அ.தி.மு.க., பி.ஜே.பி. கூட்டு சாத்தியமா?

விவரிக்கிறார் தமிழிசை

‘அ.தி.மு.க., தி.மு.க அல்லாத மாற்று அரசியல் சக்தியை கொண்டு வர வேண்டும் என்றுதான் 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 7 கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தோம். அதன் தொடர்ச்சியாக, சட்டமன்ற பொதுத்தேர்தலையும் கூட்டாக சந்திக்க முயற்சி செய்கிறோம்’’ என்கிற தமிழக பி.ஜே.பி தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தர​ராஜனிடம் பேசினோம்.

‘‘மழை, வெள்ளப் பிரச்னைக்குப் பிறகு, அ.தி.மு.க-வுடன் பி.ஜே.பி அதீத நெருக்கம் காட்டுவதாகச் சொல்லப்படுகிறதே?’’

‘‘மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும்​போதுதான் மக்களுக்குத் தேவையானதை உடனுக்குடன் செய்ய முடியும். அதைத்தான் பி.ஜே.பி அரசு செய்கிறது. மழை, வெள்ளப் பாதிப்பு காலத்தில் மத்தியத் தொகுப்பில் இருந்து தடையின்றித் தமிழகத்துக்கு மின்சாரம்,  டோல் கட்டணங்கள் ரத்து, ரயில்களில் சரக்குக் கட்டணம் ரத்து, வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் நிவாரணப் பொருட்களுக்கு வரி ரத்து என்று பல்வேறு உதவிகளை மத்திய அரசு செய்தது. மழை, வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கும் அரசை விமர்சிப்பதில் அர்த்தம் இல்லை என்பதால்தான் அ.தி.மு.க-வை விமர்சிக்கவில்லை. மழை, வெள்ளத்தில் வீட்டுக்குள் சிக்கி பிரசவ வேதனையில் இருந்த பெண்ணை படகு மூலம் மீட்டு எனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். அந்த நிகழ்வை, தொலைக்காட்சி விவாதத்தில் சொன்னேன். அதை, கேலியும் கிண்டலும் செய்து வாட்ஸ்அப் மூலம் பரப்பினார்கள். ஒவ்வொரு விஷயத்திலும் அரசியல் பேசாமல் மக்களுக்குத் தேவையானதைச் செய்யவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.’’

‘‘கூட்டு இருப்பதால்தானே, அ.தி.மு.க பொதுக்​குழுவில் மத்திய அரசுக்கு சங்கடம் ஏற்படுத்தும் தீர்மானம் எதுவும் போடப்​படவில்லை?’’


‘‘மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் பி.ஜே.பி அரசுக்கும் அ.தி.மு.க அரசுக்கும் கூட்டு இருக்கிறது. ஆனால், இரு கட்சிகளுக்கும் அரசியல் கூட்டு இல்லை. அ.தி.மு.க., தி.மு.க கட்சிகள் வேண்டாம் என்றுதான் தே.மு.தி.க., பா.ம.க என்று நாடாளுமன்றத் தேர்தலில் களம் கண்டவர்களோடு பேசி வருகிறோம்.’’ 

‘‘விஜயகாந்த், அன்புமணி எல்லாம் உங்கள் கூட்டணியில் இருப்பார்கள் என்று நம்புகிறீர்களா?’’

‘‘நிச்சயமாக நம்புகிறேன். அவர்களைச் சந்திக்கும்​போது தேர்தல் கூட்டணி குறித்த ஆலோசனைகள், விவாதங்கள் நடக்கின்றன. தலைவர்களின் மன​ஓட்டங்களை தெரிந்தால்தானே அடுத்தடுத்த கட்டங்களுக்கு பேச்சுவார்த்தைகளைக் கொண்டு செல்ல முடியும். நாடாளுமன்றத் தேர்தலில் எங்களோடு விஜயகாந்த், அன்புமணி இருந்துள்ளனர். இப்போதும் இருக்கிறார்கள். அவர்களின் பலம் என்ன என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிப்பதிலேயே சிக்கல்களை உருவாக்கி, பிரிவதைவிட, திராவிடக் கட்சிகளை வீழ்த்தத் துடிக்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எல்லோரும் இணைந்து முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.’’

நம்பிக்கை வெற்றி பெறுமா?

-    எஸ்.முத்துகிருஷ்ணன், படம்: கே.ராஜசேகரன்


முறைகேடுக்கு இடமில்லை!

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடர்பாக 3.1.2016 தேதியிட்ட ஜூ.வி. இதழில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. இந்தநிலையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் நமக்கு அனுப்பிய கடிதத்தில், ‘பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் மாணவர் சேர்க்கையை நெறியுடன் செய்து வருகிறது. குறிப்பிட்ட பாடப்பிரிவுகளை சில கல்வி நிறுவனங் களுடன் இணைந்து நடத்துகிறது. இந்தக் கல்வி நிறுவனங்கள் எந்த ஒரு கிளையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது நிபந்தனை. பல்கலைக் கழகம் எந்த ஒரு நபருக்கும் கிளை அமைக்க அனுமதி வழங்கவில்லை. அப்படி கிளைகள் அமைத்திருப்பது எங்கள் கவனத்துக்கு தெரியவந்தால் தக்க நடவடிக்கை எடுக்க உறுதியாக உள்ளது. அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகத்தில் முறைகேடு என்ற பேச்சுக்கே இடமில்லை’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick