பாதுகாப்பற்ற நிலையில் மீனாட்சி அம்மன் கோயில்!

அம்பலப்படுத்திய குண்டுவெடிப்புச் சம்பவம்...

டந்த மூன்று மாத காலம் அமைதியாக இருந்த மதுரையின் நிம்மதியைக் குலைத்துவிட்டது, இந்த வாரம் வெடித்த பெட்ரோல் குண்டு. அதுவும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு அருகே குண்டு வெடித்ததால் மதுரை அதிர்ந்தது.

2011 ஏப்ரல் 30-ம் தேதி மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் டைமர் வகை வெடிகுண்டு வெடித்தது. அதே ஆண்டு அக்டோபர் 28-ல், பி.ஜே.பி-யின் மூத்த தலைவர் அத்வானி வந்தபோது, திருமங்கலம் அருகே தரைப்பாலத்தில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப் பட்டது. டிசம்பர் 7-ல், திருவாதவூர் சென்ற புறநகர் பஸ்ஸில் டைமர் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. 2013, நவம்பர் 20-ல் மதுரை நெல்பேட்டையில் சிறிய வகை வெடிகுண்டு வெடித்தது. பிப்ரவரி 2014-ல், உத்தங்குடி தனியார் வணிக வளாகத்தில், பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. 2014, நவம்பர் 10-ல் மதுரை கே.கே.நகரில், ஒரு குப்பைத் தொட்டியில் 10-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அதற்கடுத்து, மதுரை முனிச்சாலையில் நடந்த அ.திமு.க பொதுக்கூட்டத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் அரசுப் பேருந்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இப்படியாக, வெடிகுண்டுச் சம்பவங்கள் மதுரையைத் தொடர்ச்சியாக உலுக்கி வந்த நிலையில், கடந்த 5-ம் தேதி மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு வாசலில் உள்ள கடை வீதியில் மூன்று பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அதில், ஒரு குண்டு மட்டும் வெடித்துள்ளது.

“கீழச்சித்திரை வீதியில் நடைபாதையை ஆக்கிரமித்து இருந்த சிறு வியாபாரிகள், மாநகராட்சி நடவடிக்கையால் கடைகளைக் காலி செய்தனர். அவர்கள், வடக்குச் சித்திரை வீதியில் கடைகளை வைத்துள்ளனர். இது, ஏற்கெனவே வடக்குச் சித்திரை வீதிகளில் கடைகளை வைத்துள்ளவர்களுக்கு தொழில் போட்டியை உண்டாக்கியது. அதன் பின்னணியிலேயே இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மதி, குணா, செட்டியார் என்கிற அருண்குமார், சிம்பு என்கிற சிலம்பரசன், சிதம்பரம் ஆகிய 5 பேரை கைதுசெய்துள்ளோம்” என்று மதுரை மாநகர போலீஸ் தெரிவித்துள்ளது.

சிறு வியாபாரிகளிடையே தொழில்போட்டி காரணமாக இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது என்றாலும், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே சம்பவம் நிகழ்ந்துள்ளதால், கோயிலின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை மக்கள் எழுப்புகிறார்கள்.

இதுதொடர்பாக வழக்கறிஞர் முத்துக்குமார் நம்மிடம், “கோயிலைச் சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இது தொடர்பாக, மூன்று பொது நல வழக்குகள் தொடர்ந்தேன். நீதிமன்ற உத்தரவுப்படி, கோயிலைச் சுற்றிலும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அளக்கும் பணி நடந்துவருகிறது. இந்த நிலையில், கோயிலைச் சுற்றி இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது கவலையை அளிக்கிறது. ‘கோயிலுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை. எளிதில் யார் வேண்டுமானாலும் தாக்கலாம்’ என்று மத்திய உளவுத்துறை 2010-ல் எச்சரித்தது. கோயிலைச் சுற்றி வெறும் 6-10 அடி இடைவெளியில் தனியாருக்குச் சொந்தமான கட்டடங்கள் நிறைய உள்ளன. அந்தக் கட்டடங்களில் இருந்து கோயில் மீது மிக எளிதாகத் தாக்குதல் நடத்த முடியும். கோயிலைச் சுற்றி பூமியைத் தோண்டி, ‘அண்டர்கிரவுண்ட் கார் பார்கிங்’ மற்றும் புதிய கட்டடங்கள் கட்டக் கூடாது என்று தடை உள்ளது. ஆனாலும், குன்னத்தூர் சத்திரத்தில் புதிய காம்ப்ளெக்ஸ் கட்டுவதற்கு மதுரை மாநகராட்சியே குழிதோண்டியது. அதற்கு நீதிமன்றம் தடை போட்டது. அந்தக் குழிகளை மூடவே இல்லை. கோயிலைச் சுற்றி கனரக வாகனங்களை அனுமதிக்கக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவு இருந்தும் சரக்கு வாகனங்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்குச் சொந்தமான கனரக வாகனங்கள் கோயில் வாசல் வரை வந்துபோகின்றன. அது தடுக்கப்பட்டு கோயிலுக்கான பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். கோயிலைச் சுற்றியுள்ள உயர்ந்த கட்டடங்களை காலி செய்ய உத்தரவிட வேண்டும்” என்றார். 

மீனாட்சி அம்மன் கோயிலைப்போல் இனிமேல் நம்மால் ஒரு கோயில் கட்டுவது என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. குறைந்தபட்சம், இருப்பதை பாதுகாக்கவாவது செய்வோம். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு செய்ய வேண்டும்.

- சண்.சரவணக்குமார்
படங்கள்: வீ.சதிஷ்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick