“நடிப்பும் வசனமும் இந்தத் தேர்தலில் காணாமல் போகும்...”

ராமதாஸ் தடாலடி

‘‘பசுமை நிறைந்த நினைவுகளே... பாடித்திரிந்த பறவைகளே... பழகிக் கழித்த தோழர்களே... பறந்துசெல்கின்றோம்!’’ என 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பறந்துசென்ற தோழர்கள் இப்போது ஒன்று கூடினார்கள். முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிதான் அது. ஆனால், பழகிக் கழித்த தோழரான டாக்டர் ராமதாஸும் முன்னாள் மாணவராக பங்கேற்றதால் களை கட்டியது நிகழ்ச்சி.

சென்னை மருத்துவக் கல்லூரி 1960-ம் ஆண்டு பேட்ச் மாணவர்கள் அதே கல்லூரியில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றுகூடினார்கள். தங்களுடன் படித்த நண்பர்களைப் பார்க்கும் ஆவலில் முன்னாள் மாணவர்கள் வெளிநாடுகளில் இருந்தெல்லாம் ஆர்வத்துடன் வந்திருந்தனர். வாசலிலேயே நின்று கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். கோட் சூட்டில் வந்தார் ராமதாஸ். பழைய நண்பர்களைச் சந்தித்து பசுமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘55 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்கள் எல்லாம் ஒன்றுகூடியது மகிழ்ச்சியான அனுபவம். எங்க பேட்சில் 150 பேர். சிலர் இப்போது இல்லை. நாகிரெட்டி மருமகன் என்னோட கிளாஸ்மேட்டாக இருந்தார். என்னோட கிளாஸ் மற்றும் ரூம் மேட் கனகராஜ் குடும்ப நண்பராக இப்போதும் தொடர்கிறார்’’ என்றவரிடம் கேள்விகளை அடுக்கினோம்.

‘‘கல்லூரி நாட்கள் எப்படி இருந்தன. ராகிங் எல்லாம் இருந்ததா?”

‘‘அப்ப நான் கிராமத்தான். ஷூ, பெல்ட் எல்லாம் போட்டு ஒயிட் அண்ட் ஒயிட்டில்தான் இருப்பேன். அதை இந்தச் சந்திப்பிலும் சொல்லிச் சிரித்தார்கள். அது எனக்கு அப்போது ஓர்அடையாளமாக இருந்தது. அந்தக் காலத்திலும் ராகிங் உண்டு. வானத்தைப் பார்த்துக் கத்தச் சொல்வார்கள். தரையில் நீச்சல் அடிக்கச் சொல்வார்கள். கல்லூரிக்குள் ‘லில்லி பாண்ட்’ என்ற சின்ன தண்ணீர் தொட்டி இருக்கும். அதில் தூக்கிப் போடுவார்கள். என்னை ராகிங் செய்தபோது வானத்தைப் பார்த்துக் கத்தினேன். நீச்சல் அடிக்கச் சொன்னபோது பாத்ரூம் போய்விட்டு வருகிறேன் எனச் சொல்லி தப்பித்தேன். சீட்டு எழுதிக் கொடுத்து சக மாணவியிடம் கொடுக்கச் சொல்வார்கள். அதில் இருந்தும் நான் தப்பித்துவிட்டேன் (சிரிக்கிறார்). சீட்டில் என்ன எழுதியிருந்தது என நண்பர்களிடம் கேட்டபோது, ‘ஐ லவ் யூ’ என எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். இதில் சிக்கக் கூடாது என்பதற்காக இரண்டு நாட்கள் தலைமறைவாகத் திரிந்தேன். சினிமா, பொழுதுபோக்கு என நண்பர்கள் சுற்றிக்கொண்டி ருந்தபோது, நான் கோகலே ஹாலில் நடக்கும் கூட்டங்களுக்குப் போவேன். பெரியார், அண்ணாவின் கூட்டங்களுக்குச் செல்வேன். பின்னாளில் அரசியலுக்கு வருவோம் என்று அப்போது நினைத்ததுகூட இல்லை.’’

‘‘கல்லூரிக் கால காதல்கள் பற்றி?’’

‘‘அப்ப காதல் எல்லாம் கிடையாது. எங்க பேட்சில் யாரும் காதலித்துக் கல்யாணம் செய்துகொள்ள வில்லை. 150 பேரில் 25 சதவிகிதம் பேர் பெண்கள். படிப்பில்தான் அக்கறை காட்டினோம். ஆங்கில மருத்துவமும் சித்த மருத்துவமும் படித்த என் கிளாஸ்மேட் தெய்வநாயகம் நல்ல படிப்பாளி. கோல்ட் மெடல் வாங்கினான். தமிழ் பற்றாளன். என்னால் மறக்க முடியாத நண்பன்.’’

‘‘ஜெயலலிதா ஆட்சிக்கு உங்கள் மதிப்பெண் என்ன?’’

‘‘மைனஸ் 50. பூஜ்ஜியத்துக்கும் கீழேதான் மார்க் போட முடியும். ஆலோசகர்கள் சொல்வதை கேட்டு ஆட்சி நடத்துகிறார். கூடவே தோழி பரிவாரங்கள் வேறு. அம்மா உணவகம் தொடங்கி எல்லாமே அம்மா அம்மா எனச் சொல்லி  ஸ்டிக்கர் ஒட்டி அம்மா என்கிற வார்த்தைக்கே களங்கத்தை ஏற்படுத்திவிட்டார்கள். 25 சதவிகிதம் இயற்கையும் 75 சதவிகிதம் இவர்களின் அலட்சியம் எனும் செயற்கையும் சேர்ந்துதான் பெருவெள்ளம் ஏற்பட்டது. அதில், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமல் வாட்ஸ்அப்பில் பேசினால் ஆறுதல் ஆகிவிடுமா? மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்தக் கோபத்தை அவர்கள் தேர்தலில் காட்டுவார்கள். நடிப்பும் வசனமும் காணாமல் போய்விடும். நடித்து அரசியலுக்கு வந்தவர்களும் வசனம் எழுதி அரசியலுக்கு வந்தவர்களும் தேர்தலில் காணாமல் போவார்கள். மாற்றத்தை மக்கள் விரும்பத் தொடங்கிவிட்டார்கள். அ.தி.மு.க அடிமைகளுக்கான கட்சியாகிவிட்டது’’

‘‘பா.ம.க-வின் தேர்தல் பயணம் எப்படி இருக்கிறது?’’

‘‘மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி! எனச் சொல்லி முதல்வர் வேட்பாளரை பல மாதங்களுக்கு முன்பே அறிவித்தோம். இந்தத் துணிச்சல் வேறு யாருக்கும் இல்லை. அன்புமணிக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது. அன்புமணியைப் பற்றி பேசாத குடும்பங்கள் கிடையாது. காரணம், அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது செய்த சாதனைகள். சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது நான்கு விருதுகள் வாங்கினார். தமிழகத்தில் 13 மத்திய அமைச்சர்கள் இருந்தபோது நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் நம்பர் 1 இடம் அன்புமணிக்கு கிடைத்தது. ‘லிக்கர்’, ‘டொபோகோ’ லாபியை எதிர்த்து தன்னந்தனியாகப் போராடி புகையிலை, மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்திதான் பொது இடங்களில் புகைபிடிக்க சட்டம் கொண்டுவந்தார். திரைப்படங்களில் எச்சரிக்கை வாசகத்தைக் கொண்டுவந்தார். போலியோ ஒழிப்புக்கு விருது கிடைத்தது. அவருடைய சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். நிச்சயம் பா.ம.க-தான் மாற்றத்தைக் கொண்டு வரும்’’ எனச் சொல்லி பேட்டியை முடித்தார்.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
படங்கள்: ப.சரவணகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick