‘பீப்’ பாடலுக்குப் பின்னால் இருக்கும் மூன்று பேர் மோதல்!

‘பீப்’ பாடல் தொடர்பாக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது வழக்குப் பதிவுசெய்து, போலீஸார் சம்மன் அனுப்பியும் அவர்கள் போலீஸில் ஆஜராகாமல் இருக்கும் நிலையில், பீப் பாடல் குறித்த சர்ச்சையும் நீடித்துக்கொண்டு இருக்கிறது. தன்னுடைய ‘பீப்’ பாடலைத் திருடி, யாரோ இன்டர்நெட்டில் கசியவிட்டுவிட்டனர் என்று சிம்பு சொல்லி வருகிறார். இதுபற்றி சினிமா வட்டாரத்தில் விசாரித்தோம்.

கடந்த கால ‘கசிவு’கள்!
 
இந்த விவகாரங்களை அறிந்த சினிமா பிரமுகரிடம் பேசினோம். “சிம்புவுக்கு இது மாதிரியான சர்ச்சைகளில் சிக்குவது என்பது புதிய விஷயம் அல்ல.  ‘பீப்’ பாடலுக்கு முன்பாகவே, சிம்பு தொடர்புடைய சர்ச்சைக்குரிய சில ஆடியோக்களும், புகைப்படங்களும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்கள் உண்டு. ‘வல்லவன்’ படத்தில் நடித்த காலத்தில், தனிமையான சூழலில் நடிகை நயன்தாராவின் உதடுகளில் சிம்பு முத்தமிடுவதைப் போன்ற படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிம்புவுடன் நம்பிக்கை​யோடு பழகிய நயன்தாரா, அந்தப் படங்கள் வெளியானதைக் கண்டு கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். ‘ஆளைவிடுடா சாமீ...’ என்று ஓட்டம்பிடித்தார். அதைப்போல, இன்னொரு பிரபல நடிகை ஷூட்டிங் இடைவேளையில் அறையில் அரைகுறையான கேஷுவல் உடையில் இருக்கும் படம் ஒன்றும் இன்டர்நெட்டில் வெளியானது. அதுவும் சர்ச்சையை விதைத்தது. இப்போது அவரே சிக்கலில் மாட்டிக்கொண்டார்”  என்று சொன்னார் அவர்.

தனுஷ் - சிம்பு மோதல்!
 
‘பீப்’ பாடலை யார் வெளியிட்டது என்று திரைத் துறைக்குள் பட்டிமன்றமே நடக்கிறது. சிலர் தனுஷ் என்றும், சிலர் சிவகார்த்திகேயன் என்றும் சொல்கிறார்கள்.
 
“சிம்புவின் பீப் பாடல் குறித்து தனுஷிடம் கேஷுவலாக அனிருத் சொல்லியிருக்கிறார். அதைக்கேட்டு ஆர்வமான தனுஷ், ‘அப்படியா எங்கே காட்டு’ எனச் சொல்ல, அனிருத்தும் அப்பாவித்தனமாக தன் செல்போனில் இருந்த பீப் பாடலை ஒலிக்கச் செய்திருக்கிறார். அதுதான் இப்போது வெளியாகிவிட்டது. கடந்த டிசம்பர் 10-ம் தேதி மாலை தன்னுடைய ‘தங்கமகன்’ படத்தின் ட்ரெய்லரை தனுஷ் வெளியிட்டார். அன்றைய தினமே ‘பீப்’ பாடலும் வெளியானது” என்று சொல்கிறார்கள் ஒரு தரப்பினர்.
 
தனுஷ் - சிம்பு மோதலை வைத்தே ஒரு படம் எடுக்கலாம். அந்த அளவுக்குக் காட்சிகள் நடந்துள்ளன. ‘கெட்டவன்’ என்ற ஒரு படத்தை சிம்பு எடுத்தார். அந்தப் படத்தின் கதை, முழுக்க முழுக்க தனுஷ் குடும்பத்தின் கதைதான் என்று அப்போதே செய்தி கிளம்பியது. என்ன காரணத்தாலோ அந்தப் படத்தின் ஷூட்டிங் சில வாரங்களிலேயே நின்றுபோனது. சிம்புவும், தனுஷும் நெருக்கமாக இருப்பதுபோல காட்டிக்​கொண்டாலும், தனுஷின் மனசுக்குள் அந்தக் கோபக்கனல் தணியாமலேயே இருந்தது.  ‘படிக்காதவன்’ படத்தில் நாயகி தமன்னா​விடம், ‘என்னை எல்லாம் பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்’ வசனம் பேசினார் தனுஷ். ‘வாலு’ படத்தில் ‘என்னை எல்லாம் பார்த்தவுடனே பிடிக்கும்’ என்று பதில் பஞ்ச் வைத்தார் சிம்பு.

இடையில் புகுந்த சிவகார்த்திகேயன்!
 
‘‘விஜய் டி.வி நிகழ்ச்சியில் நடித்துவந்த சந்தானத்தை, ‘மன்மதன்’ படத்தில் சிம்பு அறிமுகம் செய்தார். அதே விஜய் டி.வி-யில் காம்பியராக இருந்த சிவகார்த்திகேயனை, ‘3’ படத்தில் காமெடி வேஷம் கொடுத்து அறிமுகம் செய்தார் தனுஷ். இப்போது, தனுஷ் மார்க்கெட்டைத் தாண்டி உச்சத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். ‘உங்கள் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் எப்போது நடிப்பார்?’ என்று கேட்டதற்கு, ‘அவருக்குச் சம்பளம் கொடுக்கும் அளவுக்கு என்னோட பேனர் இல்லை’ என்று வெதும்பினார் தனுஷ். சிம்புவின் ‘பீப்’ பாடலை வெளியிட்டது சிவகார்த்திகேயன்தான் என்று பரபர தகவல் உலா வந்தது. அந்தத் தகவலைப் பரப்பியதன் பின்னணியில் இருந்ததும் ஒரு நடிகர்தான் என்றும் சிலர் சொல்கிறார்கள். சிம்புவுடன் நெருக்கமாக இருந்த நேரத்தில், நடிகை ஹன்​சிகா ‘மான் கராத்தே’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அப்போது, ‘சிவ​கார்த்திகேயன்கூட எல்லாம் நடிக்கிறியா, என்று ஹன்சிகாவை சிம்பு திட்டியிருக்கிறார். அந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட சிவகார்த்திகேயன் சிம்பு மீது கடும் கோபம் அடைந்தார்” என்கிறார்கள்.
 
‘மாரி’... ‘வாலு’ ரிலீஸ் லடாய்!
 
சில மாதங்களுக்கு முன்பு, ராடான் தயாரிப்பில் தனுஷ் நடித்த ‘மாரி’ உருவாகிக்கொண்டு இருந்தது. அப்போது, 1980-களில் தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய நாயகிகள் விழாவை ராதிகா நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் சிம்பு, தனுஷ் இருவரும் வேட்டி சட்டையில் ஆஜராயினர். முதல் பிரின்ட் அடிப்படையில் ‘மாரி’ படத்தைத் தயாரித்து நடித்துக் கொடுத்தார். ‘மாரி’ படம் சிம்புவின் ‘வாலு’ ரிலீஸாகும் தேதியில்தான் வெளியாக வேண்டும் என்று தனுஷ் அடம்பிடித்துள்ளார். ‘மாரி’ படத்துக்கு இன்னும் சாட்டிலைட் பிசினஸே முடியவில்லை. அப்புறம் எப்படி நீங்கள் சொல்கிற தேதியில் ரிலீஸ் பண்ண முடியும்’ என்று தயாரிப்பாளரான ராதிகா கேட்டுள்ளார். அதற்கு, ‘சாட்டிலைட்டுக்கு என்ன விலையோ அதை நானே வாங்கிக்கொள்கிறேன்’ என்று வம்படியாக தனுஷ் வாங்கிக்கொண்டார். கடைசியில், ‘மாரி’ ரிலீஸான அதேநாளில் ‘வாலு’ வெளியாகவில்லை என்பது தனிக்கதை. 
 
 சிம்புவின் சாதனைகள்!  
 
‘பீப்’ பாடல் விவகாரத்தில், ‘மன்னிப்பு’ என்கிற ஒரு வார்த்தையை சிம்பு ஆரம்பத்திலேயே உச்சரித்து இருந்தால், தமிழகப் பெண்கள் எப்போதோ அவரை மன்னித்து இருப்பார்கள். ஆனால் அவரோ, ‘நான்தான் பாடினேன். நான் எதுக்குப் பதில் சொல்லணும்’ என்று எகிறினார்.  அது, அவருக்கு எதிரான பெண்களின் கோபத்தை அதிகரிக்கவே செய்தது. ‘தங்கைக்கோர் கீதம்’, ‘என் தாயின் சபதம்’, ‘என் தங்கை கல்யாணி’ என்று பெண்குலத்தைப் பெருமைப்படுத்திய தந்தை டி.ராஜேந்தரை தலைகுனிய வைத்து, இதுவரை மீடியா வெளிச்சத்தில் முகம் காட்டாமல் இருந்து வந்த தாய் உஷாவை, கண்ணீர் சிந்தி கதற வைத்தது மட்டுமே சிம்புவின் சாதனைகள்.

எல்லாம் கர்மா… கலங்கும் டி.ஆர்.!
 
சிம்பு மீது வழக்குகள் குவிந்த வண்ணம் உள்ளதால், இந்தப் பிரச்னை காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் ஆலயம் வரை வந்துவிட்டது. காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் வழக்கறுத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. அங்கு, தீர்க்க முடியாத வழக்குகளால் பாதிக்கப்பட்ட​வர்கள், 16 விளக்குகளைத் தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் ஏற்றிவர வழக்குகள் தங்களுக்குச் சாதகமாக முடியும் என்பது சிலரது நம்பிக்கை. கனிமொழி 2ஜி வழக்கில் சிக்கித்தவித்தபோது தி.மு.க சார்பாக வசந்தி ஸ்டான்லியும், முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கித்தவித்தபோது ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டவர்களும், ப.சிதம்பரம் குடும்பத்தினரின் மீது வழக்குகள் பாய்ந்தபோது நளினி சிதம்பரமும் இந்த ஆலயத்துக்கு வந்து பூஜைகள் செய்துள்ளனர். வடமாநில பிரபலங்களும் இந்தக் கோயிலுக்கு வந்து சென்றுள்ளனர். ஆதர்ஷ் ஊழலில் சிக்கிய அப்போதைய மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் இங்கே வந்து வழிபட்டுள்ளார். இப்போது, டி.ஆர் இங்கு வந்து யாகம் செய்துள்ளார். சிலம்பரசன், குறளரசன், இலக்கியா உள்ளிட்ட குடும்பத்தில் உள்ள அனைவரின் ராசி, நட்சத்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யப்பட்டது. பின்பு ருத்ரயாகம், சிறப்புப் பூஜையும் நடைபெற்றது.
 
செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்., “செய்யாத குற்றத்துக்கு சில பேர் சேர்ந்து சிம்புவைச் சிக்கவைத்துள்ளனர். நடுநிலையான அமைப்புகளும், பெண்களும் எங்களுக்கு ஆதரவு தருகின்றனர். சிலம்பரசனின் வளர்ச்சியைப் பொறுக்காமல் ஒரு கூட்டம் சதிசெய்தது. எல்லாம் தலைவிதி. எல்லாம் கர்மா. என்மகன் என்ன தீவிரவாதியா? அவன் என்ன குற்றம் செய்துவிட்டான்?” என்றார்.
 
மூன்று இளம் ஹீரோக்கள் மோதல், அசிங்கமாய் நடக்கிறது.
 
- பா.ஜெயவேல்
படங்கள்: தே.அசோக்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick