வாட்ஸ்அப்பில் வைரலாகும் போலீஸாரின் கோரிக்கைகள்!

நடவடிக்கை எடுக்குமா அரசு?

‘நான் போலீஸ்காரன்’ என்று மிடுக்கோடு உலாவும் காக்கிச் சீருடைக்காரர்களுக்கு  உள்ளேயும் சொல்ல முடியாத பல துயரங்கள் மறைந்து இருக்கின்றன.

கடந்த சில வாரங்களாக வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவி வருகிறது தமிழகக் காவல் துறை சம்பந்தப்பட்ட தகவல்.

அதில், ‘‘10-ம் வகுப்பு தகுதி அடிப்படையில் வேலைக்குச் செல்லும் அரசு ஊழியர்களுக்கு தர ஊதியம் 2,400 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால், அதே தகுதியில் காவலர் பணியில் சேருபவர்களுக்கு 1,900 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். காவலர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்கப்படுவதை 7 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும். பயணப்படி 10 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்த்த வேண்டும். உணவுப்படியை 200 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர்த்த வேண்டும். 8 மணி நேர வேலை, அனைத்து மாவட்டங்களிலும் காவலர் நல அமைப்பு ஏற்படுத்த வேண்டும். ஒரு காவலருக்கு ஒரு வேலை’’ என தமிழக காவல் துறையினரின் 9 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

அதோடு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக டி.கே. ராஜேந்திரன் கடந்த அக்டோபர் 13-ம் தேதி பொறுப்பேற்றபோது, ‘காவலர்களின் குறைகள் கனிவோடு பரிசீலிக்கப்படும்’ என்று கூறினார். அந்த வாக்குறுதி என்னவாயிற்று’’ என்று வாட்ஸ்அப் தகவல் குமுறுகிறது.

இந்த வாட்ஸ்அப் தகவல் எதற்காக? இதை வெளியிட்டவர்கள் யார் என்று விசாரணையில் இறங்கினோம். பாதிக்கப்பட்ட காவலர்களின் மனக்குமுறலே இந்த வாட்ஸ்அப்பின் வெளிப்பாடு என்றும், சென்னை போலீஸார்தான் இந்த வாட்ஸ்அப்பை வெளியிட்டுள்ளனர் என்றும் தெரியவந்தது.
இதுதொடர்பாக 32 வருடங்கள் காவல் துறையில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், ‘‘1983-ல் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிக்குச் சேர்ந்தேன். 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்நிலை காவலர் ஆனேன். அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமைக் காவலராகப் பதவி உயர்வு கிடைத்தது. அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு சப்-இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் என்னைவிட ஜூனியர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்குக் காரணம் உயர் அதிகாரிகள். உயர் அதிகாரிகளுக்கு மட்டும் பதவி உயர்வு அந்தந்தக் காலத்திலேயே வழங்கப்படுகின்றன. தமிழக காவல் துறையில் போதிய எண்ணிக்கையில் காவலர்கள் இல்லை. அதனால், வேலைப்பளுவும் அதிகமாக இருக்கிறது. காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு 80 சதவிகிதத்தினருக்கு விடுமுறை என்பது குதிரைக் கொம்பு’’ என்றார்.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவலர் நலச் சங்க மாநிலத் தலைவர் எஸ்.பி சக்திவேல், ‘‘அரசாணை 15-ல் காவலர் களுக்கான பதவி உயர்வு குறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றமும் காவல் துறையில் 35 ஆண்டுகள் பணியாற்றினால், அவருக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழக காவல் துறை இதில் எதையும் பின்பற்றுவதில்லை. 1985 முதல் 1996 வரை பதவி உயர்வுகளுக்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட வில்லை. ஆர்டர்லி முறைகள் இருக்கக் கூடாது” என்றார்.

இதுகுறித்து டி.ஜி.பி அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், ‘‘தமிழகக் காவல் துறையில் காவலர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட சில பிரச்னைகள் இருப்பது உண்மைதான். காவலர்கள் தங்களது குறைகளை உயர் அதிகாரிகள் மூலம் தீர்வு காண குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. சில கோரிக்கைகளைத் தீர்க்கும் அதிகாரம் அரசிடம் உள்ளது. காவலர் தொடர்பான பிரச்னைகளை உடனுக்குடன் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று வருகிறோம்’’ என்றார்.

துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?

- எஸ்.மகேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick