குளத்தில் அரசு மருத்துவமனை ஆகியவை நிறைவேற்றப் பட்டுள்ளன. 68 கோடி ரூபாயில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள், ராதாபுரத்தில் தொழில் பயிற்சிக் கல்லூரி ஆகியவை நடந்து வருகின்றன.”

‘‘முதலிலேயே ராஜினாமாவை செய்திருந்தால், விஜயகாந்த்தின் எதிர்கட்சித் தலைவர் பதவி எப்போதோ போயிருக்குமே?’’

திருத்தணி அருண் சுப்பிரமணியன்: “விஜயகாந்த்தால் யாருக்கும் பயனில்லை. அவர், சட்டமன்றத்துக்கு வந்தாலே பிரச்னைதான். அம்மாவை, நான் சந்தித்தபோது ராஜினாமா செய்ய வேண்டாம் என்று சொன்னதால், அப்போது செய்யவில்லை. இப்போது அம்மா சொன்னதும் ராஜினாமா செய்து இருக்கிறேன். முன்பு ராஜினாமா செய்திருந்தால், இடைத்தேர்தல் நடந்து செலவாகிருக்கும்.”

‘‘உங்களை எம்.எல்.ஏ-வாக ஆக்கிய விஜயகாந்த்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’

சேந்தமங்கலம் சாந்தி: ‘‘இத்தனை ஆண்டுகாலம் விஜயகாந்த்தை நம்பி இருந்தோம். அவரால் எங்களுக்கும், எங்கள் தொகுதி மக்களும், தொண்டர்களுக்கும் பயன் எதுவுமே இல்லை. ஏமாற்றமே மிஞ்சியது. பணம் மட்டுமே அவருக்குக் கொள்கையாக இருக்கிறது.’’

‘‘விஜயகாந்த்துக்கு எதிரான முடிவை ஏன் எடுத்தீர்கள்?’’

திட்டக்குடி தமிழழகன்: ‘‘தே.மு.தி.க-வுக்குள் சாதிப் பாகுபாடு இருக்கிறது. சினிமாவில் விஜயகாந்த் பேசிய வசனங்களைக் கேட்டு அவரோடு பல ஆண்டுகாலம் பயணித்தேன். ஆனால், இன்று அதே விஜயகாந்த் பேசுவது யாருக்குமே புரியவில்லை. எண்ணம், செயல், பேச்சு எல்லாம் மிகவும் மோசமாக இருக்கிறது. விஜயகாந்த் ‘கிங்’கும் இல்லை, கிங்மேக்கரும் இல்லை.”

‘‘அடுத்தகட்ட நடவடிக்கையை எப்போது சொல்வீர்கள்?’’

செங்கம் சுரேஷ்குமார்:  ‘‘நாங்கள் எட்டுப் பேருமே ஒரு குழுவாகத்தான் செயல்பட்டோம். இன்னும் ஒரு வாரத்தில் எங்களுடைய முடிவை அறிவிப்போம்.’’

‘‘தொகுதிப் பிரச்னைக்காகப் போனீர்களே... நிறைவேறியதா?’’

மதுரை மத்தி தொகுதி சுந்தரராஜன்:
“அம்மாவிடம் நாங்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றி தந்து இருக்கிறார்.  பாதாளச் சாக்கடைத் திட்டம், வைகை ஆற்றில் இரண்டு பாலங்கள், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளைச் சொல்லலாம்.’’

தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்களுடன் சேர்ந்து, பா.ம.க மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் இருவர் ராஜினாமா செய்தனர்.

‘‘பா.ம.க-வுக்குத் துரோகம் செய்ததாக நினைக்கவில்லையா?’’

அணைக்கட்டு கலையரசு: ‘‘தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது வரைதான் ஒரு கட்சியின் வேட்பாளர். எம்.எல்.ஏ ஆன பிறகு, தொகுதி மக்கள் அனைவருக்கும் நான் பொதுவானவன். தொகுதி மக்கள் நலன்தான் எனக்கு முக்கியம்.”

‘‘ராஜினாமா செய்தது தவறாகத் தெரியவில்லையா?’’

நிலக்கோட்டை ராமசாமி: ‘‘என்ன செய்ய? வேறு வழியில்லை. மக்களுக்கு நல்லது செய்யணும். எங்களுக்கும் அரசியல் எதிர்காலம் வேண்டும். அம்மாவின் ஆசியாலும் சக்தியாலும்தான் எல்லா வேலைகளும் நடக்கின்றன.’’

இவர்களுக்கு ஜெயலலிதா ஸீட் தருவாரா?

- எஸ்.முத்துகிருஷ்ணன், எஸ்.மகேஷ், மா.அ.மோகன் பிரபாகரன், கே.புவனேஸ்வரி
படம்: சொ.பாலசுப்ரமணியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick