கச்சா எண்ணெய் அரசியல்!

பெட்ரோல் விலை ஏன் குறையவில்லை?

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் விலை, கடும் சரிவை சந்தித்துள்ளது. அதாவது, 12 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைக்கு விலை இறங்கிவிட்டது. 2014 ஏப்ரலில் 105 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, 2015 ஜனவரியில் 50 டாலர்கள், மார்ச் மாதத்தில் 44 டாலர்கள் என சரிந்தது. கடந்த டிசம்பரில் 40 டாலர்களுக்கும் குறைவாக கீழே இறங்கத் தொடங்கி, மளமளவென சரிந்து தற்போது 30 டாலர்கள் என்ற அளவுக்கு வந்துவிட்டது. 10 டாலர்கள் வரைகூடப் போகும் என்று நிபுணர்கள் சிலர் சொல்கிறார்கள். ஆனாலும் பெட்ரோல் விலை குறையவில்லை!

சரிவுக்குக்கான காரணங்கள்…

1999 தொடங்கி 2008 வரை எண்ணெய் விலையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஏற்றம் இருந்தது. சீனாவிலும், இந்தியாவிலும் எண்ணெய் தேவை அதிகரித்ததுதான், அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. 2008 ஜூலையில் பீப்பாய் ஒன்று 145 டாலர்கள் என உயர்ந்தது.  தற்போதைய விலை சரிவுக்கு, கச்சா எண்ணெய் சப்ளை அதிகமாக இருப்பதும், சீன பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதுமே முக்கியக் காரணங்கள் என்று சொல்லப்படுகிறது. ‘ஒபெக்’ எனப்படும் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பில் முதன்மை நாடான சவுதி அரேபியா, நாள் ஒன்றுக்கு 1.5 மில்லின் பீப்பாய்களாக உற்பத்தியை அதிகரித்தது. அதுவே, எண்ணெய் மார்க்கெட் நிலைகுலைந்து போனதற்கு முக்கியக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. 2014-ல் அமெரிக்கா தனது சொந்த எண்ணெய் உற்பத்தியை அதிகரித்ததும், வளரும் நாடுகளில் எண்ணெய் தேவை குறைந்து போயிருப்பதும் இந்த விலை குறைவுக்குக் காரணம் என்றும் சொல்கிறார்கள்.

பெட்ரோல் விலை ஏன் குறையவில்லை?

145 டாலர்கள் என்ற அளவுக்குப் போன எண்ணெய் விலை 30 டாலர்களாக சரிந்து இருப்பது, இந்தியா உட்பட எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்குப் பெரும் லாபம். இந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தும் போதெல்லாம், “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது. எனவே, பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை”என்றுஅரசுத் தரப்பில் சொல்லப்படுவது வழக்கம். இப்போது, கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ளதே. பெட்ரோல்,டீசல் விலைகளை கணிசமாகக் குறைத்திருக்க வேண்டாமா?கண்துடைப்புக்காக  ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் குறைக்கிறார்களே ஒழிய, நியாயமான விலை குறைப்பு என்பது இல்லை.

பெட்ரோல், டீசல் விலை குறையாது!

“பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிக்கும் அதிகாரம் முன்பு அரசிடம் இருந்தது. அந்த அதிகாரத்தை இப்போது எண்ணெய் கம்பெனிகளுக்கு தாரைவார்த்து விட்டார்கள். முன்பு, இந்தியாவில் அனைத்து எண்ணெய் கம்பெனிகளும் அரசின் கைவசம் இருந்தன. ஆனால் இப்போது, 50 சதவிகிதத்துக்கு மேல் தனியார் ஆதிக்கம் இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ள சூழலைப் பயன்டுத்தி தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. கண்துடைப்புக்காக 50 பைசா, ஒரு ரூபாய் என்று பெட்ரோல், டீசல் விலைகளை அவ்வப்போது குறைக்கிறார்கள். கச்சா எண்ணெய் விலை 10 டாலராக இறங்கிவந்தால்கூட, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவே மாட்டார்கள். காரணம், ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் அன்னிய முதலீடுகளை அதிகமாக ஈர்க்க வேண்டும் என்றால், தங்களுடைய நிறுவனங்களின் லாபத்தை பங்குச்சந்தையில் அதிகமாகக் காட்ட வேண்டும். எனவே பெட்ரோல், டீசல் மீது அதிகமான லாபத்தை வைக்கிறார்கள்” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் வே.மீனாட்சி சுந்தரம்.

வரிகள் அதிகம்…

பெட்ரோல், டீசல் மீது மிக அதிகமாக வரிகள் போடும் நாடு இந்தியா மட்டும்தான். பெட்ரோல் விலையில் பாதிக்கு மேல் வரிகள்தான். இந்தக் கொடுமை உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை. கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றி அமைப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் சொல்லிக்கொள்கின்றன. அதன்படி, கடந்த டிசம்பர் 15-ம் தேதி இரவு டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 50 காசுகளும், டீசல் லிட்டருக்கு 46 காசுகளும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வந்தவுடனே பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்திவிட்டது. பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ.1.17 காசுகளும் உயர்த்தப்பட்டன. இதன் மூலம் அரசுக்கு 2,500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

2015-ல் கச்சா எண்ணெய் விலை, ஒருபுறம் சரிந்துகொண்டே வந்தாலும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்திக்கொண்டே வந்தது. கடந்த ஆண்டில் மட்டும் 5 முறைக்கு மேல் கலால் வரியை உயர்த்தப்பட்டது. 2014-ல் கலால் வரி மூலம் ரூ. 9,184 கோடி வருவாயை மத்திய அரசு ஈட்டியது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பெட்ரோல் விலை 10 முறையும், டீசல் விலை 6 முறையும் குறைக்கப் பட்டுள்ளது. ஆனாலும், பெட்ரோல், டீசல் விலைகளில் பெரிய மாற்றம் இல்லை.

வரிகளைக் குறைக்க முடியாது!

“2009-ல் 35 டாலர்களாக இருந்த எண்ணெய் விலை, 120 டாலர்கள் வரை அதிகரித்தது. எண்ணெய் விலை ஏறுமுகத்தில் இருந்தபோது, பெரும்பாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தான் இருந்தது. கச்சா எண்ணெய்விலை உயர்ந்தபோதிலும், 2004-ல் இருந்து 2013 வரை பெட்ரோல், டீசல் விலை ஒரே மாதிரியாகவே இருந்தது. அதன் விளைவு, நம் எதிர்கால சந்ததியினர், 10 லட்சம் கோடி ரூபாயை வரியாக செலுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். பொருளாதார ரீதியாக, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னால் இந்தியா போய்விட்டது. இப்போது உள்ள அரசும் அதே கொள்கையைக் கடைப்பிடித்தால், எதிர்கால இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குப் போய்விடும். எனவே, வரிகளைக் குறைக்க முடியாது’’ என்கிறார் பொருளாதார நிபுணர் ஷியாம் சேகர்,

சரிவின் பின்னால் அரசியல்!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பொருளாதாரத் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா, “தற்போது, உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் குறைவாக இருக்கிறது. தொழில்நுட்ப மாற்றங்கள் வருகின்றன. எனவே, எண்ணெய் பயன்பாடு குறைகிறது. அது தவிர, கச்சா எண்ணெய் விலை சரிவதற்குப் பின்னால், ஒரு அரசியலும் இருக்கிறது. ரஷ்யா, வெனிசுலா போன்ற நாடுகளை நெருக்கடிக்கு உள்ளாக்க நினைக்கிறார்கள். எண்ணெய் விலை சரிந்தால், அது அந்த நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதிக்கும். எண்ணெய் விலை சரியட்டும்; பிறகு, மாற்று எரிபொருள் பயன்படுத்துபவர்கள் அனைவரும் காலியாகிவிடுவார்கள்; அதன் பிறகு மீண்டும் விலையை உயர்த்திவிடலாம் என்று நினைக்கிறார்கள். பெட்ரோலியப் பொருட்கள் மீது அதிக வரிகள் விதிக்கப்பட்டு இருப்பது நியாயம் அல்ல. அதனால், தனியார் கம்பெனிகளும் கொள்ளை லாபம் அடிக்கின்றன. வரிகளைக் குறைத்து பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு உடடினயாக மேற்கொள்ள வேண்டும். அதுதான் நியாயமான ஒன்றாக இருக்கும்” என்கிறார்.

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு எகிறிய அத்தியாசியப் பொருட்களின் விலைகள் இன்னும் குறைந்தபாடில்லை. அதற்கான அறிகுறியும் இல்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வுக்கு, எண்ணெய் விலை உயர்வும் ஒரு காரணமாகச் சொல்லப்படுவது உண்டு. கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளைக் குறைத்தால், விலைவாசியும் குறையுமே.

செய்வாரா மோடி!

-ஆ.பழனியப்பன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick