பண்டிகை நாட்களில் பகல்கொள்ளை!

வேட்டையாடும் பேருந்து நிறுவனங்கள்... வேதனையில் வெளியூர் பயணிகள்!

“தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை, தங்கள் சொந்த மண்ணில் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிப்பதை உறுதிசெய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தனியார் பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டால், பெறப்படும் புகார்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று பொங்கலுக்கு முன் அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.

ஆனால், முதல்வர் உத்தரவை ஆம்னி பஸ் நிறுவனங்கள் மதிக்கவே இல்லை. பொங்கல் பண்டிகைக்காக ஊருக்குச் சென்றவர்களிடம், வழக்கமான கட்டணத்தைவிட இரண்டு, மூன்று மடங்கு உயர்த்தி வாங்கியிருக்கிறார்கள். முதல்வர் அறிக்கையில் கொடுத்த தொலைபேசி எண்ணில் புகார் கொடுத்தால், ‘உங்க பெயர் என்ன? எந்த ஊர்? எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க? எந்த பஸ்? என்று கேட்டுவிட்டு, அதிகாரிகள் உங்களைக் கூப்பிடுவார்கள்’ என்று முடித்துக்கொண்டனர்.

‘‘பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சென்னையில் இருந்து கரூர் போகும்போது வழக்கத்தைவிட 400 ரூபாய் அதிகம் வாங்கினாங்க. திரும்பி வரும்போது, ‘ரெட் பஸ்’ ஆப்-ல புக் செய்தேன். அங்கும் அதிர்ச்சிதான். வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிகக் கட்டணம் நிர்ணயித்தி ருந்தார்கள். வேறு வழியில்லாமல், பதிவுசெய்து சென்னைக்கு வந்தேன். நான் வந்த ஆம்னி பஸ்ஸில் நார்மலாக வாங்குற கட்டணம் 600 ரூபாய். ஆனால், பொங்கல் சமயத்தில் 1,299 ரூபாய் ஆகிவிட்டது’’ என்று வேதனைப்பட்டார் தினேஷ்.

ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அப்சலிடம் பேசினோம். “சில ஆம்னி பஸ் நிறுவனங்கள் ஆன்லைன் முன்பதிவுக்கு அதிகக் கட்டணம் வசூலித்தார்கள். அதே நேரத்தில், அதிகக் கட்டணம் வசூலித்த சில ஆம்னி பஸ்கள்,  கூடுதல் தொகையை பயணிகளிடமே திருப்பிக்கொடுத்து இருக்கின்றன. பல நூறு ஆம்னி பஸ்கள் சென்னை வந்து செல்கின்றன. ஒவ்வொரு பஸ்ஸையும் கண்காணிக்க முடியுமா? அதுவும், பண்டிகைக் காலங்களில் டிக்கெட் விலை கொஞ்சம் முன்னே, பின்னே இருக்கத்தானே செய்யும். அதை எப்படித் தடுக்க முடியும்? அதிகக் கட்டணம் வாங்கிய சில ஆம்னி பஸ்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்கள். ஆறு பேருந்துகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். அந்த பஸ்களில் பயணம்செய்ய முன்பதிவு செய்த பயணிகளுக்கு மாற்றுப் பேருந்துகளை ஏற்பாடு செய்துகொடுத்தோம்.

எல்லோரும் ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளைனு சொல்றாங்க. அது தவறு. நாங்கள், திருவிழா போன்று விடுமுறை தினங்களில்தான் உண்மையான கட்டணத்தை வாங்குகிறோம். மற்ற சமயங்களில் வேறு வழியில்லாமல்தான் கட்டணத்தைக் குறைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. உண்மையான கட்டணத்தை வசூலித்தால், அதைக் கட்டணக் கொள்ளை என்கிறார்கள். ஒரு ஆம்னி பஸ்ஸுக்கு ஒரு வாரத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் மாதம் ஒன்றுக்கு சுமார் 1 லட்சம் ரூபாய் வரியாகக் கட்டுகிறோம். மூன்று மாதங்களுக்கு 3 லட்சம் ரூபாய். டோல்கேட் கட்டணம் தனி. மதுரையில் இருந்து சென்னை வர ஒரு டிரிப்புக்கு 2,000 ரூபாய் கட்டணம் ஆகிறது. இப்படி, கூட்டிக் கழித்துப் பார்த்தால் மிகவும் சொற்ப லாபத்துக்குதான் பஸ்களை இயக்குகிறோம்” என்றார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.தங்கமணியிடம் கேட்டபோது, “நானே நேரடியாகக் களத்தில் இறங்கினேன். அதிகக் கட்டணம் வசூலித்த 100 பஸ்களுக்கு அபராதம் விதித்து இருக்கிறோம். அதிகம் வசூலிக்கப்பட்ட தொகையை மக்களிடம் திருப்பிச் சேர்த்து இருக்கிறோம். 10 பஸ்களைப் பிடித்து வைத்திருக்கோம். பயணிகளிடம் இருந்து புகார் வந்ததும் உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீங்களே விசாரியுங்கள்” என்றார்.

044-24794709 என்ற புகார் எண்ணுக்கு நாமும் போன் செய்தோம். “இது கோயம்பேடு, டைம் ஆபிஸ் நம்பர் சார். உங்க புகாரைச் சொல்லுங்க” எனக் கேட்டனர். விவரங்களைச் சொன்னோம். “நாங்க திரும்பவும் கூப்பிடுவோம்” என்றனர். அதன்பின் எந்தவிதப் பதிலும் இல்லை.

முதல்வர் அறிவித்த புகார் எண்ணின் ரெஸ்பான்ஸ் லட்சணம் இதுதான்!

- நா.சிபிச்சக்கரவர்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick