“இதுதான் கடைசி பாராட்டுரை!”

ஆளுநர் உரையை விளாசும் எதிர்க் கட்சிகள்...

ந்த ஆட்சியின் இறுதிக்கூட்டத் தொடரில் ஆளுநர் ரோசய்யா தனது உரையை கடந்த புதன்கிழமை ஆற்றினார். இதுபற்றி எதிர்க் கட்சிகளின் விமர்சனம் என்ன என்று அவர்களிடமே கேட்டோம்:

மு.க.ஸ்டாலின் (தி.மு.க.): “அ.தி.மு.க அரசின் நாலே முக்கால் ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தின் சமூகப் பொருளாதார நிலை படிப்படியாகச் சரிந்து, சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மேலும் சரிந்து, சாய்ந்து, தாழ்ந்து, புதைக்குழிக்குப் போய்விட்டது. சட்டம் - ஒழுங்கு தறிகெட்டுப் போய்விட்டது. கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாட்களே இல்லை. பெண் களுக்குப் பாது​காப்பு இல்லை. தமிழக மக்கள் அச்ச உணர்வின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

கட்டுக்கடங்காத விலை உயர்வு ஒருபுறம், ஒவ்வொரு துறையிலும் கொடிகட்டிப் பறக்கும் ஊழல் மறுபுறம். அனைத்து மட்டத்திலும் ஆட்சி நிர்வாகம் படுதோல்வி அடைந்துவிட்ட நிலையில் வெற்று ஆரவாரத்துக்கும், அலங்காரத்துக்கும் பஞ்சமில்லை. மாநில மக்களின் நலனை ஒதுக்கித் தள்ளி, மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்ட இந்த அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. எனவே, சடங்காக, சம்பிரதாயமாக இருந்த ஆளுநர் உரையை தி.மு.க புறக்கணித்தது.”

பிரின்ஸ் (காங்கிரஸ்): “இந்த அரசாங்கத்தில் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லை. மக்கள் நலன் பற்றிய கவலை இல்லாமல், முதல்வரின் புகழ்பாடியே இந்த ஆட்சிக் காலத்தை வீணாக்கிவிட்டனர். நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் ஆளும் கட்சி மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது என்பதால், அந்த மாவட்டத்துக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை. மாவட்ட மக்களையே அரசாங்கம் பழிவாங்குகிறது.’’

பார்த்தசாரதி (தே.மு.தி.க.): ‘‘எதிர்க் கட்சிகளைப் பழிவாங்குவதில் இருக்கும் வேகம், அரசின் நிர்வாகத்தில் இல்லை. மக்கள் கோரிக்கைகளுக்குச் செவிசாய்ப்பது இல்லை. தமிழகத்தின் நிலையைக் கண்டு நாடே சிரிக்கிறது. எதிர்க் கட்சிகள் சொல்லும் குறைகளைக் கேட்க ஆளும் கட்சிக்கு அக்கறை இல்லை.’’

சவுந்திரராஜன் (சி.பி.எம்.): ‘‘அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மீதும் வரைமுறையின்றி போடப்படும் அவதூறு வழக்குகளே, ஜனநாயக விரோத அடக்குமுறை ஆட்சிக்கு எடுத்துக்​காட்டு. அடக்குமுறை ஆட்சியாக, ஊழல் முறைகேடுகள் மலிந்த ஆட்சியாக, சட்டம் - ஒழுங்கு சீர்கெட்ட பிறகும் வேடிக்கை பார்க்கும் ஆட்சியாக இது உள்ளது. சாதி ஆதிக்க சக்திகளுக்கு அடிபணிந்து போகும் நிலையில்தான், இந்த ஆட்சி நிர்வாகம் உள்ளது. தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமை கள் பல வடிவங்களில் தொடர்கின்றன. ‘சட்ட விரோதமாக கிரானைட் வெட்டி எடுக்கப் பட்டதால், அரசுக்கு ஒரு லட்சத்து ஆறாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தனது அறிக்கையில் சொல்லியுள்ளார். தாது மணல் கொள்ளை, ஆற்றுமணல் கொள்ளை குறித்து ககன்தீப்சிங் பேடி அளித்துள்ள அறிக்கை, இதுவரை சட்ட மன்றத்தில் வைத்து விவாதிக்கப்​படவில்லை.’’

ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்): ‘‘மழை வெள்ளத்தின்போது நிர்வாகம் சரியாக செயல்​படாததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் தண்ணீரில் முழ்கின. கடலூர் மாவட்ட மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.  காவிரி டெல்டா மாவட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘தங்களின் வாழ்வாதா ரத்​துக்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கவில்லையே’ என்ற மக்களின் ஏக்கத்தைப் போக்க வேண்டும்.”

கணேஷ்குமார் (பா.ம.க.): ‘‘விவசாயிகள் பிரச்னை, காவிரி மேலாண்மை வாரியம், கச்சத்தீவு மீட்பு, சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படுதல் உட்பட தமிழகம் எதிர்கொண்டு வரும் பிரச்னைகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தனவோ, அதேநிலையில்தான் இப்போதும் தொடர்கின்றன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆளுநரை உரையாற்றவைத்து தன் அரசை தானே பாராட்டிக்கொண்டுள்ளார். இதுதான் அவருக்கான கடைசிப் பாராட்டுரை.’’

டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்):
‘‘மழை, வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டனர். அவர்​களுக்கு முறையாக நிவாரண உதவிகளை வழங்கவில்லை. 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்த அறிவிப்புகள்​கூட முறையாக நிறைவேற்றப்​படவில்லை. தலித் மக்கள் மீது நடக்கும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முடங்கிக்கிடக்கின்றன. முற்றிலும் செயலிழந்த அரசாக இது இருக்கிறது.’’

- எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர்
படங்கள்: சு.குமரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick