“தப்பு செஞ்சவங்கள நிம்மதியா தூங்க விடக் கூடாது!”

ரிமோட்டை கீழே போடு... போய் ஓட்டு போடு...பட்டைய கிளப்புது தேர்தல் கமிஷன்!

‘‘ஒரு சிலரைத் தூங்கவிடாமல் இருக்க... நேர்மையாக இருப்பது அவசியம்’’ எனப் பேசி அடுத்த அதிரடிக்கு அச்சாரம் போட்டிருக்கிறார் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்.

சட்டமன்றத் தேர்தலுக்குத் தேதி குறிக்க இன்னும் சில நாட்களே இருக்கின்றன. ஆனால், அதற்குள் தேர்தல் விழிப்பு உணர்வுப் பிரசாரங்கள் தொடங்கிவிட்டன.

‘கண்ணியமான தேர்தல்’ என்ற பிரசாரத் தொடக்கவிழா சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம், சகாயம் ஐ.ஏ.எஸ், சமூக ஆர்வலர் அப்துல் கனி, சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், முனைவர் வசந்திதேவி ஆகியோர் பங்கேற்ற விழா, மாணவர்களோடு சேர்ந்து களை கட்டியது.

முதலில் ராஜேஷ் லக்கானி மைக் பிடித்தார். “எல்லா இளைஞர்களும் ஃபேஸ்புக்கில் இருக்கிறீர்கள். அதனால் நாங்களும் ஃபேஸ்புக்கில் இணைந்திருக்கிறோம். வாக்காளர் பட்டியலில் அதிக மாணவிகள் இணைந்திருக்கிறார்கள். தேர்தலுக்கு மிக முக்கியமானவர்கள் இளையவர்கள்தான். அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயரைப் பதிவுசெய்யுங்கள். பட்டியலில் பெயர் இல்லை என்றால், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் எளிமையான முறையில் பதிவுசெய்யலாம். வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை 1950 என்ற எண் மூலம் சரிபார்த்துக்கொள்ளுங்கள். வாக்காளர் அடையாள அட்டையின் நம்பரை அதில் குறிப்பிட்டால் பெயர் உள்ளதா, இல்லையா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளலாம். பதிலுக்கு வரும் எஸ்.எம்.எஸ்-ஐப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். இந்த உதவி எண்ணுக்கான குரல் தமிழ் மொழியில் வழங்கப்படுகிறது. தேர்தல் கமிஷனின் இணையதளத்திலும் சரிபார்க்கலாம். கல்லூரிகளில் இதற்கென்று ஒரு நாளை ஒதுக்கி, இணையதளத்துக்குச் சென்று எல்லா மாணவர்களும் சரிபார்ப்பதோடு, பெயரைப் பதிவுசெய்யா தவர்களும்  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்க வேண்டும் என்பதில் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்’’ என ஆசிரியர் போல மாணவர் களுக்கு கிளாஸ் எடுத்தார். அதோடு நிற்கவில்லை.

‘‘தேர்தல் நாளன்று, பொழுதுபோக்கில் ஈடுபடாமல் ஓட்டு போட வேண்டியது நமது ஒவ்வொருவருடைய ஜனநாயகக் கடமை. இளைஞர்கள் ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டியது மிகவும் முக்கியம். உங்கள் அம்மா, அப்பாவையும் கட்டாயம் ஓட்டு போடச் சொல்ல வேண்டும். 73 சதவிகிதம் பேர்தான்  தேர்தலில் வாக்களிக்கின்றனர். மற்றவர்களையும் வாக்களிக்க மாணவர்கள் வற்புறுத்த வேண்டும். எஸ்.எம்.எஸ்., ஃபேஸ்புக், டி.வி என எல்லா வழிகளிலும் வாக்களிப்பது பற்றி பிரசாரம் செய்யப் போகிறோம். ‘ரிமோட்டை கீழே போட்டுவிட்டு, போய் ஓட்டு போடு’ என டி.வி-யில் ஸ்லோகன் எல்லாம் போட இருக்கிறோம். தேர்தல் அன்று அரை மணிநேரம் குடும்பமாக வாக்குப்பதிவுக்குச் செலவழியுங்கள். மாணவர்கள் தாமாக முன்வந்து மக்களை வாக்களிக்கத் தூண்ட வேண்டும். நீங்கள்தான் மக்களுக்கும் தேர்தல் கமிஷனுக்கும் இடையே நிற்கும் தூதுவர்கள். தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் 30 அலுவலர்கள் மட்டுமே இருந்தாலும், மாணவர்களே தலைமைத் தேர்தல் அதிகாரிபோல செயல்பட்டால் எங்களால் தேர்தலை நேர்மையாக நடத்த முடியும்’’ எனச் சொன்னவர், அவருடைய செல்போன் எண்ணையும் மாணவர் களுக்குக் கொடுத்தார்.

‘‘எனது செல்போன் எண் 9840433055. தேர்தல் குறித்த ஏதேனும் விவரம் தேவைப்பட்டாலோ, புகார் தெரிவிக்க வேண்டும் என்றாலோ நீங்கள் என்னுடைய மொபைல் போனில் தகவல் அளிக்கலாம். முறைகேடுகள் குறித்த புகைப்படங்களையும் வாட்ஸ்ஆப் மூலம் தெரிவியுங்கள். தேர்தல் முறைகேடு பற்றித் தெரிந்தால் உடனே புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்புங்கள். நேர்மையான, நியாயமான தேர்தல் நடப்பதை உறுதிசெய்யுங்கள். தேர்தல் தொடர்பாக முறைகேடு நடைபெற்றால், 9444123456 என்ற உதவி எண்ணுக்கும் அழைத்துப் புகார் தெரிவிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டையுடன் மாணவிகள் செல்ஃபி எடுத்து அனுப் பினால், சிறந்த செல்ஃபிக்கு பரிசும் உண்டு’’ என்றபோது எழுந்த கைத்தட்டல்களே மாணவர்கள் தயாராகிவிட்டதைச் சொல்லியது.

அடுத்து சகாயம் பேசினார். ‘‘மாணவர்கள்தான் தேசத்தின் மாற்றங்களுக்கு வித்திடுகிறார்கள். தேர்தலை கண்ணியமாக நடத்தும் புரட்சி, மாணவர்களிடம் இருந்துதான் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் கண்ணியமான முறையில் தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. 2011 சட்டசபைத் தேர்தலின்போது நான் மதுரை கலெக்டராக இருந்தேன். மாவட்டத் தேர்தல் அதிகாரி என்ற முறையில் செயல்பட்டேன். தேர்தலை நேர்மையாக நடத்த முடியாது என்று எல்லோரும் அச்சுறுத்தினார்கள். தேர்தல் நடத்த 19 நாட்களே இருந்த சூழ்நிலையில், மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக லைன்ஸ் கிளப், வர்த்தக கூட்டமைப்பு, வணிகர் சங்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை அணுகினேன். யாருமே வரவில்லை. அதனால் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய மகத்தான சக்தியான மாணவர்களை அணுகினேன். பணம் வாங்கி ஓட்டு போடக் கூடாது என்பதை நீங்கள் பின்பற்றுவது மட்டுமல்ல, பெற்றோர்களிடமும் சொல்ல வேண்டும் என்றேன். எனது செல்போனை மாணவரிடம் கொடுத்து, மேடையில் இருந்தபடியே பெற்றோரிடம் பேசச்சொன்னேன். இந்த முயற்சி வெற்றியைத் தந்தது. ‘எனது ஓட்டு விற்பனைக்கல்ல’ என மதுரையில் பல வீடுகளில் மக்கள் எழுதி வைத்தனர். ‘காலையில் போதனை. மாலையில் வாகனச் சோதனை’ எனத் தேர்தல் களத்தில் பணியாற்றியதால்தான் நேர்மையான தேர்தலைச் சாதிக்க முடிந்தது. தனக்கு ஓட்டுக்காக தந்த 500 ரூபாயை அரசு நிர்வாகத்திடம் வந்து கொடுத்தார் ஒரு விவசாயி. காரணம் கேட்டபோது, கல்லூரியில் படிக்கும் என் மகள் சொன்னார். எனவே, பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போட விரும்பவில்லை’ என்றார். இப்போதும் அதே போன்றே தேர்தல் நடக்கும்.

நேர்மையாக நடப்பது இரவில் நிம்மதியாக தூங்குவதற்கல்ல. புகழுக்காகவோ, சொர்க்கத்துக்கு செல்வதற்காகவோ அல்ல. தவறு இழைப்பவர்களை நிம்மதியாக தூங்கவிடக் கூடாது என்பதற்காகத் தான். தேசத்தை நேசிப்பதன் அடையாளம்தான் நேர்மை. எனது தலைவன் நேர்மையாக, ஊழலற்ற வனாக இருக்கவேண்டும் என்று எண்ணுவது நமது அடிப்படை உரிமை. நேர்மையின்மைக்கு இணையான பொறுப்பின்மையும் ஊழலுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. பொறுப்பின்மையால் பலவற்றைத் தேசம் இழந்திருக்கிறது. நேர்மையாக தேர்தல் நடைபெறுவதற்கு நீங்கள் உதவி செய்யுங்கள். அதுதான் இந்தத் தேசத்துக்கு நீங்கள் காட்டும் நன்றி. இந்தத் தேர்தலை நேர்மையாக நடப்பதற்கு இந்த முறை மாணவர், இளைஞர் சக்தி உறுதுணையாக இருக்கவேண்டும்’’ என முத்தாய்ப்பாய் பேச்சை முடித்தார் சகாயம். விசில் சத்தம் பறந்தது.

ஓட்டு கத்தியை கூர்தீட்டிக்கொண்டு வாக்குச்சாவடி வரிசையில் போய் நில்லுங்கள்!

- மு.சித்தார்த்,

படங்கள்: தி.ஹரிஹரன், மா.பி.சித்தார்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick