“தோற்கப்போகும் கட்சிக்கு ஓட்டு போடக் கூடாது!”

சோ-வின் அ.தி.மு.க ஆதரவுப் பேச்சு

ல அரசியல் மாற்றங்களை விவாதிக்கும் மேடையாக ஆண்டுதோறும் எதிர்பார்க்கப் படுவது துக்ளக் ஆண்டுவிழா. கண்ணுக்கு எட்டும் தூரத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தல் என்பதால், இந்த ஆண்டு கூடுதல் எதிர்பார்ப்பு.

சென்னை மியூசிக் அகாடமியில் கடந்த வியாழக்கிழமை நடந்த விழாவில், `இன்றைய அரசியல்’ என்ற தலைப்பில் அரசியல் தலைவர்கள் பேசினர். கடந்த இரண்டு வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ​மனைக்கும் வீட்டுக்குமாக இருக்கும் பத்திரிகையாளர் சோ, இந்த ஆண்டு விழாவில் கலந்துகொள்வாரா என்ற சந்தேகம் எழுந்தது. விழாவின் அழைப்பிதழில் சோ பேசுவார் என்று போடப்பட்டு ‘இயன்றவரை’ என்ற வார்த்தை அடைப்புக்குறிக்குள் இருந்தது. அடுத்தவர்களை மட்டுமல்ல, தன்னையும் கிண்டல் செய்துகொள்ளத் தயங்காதவர் சோ. அதை இப்போதும் நிரூபித்தார்.

எலெக்ட்ரானிக் வீல் சேரில் மருத்துவக் கருவிகள் பொறுத்தப்பட்டு, வழக்கமான பச்சை சஃபாரி உடையோடு மேடையில் சோ தோன்ற, அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் உற்சாகக் கரவொலி எழுப்பினர். “மருத்துவர்கள் என்னை அதிகம் பேசக் கூடாது என்று சொல்லியுள்ளனர். இருந்தாலும் நான் எனது கருத்தைச் சொல்கிறேன்” என்று தொண்டை செருமலோடு பேச்சைத் தொடங்கினார்.

“அ.தி.மு.க அரசு மீது குறைகள் இருந்தாலும் நிறைகள் இருக்கின்றன. தொழில்வளம் பெருக வழிசெய்துள்ளனர். மத்திய அரசிடம் போராடித் திட்டங்களைப் பெற்றுள்ளனர். அதை​யெல்லாம்​விட, இந்த அரசு வந்ததால்தான் ஒரு குடும்ப ஆட்சி போனது. குடும்ப ஆட்சி திரும்பி வந்துவிட நமது ஓட்டு பயன்படக் கூடாது. நிச்சயமாகத் தோற்க போகும் கட்சிக்கு ஓட்டு போ​டக் கூடாது. மத்தியில் மோடி ஆட்சி சிறப்பாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சி போல இந்த அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை” என்று பேசினார். அவரது பேச்சு
அ.தி.மு.க-வை ஆதரிப்பதாக இருந்தது.

பல கட்சித் தலைவர்களைப் பேச அழைத்து அவர்கள் முன்னிலையில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக சோ பேசியது குறித்து அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தலைவர்களிடம் கேட்டோம்.

பொன்.ராதாகிருஷ்ணன் (பி.ஜே.பி.): ‘‘சோ தனது அரசியல் பார்வையைத் தெளிவாக்கி இருக்கிறார். சோ சொன்னதுபோல வராது வந்த மாமணியாய் மோடி அரசு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. தமிழகத்திலும் பி.ஜே.பி ஆட்சி அமைய வேண்டும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுபோல தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வரும். 1967-ம் ஆண்டு தேர்தலில் செய்த, தவற்றை தமிழகம் மீண்டும் ஒருமுறை செய்துவிடக் கூடாது.”

எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் (த.மா.கா.): ‘‘பல்வேறு கட்சித் தலைவர்கள், பேசினார்கள். அவரவர் கருத்துகளை வெளியிட்டார்கள். ஆசிரியர் என்ற முறையிலும் விழாத் தலைவர் என்ற முறையிலும் சோ தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி இருக்கிறார். எனவே, இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.’’

டாக்டர் அன்புமணி ராமதாஸ் (பா.ம.க.): ‘‘விழாவில், ‘அ.தி.மு.க ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை. ஊழல் இருக்கிறது’ என்று சோ சொல்லி இருக்கிறார். இதுதான் மக்களின் பெரிய பிரச்னைகள். இந்த இரண்டும் இருக்கும் ஆட்சி திரும்பவும் வரக் கூடாது. தி.மு.க-வைப்பற்றி சோ பேசுகையில், ‘ஊழல், குடும்ப ஆட்சி வந்துவிடக்​கூடாது’ என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறார். ‘அ.தி.மு.க வரணும்’ என்று அவர் சொன்னதையும் ‘தி.மு.க-வைவிட, அ.தி.மு.க பரவாயில்லை’ என்று சொன்னதையும் விழாவில் கலந்துகொண்ட பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘இரண்டு பேருமே வேண்டாம்’ என்றுதான் நான் பேசினேன். வெளியே நான் வந்தபோது, நான் சொன்ன கருத்தை வரவேற்றுப் பாராட்டினார்கள். புதிய தலைமைதான் தமிழகத்துக்கு இப்போதைய தேவை.’’

சரத்குமார் (ச.ம.க.): ‘‘இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அவர்கள் கையில்தான் நாட்டின் எதிர்காலமே இருக்கிறது என நான் என் கருத்தைப் பதிவுசெய்தேன். இப்படி ஒவ்வொரு தலைவரும் அவரவர் கருத்தைப் பதிவுசெய்தார்கள். விழா தலைவர் என்ற முறையில் ஆசிரியர் சோ, அவருடைய கருத்தைச் சொன்னார்.’’

சோ சொன்னது தடாலடி விமர்சனங்களைக் கிளப்பி உள்ளது.

- எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர்

படம்: சு.குமரேசன்


வெளியேறிய இளங்கோவன்!

மோடியைப் புகழ்ந்து சோ பேசிக்கொண்டிருந்தபோது, அதிருப்தி அடைந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடனே மேடையை விட்டுச் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பினார். இதுகுறித்து அவரிடம் கேட்டோம். ‘‘அனைத்துக் கட்சித் தலைவர்களும் மேடை ஏறிய நிகழ்ச்சியில், எத்தகைய அரசியல் காழ்ப்பு உணர்ச்சியும் இல்லாமல் மேடை நாகரிகத்தோடு தலைவர்கள் பேசினர். ‘இளைஞர்கள் நன்றாகப் படித்து நாட்டை வளப்படுத்த வேண்டும். அவரவர் குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டும். பணத்தாசையோடு யாரும் அரசியலுக்கு வரக் கூடாது’ என்று, நான் பேசினேன். ஆனால், நிறைவுரை ஆற்றிய சோ, மோடி அரசையும் ஜெயலலிதாவையும் புகழ்ந்தார். அவர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். அதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர் பேசியதற்கு பதில் சொல்லவும் வாய்ப்பு இல்லை. எனவே, விழாவில் இருந்து வெளியேறினேன். அனுபவமிக்க மூத்தவரான சோ, இப்படி பேசியது சரியல்ல.’’ 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick