தனித்துக் களமிறங்கவும் தயாராகிவிட்டது பி.ஜே.பி.!

‘பவர்ஃபுல்’ பார்வையாளர்கள் இருவர் நியமனம்...

நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகள் விலகிச்சென்ற நிலையில், ‘வந்தால் கூட்டணி... இல்லையென்றால், தனித்துப் போட்டி’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் தமிழக பி.ஜே.பி தலைவர்கள். இந்த நிலையில், வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக பி.ஜே.பி-யைக் கொண்டுவர வேண்டும் என்று விரும்பும் பி.ஜே.பி-யின் அகில இந்திய தலைமை, பல முக்கிய முடிவுகளை எடுத்​துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர்களான பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்​ளனர். கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழக பி.ஜே.பி-க்கு மேலிடப் பொறுப்பாளராக இருந்து வருபவர், முரளிதர் ராவ். இவர்,
ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு நெருக்கமாக இருப்பவர். தமிழக பி.ஜே.பி நிர்வாகிகள் அனைவரோடும் நல்ல தொடர்பில் இருப்பவர். இவர் போதாதென்று மத்திய அமைச்சர்களை தேர்தல் பார்வையாளர்​களாக ஏன் நியமித்து இருக்கிறார்கள் என்ற குழப்பம், தமிழக பி.ஜே.பி-யினர் சிலரிடம் எழுந்துள்ளது.

இதுகுறித்து, தமிழக பி.ஜே.பி நிர்வாகி​களிடம் பேசியபோது, “தென் மாநிலங்களில் தமிழகத்திலும், கேரளாவிலும்தான் பி.ஜே.பி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக பி.ஜே.பி-யைக் கொண்டுவர வேண்டும் என்று அகில இந்திய தலைமை நினைக்கிறது. அதற்கு கணிசமான எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற வேண்டும். எனவே, கடந்த ஓர் ஆண்டாகவே கட்சியின் அடிப்படை பணிகள் தொடங்கப்பட்டு, அவை இறுதிக்கட்டத்தில் உள்ளன. அடுத்தகட்டமாக, மாநில நிர்வாகிகள் அனைவரையும் ஐந்து பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவுக்கும் 25 சட்டமன்றத் தொகுதிகள் தரப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் வரும் 25-ம் தேதி முதல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் ஊழியர் கூட்டங்களை நடத்த உள்ளனர். அத்துடன், அனைத்து வாக்குச்​சாவடிகளுக்கும் பொறுப்பாளர், ஒருங்கிணைப்​பாளர், பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சட்டமன்றத் தொகுதி ஊழியர் கூட்டத்தில் பூத் கமிட்டியினர் கலந்துகொண்டு, அவர்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்க உள்ளனர். அதன்பின், சட்டமன்றத் தொகுதி மாநாடு அனைத்துத் தொகுதிகளிலும் நடத்த உள்ளோம். ‘யாருடனும் கூட்டணிக்கு வலிய போக வேண்டாம், நம்முடன் யார் கூட்டணிக்கு வருகிறார்களோ அவர்களை இணைத்துக் கொள்ளுங்கள்’ என்று கட்சித் தலைமை கூறியுள்ளது.

கடந்த மாதம் தமிழக நிர்வாகிகள் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தபோது, ‘தேர்தல் நெருங்கும் நேரத்தில் டெல்லி தலைவர்கள் அனைவரும் தமிழகத்தில் முகாமிடுவோம். இப்போது அடிப்படைப் பணிகளை மட்டும் ஒழுங்காகப் பாருங்கள்’ என்று தெரிவித்தார். அதன் முதற்படிதான், இந்த இருவரின் நியமனம். கட்சிக்கு வலுச்சேர்க்கதான் இந்த ஏற்பாடு. டெல்லி தலைமையின் ஆலோசனைப்படி, இனி இவர்கள்தான் கூட்டணித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள்.  தே.மு.தி.க-வை கூட்டணிக்குக் கொண்டுவரும் ‘அசைன்மென்ட்’ இவர்களுக்குத் தரப்பட்டுள்ளது. சீட் பேரம், தொகுதிப் பங்கீடு போன்றவற்றை தமிழக நிர்வாகிகளுடன் இணைந்து இவர்கள் மேற்கொள்வார்கள். மேலும், பிற மாநிலங்களில் பி.ஜே.பி வெற்றி பெற்ற வழிமுறைகளை, தமிழக நிர்வாகிகளுக்கு விளக்க உள்ளனர். 

கூட்டணிக்கு யாரும் வராவிட்டால் தனித்து நின்று நம்முடைய பலத்தை சோதிக்கலாம் என்ற மனநிலையில்தான் டெல்லி தலைமை உள்ளது. 50 தொகுதிகளை நாங்கள் குறிவைத்துள்ளோம். கன்னியாகுமரி, திருச்சி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் சில தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். அந்தத் தொகுதிகளில் கூடுதல் முக்கியத்துவம் தரப்படும்” என்கின்றனர் அவர்கள்.

மத்திய வனத்துறை அமைச்சராக இருக்கும் பிரகாஷ் ஜவடேகர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து கட்சிக்கு வந்தவர். இன்றைக்கு அந்தக் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருக்கிறார். நயமாகப் பேசி யாரையும் கவர்ந்துவிடும் ஆற்றல்கொண்ட இவர்தான், தமிழ்நாட்டு அரசியல் சூழலுக்கு சரியான நபர் என்று அவரை அமித்ஷா நியமித்துள்ளார். மற்றொரு பார்வையாளரான பியூஸ் கோயல், மத்திய மின்துறை அமைச்சராக உள்ளார். இவரும் அமித்ஷாவின் நம்பிக்கைக்குரிய நபர்.  இந்த ‘பவர்ஃபுல்’ பார்வையாளர்கள் விரைவில் தமிழக அரசியலில் வலம்வருவார்கள்.

பி.ஜே.பி-யின் தேர்தல் பஸ் புறப்பட்டுவிட்டது.

- எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick