பதான்கோட்... கோட்டை விட்டனவா மத்திய, மாநில அரசுகள்?

வாஜ்பாய் பாகிஸ்தான் சென்று நவாஸ் ஷெரீஃபை சந்தித்த பின்னர்தான் கார்கில் யுத்தம் நடந்தது. இப்போது மோடி அதிரடியாக பாகிஸ்தான் சென்று வந்த பிறகு, இதோ... பதான்கோட் விமானப்படைத் தளத்தில் தீவிரவாதிகள் தங்கள் கைவரிசையைக் காட்டிவிட்டனர். இந்தத் தாக்குதலில் எல்லா வகையிலும் அரசுத் தரப்பு கோட்டை விட்டுள்ளது என்ற தகவல்கள்தான் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

பாதுகாக்க வேண்டிய பதான்கோட்!

பஞ்சாப், இமாசலப் பிரதேசம், ஜம்மு ஆகிய மூன்று மாநிலங்களையும் இணைக்கும் வகையில் பதான்கோட் இருக்கிறது. இந்த நகருக்கு அருகே சுமார் 35 கி.மீ  தூரத்தில் பாகிஸ்தான் இருக்கிறது. அதிமுக்கியத்துவம் வாய்ந்த விமானப்படைத் தளம் இது. விளைநிலங்கள் மற்றும் வனப்பகுதிகளுக்கு நடுவே 1,800 ஏக்கர் பரப்பளவில், சுமார் 24 கி.மீ சுற்றளவில் உள்ள இந்தத் தளத்தின் வெளிச் சுற்றுச்சுவர் 12 அடி உயரமானது. இதையெல்லாம் மீறி தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனர். பாதுகாவலர் குடியிருப்பு, உணவகம் மற்றும் நிர்வாக அலுவலகம் இருக்கும் பகுதிகளுக்குள் பதுங்கி இருந்துள்ளனர். இதை முதலில் பார்த்த ஒரு பாதுகாப்புப் படை வீரர், உடனடியாக  எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்திருக்கிறார். இதன்பின்னர் தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். 

    வீரமரணம் அடைந்த நிரஞ்சன் குமார்!

இரு தரப்பினருக்கும் இடையே கிட்டத்தட்ட 15 மணிநேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. முதல் நாள் நான்கு தீவிரவாதிகளும் மறுநாள் இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை வீரர்கள் தரப்பில் ஏழு பேர் வீரமரணம் அடைந்தனர். அதிதீவிர பயிற்சி பெற்ற லெப்.கர்னல் நிரஞ்சன் குமார் உயிரிழப்பு நமது ராணுவத் தலைமைக்கு  மிகவும் அதிர்ச்சியைத் தந்தது.

முழுப் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் எங்கே?

தீவிரவாதிகளை முதலில் எதிர்கொண்டது முழுப் பயிற்சி பெற்ற ராணுவமோ, என்.எஸ்.ஜி-யோ அல்ல. ராணுவப் பாதுகாப்புப் படை பிரிவு வீரர்கள்தான் அங்கு இருந்தனர். இதில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் அல்லது பயிற்சியில் இருக்கும் ராணுவ வீரர்கள்தான் இருப்பார்கள். இதனால்தான் உயிர்சேதம் ஏற்பட்டது. தீவிரவாதிகள் நுழைந்து 24 மணி நேரத்துக்குப் பின்னர்தான்  டெல்லியில் இருந்து என்.எஸ்.ஜி கமோண்டோ படை பதான்கோட்டுக்குச் சென்றுள்ளது.

சந்தேக வலையில் போலீஸ் அதிகாரி!

கடந்த டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவில் போலீஸ் அதிகாரி சல்விந்தர் சிங் தனது சொகுசு காரில் நகைக்கடை நண்பர் ராஜேஸ் வர்மா மற்றும் அவரது சமையல்காரர் மதன் கோபால் ஆகியோருடன் கோயிலுக்குச் சென்று திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது ஜம்மு - பதான்கோட் நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் அவரது காரை வழிமறித்து உள்ளனர். ‘லிப்ட்’ கேட்டு காரில் ஏறியதாகவும்  துப்பாக்கி முனையில் தங்களை காரோடு கடத்தியதாகவும் சல்விந்தர் சிங் கூறுகிறார். இதில் சல்விந்தர் சிங், சமையல்காரர் ஆகிய இருவரையும் மரத்தில் தீவிரவாதிகள் கட்டிவைத்துள்ளனர். மதன்கோபாலை வேறு ஒரு இடத்தில் கீழே தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவங்களை உயர் அதிகாரிகள் நம்பவில்லை. சல்விந்தர் சிங்கை சந்தேக வளையத்தில் வைத்துள்ளனர்.

யாருமே தடுக்கவில்லையா?

தீவிரவாதிகள் பதான்கோட் செல்வதற்கு முன்பு, வழியில் இரண்டு போலீஸ் செக் போஸ்ட்டுகளைக் கடந்து சென்றுள்ளனர். போலீஸ் எஸ்.பி சல்விந்தர் சிங்கிடம் இருந்து பறித்த காரில் தீவிரவாதிகள் சென்றதால், அதில் நீல நிற சைரன் விளக்கு இருந்தது. அவர்கள் சென்றபோது அது ரிப்பேர் ஆகி இருந்தது. சைரன் அடிக்காத போதும், தீவிரவாதிகளுக்கு  செக்போஸ்ட் போலீஸார் சல்யூட் அடித்து வழி அனுப்பியுள்ளனர். போலீஸ் எஸ்.பி-யிடம் இருந்து பறித்த மொபைலை வைத்துத்தான் தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்குப் பேசி இருக்கின்றனர். அந்த மொபைல் எண்கள் கண்காணிக்கப்பட்டு, உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்பட்டு வந்துள்ளது. இதன்மூலம் அவர்கள் தீவிரவாதிகள்தான் என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இடைமறித்து தகவல்கள் கேட்கப்பட்டும் கோட்டை விடப்பட்டது ஏன்?

‘செக்ஸ் சாட்’!

இந்திய விமானப்படையைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் கடந்த டிசம்பர் 28-ம் தேதி கைதானார். இவர், லண்டனில் இருக்கும் ஒரு பெண்ணோடு சமூக வலைதளங்களில் தொடர்பு கொண்டுள்ளார். அந்தப் பெண் இவரிடம் தன்னை ஒரு பத்திரிகையாளர் என முதலில் அறிமுகப்படுத்திக் கொண்டாராம். நாளடைவில் ‘செக்ஸ் சாட்’ ஆக அது மாறியதாம். இதில் மயங்கிய அவர், ‘வலை’ விரித்த பெண்ணுக்கு விமானப்படைத் தளங்களின் விவரங்களை அளித்தாராம். பதான் கோட், குவாலியர் தளங்களின் தகவல்களை அளித்ததில் இவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ரஞ்சித்தைப் போன்று ஐ.எஸ்.ஐ-யோடு தொடர்புடைய ஐந்து உளவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 - சரோஜ் கண்பத்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick