கைகள் கோப்போம்... கரைகள் காப்போம்!

நிலம்... நீர்... நீதி!

டந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் மையம்கொண்ட வட கிழக்குப் பருவமழை... சென்னை, திருவள்ளூர், காஞ்சி​புரம், கடலூர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளை வெள்ளக்காடாக்கி, பேரழிவை உண்டாக்கியது. குறிப்பாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகள் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகின.

இதையடுத்து, ஆனந்த விகடனின் ‘அறம் செய விரும்பு’ திட்டத்தின் மூலமாக நிவாரணப் பணிகளை உடனடியாகத் தொடங்கினோம். இந்தப் பேரழிவுக்கான அடிப்படைப் பிரச்னை​களைக் கண்டறிந்து சரிசெய்வதுதான் நீண்டகாலத் தீர்வுக்கான ஒரே வழி. நீர்நிலை​களைப் பாதுகாப்பது, ஆக்கிரமிக்கப்​பட்ட நீர்நிலைகளை மீட்டெடுப்பது என இரு பணிகளையும் முன்னெடுக்க முடிவெடுத்தோம். முதல் கட்டமாக விகடன் நிறுவனம் சார்பில் ஒரு கோடி (1,00,00,000) ரூபாய் நிதி ஒதுக்கப்​பட்டது. கூடவே, இந்தப் பணிகளில் கைகோக்கும் வகையில் வாசகர்களும் நிதி உதவி செய்யலாம் என, 16/12/2015 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

ஆலோசனைக் குழு!

நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகளின் தொடக்கமாக, முன்​னோடி நீர்மேலாண்மை அறிஞர்கள், நீர்நிலைக் காப்பாளர்கள் மற்றும் நீரியல் செயற்பாட்டாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, டிசம்பர் 10-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்​சியாக ஜனவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் ஆய்வுகளும் நடந்திருக்​கின்றன. குழுவில் இடம்பெற்றிருப்​பவர்கள் தவிர, இன்னும் பல நிபுணர்களும் களப்பணியாளர்களும் தங்களின் பயனுள்ள ஆலோசனை​களையும் நேரத்தையும் எப்போதும் தருவதற்கு சம்மதம் தந்துள்ளனர். இந்த இயக்க​மானது, எந்த வழிகளில் எல்லாம் பயணித்து தன் இலக்கை அடைவது என்பது குறித்து, விரிவாக விவாதிக்கப்​பட்டிருக்கிறது.

இதுவரை 77 லட்சம்!

இந்த நிலையில், முதற்கட்டப் பணிகள் தொடங்குவதற்​குள்ளா​கவே... ஜனவரி 3-ம் தேதி வரை 77,96,080 ரூபாயை நிதியாக வழங்கி​யிருக்​கிறார்கள் விகடன் வாசகர்கள். (இதுகுறித்த விரிவான பட்டியல், இணையதளத்தில் இடம்பெறும்).

ஆய்வுப் பயணம்!

ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய இரண்டு நாட்களும், வண்டலூர் தொடங்கி வாலாஜாபாத் வரை `நிலம்... நீர்... நீதி!’ ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சிலரோடு ஆய்வு மேற்கொள்ளப்​பட்டது. அப்போது, இந்தப் பெரு​வெள்ளத்துக்கான காரணம், கண்​களில் அறைந்தது.

இன்றைக்கு, `ஐ.டி காரிடர்’ என அழைக்கப்படும் ஓ.எம்.ஆர் (பழைய மகாபலிபுரம் சாலை), காங்கிரீட் காடாக நிமிர்ந்து நிற்பது மொத்தமும் நீர்நிலை​களின் மீதுதான். இதேபோலத்தான், `இந்தியாவின் டெட்ராய்டு’ என அழைக்கப்​படும் ஒரகடமும் மாறிக்​கொண்டிருக்கிறது. மோட்டார் வாகனத் தொழிற்சாலைகள் பலவும் நீர்நிலைகளுக்​குள்ளும், அவற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளுக்​குள்ளும்தான் அமைந்துள்ளன... அமைக்கப்​படுகின்றன. பசுமை விமான நிலையம், செங்கல்பட்டு - ஸ்ரீபெரும்புதூர் ரயில் பாதை என பலவும் இங்கேதான் திட்டமிடப் படுகின்றன. இப்போதே விழித்துக்​கொள்ளா​விட்டால், இந்தப் பகுதி மிக விரைவில் கான்கிரீட் காடாக மாறுவது நிச்சயம். இதன் காரணமாக, எதிர்காலத்தில் பெருவெள்ளப் பாதிப்புகள் பேரழிவை ஏற்படுத்தப்​போவதும் நிச்சயமே!

நீரில்லாத ஏரிகள்!

மழை வெள்ளத்தின்போது பெரும்பாலான ஏரிகளில் இருந்து பாய்ந்த நீர் பாலாற்றில் சேர்ந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாறு கரைபுரண்டு ஓடி, அனைவரையும் அதிசயிக்க வைத்தது. ஆனால், மழை முடிந்து இரண்டு வாரங்களிலேயே சுத்தமாக தண்ணீரே இல்லாமல் கிடக்கும் பாலாற்றைப் பார்த்து அதிர்ந்துதான் போனோம். திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் மழையின்போது நிரம்பி வழிந்த ஏரிகளில் பலவும், தற்போது அதன் கொள்ளளவுக்கான தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பது பேரதிர்ச்சி. உரிய கரைகள் இல்லாமல், கொஞ்சம்போல இருந்த கரைகள் ஆக்கிரமிப்பாளர்களால் உடைக்கப்பட்டு பரிதாபமாகக் கிடக்கின்றன ஏரிகள். சில ஏரிகள் தாறுமாறாகத் தூர்வாரப்பட்டதால் தேங்கிய கொஞ்சநஞ்ச நீரும் கசிந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்போதைய உடனடித் தேவை நீர்நிலைகளைக் கணக்கெடுத்து, கண்காணித்து, தொடர் கவனிப்பில் வைத்திருப்பதுதான். பொதுமக்கள், தன்னார்​வலர்கள், அரசு அலுவலர்கள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் உள்பட பலரும் இதில் கைகள் கோக்கும்போதுதான்... கரைகளைக் காக்க முடியும். அப்போதுதான் இது அந்தக் கால குடிமராமத்துபோல, உண்மையான மராமத்துப் பணியாக மாறி, நீர்நிலைகளை என்றென்றும் வாழவைத்து, நம் வாழ்க்கையையும் செழிப்பாக்கும்.

ஏற்கெனவே, கீழ்க்கட்டளை உள்ளிட்ட ஏரிகளைப் பராமரித்து வரும் அருண் கிருஷ்ண​மூர்த்தியின் இ.எஃப்.ஐ (இந்திய சூழலியலாளர்கள் நிறுவனம்) அமைப்பு, இந்தப் பணிகளில் நம்மோடு கைகோக்க முன்வந்திருக்கிறது.

அனைவரும் வாருங்கள்... கைகள் கோப்போம்... கரைகள் காப்போம்!


ஆலோசனைக் குழு

`நிலம்... நீர்... நீதி!’ ஆலோசனைக் குழுவில் தற்போது இடம்பெற்றிருப்பவர்கள் பற்றிய சிறிய அறிமுகம்...

ராஜேந்திர சிங்
- ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்படும் ‘தருண் பாரத் சங்’ அமைப்பின் தலைவர்: பாலைவனப் பூமியான ராஜஸ்தானில் வறண்டு காணாமல்​போன ஆறுகளை உயிர்ப்பித்து, தற்போது அங்கே விவசாயத்தைச் செழிக்கவைத்துக் கொண்டிருப்பவர்.

டாக்டர் சுரேஷ் - பாமரர் ஆட்சியியல் கூடத்தின் இயக்குநர் மற்றும் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியச் செயலாளர்: வழக்குரைஞரான இவர், நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கு, இந்தியா முழுவதும் பயிற்சிப் பட்டறைகள் நடத்துவதுடன், செயல்​பாட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்துவருகிறார்.

ஜெயஸ்ரீ வெங்கடேசன் - நிர்வாக அறங்காவலர், கேர் ஆஃப் எர்த், சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் இருக்கும் சதுப்பு நிலங்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்துவருபவர்.

பியூஸ் மானூஸ் - சேலம் மக்கள் குழுவின் அமைப்பாளர்: நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பர்களின் கூட்டு முயற்சியில் சேலம் ‘மூக்கனேரி’யைத் தூர் வாரியதுடன், இன்னும் சில நீர்​நிலைகளையும் காக்கும் போரில் குதித்​திருப்பவர்.

வினோத்ராஜ் சேஷன் - நிறுவனர், தண்ணீர் இயக்கம், திருச்சி: சமூக ஊடகங்கள் மூலமாக மக்கள் சக்தியைத் திரட்டி, திருச்சி அருகே உள்ள சூரியூரில் தொடங்க இருந்த பெப்சி குளிர்பான நிறுவன ஆலையை விரட்டி அடித்தவர்.

அருண் கிருஷ்ணமூர்த்தி - நிறுவனர், இ.எஃப்.ஐ (இந்திய சூழலியலாளர்கள் நிறுவனம்), சென்னை: தான் நடத்திவரும் தன்னார்வ அமைப்பு மூலம் சென்னையில் பல ஏரிகளைத் தூய்மைப்படுத்துவதில் முழு நேரமாக இயங்கிக்​கொண்டிருப்பவர்.


எங்களோடு நீங்களும்!

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் பாதுகாப்பை முன்னிறுத்தி விகடன் முன்னெடுத்​திருக்கும் `நிலம்... நீர்... நீதி!’ எனும் இந்த அறப்பணியில், நீங்கள் ஒவ்வொருவருமே கரம் கோக்கலாம். உங்கள் ஊரில் ஆறு, குளம், ஏரி, கால்வாய் என எவையெல்லாம் காணாமல்போயின என்று உங்களுக்குத் தெரியும் என்றால், அனைத்தையும் எங்களுக்கு அனுப்புங்கள்; உங்களிடம் போதிய விவரங்கள் இல்லையா... ஊர்ப் பெரியவர்​களிடம் பேசி, தகவல்களைத் திரட்டுங்கள்; உங்கள் கிராமத்தின் நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் 1975-ம் ஆண்டு வரைபடத்தைக் கேளுங்கள். அதில் ஆறு, ஏரி, குளம் மற்றும் வரத்து வாய்க்கால்கள் பற்றிய விவரங்கள் அனைத்தும் இருக்கும். அவற்றை அடிப்படையாக வைத்து, உங்கள் பகுதியில் வரைபடத்தில் இருக்கும் நீராதாரங்கள் நிஜத்தில் இருக்கின்றனவா எனத் தேடுங்கள்.

ஒவ்வொரு தகவல்களையும் முடிந்தவரை ஆதாரங்களோடு திரட்டுங்கள். தகவல்கள், புகைப்படங்கள் என அனைத்தையும் pukar@namenshame.org என்ற மெயில் முகவரி மூலமாக நீங்கள் பகிர்ந்துகொள்ள முடியும்.

கூடவே, இதற்கென்றே பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 044-6680 2993 என்ற தொலை​பேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டு தாங்கள் கூற விரும்பும் தகவல்களை, குரல் வழிகாட்டு​தலுக்கு ஏற்ப  பதிவுசெய்யலாம். அந்தத் தகவல்களைப் பரிசீலித்து உரிய  வகையில் பயன்படுத்துவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick