உயிரை வாங்கும் மருத்துவக் கல்லூரி... அனுமதி வழங்கிய அரசாங்கம்...

தட்டிக்கழித்த அதிகாரிகள்... தவற்றை மறைக்கும் காவல் துறை!

ரசு எந்திரத்தின் அத்தனை அலட்சி​யங்களும் சேர்ந்து அநியாயமாக மூன்று மருத்துவ மாணவிகளைக் கொன்றுவிட்டன.

எஸ்.வி.எஸ் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி என்ற தனியார் கல்வி நிறுவனம், விழுப்புரம் மாவட்டம் பங்காரம் என்ற இடத்தில் இயங்கி வருகிறது. இதில், காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரைச் சேர்ந்த சரண்யா, சென்னை எர்ணா​வூரைச் சேர்ந்த மோனிஷா, திருவாரூரைச் சேர்ந்த பிரியங்கா ஆகியோர் இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர். தோழிகளான மூவரும் பொங்கல் விடுமுறையை முடித்துவிட்டு, கடந்த 22-ம் தேதி கல்லூரி விடுதிக்கு வந்திருக்கிறார்கள். அதற்கு மறுநாள் 23-ம் தேதி கல்லூரிக்கு எதிரே இருந்த விவசாயக் கிணற்றில் தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடக்க, அது தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மோனிஷாவின் அப்பா தமிழரசனிடம் பேசினோம். “22-ம் தேதி எங்க பொண்ணு சந்தோ​ஷமா பேசிட்டுதான் கிளம்பிப் போனா. அப்படியேதான் அன்னைக்கு சாயந்திரம் 5 மணிக்கு நாங்க மூணு பேரும் ஹாஸ்டல் வந்துட்டோம்னு போன் பண்ணினா. அதுக்கப்புறம் மறுநாள் சாயந்திரம் ஆறு மணிக்கு எனக்குப் போன் பண்ணின தாளாளர் வாசுகி, ‘நான் ராமச்சந்திரா ஹாஸ்பிட்டல்ல இருக்கேன். உங்கள் பெண்ணைப் பற்றிப் பேச வேண்டும், வாங்க’ என்று அழைத்தார். அடுத்த கால் மணி நேரத்தில் சின்ன சேலம் போலீஸ் எங்களுக்குப் போன் செய்து ‘உங்க மக தற்கொலை பண்ணிக்கிட்டா’னு சொன்னாங்க. என் பொண்ணை பலாத்காரம் பண்ணிட்டு கொன்னுருக்காங்​கன்னு எனக்கு சந்தேகமா இருக்குது. அதனாலதான் பிரேதப்பரிசோதனை இங்கே வேணாம்னு சொல்றோம்” என்று தேம்பி அழ ஆரம்பித்தார்.

பிரியங்காவின் தாய் ஜெயந்தி, “ அரசு ஒதுக்கீடு சீட் என்று நம்பித்தான் இங்க சேர்த்தேன். ஆனா, இங்க அதிகமா பணம் கேட்டாங்க. புள்ள படிக்கட்டும்னு கடன் வாங்கி பணம் கட்டினோம். ஆனா, ஒரு வேளை சாப்பாடுகூட இவங்க ஒழுங்காப் போடலை. தற்கொலை செய்துக்கிற அளவுக்கு என் பொண்ணு கோழை கிடையாது. இது கொலைதான்” என்று மயங்கி விழுந்தார்.

சரண்யாவின் பெற்றோர்களான சித்ரா மற்றும் ஏழுமலை பேசும்போது, “எங்க பொண்ணு அந்த வாசுகியிடம் ஏதாவது கேட்கப் போனால், ‘உன் சர்ட்டிஃபிகேட்ல பிளாக் மார்க் வச்சிடுவேன், ஃபெயிலாக்கிடுவேன். வெளிய போ’ அப்படின்னு சொல்லிச் சொல்லியே அசிங்கப்படுத்தியிருக்காங்க. அவங்கள கைதுசெய்யணும்” என்றனர் கண்ணீருடன்.

இந்தக் கல்லூரியின் முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கு பயின்ற மாணவிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரில் தீக்குளிக்க முயற்சி செய்தனர். அதேபோல செப்டம்பர் 21-ம் தேதி அங்கேயே விஷம் அருந்தியும் தற்கொலைக்கு முயன்றனர். அதன்பிறகும் அந்தக் கல்லூரியின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மாவட்ட நிர்வாகம்.

விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற மாணவிகளான கோமளா மற்றும் மணியரசியிடம் பேசினோம். ‘‘நாங்கள் சேரும்போது எங்களுக்கு விடுதியே கிடையாது. நோயாளிகள் பிரிவில்தான் தங்கியிருந்தோம். அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது நாங்களே நோயாளிகளாக இருப்போம். கொஞ்ச நேரத்துல நாங்களே கோட் போட்டுகிட்டு டாக்டராக இருப்போம். உயிரைப் பணயம்வைத்து நாங்கள் போராடியதை யாராவது கேட்டிருந்தால், இப்போது அந்த மூன்று உயிர்கள் போயிருக்காது. இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் நீங்கள் சம்பாதிக்க?’’ என்று கதறினர்.

இதுகுறித்து ஆட்சியர் லட்சுமி, “இந்த வழக்கில் தற்கொலைக்குத் தூண்டியதாக சுமதி, லட்சுமி, கோடீஸ்வரி ஆகியோரை விசாரித்துக் கொண்டிருக்கிறோம். விசாரணை முடிவில் உரிய நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

மாணவிகள் தீக்குளிக்க முயற்சி செய்தவுடன் அந்தக் கல்லூரியில் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் எஸ்.சையத் காதர் ஆய்வை மேற்கொண்டார். விடுதி மற்றும் கல்லூரி நிர்வாகம் குறித்து மாணவர்கள் கடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். அதுதொடர்பான அறிக்கை, மாவட்ட ஆட்சியரிடம் கடந்த செப்டம்பர் மாதம் அளிக்கப்பட்டது. ஆனாலும், மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது. இவ்வளவு விதி மீறல்களும், முறைகேடுகளும் இருக்கும் கல்லூரிக்கு ஒவ்வொரு வருடமும் தவறாமல் அனுமதி வழங்கியுள்ளது தமிழ்நாடு மருத்துவத் துறை.

இந்த நிலையில் இந்த மருத்துவக் கல்லூரிக்கு சீல் வைத்ததுடன், கல்லூரியின் தாளாளர் வாசுகியின் மகன் சுவாகர் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக்  கல்லூரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி சொல்கிறார். ஆனால், அரசு ஒதுக்கீட்டில் தான் இந்தக் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்தாக இறந்த மாணவிகளின் பெற்றோர் சொல்கிறார்கள். இதில் எது உண்மை என்பதை அரசு தான் விளக்க வேண்டும். இந்தக் கல்லூரி செயல்பட அனுமதித்த அத்தனை பேரும் சிறைக்குள் தள்ளப்பட வேண்டும்.

- ஜெ.முருகன், படங்கள்: தே.சிலம்பரசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick