“யாருக்காவது குழி தோண்ட விரும்பினால் விதைகளுக்குச் செய்யுங்கள்!”

“யாருக்காவது குழி தோண்​டவும், அவர்கள் மீது மண்ணைப் போடவும் விரும்பினால் அதை விதைகளுக்குச் செய்யவும்.”

“நல்ல மனிதனாக இரு. ஆனால், அதை நிரூபிக்கிறேன் பேர்வழி என்று நேரத்தை வீணாக்காதே.”

இந்த ‘ஃபேஸ்புக்’ பொன்மொழி​களுக்குச் சொந்தக்காரர் யார் தெரியுமா? சௌ.டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐ.பி.எஸ்.

கடந்த நான்கு மாதங்களாக, சர்ச்சைக்குரிய ‘பவர்ஃபுல்’ பதவியான உளவுத்துறை ஐ.ஜி பணியில் இருந்தவர் இவர். திடீரென அந்தப் பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டு இருக்கிறார். 1995-ம் வருட ஐ.பி.எஸ் பேட்சில் பதவிக்கு வந்தவர். தூத்துக்குடி மாவட்டம் முதலூர் கிராமத்தைச் சேர்ந்தவர். ஐ.பி.எஸ் பயிற்சியை முடித்ததும், முதலில் பரமக்குடியில் ஏ.எஸ்.பி-யாக டேவிட்சன் நியமிக்கப்பட்டார். அப்போது ராமநாதபுர மாவட்ட எஸ்.பி-யாக இருந்த கண்ணப்பன் எதிரில் போய் நின்று சல்யூட் அடித்து பணியைத் தொடங்கினார். காலங்கள் உருண்டோடின. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், உளவுத்துறை ஐ.ஜி-யாக இருந்த கண்ணப்பன் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். காலியான இடத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டவர்தான் டேவிட்சன். இவரிடம் தனது அலுவலக பொறுப்புகளைக் கண்ணப்பன் ஒப்படைத்து​விட்டுக் கிளம்பிப்​போனார். வரலாற்றுச் சக்கரம் என்பது இதுதான்!

1997-ல் கோவையில் மதக் கலவரம் நடந்தபோது, கண்ணப்பனும், டேவிட்சனும் அங்கே அனுப்பப்பட்டனர். கோவை மக்களிடையே மனக்கசப்பு... போலீஸார் மத்தியில் விரக்தி நிலவிய நேரம் அது. குண்டுவைத்த தீவிரவாதிகளைப் பிடிக்க உதவ வேண்டிய அவசரச் சூழ்நிலை. இதையெல்லாம் சமாளிக்க கல்லூரி மாணவர்களை போலீஸாருடன் இணைந்துப் பணியாற்ற வைத்ததில் டேவிட்சனுக்கு பங்கு உண்டு. ரோந்து, வாகனச் சோதனை என்றெல்லாம் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் களம் இறங்கி நிலைமையை சுமுகம் ஆக்கினார்களாம்.

பிறகு, கடலூர் மாவட்டத்தில் சாதி மோதல் வெடித்த சமயத்தில் அங்கே மாவட்ட எஸ்.பி-யாக மாற்றப்பட்டார் டேவிட்சன். காட்டு மன்னார்குடி அருகே மா.புளியங்குடி என்கிற கிராமத்தில் நடந்த மூன்று கொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து மோதல் வெடித்தது. அந்த மாவட்டத்தில் மேலும் கலவரம் பரவாமல் சட்டம் - ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.

‘எஸ்.எஸ்.பி’ என்று அழைக்கப்படும் உளவுப்பிரிவு எஸ்.பி-யாக டேவிட்சன் இருந்த காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் படகு ஒன்றை நடுக்கடலில் கடற்படையினர் பிடித்து சென்னை துறைமுகத்துக்குக் கொண்டுவந்தனர். படகில் இருந்து ஆயுதங்களைக் கைப்பற்றினர். டேவிட்சன், படகில் இருந்த நபருடன் ஒருவாரம் பழகினார். நிறையப் பேசினார். அதன்பிறகுதான், அந்த நபர் திடுக்கிடும் தகவலை டேவிட்சனிடம் சொன்னாராம். அந்தப் படகில் அனைத்துப் பாகங்களிலும் வெடிமருந்து டன் கணக்கில் ‘கன்சீல்’ செய்யப்பட்டு இருந்ததாம். ஒருவழியாக, அந்தப் படகை நடுக்கடலுக்குக் கொண்டுசென்று வெடிக்கவைத்தனர். அதேபோல், தமிழகத்தில் மதவாதம் என்கிற பெயரில் தீவிரவாதிகள் ஒரு ஃபோர்ஸை உருவாக்கித் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நாசவேலை செய்ய முயன்றனர். அவர்களின் திட்டங்களை முன்கூட்டியே மோப்பம்​ பிடித்து தீவிரவாதிகள் அனைவரையும் பிடித்தார்கள். தீவிரவாதி​களைக் கண்காணிக்கும் க்யூ பிரிவு எஸ்.பி-யாக டேவிட்சன் இருந்த நேரத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்துக்காக அம்பத்தூரில் ராக்கெட் லாஞ்சர்களை ரகசியமாக தயாரித்து வந்த சிலரைப் பற்றி கேள்விப்பட்டாராம். ஏராளமான ராக்கெட் லாஞ்சர்கள் சென்னையில் இருந்து ஆந்திராவுக்குக் கடத்தப்பட இருந்த நேரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்து அவற்றைக் கைப்பற்றினார்கள். இடையில், ஐந்து வருடங்கள் மத்திய அரசின் போதைத் தடுப்புப் பிரிவில் (என்.சி.பி) உயர் அதிகாரியாகப் பணியாற்றினார். 2009-ல் அகில உலக போதை கடத்தல் புள்ளி இப்ராஹிம் கான் என்பவரை இரண்டு ஆண்டுகள் விடாமல் ஃபாலோ செய்து, சரியான ஸ்கெட்ச் போட்டு மும்பையில் வைத்து கைதுசெய்தார் டேவிட்சன். துபாய் டூ மும்பை இடையே கொடிகட்டிப் பறந்த ஹெராயின் போதைக் கடத்தல் கோஷ்டியின் நம்பர் ஒன் தலைவரான அவரைப் பிடித்ததும், டேவிட்சனின் இமேஜ் கிடுகிடுவென உயர்ந்தது.  கோவையில் மண்டல ஐ.ஜி-யாக சில ஆண்டுகள் பணியில் இருந்தபிறகு, சென்னை உளவுப் பிரிவுக்கு மாற்றப்பட்டார் டேவிட்சன். பொள்ளாச்சியில் ஹாஸ்டலில் தங்கிப்படித்து வந்த சிறுமிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்தவனைக் கண்டுபிடித்தார். வழக்கைத் துரிதமாக நடத்தி ஆயுள் தண்டனை வாங்கிக்கொடுத்தார்.

டி.ஜி.பி ஆபீஸில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையின் ஆரம்ப காலகட்டத்தில் டேவிட்சன் இருந்தார். பிறகு, வழக்கு விசாரணையின் முழு பொறுப்பு பிரேம்குமார் எஸ்.பி-யிடம் விடப்பட்டது. காஞ்சி மடம் தொடர்பான விசாரணையை ஒரு கிறிஸ்தவர் எப்படி விசாரிக்கலாம் என்கிற சர்ச்சை வரலாம் என்பதாலேயே, டேவிட்சனை மாற்றியதாகத் தகவல். ஆனால், அப்போதைய போலீஸ் பாலிடிக்ஸில் சிக்கி மாற்றப்பட்டார்” என்றார்.

அதே போலீஸ் பாலிடிக்ஸ் இப்போதும் அவரை காவு வாங்கிவிட்டது! 

- முகுந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick