என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - அமைச்சர் நத்தம் விசுவநாதன் - நத்தம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: அ.நன்மாறன்

ண்டுக்கு ஆண்டு அரசின் வருமானத்தையும் விதவைகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையுடன் மின்துறையையும் கையில் வைத்திருக்கும் அமைச்சர் விசுவநாதனை சட்டசபைக்கு அனுப்பிவைத்த பெருமை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் தொகுதி மக்களையே சேரும். 1977 முதல் 1999 வரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நத்தத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆண்டி அம்பலம். மலைக் கிராமங்கள் அதிகம் நிறைந்த நத்தம் தொகுதியில் ஆண்டி அம்பலத்துக்கு அடுத்தபடியாக நான்கு முறை தொடர் வெற்றி பெற்று அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார் விசுவநாதன். இரண்டு முறை அமைச்சர். ஆட்சியில் மூன்றாவது இடம், கட்சியில் நான்காவது இடம் என அதிகாரத்தின் முக்கிய இடத்தில் இருக்கும் இவருடைய தொகுதி எப்படி இருக்கிறது? நான்காவது முறையாக வெற்றி பெற்ற நத்தம் விசுவநாதன் தனது தொகுதி மக்களுக்கு என்ன செய்துள்ளார்?

சாலை இருக்கு... வேலை இல்லை!

தொகுதிவாசிகளிடம் பேசினோம். ‘‘தொகுதியில் எந்த ஊருக்குப் போனாலும், அங்க ஏதாவது ஓர் அடிப்படை வசதிகளைச் செஞ்சு கொடுத்திருக்காரு. ஆனா, தொகுதிக்கான எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் எதையும் செய்யலை. சுருக்கமாச் சொன்னா தொகுதி முழுக்க சாலை போட்டுக் கொடுத்திருக்காரு. ஆனா, அதுமட்டும் வயித்துப் பசியைப் போக்காது. தொழில் துறை வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் இருந்தாத்தானே சோறு கிடைக்கும். அதுக்கு இவரு பெருசா எந்த முயற்சியும் எடுக்கல. தொகுதியில தேங்காய், மாம்பழம், புளி என ஏகப்பட்ட விளைபொருட்கள் கிடைக்குது. அதைப் பயன்படுத்தி மாம்பழக்கூழ் தொழிற்சாலை, தென்னை நார் தொழிற்சாலைனு அமைச்சிருக்கலாம். ஆயத்த ஆடைகள் தொழில்ல திருப்பூருக்கு அடுத்து நத்தம்தான் ஃபேமஸ். தொகுதியில ஆயிரக்கணக்கான டெய்லர்கள் இருக்காங்க. இப்பவும் வீடுகள்ல குடிசைத் தொழில் மாதிரி ரெடிமேட் சட்டைகள் தயாராகிக்கிட்டுத்தான் இருக்கு. அதை முறைப்படுத்தி, சலுகைகள் கொடுத்து ஊக்கப்படுத்தினால் ஆயத்த ஆடைத் தொழில்ல நத்தமும் முக்கிய இடத்துல இருக்கும். சரியான வழிகாட்டுதலும், அரசோட ஆதரவும் இல்லாததால இந்தத் தொழில் இப்ப பக்கத்து மாவட்ட ஊர்களான புத்தாநத்தம், துவரங்குறிச்சி, மணப்பாறைனு நகர்ந்துடுச்சு. பெருசா மூலப்பொருட்கள் கிடைக்காத நிலக்கோட்டை தொகுதியிலக்கூட தொழிற்பூங்கா அமைச்சிருக்காங்க. ஆனா, ஆளும் கட்சியில ‘பவர் ஃபுல்’ அமைச்சரை வெச்சிருக்கும் எங்க தொகுதியில ஓய்வா உட்காரக்கூட ஒரு பூங்கா இல்லைங்கறதுதான் வேதனையான விஷயம்’’ என்கிறார்கள்.

கனவான அரசுக் கல்லூரி!

‘‘இது படிக்காத மக்கள் அதிகம் உள்ள தொகுதி. எம்.ஜி.ஆர் உசுரோட இருக்காருன்னு நம்பற ஆளுங்க இன்னமும் மலைக் கிராமங்கள்ல இருக்காங்க. இந்தத் தொகுதியோட நெடுநாள் கனவு அரசுக் கலைக்கல்லூரி. ஆண்டி அம்பலம் காலத்துல இருந்து இந்தக் கோரிக்கையை வெச்சுகிட்டே இருக்கோம். ஒண்ணும் நடக்கலை. ஆனா, இவரு ரெண்டாவது முறையா அமைச்சரா இருக்காரு. அம்மா பெங்களூரு ஜெயில்ல இருந்தப்ப, அடுத்த முதலமைச்சர் இவருதான்னுகூட பேச்சு அடிபட்டுச்சு. ஓ.பி.எஸ்-க்கு அடுத்த இடத்துல இருக்காரு. அந்த அளவுக்குச் செல்வாக்கும் அதிகாரமும் இருந்தும் தொகுதிக்கு ஓர் அரசுக் கல்லூரி கொண்டு வரலை. 15 மேல்நிலைப் பள்ளிகள், 26 உயர்நிலைப் பள்ளிகள் இருக்கிற நத்தத்துல அரசுக் கல்லூரிங்கறது இன்னமும் கனவாகத்தான் இருக்கு. கவர்மென்ட் காலேஜ்ல படிக்கணும்னா, திண்டுக்கல் போகணும். இல்லேன்னா, மதுரை போகணும்” என்கிறார்கள் தொகுதிவாசிகள்.

‘கரன்ட் அமைச்சர் கரன்ட் தரல’

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர்களிடம் பேசினோம். ‘‘சாலை போட்டாரு, சின்டெக்ஸ் தொட்டி வெச்சிக்கொடுத்தாரு, கல்யாண மண்டபம் கட்டிக்கொடுத்தாருங் கிறதெல்லாம் உண்மைதான். இது, வழக்கமா எல்லா எம்.எல்.ஏ-வும் செய்ற வேலைதான். இவரு, அமைச்சருங் கிறதால மற்ற திட்டங்களுக்கான பணத்தை குறிப்பிட்ட மூன்று பணிகளுக்கே முன்னுரிமை கொடுத்து ஒதுக்கி, அதிகப்படியான இடங்கள்ல பணிகள் செஞ்சிருக்காங்க. இது, ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்கற வேலை. தொகுதிக்கும் செஞ்சது மாதிரி ஆச்சு, கட்சிக்காரனுக்கு கான்ட்ராக்ட் கொடுத்த மாதிரியும் ஆச்சுன்னு செஞ்சிருக்காங்க. இவங்க நல்ல நேரம், பெருசா மழை பெய்யலை. பெஞ்சிருந்தா இந்நேரம் இவங்க போட்ட ரோடுங்கள்லாம் பல்லு இளிச்சிருக்கும். மக்களின் நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் எந்தப் பெரிய திட்டத்தையும் கொண்டு வரலை. 500 குடும்பங்களுக்கு மேல வசிக்குற மலையூருக்கு இன்னிக்கு வரைக்கும் சாலை வசதி இல்லை. பிரசவம், விஷக்கடின்னு உடம்புக்கு முடியாதவங்களை டோலிகட்டிதான் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போறாங்க. பள்ளிக்கூடம் படிக்கிற பிள்ளைக பாடும் ரொம்ப கஷ்டம். தினமும் காலையிலேயும், சாயங்காலமும் நடந்து வந்து முளையூர்லதான் பஸ் ஏறி போறாங்க. ‘இந்த ஊருக்கு சாலை அமைச்சுத் தர்றேன்’னு தேர்தல் நேரத்துல வாக்குறுதி கொடுத்தாரு. ஆனா, இதுவரைக்கும் நடக்கல. ‘இன்னிக்கு வந்திடும். நாளைக்கு வந்திடும்’னு சொல்றாங்களே தவிர, சாலை வந்த பாட்டைக் காணோம். அது, மாநில அரசுனால முடியாது. மத்திய அரசுதான் செய்யணும்னு சொன்னாலும்கூட, தொகுதி எம்.எல்.ஏ-ங்கிற முறையில, இவரு அதுக்கான தொடர் முயற்சியைக்கூட எடுக்கலை. சிறுமலையில தென்மலை ஊரடி உள்ளிட்ட சில மலைக் கிராமங்கள்ல மின்சாரமே இல்லை. ‘நான் ஜெயிச்சதும், முதல்ல கரன்ட் கொண்டு வருவேன்னு’ தேர்தல் நேரத்துல சொன்னாரு. ஜெயிச்சு மின்சாரத் துறைக்கே அமைச்சராகிட்டாரு. ஆனா, மின்சாரம்தான் வரலை. தொடர்ந்து கேட்டதுக்கு பிறகு, மின் வாரியத்துல இருந்து நாலஞ்சு ஈ.பி போஸ்ட் கொண்டுவந்து இறக்கிட்டுப் போனாங்க. அவ்வளவுதான். அதுக்குப் பிறகு எட்டிக்கூடப் பாக்கலை. இன்னிக்கு வரைக்கும் கரன்ட் வரலை. வெறும் வாக்குறுதி எப்படி வெளிச்சத்தைக் கொடுக்கும்? காடா விளக்குலதான் பொழப்பு ஓடுது. இந்த லட்சணத்துல விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் வேற கொடுத்திருக்காங்க’’ என்று சிரிக்கின்றனர்.

தரம் உயர்த்தப்படாத தாலுகா தலைமை மருத்துவமனை!

தொகுதியில் மருத்துவமனை வசதி எப்படி இருக்கிறது என விசாரித்தோம். ‘‘நத்தத்துல தாலுகா தலைமை மருத்துவமனை இருக்கு. ‘அது இருக்கு. ஆனா இல்லை’ங்கிற நிலைமைதான். இங்கு, 7 டாக்டர்களுக்கான பணி இடங்கள் காலியா இருக்கு. எலும்பு, நரம்பு, தலைக்காயம் போன்ற சிகிக்சைகளுக்கான டாக்டர்களே இல்லை. தலையில காயம் அடைஞ்சவங்களுக்கு லேசா ரெண்டு தையல் போடணும்னாக்கூட மதுரைக்கோ, திண்டுக்கல்லுக்கோதான் ஓடணும். போஸ்ட்மார்ட்டம் பண்ணக்கூட திண்டுக்கல்ல இருந்துதான் டாக்டர் வரணும். குடிநீர் வசதியே இல்லாம இருந்துச்சு. தொடர் கோரிக்கையின் விளைவா, இப்பத்தான் ஆர்.ஓ சிஸ்டம் போட்டிருக்காங்க. தேர்தல் நேரத்துல, ‘நத்தம் தாலுகா மருத்துவமனையை தரம் உயர்த்துவேன்’னு வாக்குக் கொடுத்தாரு. ஆனா, அது வெறும் வாக்குறுதியாகவே இருக்கு’’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

  பொன்னெழுத்தில் நிழற்குடை!

நத்தம் தொகுதி முழுக்க வகை தொகையில்லாமல் பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிழற்குடையிலும் விசுவநாதனின் பெயர் பொன் எழுத்துக்களில் மின்னுகின்றன. நிழற்குடையின் மீது பறக்கும் குதிரை எல்லாம் வைத்து சினிமா செட்போல பிரமாண்டப்படுத்தியிருக் கிறார்கள். இந்த ஆடம்பரச் செலவுத் தொகையை கிராமங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் குடிநீர் பிரச்னைக்குச் செலவு செய்திருந்தாலாவது மக்கள் பயன்பெற்றிருப்பார் கள்’’ என்ற ஆதங்கமும் தொகுதியில் அதிகம் கேட்கிறது.

- ஆர்.குமரேசன், சு.அருண்பிரசாத்
படம்: வீ.சிவக்குமார்


ப்ளஸ்... மைனஸ்!

சில மலைக்கிராமங்கள் தவிர்த்து, தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி இருப்பது. கட்டப்பஞ்சாயத்துக்களில் ஈடுபடாதது. அமைச்சர் என்ற பந்தா இல்லாமல் அரசு அதிகாரிகளை ‘சார்’ என மரியாதையாக அழைப்பது, கட்சியில் கோஷ்டிப் பூசல் இல்லாமல் அனுசரித்துப்போவது இவரது ப்ளஸ்.

தொகுதிக்குள் இவருக்கு ப்ளஸ் மற்றும் மைனஸ் இரண்டுமாக இருப்பது மருமகன் கண்ணன். கட்சியினரின் குறைகளைக் கேட்பது, அவர்களின் தேவையைப் பூர்த்திசெய்வது போன்றவற்றில் விசுவநாதனுக்கு உதவியாக இருந்தாலும், மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் மருமகனின் தலையீடு மிகப் பெரிய மைனஸ்.  

எம்.எல்.ஏ. அலுவலக ரெஸ்பான்ஸ் எப்படி?

நத்தம் பேருந்து நிலையம் எதிரே மதுரை சாலையில் எம்.எல்.ஏ அலுவலகம் இருக்கிறது. நாம் போனபோது அலுவலகம் திறந்து இருந்தது. உள்ளே சிலர் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தனர். நம்மைக் கண்டதும் எழுந்து வந்த நபர், ‘‘என்ன வேணும்?’’ என்றார். ‘‘மனுக்கொடுக்கணும்’’ என்றோம். ‘‘இங்க மனு வாங்கமாட்டாங்க. அமைச்சர் வீட்டுல கொண்டுபோய் கொடுங்க’’ என்றார். ‘‘பிறகு எதற்கு அலுவலகத்தைத் திறந்துவைத்து இருக்கிறீர்கள்?’’ எனக் கேட்டதும், ‘‘அது எங்கள மாதிரி கட்சிக்காரங்க வந்தா, உக்காந்து பேசிட்டு, பேப்பர் பாத்துட்டு போவோம். அமைச்சர் இருக்கிற பிஸிக்கு இங்க வர்றதுக்கெல்லாம் அவருக்கு எங்க நேரம் இருக்கு...’’ என்றபடி நம்மை வழியனுப்பிவைத்தார்.

ரியாக்‌ஷன் என்ன?

அமைச்சரின் கருத்தை அறிந்துகொள்வதற்காக அமைச்சர் தரப்பைத் தொடர்புகொண்டோம். ‘‘அமைச்சர் போன் கிடைக்காது. பி.எஸ்.ஓ-கிட்ட பேசுங்க. அவங்க அமைச்சர்கிட்ட போனைக் கொடுப்பாங்க’’ என்று ஒரு எண்ணைக் கொடுத்தார்கள். அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டோம். ‘நான் லீவுல இருக்கேன்..’ என்ற ஒரே பதிலைத் திரும்பத் திரும்பச் சொன்னார். சரி, ‘வேறு எண் இருந்தால் கொடுங்க’ என்றபோது, ‘எனக்குத் தெரியாது’ என்றபடி இணைப்பைத் துண்டித்துக்கொண்டார். மற்றொரு பி.எஸ்.ஓ-வுக்கு தொடர்புகொண்டோம். ஆனால், அவர் இறுதிவரை நம் அழைப்பை ஏற்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick