சீறும் சிதம்பரம்... சீண்டும் இளங்கோவன்!

கச்சைகட்டும் காங்கிரஸ் கோஷ்டிகள்...

ட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைப்பதற்காக தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், தங்கள் கட்சியில் உள்ள கோஷ்டிகளை ஒருங்கிணைக்க முடியாமல் திண்​டாடிக் கொண்டிருக்கிறது காங்​கிரஸ் கட்சி. காங்கிரஸ் தலைவர் இள​ங்கோவனுக்கும், ப.சிதம்பரம் அணிக்குமான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் கடந்த வாரம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. அதற்கு, எட்டு மாவட்டத் தலைவர்கள் வரவில்லை. அவர்கள், ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள். “கூட்டத்துக்கு வராதவர்கள் பற்றி நான் கவலைப்​படவில்லை. ப.சிதம்பரம் சொல்லித்தான் அவர் கள் கூட்டத்துக்கு வரவில்லை. வராத தலைவர் களுக்குப் பதிலாக புதிய பொறுப்​பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்” என்று இள​ங்கோவன் அதிரடியாக அறிவித்தார். தங்களுக்கு இளங்கோவன் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருவதால்தான், கூட்டத்தைப் புறக்கணித்தோம் என்கிறார்கள், ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள்.

திருப்பூர் மாவட்டத் தலைவரான வெங்கடாச்​சலம், சிதம்பரத்தின் ஆதரவாளர் என்பதால், திருப்பூர் மாவட்ட கமிட்டியை இரண்டாகப் பிரித்து வெங்கடாச்சலத்தின் அதிகாரத்தை இளங்கோவன் குறைத்துவிட்டார். அதனால் சிதம்பரம் தரப்பு கடுப்பாகி இருக்கிறது. “சமீபகாலமாக, சிதம்பரத்துக்கு டெல்லியில் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் மீது பி.ஜே.பி அரசு தொடுத்து வரும் வழக்குகளில், கட்சித் தலைமைக்கு ஆலோசகராக இருந்து சிதம்பரம் பதிலடி கொடுத்து வருகிறார். அதனால்தான் காங்கிரஸ் சார்பில் புத்தாண்டு அன்று  செய்தியாளர்கள் சந்திப்பை, சிதம்பரத்தை வைத்து சோனியா நடத்தினார். டெல்லி தலைமையின் ஒப்புதல் இல்லாமலேயே கூட்டணி குறித்து இளங்கோவன் தன்னிச்சையான அறிவிப்பை வெளியிட்டு வருவது சிதம்பரத்துக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது” என்கிறார்கள் சிதம்பரம் கோஷ்டியினர்.

சிதம்பரத்தின் ஆதரவாளரான தென்சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன், “காங்கிரஸ் இயக்கம், ஜனநாயக அடிப்படையில் இயங்கும் ஒரு கட்சி. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் உட்பட அனைவரும் எங்கள் தலைவி சோனியா காந்தியால் நியமிக்கப்பட்டவர்கள். யாரும் தன்னிச்சையாக செயல்பட முடியாது. சட்டத் திட்டங்கள் அடிப்படையில்தான் நடக்க வேண்டும். ஆனால், கடந்த சில காலமாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரின் நடவடிக்கைகள் ஒருதலைப்பட்சமாக உள்ளன. அவருடைய தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்து சோனியாவை சந்தித்து முறையிட்ட தலைவர்களின் ஆதரவாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மகிளா காங்கிரஸ் கட்சியினரைk அவமதித்து அது காவல் நிலையம் வரை சென்றது. செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீரைத் திறந்துவிட்டதால், பாதிக்கப்பட்ட தென் சென்னைக்கு ராகுல் காந்தியை அழைத்து வாருங்கள் என்று இளங்கோவனிடம் வலியுறுத்தினேன். ஆனால் அவருடைய நண்பர்கள், தலைவர்களாக உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே ராகுலை அழைத்துச் சென்றார். மாநில கமிட்டியாக இருந்தாலும், மாவட்ட கமிட்டியாக இருந்தாலும் அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு ஒப்பதலோடுதான் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். ஆனால், அதற்கு விரோதமாக இளங்கோவன் செயல்படுகிறார். அவருக்குப் பிடிக்காத தலைவர்களின் ஆதரவாளர்களை ஓரங்கட்டுகிறார்’’ என்று கூறினார்.

இளங்கோவன் தரப்பில் கருத்துத் தெரிவித்த தமிழக காங்கிரஸ் செய்தித் தொடர்​பாளர் கோபண்ணா, “மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அனைவரும், தமிழக காங்கிரஸ் கமிட்டிக்குக் கட்டுப்பட்டவர்கள். தமிழக காங்கிரஸ் கமிட்டி சொல்லும் பணிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். கட்சி சொல்லும் பணிகளைக்கூட செய்யாமல் இருந்தால் கட்சியை எப்படி நடத்த முடியும்? செயல்படாத தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியுமா? மாவட்டத் தலைவர்கள் கூட்டம் கட்சி வளர்ச்சிக்காக நடத்தப்படுகிறது. ஆனால், அதைப் புறக்கணித்துவிட்டு, சொந்தக் கட்சியைப் பற்றியே அறிக்கைவிடுவது ஆரோக்கிய மானது அல்ல. செயல்பாடு இல்லாத தலைவர்களைச் செயல்பட வைக்கத்தான் மாநில கமிட்டி உள்ளது. அதைத்தான் இப்போது செய்துள்ளோம்” என்றார்.

காங்கிரஸும் கோஷ்டிப்பூசலும் ஒருபோதும் பிரிக்க முடியாதவை போலும்!

- எஸ்.முத்துகிருஷ்ணன்,  அ.சையது அபுதாஹிர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick