“மழை பயம் போய்விட்டது!”

புது வீடு... புது வாழ்க்கை!

மீபத்திய வெள்ளப் பேரழிவால் குடியிருப்பு​களை இழந்து நிர்கதியான அடையாறு ஆற்றங்கரையோர மக்களை துரைப்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் மறுகுடியமர்த்தி வருகிறது தமிழ்நாடு அரசு. அந்தப் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு இருந்த 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. முன் அறை, படுக்கை அறை, சமையல் அறை, குளியல் அறை, கழிப்பறை என 290 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர், மின்சார வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அங்கு குடியேறிய மக்களிடம் பேசினோம்.

சைதாப்பேட்டையில் வசித்துவந்த விஜயா, ‘‘அடையாறு கரையோரத்தில் நீண்ட காலமாக வசித்துவந்தோம். என் கணவர் இறந்துவிட்டார். அங்கிருந்துதான், என் இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைத்தேன். எங்கள் குடிசையை வெள்ளம் சுருட்டிக்கொண்டு போய்விட்டது. நிர்கதியாக நின்ற எங்களுக்கு தமிழக அரசு வீடு தந்துள்ளது. இந்த வீடு எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஃபேன், லைட் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இப்போது, மழைவெள்ளம் பற்றிய பயம் போய்விட்டது. ஆனால், வயிற்றுப் பிழைப்புக்கு தினமும் நான் சைதாப்பேட்டைக்குத்தான் போய்வர வேண்டும். அதை நினைத்தால்​தான் கஷ்டமாக இருக்கிறது’’ என்றார்.

சுமித்ரா, “சைதாப்பேட்டையில் இருந்து பழகிவிட்டோம். அங்கு கழிப்பிடப் பிரச்னை இருந்தது. ஆனாலும், ஆற்றுநகரை விட்டு இங்கே வர மனசே இல்லை. இந்த வீட்டுக்கு டெபாசிட் தொகை கட்ட வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். ஆனால், மின் இணைப்புக்கு ஒரே தவணையில் 2,500 ரூபாய், பராமரிப்பு செலவுக்கு மாதா மாதம் 300 ரூபாய் கட்டச் சொல்கிறார்கள். அதையும் முதல்வர் ரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.

முருகம்மா, ‘‘55 வருடங்களாக சைதாப்​பேட்டையில் இருந்தோம். எனக்கு உடல்நிலை மோசமாக இருக்கிறது. அங்கே, அக்கம் பக்கத்தினர்தான் என்னைக் கவனித்துக்​கொண்டனர். இங்கே யாரும் இல்லை. ஆனாலும், வாழ்க்கையின் கடைசிக் காலத்தைத் தள்ளுவதற்கு சொந்தமாக ஒரு வீடு கிடைத்திருக்கிறது’’ என்று கண்கலங்கினார்.

பள்ளி மாணவி வினோதினி, ‘‘சைதாப்​பேட்டையில் ஜெய்கோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறேன். ஆனால், இங்கே இருந்து படிக்க எனக்கு பிடிக்கவில்லை. என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சைதாப்பேட்டையில்தான் இருக்கிறார்கள்’’ என்றார்.

ஆட்டோ ஓட்டுநர் தயாளன், ‘‘30 வருடங்களாக குடியிருந்த இடத்தை விட்டு இங்கே வந்துவிட்டோம். எங்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட செம்பரம்பாக்கம் ஏரியின் தயவால் இப்போது புது வீடு கிடைத்துள்ளது. ஆனாலும் என் தொழில் பற்றிய கவலை இருக்கிறது. தினமும் காலையில் ஆட்டோவில் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு ஏற்றிச்செல்வதும், மாலையில் அழைத்து வருவதும் என்னுடைய வேலை. இனிமேல் அந்த வேலையை எப்படி செய்யப்போகிறேன் என்று நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது” என்றார்.  

புதிய குடியிருப்புகளில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டைகளில் முகவரி மாற்றம் செய்து தரவும், இந்தக் குடியிருப்பு வளாகத்தில் உள்ள மழலையர் பள்ளி, ஆரம்பப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் மாணவ, மாணவிகளைச் சேர்த்துக்கொள்ளவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எல்லாம் சரிதான். ஆனால், இதில் ஒரு சிக்கல். குடிசைகள் இல்லாத மாநகராக சென்னையை மாற்ற திட்டமிட்ட தமிழக அரசு, சென்னை நகரில் உள்ள குடிசைவாசிகளைக் கணக்கு எடுத்தது. அவர்களின் புகைப்படங்கள், கைரேகைகள் எல்லாம் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு என்று பெரும்பாக்கம், துரைப்பாக்கம் பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டன. அந்தக் குடியிருப்புகளில்தான், இப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைக் குடியேற்றுகிறார்கள். அப்படியென்றால், ஏற்கெனவே கணக்கெடுக்கப்பட்ட குடிசை வாசிகளுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை?

- எஸ்.முத்துகிருஷ்ணன்
படங்கள்: தி.ஹரிஹரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick