என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (போடிநாயக்கனூர்)

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: அ.நன்மாறன்

மிசாவுக்கு முன்பு தொடங்கியது ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை. ஆனால், அவருக்கு முதல்வர் நாற்காலி கிட்டவில்லை. 1993-ம் ஆண்டில் ஆரம்பித்த வைகோவின் தனி ஆவர்த்தனம், 20 ஆண்டுகளைக் கடந்தும் மணிமுடியை அவருக்குச் சூட்டவில்லை. கட்சி தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. விஜயகாந்த்தின் கோட்டைக் கனவு ‘கானல் நீர்’தான். ‘மக்கள் தலைவர்’ என்கிற அடைமொழிக்காரர் மூப்பனார், பிரதமர் நாற்காலி வரை பேசப்பட்டார். ஆனால், அது அவருக்கு எட்டாக் கனியாகிவிட்டது. இவர்களுக்​கெல்லாம் வாய்க்காத வாய்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு இரண்டு முறை கிடைத்தது. அதற்குப் பெயர்தான் அரசியல்.

அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் இல்லை; கட்சியில் தலைவரோ, பொதுச் செயலாளரோ இல்லை; தொண்டர்கள் ஆதரவு இல்லவே இல்லை; கூட்டத்தைக் கட்டிப்போடும் பேச்சாற்றல் இல்லை; இப்படி ‘இல்லை’கள் என்பதையேத் தகுதியாக வைத்திருந்த
ஓ.பன்னீர்செல்வத்துக்காக தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலி இரண்டு முறை நகர்த்தி வைக்கப்பட்டது. கட்சியிலும் ஆட்சியிலும் ஜெய​லலிதாவுக்கு அடுத்த இடம். ‘நம்பர் 2’ தகுதிபெற்ற ஓ.பன்னீர்செல்வத்தை, போடிநாயக்கனூர் வாக்காளர்கள் தேர்வு செய்யாமல் போயிருந்தால் இந்த அத்தனையும் சாத்தியமில்லை. போடி மக்களுக்கு அவர் ஆற்றிய கடமைகள் என்ன? ‘என்ன செய்தார் எம்.எல்.ஏ’-வின் முதல் கதாநாயகன், பன்னீர்செல்வம். அவரது போடி தொகுதி பராக்கிரமங்களைப் பார்ப்போம்.

தமிழகத்துக்கு முதலமைச்சரையும், நிதி அமைச்சரையும் தந்த தொகுதி போடி, ஓ.பன்னீர்செல்வத்தின் பாராமுகத்தால் இப்போது தெருக்கோடியில் ஒதுங்கிக் கிடக்கிறது. ‘‘வாரத்துக்கு ஒருமுறை தொகுதிப் பக்கம் வருவார். தொகுதிக்குள் கோயில் கோயிலாக வலம் வருவார். அரசு விழா நடந்தால்  தலைகாட்டுவார். அவரைச் சந்திப்பது சாத்தியமே இல்லை’’ எனப் புலம்புகிறார்கள் போடிக்காரர்கள். இப்படி, பன்னீருக்கு இருக்கும் எதிர்ப்பு கடந்த எம்.பி. தேர்தலிலேயே எதிரொலித்தது. ஓட்டுகேட்டு ரங்கநாதபுரம், கரட்டுப்பட்டி கிராமங்களுக்கு அவர் வந்தபோது கிராமத்துக்குள்விடாமல் தடுக்கப்பட்டார். பொட்டிபுரம் ஏரியாவில்தான் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப் போகிறார்கள். இது போடி தொகுதிக்குள்​தான் வருகிறது. தேனி மாவட்டத்தையே உலுக்கி எடுத்த பிரச்னை பூதாகரமாக வெடித்தது. ஓ.பன்னீர்​செல்வம் கண்டுகொள்ளவே இல்லை. இதுவரை ஒருமுறைகூட நியூட்ரினோ அமையவிருக்கும் கிராமத்துக்குச் செல்லவில்லை. போராடிய மக்களைச் சந்திக்கவில்லை.

மூடப்பட்ட மதுரை - போடி ரயில் பாதை!

1928-ம் ஆண்டில் இருந்து மதுரை - போடி இடையே ஓடிக்கொண்டிருந்த ரயில் சேவை 2011-ல் பயணத்தை நிறுத்திக்கொண்டது. பயணிகளுக்கு மட்டுமல்லாது, போடி ஏரியாவில் உற்பத்தியாகும் ஏலக்காய் உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை ரயிலில் கொண்டு செல்ல முடிந்தது. ‘92 கி.மீ தூர மீட்டர்கேஜ் பாதையை மாற்றிவிட்டு 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அகல ரயில் பாதை அமைக்கப்படும்’ என 2009 - 2010-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்ததால் ரயில் சேவை நிறுத்தப்பட்டு பாதையும் அகற்றப்பட்டது. அதன்பிறகு நிதி ஒதுக்கீடு இல்லாததால் திட்டம் அப்படியே முடங்கிப்போனது. கடந்த 4 ஆண்டுகளில் மொத்தமே 17 கோடி ஒதுக்கினார்கள். ரூ.270 கோடியாக இருந்த திட்ட மதிப்பீடு 302 கோடியாக உயர்ந்ததுதான் மிச்சம். திட்டத்தை நிறைவேற்றச் சொல்லி அனைத்துத் தரப்பினரும் போராட்டங்கள் நடத்தியதால் 2015 - 16 ரயில்வே பட்ஜெட்டில் வெறும், 10 லட்சம் ரூபாய் ஒதுக்கினார்கள். கம்பம், குமுளி, போடிநாயக்கனூர் ஏரியாக்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு சுமார் 240 கோடி ரூபாய் அளவுக்கு விவசாய உற்பத்திப் பொருட்கள் மற்றும் சரக்குகள் சாலை மார்க்கமாக அனுப்பப்பட்டு வருகிறது. திட்டம் நிறைவேற்றினால், பயணிகள் போக்குவரத்து மூலமாக மட்டுமே சுமார் 700 கோடி ரூபாய் ரயில்வே துறைக்கு வருவாய் கிடைக்கும்.

ஓ.பன்னீர்செல்வம், இந்தப் பிரச்னையை காதில்கூட வாங்கிக்கொள்ளவில்லை என்பதற்கு உதாரணம் இது. ஓ.பி. முதல்வராக இருந்தபோது ரயில்வே அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் மதுரை - போடி அகல ரயில்பாதைத் திட்டத்தைப் பற்றி குறிப்பிடவே இல்லை. ‘போடிநாயக்கனூர்-கோட்டயம் இடையே மட்டுமே புதிய பாதை தேவை’ என்று மட்டுமே சொன்னார். ஏற்கெனவே இருந்த பாதையைப் பறிக்கொடுத்துவிட்டு நிற்கும் போடிக்காரர்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது ஏகக் கொதிப்பில் இருக்கிறார்கள். எம்.பி. தேர்தல் பிரசாரத்தில் பேசிய ஜெயலலிதா, “ரயில் பாதை அமைப்பதற்குத் தேவையான நிதியை ஒரே தவணையில் ஒதுக்குவேன்” என முழங்கிவிட்டுப் போனது ‘புஸ்வாணம்தான்.

டாப் ஸ்டேஷன்!

போடி அருகே மலைப் பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா இடமாகக் காட்சி அளிக்கிறது டாப் ஸ்டேஷன். போடியில் இருந்து குரங்கணி வரையில் செல்ல சாலை வசதி இருக்கிறது. குரங்கணியில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் டாப் ஸ்டேஷனுக்குப் போக  சாலை கிடையாது. மலைப்பாதையில் நடந்துதான் செல்ல வேண்டும். இங்கே போக வேண்டும் என்றால், 115 கிலோ மீட்டர் தூரம் கடந்து கேரளா மூணாறு வழியாகத்தான் செல்ல முடியும். ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆகும். டாப் ஸ்டேஷன் தமிழகத்தில் இருந்தும் அங்கு செல்ல முடியவில்லை. ‘டாப் ஸ்டேஷன், குரங்கணி இரண்டும் சுற்றுலாத்தலமாக்கப்படும்’ என போடி பிரசாரத்தில் ஜெயலலிதா சொன்னார். பன்னீர்செல்வமும் ‘மூணாறைப்போல டாப் ஸ்டேஷனும் சுற்றுலாத்தலமாக்கப்​படும்’ என்றார். வாக்குறுதிகள் பஞ்ச​ராகிக் கிடக்கின்றன.

தேவாரம் டூ சாக்குலூத்து மெட்டு!

போடி தொகுதிக்குட்பட்ட மக்கள், கேரளாவில் தோட்டத் தொழிலுக்குப் போகிறார்கள். தேவாரத்தில் இருந்து போடி வந்து அங்கிருந்து போடி மெட்டு வழியாக சாக்குலூத்து மெட்டுக்குப் போய் வருகிறார்கள். சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்தப் பாதையில் ஜீப்பில் போய் வர மூன்று மணி நேரத்துக்கு மேல் ஆகும். தேவாரத்தில் இருந்து சாக்குலூத்து மெட்டுக்குப் போவதற்கு வெறும் 10 கிலோ மீட்டர்தான். அரைமணி நேரத்தில் போய்​விடலாம். ஆனால், பாதை இருந்தும் ரோடு வசதி இல்லை. சாக்குலூத்து மெட்டு சாலை என்பது பல ஆண்டு கோரிகை.  ‘சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி கொடுத்தார் பன்னீர். ஆட்சி முடியப் போகிறது திட்டம் கிடப்பில்தான் இருக்கிறது. ‘‘கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் சாலை அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. இரண்டு கோடி செலவில் ஆரம்பகட்டப் பணிகள் நடைபெற்றன. அப்போது எம்.எல்.ஏ-வாக இருந்த லட்சுமணன் முயற்சிகள் எடுத்தார். ஆட்சி மாற்றம் நடந்த பிறகு வனத்துறை அனுமதி பெறுவதில் தொடர்ச்சியான அணுகுமுறை இல்லாததால், பணிகள் கைவிடப்பட்டன. மத்திய அரசிடம் அனுமதிபெறக்கூட பன்னீர்செல்வம் அக்கறை காட்டவில்லை. சாலை அமைக்கப்பட்டால் தொழிலாளர்களுக்கு வசதி கிடைப்பதோடு, இங்கே விளையும் காய்கறிகளை கேரளாவுக்குக் குறைந்த செலவில் கொண்டு செல்ல முடியும். ஆனால் ‘சாலை அமைக்கப்படும்’ என சொல்லிக்கொண்டே இருக்கிறார். இன்னும் எத்தனை காலத்துக்கு மக்களை ஏமாற்றுவார் எனத் தெரியவில்லை’’ என்றார்கள் கேரளாவுக்குச் செல்லும் தொழிலாளர்கள்.

18-ம் கால்வாய்!

விவசாய ஆதாரமாக இருந்துவரும் 18-ம் கால்வாய் திட்டம் தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதன் திட்டப்பணிகள் இன்னும் முழுமை அடையவில்லை. ‘அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் 18-ம் கால்வாய் திட்டப்பணிகள் முழுமை அடைய நடவடிக்கை எடுக்கப்படும்’ என பன்னீர் வாக்குறுதி கொடுத்தார். அமைச்சர் ஆனதும், சுத்தகங்க ஓடையிலிருந்து கொட்டக்குடி வரைக்கும் திட்டத்தை நீட்டிக்க ரூ.51.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாகச் சொன்னார். ஆனால், சர்வே பணிகள் மட்டுமே நடந்தன. போடியில்  பிரதான விவசாயம் மா சாகுபடி. பிரசாரத்துக்கு வந்த ஜெயலலிதா ‘மாம்பழக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை, பழுக்கவைக்கும் கூடம் மற்றும் குளிர்பதனக் கிடங்கு ஆகியவை நிறுவப்படும்’ என வாக்குறுதி தந்தார். அது காற்றில் பறக்கிறது. ‘தொகுதி முழுவதும் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும்’ எனச் சொன்னார். மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மட்டும் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் நடந்திருக்கின்றன. பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தும் போடியில் குளங்கள் போதிய அளவில் தூர்வாரப்படவில்லை’’ என்கிறார்கள் தொகுதிவாசிகள். “‘பி.டி.ஆர். தந்தை பெரியார் வாய்க்கால் ஆயக்கட்டில்’ உள்ள பதிவு பெற்றுள்ள 5,146 ஏக்கர் நிலங்களுக்கு இருபோக நீர்ப்பாசன வசதி செய்து தரப்படும்” என போடியில் பிரசாரத்தில் சொன்னார் ஜெயலலிதா. இதே கோரிக்கையை பன்னீரும் தந்தார். நிறைவேறவில்லை.

பன்னீர் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை ‘அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்’. ஓட்டு அருவாளை வாக்குச்சாவடிக்கு எடுத்து போகத் தயாராகிவிட்டார்கள் போடிக்காரர்கள்.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, உ.சிவராமன், சா.நித்யகுமரன், ச.மோகனப்பிரியா
படங்கள்: வீ.சக்தி அருணகிரி


இது போடி மனசு!

தொகுதியை வலம் வந்ததோடு தொகுதி முழுவதும் சர்வே ஒன்றை நடத்தினோம். மொத்தம் 950 பேர்களை சந்தித்து எடுக்கப்பட்ட சர்வேயின் முடிவு இங்கே.


பிளஸ்... மைனஸ்!

‘அரசு பொறியியல் கல்லூரியைக் கொண்டு வருவேன்’ என்கிற வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறார். போடி பரமசிவன் கோயிலைச் சுற்றி கிரிவலப் பாதை அமைத்திருக்கிறார். போடி அரசு மருத்துவமனையை நவீனப்படுத்தும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. டாக்டர்கள் பற்றாக்குறையைப் போக்க பிரசவ வார்டு கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்கிறது. பாதாளச் சாக்கடைத் திட்டம் மெதுவாக நடைபெற்று வருகிறது. கூட்டுறவுத் துறையில் சேமிப்புக் கிடங்குகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறார். பாதாளச் சாக்கடை நீரைச் சுத்திகரிப்பதற்கு மேல சொக்கநாதபுரத்தில் தி.மு.க ஆட்சியில் இடம் ஒதுக்கப்பட்டது. நின்றுபோன அந்தத் திட்டத்தை 70 கோடி ரூபாய் செலவில் மீண்டும் தொடங்கியிருக்கிறார்.

தம்பி ராஜாவால் ஓ.பி-யின் பெயர் ரிப்பேர் ஆகி இருக்கிறது. ‘‘ஓ.பி. ஊரில் இல்லாத நேரத்தில் தேனி மாவட்டத்தின் நிழல் மந்திரி ராஜாதான்’’ எனச் சொல்கிறார்கள். தலித் பூசாரி தற்கொலை உட்பட ராஜாவின் பெயர் தொடர்ந்து மீடியாவில் அடிப்பட்டுக் கொண்டிருக்கிறது.


எம்.எல்.ஏ. ஆபீஸ் ரெஸ்பான்ஸ் எப்படி?

தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகத்தை ஓ.பி.எஸ் பயன்படுத்தவில்லை. தென்றல் நகரில் இருக்கும் அந்த அலுவலகம் புதர்மண்டி கிடக்கிறது. அங்கே தப்பான விஷயங்கள் நடப்பதாக ஏரியாவில் இருப்பவர்கள் புலம்புகிறார்கள். சுப்புராஜ் நகரில் தனியாக வீடு பிடித்து அதில்தான் எம்.எல்.ஏ அலுவலகத்தை அமைத்திருக்கிறார் பன்னீர். அதன் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை சோதித்தோம். தொகுதிவாசியாக வேடம் போட்டு பட்டா வழங்க அனுமதிகோரி வீட்டுவரி ரசீது, ரேஷன் கார்டு ஆவணங்களோடு எம்.எல்.ஏ அலுவலகத்தில் மனுக் கொடுத்தபோது அங்கே இருப்பவர்கள் ‘சனிக்கிழமை அமைச்சர் வருவார். அவரிடம் நேரடியாக மனுக் கொடுங்கள்’’ என வாங்க மறுத்தார்கள். அந்த அலுவலகத்தில் பணியாற்றும் குணசேகரனிடம் சனிக்கிழமை தொடர்பு கொண்டபோது ‘‘சனிக்கிழமை அரசு விழாக்களில் அமைச்சர் கலந்துகொள்கிறார். ஞாயிற்றுக்கிழமை வாருங்கள்’’ என்றார். ஞாயிற்றுக்கிழமை அழைத்தோம். ‘அவசரம் என்றால் பெரியகுளத்துக்குப் போங்கள்’ என இணைப்பைத் துண்டித்தார். வாக்காளர்களுக்கு பன்னீர் அலுவலகத்தில் கிடைக்கும் ரெஸ்பான்ஸுக்கு இது சாம்பிள்.

ஓ.பன்னீர்செல்வம் ரியாக்‌ஷன் என்ன?

தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், பணிகள் என்ன என்பதை அறிய எம்.எல்.ஏ அலுவலக அலுவலர் குணசேகரனிடம் விவரங்கள் கேட்டபோது, அமைச்சரின் பெர்சனல் பி.ஏ ரமேஷிடம் கேட்கச் சொன்னார். ரமேஷிடம் கேட்டபோது, ‘‘உங்க பத்திரிகையில் என்ன எழுதுவீங்கனு தெரியும்’’ என்றவர், ‘‘திட்டங்கள் குறித்தத் தகவல்களை பி.ஆர்.ஓ அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுங்கள்’’ எனச் சொன்னார். பி.ஆர்.ஓ அலுவலகத்தில் கேட்டோம். ‘‘தனியாக ஒரு தொகுதிக்கு மட்டுமே திட்டப் பணிகளை நாங்கள் எடுத்துவைப்பதில்லை’’ என்றார்கள்.

மீண்டும் ரமேஷிடம் பேச முயன்றும் அவர் போனை எடுக்கவே இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick