கழுகார் பதில்கள்!

பொன்விழி, அன்னூர்.

 தொடர்ந்து தி.மு.க-வை விஜயகாந்த் திட்டி வருகிறார். அப்படி இருந்தும் அவரை கருணாநிதி கூட்டணிக்கு அழைப்பது ஏன்?


 விஜயகாந்த் திட்டுவதற்கான காரணம் கருணாநிதிக்கு நன்கு தெரியும். அதனால்தான் அமைதியாக இருக்கிறார். யாராவது சின்னதாக ஒரு விமர்சனம் வைத்தால்கூட பதில் அறிக்கையோ, கேள்வி பதில் மூலமான எதிர்வினையோ ஆற்றும் கருணாநிதி, விஜயகாந்த்துக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் இருப்பதைப் பார்த்தால் தெரியவில்லையா? நடப்பது கண்ணாமூச்சி ஆட்டம்தான் என்று!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

 தி.மு.க கூட்டணியை காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மனப்பூர்வமாக ஏற்கிறாரா?

 அப்படித்தான் அவரைச் சுற்றி இருப்பவர்கள் சொல்கிறார்கள். ‘தி.மு.க-வுடன் கைகோத்துவிட்டார் இளங்கோவன்’, ‘கருணாநிதியின் ஊதுகுழலாக இளங்கோவன் மாறிவிட்டார்’ என்று காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சிலர், டெல்லிக்கு மொட்டைக் கடிதம் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். அதைத் தடுப்பதற்காகத்தான் தி.மு.க பக்கம், தான் முழுமையாக சாய்ந்து விடவில்லை என்பதைப்போல இளங்கோவன் காட்டிக்கொண்டு வருகிறார். உதாசீனப்படுத்துவதுபோல அவர் பேசிக்கொண்டு இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள் அவர்கள்.

டி.சி.இமானுவேல், மயிலாடுதுறை.

 கட்சித் தொண்டர்களையும் பத்திரிகை​யாளர்களையும் கேவலமாக மதிக்கும் விஜயகாந்த், கட்சி நடத்தத் தகுதி​யானவரா?


 விஜயகாந்த் நடந்துகொள்வது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிகிறது. இன்னும் சில தலைவர்கள் நடந்துகொள்வது வெளியில் தெரிவது இல்லை. தொண்டர்களைப் பொது இடத்தில் காலில் விழவைப்பதும், கேள்வி கேட்கும் நிருபரை, ‘நீங்க எந்தப் பத்திரிகை?’ என்று கேட்பதும் இதுபோன்ற காரியங்கள்தான்!

தாமஸ் மனோகரன், புதுச்சேரி-4.

 பி.ஜே.பி. தமிழகத்தில் பலமுள்ள கட்சியா, பலவீனமான கட்சியா?


  இது அந்தக் கட்சிக்கே தெரியாது. இதனைத் தெரிந்துகொள்வதற்காக இந்தச் சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் தனித்து நின்று அறிந்துகொள்ள வேண்டும். செய்வார்களா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்