மிஸ்டர் கழுகு: “தி.மு.க. ஓ.கே.” - ராகுல் சிக்னல்!

சீக்ரெட் மீட்டிங் - முழு விவரம்

ழுகார் நம்முன் ஆஜர் ஆனதும், ‘‘தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடந்த இரண்டு மூன்று நாட்களாக டெல்லியில் முகாம் இட்டுள்ளார்களே... என்ன தகவல்?” என்ற கேள்வியைப் போட்டோம்.

‘‘ஆமாம்! அந்தத் தகவல்களைத்தான் அள்ளிக் கொண்டு வந்துள்ளேன். தி.மு.க-வுடன் கைகோக்க காங்கிரஸ் தயார் ஆகிவிட்டது. அதற்கு, ராகுல் காந்தியும் மனப்பூர்வமாக சம்மதம் தெரிவித்து விட்டார்” என்ற பீடிகையுடன் சொல்ல ஆரம்பித்தார் கழுகார்.

‘‘தமிழக காங்கிரஸ் தலைவர்கள்  20-ம் தேதி ராகுலைச் சந்தித்த தகவலை அடுத்துச் சொல்கிறேன். அதற்கு முன்னதாக 14-ம் தேதி முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர்களில் ஒருவருமான திருநாவுக்கரசர், டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்துள்ளார். அப்போதே ராகுலின் மூட் என்ன என்பது தெரிந்துவிட்டதாம்.”

‘‘அதைப் பற்றி முதலில் சொல்லும்!”

‘‘ராகுல் காந்தியை சந்தித்த திருநாவுக்கரசர், ‘சட்டமன்றத் தேர்தலை காங்கிரஸ் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸின் செல்வாக்கை உயர்த்திக்காட்ட வேண்டும். அதற்காக நீங்கள் கலந்துகொள்ளும் ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும். இதை உடனடியாக நடத்தினால்தான் கட்சிகள், பொதுமக்கள் மத்தியில் காங்கிரஸ் கவனத்தை ஈர்க்க முடியும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் மத்தியில் ஒருங்கிணைப்புத் தேவைப்படுகிறது. சேர்ந்து செயல்படுவதற்கு வசதியாக ஒரு கமிட்டியை நியமியுங்கள். கட்சியின் முக்கியப் பிரமுகர்களை நீங்கள் டெல்லிக்கு வரச் சொல்லி கருத்துக்களைக் கேளுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார். இதனை கவனமாகக் கேட்டுக்கொண்டார் ராகுல். ‘உடனடியாக முகுல் வாஸ்னிக்கை சென்று சந்தியுங்கள்’ என்றும் சொல்லி இருக்கிறார். கூட்டணி பற்றி பேச்சு வந்துள்ளது. அப்போது திருநாவுக்கரசர், ‘இன்றைய நிலையில் தி.மு.க நமக்கு வெளிப்படையாக அழைப்புவிடுத்துள்ளது. அதுதான் நம்முடைய சாய்ஸாக இருக்க முடியும்’ என்று சொல்லி இருக்கிறார். ‘தமிழ்நாடு காங்கிரஸ் எடுக்கும் முடிவை நான் ஆதரிப்பேன்’ என்று அப்போது ராகுல் சொல்லி இருக்கிறார்.”

‘‘அப்புறம்?”

‘‘முகுல் வாஸ்னிக்கையும் திருநாவுக்கரசர் பார்த்துள்ளார். அதன் அடிப்படையில் ஒரு கலந்துரையாடல் திட்டமிடப்பட்டது. 20-ம் தேதி அனைவரையும் டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார் ராகுல். மாநிலத் தலைவர் இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு மற்றும் கிருஷ்ணசாமி, டாக்டர் செல்லகுமார், டாக்டர் ஜெயக்குமார் ஆகியோர் ராகுலை சந்தித்தார்கள். நீலகிரி பிரபு, மணிசங்கர் அய்யர், குமரி அனந்தன் ஆகிய மூவரும் வரவில்லை. இந்தச் சந்திப்பை பெரும்பாலும் இளங்கோவனைக் குறைச் சொல்லவே மற்றவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். ‘நான் பேசிக் கொண்டு இருந்தபோது சட்டையைப் பிடித்து இழுத்து என்னை அடிக்க வந்தார் இளங்கோவன்’ என்று டாக்டர் செல்லகுமார் குற்றம்சாட்டி உள்ளார். அப்போது இளங்கோவன், ‘அது முக்கியமான கூட்டம். அதில் பேசிய செல்லகுமார், அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத சிதம்பரத்தை பற்றிக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் நிறைய பேர் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். அவர்கள் கோபம் ஆகி, இவரை எதுவும் செய்துவிடக் கூடாது என்பதால்தான்... மேலும் பேச வேண்டாம் என்று சொல்லி அவரது சட்டையைப் பிடித்து இழுத்து உட்காரச் சொன்னேன்’ என்று விளக்கம் அளித்தார் இளங்கோவன்!”

‘‘அடுத்த குற்றச்சாட்டு என்ன?”

‘‘டாக்டர் நாமக்கல் ஜெயக்குமார் பேசும்போது, ‘எங்களைப் போன்ற தலைவர்களை இளங்கோவன் மதிப்பதே இல்லை. கூட்டங்களுக்கு அழைப்பதும் இல்லை’ என்று சொல்லி இருக்கிறார். அதற்கு பதில் அளித்த இளங்கோவன், ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் மேல் மட்டத் தலைவர்களாக 15 பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் எல்லாக் கூட்டங்களுக்கும் அழைத்துச் செல்ல இயலாது. அனைத்துக் கூட்டங்களிலும் 15 பேரையும் பேசவிட்டால், உள்ளூர் தலைவர்கள் பேச நேரம் கிடைக்காது. எனவேதான், சில கூட்டங்களுக்கு நான்கு பேரை அழைத்துச் செல்கிறேன். சில கூட்டங்களுக்கு வேறு நான்கு பேரை வரச் சொல்கிறேன். இதில் யாரையும் நான் புறக்கணிக்கவில்லை’ என்று சொல்லி இருக்கிறார்!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்