என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா (அண்ணா நகர்)

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: அ.நன்மாறன்

ருமுறை தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன்... இருமுறை தி.மு.க தலைவர் கருணாநிதி... மூன்றுமுறை தி.மு.க பொருளாளர் ஆற்காடு வீராசாமி என்று தி.மு.க-வின் பெரும் தலைகள் வென்று கோலோச்சிய தொகுதி சென்னை அண்ணா நகர். தமிழகத்தின் தலைநகரில், தி.மு.க-வின் கோட்டையாக இருந்த தொகுதியை, தென் மாவட்டத்தில் இருந்து வந்த கோகுல இந்திராவை வைத்து உடைத்தார் ஜெயலலிதா. கோகுல இந்திராவின் பணிகள் அண்ணா நகரை அ.தி.மு.க-வின் கோட்டையாக மாற்றி உள்ளதா? அறிந்துகொள்ள தொகுதிக்குள் வலம்வந்தோம்.

மதுரவாயல் டு துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்துக்காக நடுவங்கரை, மேல்நடுவங்கரை, மஞ்சக்கொல்லைத் தெரு, பாரதிபுரம் ஆகிய பகுதி மக்களை அப்புறப்படுத்த முந்தைய தி.மு.க ஆட்சியில் முயன்ற நேரத்தில்தான் சட்டமன்றத் தேர்தல் வந்தது. அப்போது கோகுல இந்திரா, ‘‘உங்களை இடமாற்றம் செய்ய மாட்டோம்’’ என வாக்குறுதி கொடுத்தார். ஆனால், இப்போது மழை வெள்ளத்தைக் காரணம்​காட்டி ‘நீர்வழிப் பாதையைச் சரி செய்கிறோம்’ என இந்தப் பகுதியில் உள்ள 20 ஆயிரம் குடியிருப்புகளை ஒக்கியம் துரைப்பாக்கம், கண்ணகி நகர், செம்மஞ்சேரிக்கு மாற்றக் கணக்​கெடுப்பு நடத்தி வருகிறார்கள். ‘‘ஆக்கிரமிப்பு அல்லாத இடத்திலும் 150 மீட்டர் வரையில் அதிகாரிகள் மார்க் செய்துள்ளனர். கோகுல இந்திரா இதைக் கண்டுகொள்ளவே இல்லை’’ எனப் புலம்புகிறார்கள் மக்கள்.

‘‘என்.எஸ்.கே நகரில் பெரியார் நெடுஞ்சாலை, கூவம் நதியோரப் பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடிசை மாற்று வாரியத்துக்குச் சொந்தமான பகுதியில் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்று​வாரியத்தின் விற்பனைப் பத்திரம் வழங்கப்படும்’’ எனத் தேர்தல் பிரசாரத்தில் முழங்கினார். அதோடு, ‘‘இந்த வீடுகள் எல்லாம் மிகவும் பழுதடைந்துவிட்டதால், இவற்றை இடித்துவிட்டுப் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்’’ எனவும் சொன்னார். ஆனால், சொன்னபடி எந்த முயற்சியையும் இதுவரை செய்யவில்லை. டி.பி சத்திரம் பகுதியில் சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் என்பது பல நாள் கோரிக்கை. அதை ஏற்று, அதற்கான வேலைகளை கோகுல இந்திரா ஆரம்பித்தார். ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலைகள் முடிவுக்கு வரவில்லை. அமைச்சர் நினைத்திருந்தால் மூன்றே மாதங்களில் முடித்திருக்கலாம். மூன்று மாதங்களுக்கு முன்புதான் எம்.எம்.டி.ஏ பகுதியில் சமூகக்​கூடம் கட்டும் வேலைகள் தொடங்கியிருக்​கின்றன. அது எப்போது முடியுமோ தெரியவில்லை.

மண்டபம் ரோடு, பிஜ்ஜி தெரு, பள்ளி அரசன் பகுதி மக்களிடம் பேசினோம். ‘‘புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் நெடுநாள் கோரிக்கை. ஏனென்றால், இந்தப் பகுதி மக்கள் ரேஷன் பொருட்களுக்காக 5 கி.மீ தள்ளி உள்ள சிந்தாமணிக்குச் சென்று, பொருட்கள் வாங்க வேண்டி​யிருக்கிறது. பொருட்களை வாங்கிவிட்டு வருவதற்கு ஆட்டோ வசதி மட்டும்தான் உள்ளது. 100 ரூபாய் ரேஷன் பொருட்களை வாங்க, 100 ரூபாய் ஆட்டோவுக்குக் கொடுக்க வேண்டி உள்ளது’’ என்று அலுத்துக்​கொண்டனர்.

அமைந்தகரைப் பகுதியில் முகாமிட்டிருந்த இளைஞர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘‘இந்தப் பகுதியில், மெட்ரோ வாட்டர்க்குச் சொந்தமான இடத்தில், விளையாட்டுத் திடல் இருந்தது. திடீரென, அதில் தாசில்தார் அலுவலகம் கட்டப்போகிறோம் என்று மைதானத்தை ஆக்கிரமித்தனர். உடனடியாக கம்யூனிஸ்ட் கட்சியின​ரோடு சேர்ந்து அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினோம். அதைப் பரிசீலனை செய்கிறோம் என்றனர். அதற்குள் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள், இது எங்கள் இடம்... இதில் எப்படி நீங்கள் தாசில்தார் அலுவலகம் கட்டமுடியும் என்று பிரச்னை செய்தனர். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. போலீஸார் தலையிட்டு மெட்ரோ வாட்டர் அதிகாரிகளைச் சமாதானம் செய்துவிட்டனர். போராடிய மக்களையும் மதிக்கவில்லை. இப்போது, தாசில்தார் அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. அண்ணா நகர் தொகுதிக்குள் இருப்பதால், அமைந்தகரைப் பகுதியிலும், நிலத்தின் விலை பல மடங்கு உள்ளது. எனவே, இங்கிருக்கும் புறம்போக்கு இடங்கள், நத்தம் புறம்போக்கு நிலங்கள் அனைத்தையும் கடைகளுக்கும் கட்டடங்களுக்கும் பட்டா போட்டுக் கொடுக்கின்றனர். ஆனால், இங்கு 200 வருடங்களாக வாழும் மக்களுக்கு இதுவரை பட்டா கொடுக்கப்படவில்லை. விளையாட்டு மைதானமும் நிலைக்கவில்லை’’ என்றனர்.

அமைந்தகரை மார்க்கெட் பக்கம் விசாரித்தோம். அங்கு காய்கறிகளைத் தரையில் பரப்பி விற்பனைசெய்யும் குறுவியாபாரிகள், “தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஆனால், இலவச பொதுக் கழிப்பிடங்கள் இல்லை. மார்க்கெட்டுக்கு வருபவர்கள், இங்கு வியாபாரம் செய்பவர்கள், இயற்கை உபாதைகளைக் கழிக்க திறந்தவெளியைத்​தான் பயன்படுத்தும் நிலை உள்ளது. அதனால், மிகுந்த சுகாதாரக் கேடு நிலவுகிறது. மார்க்கெட்டுக்​குள் ஒரு கழிப்பறை அமைக்கப்பட்டது. ஆனால், அது பராமரிக்கப்படாமல் கடந்த இரண்டு வருடங்களாகப் பூட்டிக் கிடக்கிறது. பல போராட்டங்களை நடத்திய பிறகு, இப்போது அதில் வேலைகள் நடக்​கின்றன. ஆனால், எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிய​வில்லை.

பயன்பாட்டில் இருக்கும் சமுதாயக் கூடங்களின் கட்டணம் மிக அதிகமாக இருக்கிறது. ஒரு சுப நிகழ்ச்சியை நடத்தினால், 50 ஆயிரம், 60 ஆயிரம் என பில் வருகிறது. இவ்வளவு கட்டணம் ஏன் வருகிறது என்றால், மின்சாரம், தண்ணீர் என்று காரணம் சொல்கின்றனர். அந்தத் தொகையை இங்கு கொடுப்பதற்கு பதில் தனியார் கல்யாண மஹாலில் நிகழ்ச்சி​களை நடத்திவிடலாம். இதுபற்றி எம்.எல்.ஏ-விடம் பலமுறை புகார் சொன்னோம். ஆனால், நடவடிக்​கை இல்லை. அதற்குத்தான், ‘புதிதாக சமுதாயக் கூடங்கள் கட்டப்​படுகின்றன. அவையும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் இந்தப் பிரச்னை இருக்காது’ என்றார். ஆனால், அந்தச் சமுதாயக் கூடங்கள் நான்கரை ஆண்டுகளாக முடிக்கப்படாமல் வேலை நடந்துகொண்டே இருக்கிறது’’ என்று புகார் வாசித்தனர்.

அண்ணா நகர் ஆர்ச் அருகே உள்ள சிக்னல் பக்கத்தில் இருக்கும் கடைக்காரர்​களிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘‘இந்தத் தொகுதியில் முக்கியப் பிரச்னை டிராஃபிக் கொடுமைதான். மதுரவாயலில் இருந்து அண்ணா நகருக்குள் வருவதற்கு, இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரமாகிவிடுகிறது. அதனால், ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று, நான்கு விபத்துக்களையாவது இந்தச் சாலையில் காணமுடியும். மெட்ரோ ரயில் திட்ட வேலைகள் நடக்கிறது என்பதைக் காரணம்காட்டியே இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு வேறு நடவடிக்கைகளை அமைச்சர் எடுக்கவில்லை. மெட்ரோ ரயில் திட்டம் இன்னும் 10 ஆண்டுகளுக்குக்கூட நடக்கும். அதற்காக, மாற்று ஏற்பாடுகளைச் செய்யாமல் இருப்பார்களா? சூளைமேடு பகுதியில் மினி பஸ்கள் விடப்படும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருக்கிறது. ஆனால், இதுவரை அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஷேர் ஆட்டோக்களும் இந்தப் பக்கம் வராது. அதனால், அயனாவரத்தில் இருந்து மண்டபம் சாலை, டி.பி. சத்திரம் வழியாகப் போகவேண்டு​மானால், எந்தப் போக்குவரத்து வசதியும் அதற்கு கிடையாது. ஒன்றரை கி.மீ நடந்துபோக வேண்டும். 

நெல்சன் மாணிக்கம் சாலையில் சீனாவில் உள்ளதுபோல், இரட்டை அடுக்கு பாலம் கட்ட முயற்சி எடுப்பேன்’ என்று தேர்தல் வாக்குறுதியில் கோகுல இந்திரா குறிப்பிட்டு இருந்தார். ஆனால், கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அண்ணா நகர் ஆர்ச் பாலமே இன்னும் முடிக்கப்படாமல் நிற்கிறது. ஆனால், அதில் ஆச்சர்யமான விஷயம், பாலம் கட்டத் தொடங்கிய நாள்முதல் அதில் வேலை நடக்கிறது. அப்படியென்றால், அது என்ன வேகத்தில் நடக்கிறது என்பதை நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்.

அரும்பாக்கத்தில் இருந்த எலெக்ட்ரிக் சுடுகாடு பழுதடைந்து பல மாதங்கள் ஆகின்றன. அது இன்னும் சரிசெய்யப்படவில்லை. பல மனுக்கள் எம்.எல்.ஏ அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நடவடிக்கை இல்லை’’ என்றனர்.  எம்.எம்.டி.ஏ பேருந்து நிலையத்தைச் சுற்றிவந்தோம். அது ஒரு காஸ்ட்லியான தொகுதிக்குள் இருக்கும் பேருந்து நிலையத்தைப்போல இல்லை. மிக மிக மோசமான நிலையில் இருந்தது. பேருந்து நிலையத்தைவிட்டு வெளியில் வந்து அங்கிருந்தவர்களிடம் பேசினோம். ‘‘அது இப்போது இருப்பதைவிட மிக மோசமான நிலையில் இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள்தான் சில மாதங்களுக்கு முன்பு, இங்குள்ள மக்களைவைத்தே கொஞ்சம் சுத்தம்செய்து கொடுத்தனர்’’ என்றார்கள்.

சென்னையை மூழ்கடித்து சென்னைவாசிகளை கலங்கடித்த மழை, வெள்ளம் சென்னையின் காஸ்ட்லியான ஏரியாவாகப் பார்க்கப்பட்ட அண்ணா நகரின் முகத்திரையை கிழித்தெறிந்தது. அதுவரை மேல்பூச்சின் பளபளப்பிலேயே இருந்த அண்ணா நகரின் முகத்திரை மழையில் கிழிந்து தொங்கியது. அமைந்தகரையில் ஏராளமான பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அமைச்சரின் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு காப்பற்றச் சொல்லி கோரிக்கை வைத்தனர். படகு இதோ வருகிறது... அதோ வருகிறது என்று அமைச்சர் தரப்பில் இருந்து பதில் சொன்னார்களே தவிர, எதுவும் வரவில்லை. படகுகள் வருவதற்குள் பல தன்னார்வலர்கள் மற்றும் வேறு சில அமைப்புகளால் மீட்கப்பட்டனர்.

பாஞ்சாலி அம்மன் கோயில் தெருவில் பெண்கள் சிலர், ‘‘திருட்டுச் சம்பவங்கள் அண்ணா நகர் பகுதியில்தான் அதிகம். இதை மனதில் வைத்துத்தான் கோகுல இந்திரா தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில், ‘கொள்ளையர்களின் அட்டகாசம் கட்டுப்படுத்தப்படும். அதற்காக தனி ரோந்து ஏற்பாடு செய்யப்படும்’ என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்தப் பகுதியில் சாலைகள் அமைத்துள் ளனர். வெறும் சரளைக்கற்களைக் கொட்டி அதை மெத்திவிட்டுச் சென்றுள்ளனர். அரை மணி நேர மழைக்கே அது தாங்குவதில்லை. மழை வெள்ளத்தின்போது, அமைச்சரைத் தொடர்புகொண்டபோது, ‘நான் அம்மாவின் தொகுதியில் இருக்கிறேன். அப்புறம் பேசுகிறேன்’ என்று சொல்லிவிட்டார். இப்போது பெட்ஷீட், உடைகள், தேவையான உணவுப் பொருட்களை அமைச்சர் கொடுத்து வருகிறார். இதைச் செய்தாலேபோதும், அடுத்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்று அமைச்சர் நினைக்கிறார்போல. ஆனால், அது கஷ்டம்தான்’’ என்கின்றனர் தொகுதிவாசிகள். 

- ஜோ.ஸ்டாலின், ஐ.மா.கிருத்திகா, பி.நிர்மல், தா.நந்திதா
படம்: ஜெ.வேங்கடராஜ்


ப்ளஸ்... மைனஸ்!

வெள்ள நிவாரணப் பணிகளை தற்போது இழுத்துப்போட்டுக் ஒவ்வொரு தெருவாகப் போய் வழங்குகிறார் கோகுல இந்திரா. அதுபோல, பொது நிகழ்ச்சிகளில் பரவலாகக் கலந்துகொள்வதையும் பொதுமக்கள் பாசிட்டிவ்வாக பார்க்கின்றனர். குடி தண்ணீர் பிரச்னையைத் தீர்த்துவைத்தது கோகுல இந்திராவுக்குப் பாசிட்டிவ். தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகச் செலவு செய்துள்ளார். அதைவைத்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் கட்டிக் கொடுத்தது, தொகுதிக்குள் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களை மேம்படுத்தியது கோகுல இந்திராவுக்குச் சாதகமாகச் சொல்லப்படுகிறது. எம்.எல்.ஏ அலுவலகத்தில் இருப்பவர்கள் சாக்கடை நீர், குப்பைகள் தேங்குவது போன்றவற்றை உடனடியாகத் தீர்த்துக் கொடுப்பது அவருக்குப் பிளஸ்.

எம்.எல்.ஏ அலுவலகத்தில் கோகுல இந்திராவைப் பார்க்கவே முடிவதில்லை என்கின்றனர். வாரத்தில் ஒருநாளோ அல்லது மாதத்தில் இரண்டு நாட்களோ, எம்.எல்.ஏ-வே பொதுமக்களிடம் நேரில் குறை கேட்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நியாயமான இந்த கோரிக்கையை கோகுல இந்திரா நிறைவேற்றாமல் வைத்திருப்பது அவருக்கு மைனஸ். அதுபோல, தொகுதியின் டிராஃபிக் பிரச்னையும், பட்டா கொடுக்காமல் இருப்பதும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இப்போது ஆக்கிரமிப்பு என்ற பெயரில், குடிசைப் பகுதி மக்களோடு சேர்த்து, ஆக்கிரமிப்புக்கு அப்பால் உள்ள மக்களையும் ஒக்கியம், துரைப்பாக்கத்தில் குடியேற்ற அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் கோகுல இந்திராவுக்கு மைனஸ்.

எம்.எல்.ஏ. அலுவலகம் ரெஸ்பான்ஸ் எப்படி?

அண்ணா நகர் பகுதியில் இருக்கும் எம்.எல்.ஏ அலுவலகத்தில் கோகுல இந்திராவின் அண்ணன் தேவபாண்டியன் இருக்கிறார். அவரிடம் தண்ணீர், கழிவுநீர், மின்சாரப் பிரச்னைகள் பற்றி புகார் சொன்னால், உடனடியாகத் தொலைபேசியில் ஆட்களைத் தொடர்பு கொண்டு பேசி, அதை முடித்துக் கொடுத்துவிடுகிறார். ஆனால் பட்டா, பொதுக் கழிப்பிடம் போன்ற விஷயங்கள் ஒன்றும் நடப்பதில்லை. சமூகநலக்கூடங்கள் போன்ற அடிப்படையான வசதிகளைக்கூட போராட்டங்களை நடத்தித்தான் பெற முடிகிறது. எம்.எல்.ஏ அலுவலகத்துக்கு கோகுல இந்திரா வந்து மக்களைச் சந்தித்ததே இல்லை.

கோகுல இந்திரா ரியாக்‌ஷன் என்ன?

கோகுல இந்திராவின் சார்பில் அவருடைய பி.ஏ சொக்கலிங்கம் பேசினார். ‘‘பட்டா வழங்கும் விவகாரத்தில் நிர்வாகச் சிக்கல்கள் உள்ளன. அவை முடிந்து இன்னும் இரண்டு மாதங்களில் நான்கு பகுதிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுவிடும். இரண்டு சமுதாயக்கூடங்களின் கட்டுமான வேலைகள் முடிந்துவிட்டன. அடுத்த மாதத்துக்குள் அவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிடும். அண்ணா வளைவு அருகில் மேம்பாலம் கட்டுமானப் பணிகளும் மெட்ரோ ரயில் வேலைகளும் நடப்பதால் டிராஃபிக் பிரச்னை ஏற்படுகிறது. போக்குவரத்து போலீஸ் அதை ஒழுங்குசெய்து வருகிறார்கள். எம்.எல்.ஏ தொகுதி நிதி பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்காக செலவழிக்கப்பட்டு இருக்கின்றன. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இரண்டு பிளாக்குகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. வெள்ளத்துக்குப் பிறகும்கூட இந்தப் பகுதியில் சாலைகள் தரமானதாக உள்ளன. குடிநீர்ப் பிரச்னை முற்றிலுமாகத் தீர்க்கப்பட்டுள்ளது. வாரம்தோறும் ஒவ்வொரு மண்டல அதிகாரிகளைச் சந்தித்து மின்சாரம், கழிவுநீர் சாக்கடைப் பிரச்னைகள் போன்றவற்றை உடனடியாக தீர்த்துக் கொடுத்துள்ளோம். எம்.எல்.ஏ அலுவலகத்தில் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை, உதவியாளர்கள் மக்களிடம் மனுக்கள் வாங்குகின்றனர். பிரச்னைகளையும் அந்த இடத்திலேயே தீர்க்கிறோம்’’ என்றார் சொக்கலிங்கம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick