என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் (ரிஷிவந்தியம்)

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: அ.நன்மாறன்

‘‘என்னைப் பார்க்க மக்கள் ஓடோடி வரவேண்டாம். நான் உங்களில் ஒருவன். என்னை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். பின்தங்கியுள்ள ரிஷிவந்தியத்தை குஷிவந்தியம் ஆக்குகிறேன்’’ - ரிஷிவந்தியம் பிரசாரத்தில் முச்சந்திக்கு முச்சந்தி இந்த டயலாக்கைத்தான் சொன்னார் விஜயகாந்த். அவர் சொன்னபடி குஷிவந்தியம் ஆனதா ரிஷிவந்தியம்?

அடிப்படை வசதிகள்

‘‘தமிழகத்திலேயே ஒரு முன்மாதிரியான வளர்ச்சிப் பெற்ற தொகுதியாக மாற்றிக் காட்டுகிறேன். அது செய்வேன்; இது செய்வேன் எனச் சொல்ல மாட்டேன். ஆனால், சொன்னதைக் கண்டிப்பாகச் செய்வேன்’’ என அவர் கொடுத்த வாக்குறுதிகள் ஏராளம். ‘‘இந்தப் பகுதி பெண்கள் 10-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல், போவதற்குக் காரணம் பஸ் வசதி இல்லாததுதான்.   3 ஆண்டுக்குள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அடிப்படை வசதிகளை முழுமையாகச் செய்துதருவேன். தீயணைப்பு நிலையம், கல்லூரிகள் புதிதாக கட்டித் தருவேன். இந்தப் பகுதி மக்களை பாம்பு கடித்தால்கூட அவசரத்துக்கு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல சாலைவசதி இல்லை’’ என மக்களின் கஷ்டங்களை விளக்கினார் விஜயகாந்த்.

சின்ன கேப்டன்!

‘‘சினிமாவில் வசனம் பேசி நடிப்பதுபோல நடித்து, ஓட்டு வாங்கி ஜெயிச்சிட்டுப் போனவர் போனவர்தான். ‘மருத்துவமனை கட்டித் தர்றேன்... பள்ளிக்கூடம் கட்டித் தர்றேன்... ரேஷன் பொருட்களெல்லாம் உங்கள் வீடு தேடி வரும்... ஒவ்வொரு மாசமும் இங்கு வந்து 10 நாட்கள் தங்கி உங்க குறைகளைக் கேட்பேன்’ என்றெல்லாம் கலர் கலராக வாக்குறுதி கொடுத்த​தோடு சரி. உருப்படியாக எதையும் சாதிக்கவில்லை. ஜெயிச்சதுக்கப்புறம் நன்றி சொல்லக்கூட காரைவிட்டு இறங்கி வரவில்லை. சுத்திப் பார்க்க வந்தவரு மாதிரி நேரா போயிட்டே இருந்துட்டாரு. எங்க புள்ளைங்களுக்கெல்லாம் இலவசமா கம்ப்யூட்டர் பயிற்சி கொடுக்கப் போறோம்னு சொல்லி இங்க கோயிலுக்குப் பக்கத்துல ஒரு ஆபீஸையும் தொறந்தாங்க. ஒரே மாசத்துல அந்த ஆபீஸும் போர்டும் எங்க போச்சுன்னே தெரியலை. இந்தியாவிலேயே ‘துணை’ எம்.எல்.ஏ பதவியை அறிமுகப்படுத்தியவர் எங்கள் எம்.எல்.ஏ-தான். ‘இனிமேல் இவர்தான் உங்கள் தொகுதியின் எம்.எல்.ஏ-வாகச் செயல்படுவார்’ எனச் சொல்லி திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ வெங்கடேசனை அரசு விழாவில் அறிமுகப்படுத்திய பெருமை விஜயகாந்த்துக்கு மட்டுமே உண்டு. ‘நான் எப்பவும் பிஸியா இருப்பேன். அதனால உங்களின் தேவைகளை வெங்கடேசன் கவனித்துக் கொள்வார்’னு காட்டிவிட்டுப் போனார். சரி அவரையாவது பார்க்கலாம்னு விழுப்புரம் கௌம்பிப் போனா,  ‘சின்ன கேப்டன்’ பிஸியா இருக்கார். இப்போ பார்க்க முடியாது’னு சொல்லி அனுப்பிடறாங்க’’ என்கின்றனர் தொகுதிவாசிகள் ஆதங்கத்தோடு.

தொகுதி இளைஞர்களிடம் பேசினோம். ‘‘தொகுதி மேம்பாட்டு நிதியை மட்டும் செலவு செய்துவிட்டால் கடமை முடிந்துவிடுமா? முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியிருக்கும் இந்தப் பகுதியில் விவசாயிகள் பயன்பாட்டுக்கான திட்டங்களையோ, அரசின் ஏதேனும் தொழில் வளர்ச்சித் திட்டங்களையோ கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறாரா என்றால் இல்லை. பள்ளிக்கூடங்களுக்குச் சுற்றுச்சுவர் கட்டினார். பஸ்ஸைக் காணோம். ஆனால், பல்வேறு ஊர்களில் பேருந்து நிறுத்தங்களில் சுமார் 20 நிழற்குடைகளைப்  பயணிகளுக்காக  அமைத்திருக்கிறார்கள். நமது தொகுதி வி.ஐ.பி தொகுதியாகிவிட்டது. அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்துவிடும் என்று நினைத்தோம். ஆனால், இவரோ நாக்கைத் துருத்தி சண்டை போட்டு சட்டமன்றத்துக்கு உள்ளே போவதையே நிறுத்திவிட்டார். தொகுதி நலத் திட்டங்களில் விஜயகாந்த்தை பழிவாங்குவதாக நினைத்து எங்களைத்தான் ஜெயலலிதா அரசு பழி வாங்குகிறது.’ எனக் கடுகடுத்தனர்.

மருத்துவமனைகள், பாலம்!

‘தொகுதியில் மருத்துவ வசதி முற்றிலும் இல்லை’ என்பதை தேர்தல் பிரசாரத்திலேயே சொன்னார். ‘‘ ‘இந்த நிலையை மாற்றி மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்’ எனச் சொன்னார். ஆனால், மருத்துவமனைகளின் நிலை பரிதாபமாகத்தான் இருக்கிறது. மருத்துவமனைகளுக்குக் கட்டில் மெத்தைகள் தந்துவிட்டால் அவை தரம் உயர்த்தப்பட்டதாகி​விடுமா? ‘ஆரோக்கி​யமான ரிஷிவந்தியம் தொகுதியை உருவாக்குவோம்’ எனச் சொன்னது எல்லாம் கானல்நீராகப் போய்விட்டது. சொந்தப் பணத்தில் கிராமங்கள்தோறும் இலவச சிகிச்சை மேற்கொள்ளப்படும் எனவும் சொன்னார்கள். அதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தது. அதுவும் பெரிதாக சோபிக்க​வில்லை’’ என்றார்கள் பகுதியினர்.

ஆர்க்கவாடி - அரும்பராம்பட்டு இடையே ரிஷிவந்தியம் தொகுதி மக்களின் போக்குவரத்து வசதிக்கு முஷ்குந்த நதியில் பாலம் கட்டவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட வருடங்களாகப் பேசப்பட்டு வருகிறது. தேர்தல் பிரசாரத்திலும் இதை விஜயகாந்த் குறிப்பிட்டார். அதை நிறைவேற்றி கொடுத்திருக்கிறார். ‘தென்பெண்னை ஆற்றின் குறுக்கே மணலூர்பேட்டையில் மேம்பாலம் கட்டித்தரப்படும்’ என்கிற வாக்குறுதியை மத்திய அரசிடம் தனிப்பட்ட முறையில் சொல்லி, அதற்கு 20 கோடி ரூபாயை மத்திய அரசிடம் இருந்து வெற்றிகரமாக பெற்றுக் கொடுத்திருக்கிறார். ஆனால், இதையும் விரைந்து செயல்படுத்தாமல் மாநில அரசு தாமதப்படுத்தி வருகிறது.

விழுப்புரம் அ.தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளர் கதிர் தண்டபாணி, ‘‘இந்த நான்கரை வருடங்களில் சில தடவைகள்தான் இங்கு வந்திருக்கிறார். அதுவும் காணும் பொங்கல் அன்று நடக்கும் சமத்துவப் பொங்கல் விழாவில் 10 நிமிடங்கள் மட்டும் இருந்துவிட்டுப் பறந்துவிடுவார். இவ்வளவு ஏன்? எது அவரு தொகுதினுகூட இன்னும் அவருக்கு ஒழுங்காத் தெரியாது. சென்ற வருடம் பகண்டை கூட்டுரோடில் புதிதாகக் கட்டப்பட்ட எம்.எல்.ஏ ஆபீஸை திறப்பதற்காக வந்திருந்தார். திறப்பு விழாவெல்லாம் முடிந்தபிறகு விழா மேடையிலேயே, பொதுமக்கள் பத்திரிகையாளர்கள் இருக்கும்போதே “நான் திருவண்ணாமலையில் இருந்து வரும்போது தூங்கிவிட்டதால், எனது தொகுதியான மூங்கில்துறைப்பட்டைப் பார்க்காமலேயே வந்துவிட்டேன் என்றவர், அருகில் இருந்த அவரது மனைவி பிரேமலதாவைப் பார்த்து, ‘இது நம் தொகுதியா’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘ஆமாம் இது நம் தொகுதிதான்’ என்றதும், ‘சரி சரி நான் பாத்துக்கறேன்’ என்றார் விஜயகாந்த். எது தனது தொகுதி என்றுகூட தெரியாதவர்தான் எங்கள் எம்.எல்.ஏ. இவரை நினைத்து அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை’’ என்றார்.

அரசுக் கல்லூரி!

‘‘நான் வெற்றிபெற்றால் ரிஷிவந்தியத்தில் அரசுக் கல்லூரி கொண்டுவருவேன்’’ என்றார்.   திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் என சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் வரையில் மாணவர்கள் படிக்கப் போக வேண்டிய சூழலில்தான் இப்போதும் இருக்கிறார்கள். ‘‘கேப்டன் இந்தத் தொகுதியின் மாப்பிள்ளை. இங்குள்ள மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலையில்தான் எனது தந்தை எல்.சி.கண்ணையா வேலை பார்த்தார். அவருடைய பெயரில் நூலகம் அமைக்கப்படும்’’ எனப் பிரசாரத்தில் பிரேமலதா முழங்கினார். அதுவும் பஞ்சராகிக் கிடக்கிறது. இந்தத் தொகுதியில் பொறியியல் கல்லூரி வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விஜயகாந்த் இங்கே விசிட் வந்தபோது, அவர் செய்த சாதனைகளைப் பட்டியல் போட்டிருந்தனர். 120 கோடி ரூபாய் அளவில் தொகுதி முழுவதும் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், அவையெல்லாம் எங்கே என்று தொகுதி மக்கள் தேடுகிறார்கள்.  

தீயணைப்பு நிலையம்

பகண்டை கூட்டுரோட்டைச் சுற்றி சுமார் 40 கிராமங்கள் இருக்கின்றன. இங்கே தீயணைப்பு நிலையம் இல்லை. அசம்பாவிதம் நேர்ந்தால், சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் திருக்கோவிலூரில் இருந்துதான் தீயணைப்பு வாகனம் வரவேண்டும். தொகுதியில் விஷக்கடி சாவுகள் அடிக்கடி நிகழ்கின்றன. இதைத் தடுக்கும் அளவுக்குப் போதுமான வசதிகள் மருத்துவமனையில் கிடையாது’’ என்றார்கள் அந்தப் பகுதியினர்.

கோயில்

‘‘விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் இருக்கிறார். ரிஷிவந்தியத்தில் அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார். சிவன் இருக்கும் இடத்தில் எல்லாம் இந்த விஜயகாந்த் இருப்பான்’’ என தேர்தல் பிரசாரத்தில் சொன்னார். அவரது மனைவி பிரேமலதாவோ, ‘‘ஆதிதிருவரங்கம் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் கோயில்களை தமிழகம் முழுவதும் இருந்தும் மக்கள் ரிஷிவந்தியம் நோக்கி வரும் வகையில் அதன் வளர்ச்சிக்குப் பாடுபடுவோம்’’ எனச் சொன்னார். இந்த வாக்குறுதியும் அந்தரத்தில் நிற்கிறது.

இங்கே மீண்டும் முரசு கொட்டுமா என்பது சந்தேகம்தான். விருத்தாசலத்தைவிட்டு ரிஷிவந்தியம் தாவியதுபோல, அடுத்தும் வேறு ஒரு தொகுதியை விஜயகாந்த் தேடிப் போவார்.

- க.பூபாலன், ஜெ.முருகன், உ.சௌமியா

படங்கள்: தே.சிலம்பரசன்


ப்ளஸ்... மைனஸ்!

மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசிடம் கேட்டு ரூ.20 கோடி நிதி பெற்றுக் கொடுத்திருக்கிறார் விஜயகாந்த். சிறிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளும் நிழற்குடைகளும் அமைத்துக் கொடுத்திருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கடந்த 10 வருடங்களில் ரூ.10 கோடிக்கு 597 பணிகள் முடிக்கப்பட்டதாக தே.மு.தி.க-வினர் பிரசாரம் செய்கிறார்கள். இதெல்லாம் ப்ளஸ்.

தொகுதி மக்களுக்கென்று தனி தொலைபேசி ஒன்றை சென்னையில் உள்ள விஜயகாந்த் ஆபீஸிலோ, வீட்டிலோ வைத்திருந்தால்... பல பிரச்னைகள் அவர் கவனத்துக்குப் போயிருக்கும். அதைச் செய்யாமல் விட்டதை பெருங்குறையாக தொகுதி மக்கள் சொல்கிறார்கள். சட்டசபைக்குப் போகாமல் இருப்பதும், ஆளும் கட்சிக்கு எதிராக இருப்பதால் விஜயகாந்த்தின் குரல் எடுபடாமல் போனதும் மைனஸ்.


எம்.எல்.ஏ. ஆபீஸ் ரெஸ்பான்ஸ் எப்படி?

பகண்டை கூட்டுரோட்டில்தான் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இருக்கிறது. அங்கே தொகுதிவாசிபோல மனு கொடுக்கப் போனோம். ரொம்ப நாட்களாகவே அலுவலகத்தில் பூட்டுதான் தொங்கிகொண்டிருக்கிறது என்றார்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள். அலுவலகத்தைச் சுற்றிலும் முள்செடிகள்... குப்பை மேடுகள். சமீபத்தில் பொதுமக்கள் வந்துபோனதற்கான தடமே தெரியவில்லை. ‘‘எம்.எல்.ஏ-வான புதுசில் கொஞ்ச நாட்கள் இந்த அலுவலகத்தைத் திறந்து வைத்து ‘எந்தத் தேதியில் மனுக்கள் வாங்கப்படும்’ என எழுதிப் போட்டார்கள். மக்களும் ஆர்வத்தோடு மனுக் கொடுத்தனர். பிறகு அலுவலகத்தைத் திறப்பதே இல்லை. இங்கே கட்சிக் கூட்டம் என்றால், அன்றைக்கு மட்டும் அலுவலகத்தைத் திறப்பார்கள். அன்று யாராவது மனுக் கொடுக்க வந்தால், ‘கேப்டன்கிட்ட நேரா கொடுத்துடுங்க’ எனச் சொல்லி அனுப்பிவிடுவார்கள். எங்க பிள்ளைங்களுக்கு ஏதாவது சர்டிபிகேட் வாங்கஎம்.எல்.ஏ-கிட்ட லெட்டர் வாங்கணும்னு போனாகூட முடியறது இல்ல’’ என்றனர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள். தொகுதிப் பொறுப்பாளரான  கோவிந்தனோ, ‘‘கேப்டன் கொடுத்த வாக்குறுதிப்படி ஆபீஸ் கட்டிக் கொடுத்திருக்கிறார். கட்டட வேலை நடப்பதால் அலுவலகத்தைத் திறக்க முடியவில்லை. அதற்குமுன்பு வரையில் அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன” என்றார்.

விஜயகாந்த் ரியாக்‌ஷன் என்ன?

விஜயகாந்த் சார்பில் நம்மிடம் பேசிய தே.மு.தி.க எம்.எல்.ஏ வெங்கடேசன், ‘‘கிராமப்புறங்களிலும் புறப்பகுதிகளிலும் 200 கோடி ரூபாயில் சாலைகள் அமைத்திருக்கிறோம். ரிஷிவந்தியம் மருத்துவமனையை தரம் உயர்த்தும் வேலைகள் நடக்கின்றன. ஆதிதிருவரங்கம், அர்த்தநாரீஸ்வரர் கோயில்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு எம்.எல்.ஏ நிதியைச் செலவு செய்ய முடியாது. மேலும் அந்த இரு கோயில்களிலும் தேரோட்டம் குறித்து நீண்ட காலமாக நிலவும் பிரச்னையை அரசுதான் தலையிட்டுச் சரிசெய்ய வேண்டும். அதற்கு இந்து அறநிலையத் துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. மற்றபடி எம்.எல்.ஏ அலுவலகம் எந்த நேரமும் திறந்தேதான் இருக்கிறது. ஏதாவது ஒன்றிரண்டு நாட்களில் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்துக்காக எங்கள் கட்சி நிர்வாகிகள் திறக்காமல் விட்டிருக்கலாம். மற்றபடி இந்த நான்கரை வருடங்களில் 100 சதவிகிதம் எம்.எல்.ஏ நிதியையும் கேப்டன் முழுமையாகச் செலவிட்டிருக்கிறார்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick